Results 1 to 12 of 14

Thread: ஒற்றை நட்சத்திரம்..

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    ஒற்றை நட்சத்திரம்..

    ஒற்றை நட்சத்திரம்..

    பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படக் காத்துக் கொண்டிருந்தது. மதுரை ரயில் நிலையம் மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. மக்கள் தங்களது கம்பார்ட்மெண்ட்களைத் தேடிக் கண்டிபிடித்து அமர்வதில் மிகவும் அவசரத்துடன் இருந்தனர். அநேகமாக இன்றோடு பிரச்சினைகள் முடிந்துவிடும். இந்த ரயில்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு. தீர்வாய் இருக்கப்போகிற இந்த ரயிலைக் கண்டவுடன் ஏதோ ஒரு கனபரிமாணம் உடலை அழுத்தி அமுக்கிவிடுவது போல் மூச்சு முட்டுகிறது. இன்னும் எனக்குள் அந்த எண்ணங்கள் இருக்கின்றது என்பதற்கு இந்த மாய கனபரிமான அழுத்தம் சாட்சியாக இருக்கிறது. எனக்குள் அந்த எண்ணங்கள். இல்லையெனில், ஏன் ஏதோவொன்று என்னை இப்படி அழுத்த வேண்டும்? ஒரு அடி எடுத்து வைப்பது கூட பிரத்யட்சணப்பட்டு வைக்கவேண்டியிருக்கிறது. கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து கொண்டே இருக்கிறது. எஸ் 7- ஐ அடைவதற்குள் மூச்சு நின்று விடுமென்று பயம் மனதைக் கவ்வியது.

    என் மூச்சு சீராக இல்லை. ஏன் இப்படி தாறுமாறாக மூச்சு வாங்குகிறது? ஒன்றும் புரியவில்லை. எல்லாவற்றையும் மறக்கடிக்க இன்னும் முப்பது நிமிடங்களே இருக்கின்றன. அதன் பிறகு எல்லாம் சகஜ நிலைக்கு வந்துவிடும். வந்து விடுமா? இன்னும் முப்பது நிமிடங்களா?எப்படிக் கழிக்கப் போகிறேன் முப்பது நிமிடங்களை? அடுத்த நிமிடமே முப்பது நிமிடங்கள் என்பது யுகம் கழிவதாய் தோன்ற ஆரம்பித்துவிட்டது. வானத்தில் ஏன் இன்று இன்னும் நட்சத்திரங்களைக் காணவில்லை? நட்சத்திரங்களைக் காணவில்லையா? ஏன் மனம் இப்படி தாறுமாறாய் சிந்திக்கிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாதா? முதலில் ஆறுதலாய் சமாதான வார்த்தைகள் சொல்கிறது. அடுத்த நொடியே அதே வார்த்தைகளை எதிர்ப்புறமாய் நீட்டுகிறது ஒரு கத்தி போலும். சண்டை போடும் மனநிலையில் நான் எப்போதும் இருந்ததில்லை. அப்படியே போட்டாலும் ஜெயிக்கத்தான் முடியுமா?

    சமாதானம் தேவை. எனக்கு சமாதானம் தேவை. உரத்துக் கூவ வேண்டும் போல் இருந்தது. கண்கள் அனிச்சை நிகழ்வாய் பார்க்க எஸ் 5 க்கு சமீபத்தில் இருந்தேன். இன்னும் இரண்டே கம்பார்ட்மெண்ட்கள்தான். என்னது இன்னும் இரண்டு கம்பார்ட்மெண்ட்களா? மனமே அடங்கு.. உன் படபடப்பே காட்டிக் கொடுத்து புனிதத்தை அழித்துவிடும். அப்படி என்ன எனக்கு?

    குழந்தை ஒன்று வெள்ளை நிற பிராக் அணிந்திருந்தது. பார்ப்பதற்கு குட்டி தேவதை போல் இருந்தது. அது தூணை சுற்றிச்சுற்றி ஓடி வளைய வந்து கொண்டிருந்தது. அப்படியே இருந்திருக்கலாம். அந்தக் குழந்தையோடு சேர்ந்து அந்தக் கம்பத்தை சுற்றிச் சுற்றி ஓடி வரலாமா? மனது ஒரு முறை நினைத்தது. முடியாது. உன்னால் எல்லாவற்றையும் மனதால் மாத்திரமே நினைக்கமுடியும். செயல்படுத்தமுடியாது. இல்லையென்றால் இந்தப் பயணத்திற்கு வழியனுப்ப வந்திருப்பாயா?

    இன்னும் என்னென்ன ஆகப்போகின்றதோ? நடப்பது நடக்கட்டும்.. இப்படி மனதை தேற்றிக் கொண்டுதான் கிளம்பினேன். ஆனால், இங்கு வந்த பிறகல்லவா தெரிகிறது மனம் படுத்தும் பாடு. இன்னும் குடிமுழுகிப் போய்விடவில்லை. கடைசி வாய்ப்பு. இப்பொழுது இங்கேயே திரும்பிப் போவிடலாம்.போய்விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்த அடுத்த நொடியே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். நிச்சயம் போய்த்தான் ஆகவேண்டும். இதன் பிறகு சந்திக்க முடியாமல் போக வேண்டும் என்று ஆசைப்படுகிற நபரை இறுதியாகப் பார்த்து வழி அனுப்புவதே சிறந்தது.

    "டேய் விவேக்.. வந்துட்டியா?" குரல் கேட்ட திசையில் கண்கள் திரும்பின. அங்கு நான் மட்டுமே வந்திருப்பேன் என்ற எனது ஆசைக்கு முடிவு கட்டும் விதமாய் அனைவரும் வந்திருந்தனர்.

    "வரமாட்டேன்னு சொன்னே.." இது கார்த்திக். என்ன சொல்லி சமாதானப்படுத்துவது. சமாதானம் தேவை.

    "எனக்குத் தெரியும் நீ வருவேன்னு.." இது அவள்தான். "இல்லை மிஸ். அது என்னவோ மனசு கேக்கல.."

    "சரி சரி.. ரொம்ப புளுகாத. எல்லோரும் செய்றதுக்கு எதிர்த்து பண்ணனுங்றது உன் குணம். அதான் யாருமே வரமாட்டேன்னு சொன்னவுடனே வரமாட்டேன்னு சொல்லிட்டிருந்த நீ வந்துட்ட.. முரண்பாடுகளின் தொகுப்புடா நீ.."

    "அதையும் நீங்க கரெக்ட்டா தெரிஞ்சு வச்சுகிட்டிருக்குறீங்க.."

    "அப்படீன்னா.. வேற யாரும் தெரிஞ்சுக்கலைங்றீயா?"

    "அது எதுக்கு மிஸ். மெட்ராஸ்ல எந்தக் காலேஜ்?"

    "எத்தனவாட்டி சொல்றது.. பாரதி ஆர்ட்ஸ் காலேஜ்ன்னு.."

    "சொன்னீங்களா.. எப்ப?"

    "நான் சொன்னப்ப நீ எந்தலோகத்துல இருந்த?"

    "சாரி மிஸ்.. மறந்து போச்சு.."

    "பாரதிங்றது மறந்து போற பேரா உனக்கு.."

    "சரி.. குடிக்க தண்ணி இருக்கா.. வாங்கிட்டு வரட்டா?"

    "இருக்கு.. வேண்டாம்.."

    அவள் மற்றவர்களோடு பேச ஆரம்பித்துவிட்டாள். எனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஏதோ ஒரு பேர்வெல் கூட்டம் போல் அந்த இடம் இருந்தது. எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்று தெரியாத புள்ளி வரிசைக் கோலம் போல இவள் மீதான காதல் எங்கு ஆரம்பித்து எங்கு முடியப்போகிறது என்று தெரியவில்லை. காதல்.. பைத்தியக்காரத்தனமான வார்த்தை. வார்த்தைகளுக்கு ஏது மதிப்பு..தமிழில் கொச்சைப்படுத்தப்பட்ட வார்த்தைகளில் இதுவும் ஒன்று. இந்த இண்டெலக்சுவல் புத்திய விட்டொழிக்கணும். மனமே இப்படி ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு இப்படி சர சரவென்று மேலே பறக்கத்தொடங்கிய பட்டமாய் கிளம்பி விடுகிறாய். உன்னைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் பாடம் எடுக்க வந்த லெக்சரர் மேல் காதல் கொள்வாயா? மீண்டும்.. மீண்டும்.. எனக்குள் கனபரிமாணம் ஒன்று பாரமாய் இறங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரம் நின்றால் கீழே விழுந்து விடும் நிலை. வானத்தில், நிலா மாத்திரம் மேகங்களுக்கு நடுவில் மறைந்து கொண்டு லேசாக எட்டிப்பார்த்தது. நட்சத்திரங்கள் எதுவும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. தட்டுப்படவில்லையா? அல்லது தெரியவில்லையா? ஒரே குழப்பமாக இருந்தது. இதற்கு பெயர் என்னவாக இருக்கும்? வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே வகுப்பெடுக்க வந்த ஒரு லெக்சரர். அவளை வழியனுப்ப ஒரு வகுப்பறையே கிளம்பி வந்திருக்கிறது. இதுதான் அவளது பலம். மற்றவர்களுக்கும் அவளுக்கும் வேறுபாடுகள் இந்தப் புள்ளியில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. இதுதான் காதல் ஆரம்பித்த புள்ளியாக இருக்குமோ? தெரியவில்லை.. இருக்கலாம். ஒருவர் பிரிகிறார் என்றவுடன் அவருடன் கழித்த நிமிடங்களில் இருந்து நொடிகள் வரை கணக்குப் போட்டு அசை போட்டுப் பார்த்து ஒரு ஏக்கப் பெருமூச்சுவிட்டு.. இந்த விதிக்குள் இன்று நான்? நினைத்துப்பார்க்கவே கூசுகிறது. எப்படி இது சாத்தியமாயிருக்கமுடியும்? அவள் மேல் எனக்குண்டான ப்ரியை.. ச்சீச்சீ.. ப்ரியை அல்ல.. காதல்.. இல்லை.. கவர்ச்சி.. இல்லை.. ஆமாம்..அதுதான்.. உள்ளங்கையில் நறுக்கென்று ஊசிகுத்தியதும் எட்டிப்பார்க்கும் ரத்தம் கண்டதும் என்ன மனநிலையோ அதே மனநிலை. என்ன இது அபத்தம்.கவர்ச்சியாம்.. கவர்ச்சி.. ஆமாம்.. அதுதான். இல்லையென்றால் 29 வயதிலிருக்கும் அவர்கள் மேல் உனக்கு வந்திருப்பது என்ன காதலா?புடலங்காய்.. ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.. வயசுக் கோளாறு.. போதும் நிறுத்து.. வந்த இடத்தில் இந்தத் தகராறு வேண்டாம்.. இல்லை.. இன்றைக்குக் கணக்குத் தீர்த்தாகவேண்டும். முதல் புள்ளியைக் கண்டுபிடித்துவிட்டால் கோலமாய் விரிந்த கதை தெரிந்து விடும். அதுதான் தெரியவில்லை. தெரிந்தால்தான் இத்தனை நேரத்துக்கு விட்டு வைத்திருப்பாயா? உனக்குக் கூடத் தெரியவில்லை என்றால் பின் வேறு யாருக்குத் தெரியும்? மனசாட்சி கொஞ்சம் அடங்கியது.

    "விவேக்.. என்ன யோசனை?"

    "ஒண்ணுமில்லை மிஸ்."

    "நட்சத்திரம் ஒன்னைக்கூடக்காணோம் இன்னிக்கு.. கவனிச்சிருப்பியே.."

    "ஆமாம்.. மிஸ்.."

    "இன்னும் வானம் பாக்றத விடல நீ.."

    "இல்ல மிஸ்.. இன்னிக்கு எதேச்சையாத்தான் பாத்தேன்.."

    "சரி பொய் சொல்லாத.. மெட்ராஸ் வந்தா காலேஜ்க்கு வா.."

    "சரி மிஸ்.."

    "சரி விசில் ஊதுறான்.. பாப்போமா.. பை.. ஸ்டூடண்ட்ஸ்.." -புன்னகைத்துக் கொண்டே ட்ரெயினினுள் ஏறினாள்.

    அந்தப் புன்னகைதான்.. அந்தப் புன்னகையேதான். அதுதான்.. அந்தப் புள்ளி.. ட்ரெயின் புகையைக் கக்கிக் கொண்டே மெல்ல பிளாட்பாரத்தை விட்டுக் கிளம்பத் தொடங்கியது. ட்ரெயின் கண்ணை விட்டு அகன்றதும் வானத்தைப் பார்த்தேன்.. இப்போது நிலாவிற்கு அருகில் ஒரு நட்சத்திரம் மட்டும் தெரிந்தது.
    Last edited by விகடன்; 25-04-2008 at 10:57 AM. Reason: யுனிக்கோடாக்கம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •