டாக்டர் ராகவன் அறை. அவர் அழைப்பு மணியை அழுத்தினார். உள்ளே வந்த நோயாளிக்கு வயது சுமார் எழுபது இருக்கும் .

“ உட்காருங்க! என்ன பிரச்னை உங்களுக்கு ? “ டாக்டர் கேட்டார் .

“ எனக்கு ஒண்ணும் பிரச்னையில்லை டாக்டர் .வீட்டிலே தான் உங்களை நான் பார்க்கனும்னு சொன்னாங்க !” என்றார் ஆணித்தரமாக உள்ளே வந்த நோயாளி .

“ அப்படியா ?" என்று ராகவன் தன் உதவியாளரை இண்டர்காமில் கூப்பிட்டார். "பானுமதி ! இங்கே இருக்கிற பேஷன்ட் வீட்டிலேருந்து யாராவது வந்திருக்காங்களா? அவங்களை உள்ளே வரசொல்லுங்க !”

டாக்டர் ராகவன் ஒரு மனத்தத்துவ மற்றும் நரம்பியல் மருத்துவர்.

ஒரு நாற்பது வயது தக்க பெண்மணி உள்ளே வந்தாள். “ நான் அவரது மகள்!”

"உட்காருங்க ! இவருக்கு என்ன ! பார்த்தா நல்லாதானே இருக்காரு ?

“டாக்டர், என் அப்பா நேரே நடக்க மாட்டேங்கறார். ஒரு பக்கம் , அதாவது வலது பக்கம் சாய்ந்து நடக்கிறார். இன்னும் கொஞ்சம் சாய்ந்தால், விழுந்திடுவார் போல இருக்கும். பாக்கிறவங்க பயப்படறாங்க. எனக்கும் பயமாஇருக்கு டாக்டர் ! “ அந்த பெண்மணி விட்டால், மூக்கை சிந்துவாள் போலிருந்தது.

“ அப்படியா ? டாக்டர் ராகவன் வினவினார். “பைசா கோபுரம் மாதிரியா ?”

"ஆமா டாக்டர் . ஆனா , இவர் எனக்கு ஒன்னும் இல்லேன்கிறார். நீங்க தான் என்னன்னு பார்த்து சொல்லணும் ?”

“சரி நீங்க கொஞ்சம் வெளியே இருங்க , நான் சில டெஸ்ட் பண்ணிட்டு சொல்றேன் “ என்றார் டாக்டர்.

அந்த பெண்மணி வெளியே சென்றாள்.

டாக்டர் நோயாளியின் பக்கம் திரும்பினார். “இப்போ உங்களை சில கேள்விகள் கேட்கணும் ? உங்க பேர் என்ன ?”

"என் பேர் ராமன் “ என்றார் நோயாளி

“எந்த ஊரிலேருந்து வரீங்க ?”

"பொள்ளாச்சி . டாக்டர் எனக்கு ஒண்ணுமில்லே டாக்டர். நான் நல்லா தான் இருக்கேன்”

“சரி ராமன் .அதையும் தான் பார்த்திடுவோமே ! உங்களுக்கு என்னன்ன வியாதிகள் இருக்கு? மெடிக்கல் ரிபோர்ட்ஸ் எல்லாம் இருக்கா ? “

“ எனக்கு பார்கின்சன் வியாதி இருக்கு டாக்டர். மத்த படி வேறு எதுவும் இல்லே “- ராமன்

“ சரி ராமன் , அப்போ நீங்க ஒன்னு பண்ணுங்க. இந்த ரூம் வாசலுக்கு போய் , அங்கிருந்து நடந்து வாங்க. நான் அதை இந்த மொபைலில் வீடியோ எடுக்கிறேன் . சரியா ? "

ராமன் துள்ளினார். “அதையும் பார்த்திடுவோம்” என்றபடி, அறை வாசலுக்கு நடந்தார். அவரது நடை வலது பக்கம் மிகவும் சாய்ந்து தான் இருந்தது . அவர் திரும்பி டாக்டரை நோக்கி நடந்து வந்தார். அதை டாக்டர் வீடியோ படமெடுத்தார்.

" நீங்க சாய்ந்து நடக்கறீங்களா ராமன் ? “ டாக்டர் வினவினார்.

”இல்லையே ! நேராத்தான் நடந்து வந்தேன் ! “ ராமன்

“ இப்போ இந்த வீடியோவை பாருங்க” என்ற படி டாக்டர் வீடியோவை ராமனிடம் காட்டினார்.

பார்த்தவுடன் ராமன் முகம் வெளிறியது. முகம் இருண்டது. “ ஆமாம் . ரொம்பவும் , வலப் பக்கம் சாய்ந்து தான் நடக்கிறேன். இன்னும் கொஞ்சம் சாய்ந்தால் விழுந்து விடுவேன் போல. இது எனக்கு ஏன் தெரியவில்லை?”

“ இது பார்கின்சன் நோயின் காரணமாக இருக்கலாம் ! – டாக்டர் கூறினார். “ இதை சரிப் படுத்த முடியுமா ? தெரியலை . இதற்கு என்ன வழி என்று யோசனை பண்ண வேண்டும்”

கொஞ்ச நேரம் ராமன் முகம் வெளிறிய படி இருந்தது. திடீரென அவர் முகம் பிரகாசித்தது . “ டாக்டர் , இது பார்கின்சன் வியாதியின் ஒரு அங்கம் தானே ?

“ஆமா !”

“ இது மூளை சரியா பாலன்ஸ் பண்ணாததன் காரணம் தானே ?

“ ஆமா “ காதுக்கு பின்னாடி பாலன்ஸ் பண்ணற ஒரு திரவம் இருக்கு. கிட்டதட்ட வெர்டிகோ மாதிரி தான்” டாக்டர் ராகவனுக்கு புரியவில்லை . ஏன் கேட்கிறார் இவர் ? .

“ அப்போ என் குறைய என்னால இப்படி தீர்க்க முடியுமா ? “- ராமன்

அந்த எழுவது வயதில் ராமனின் ஆர்வம் டாக்டரை பிரமிக்க வைத்தது. என்ன சொல்கிறார் என்று தான் பார்ப்போமே .

“ டாக்டர், நான் தச்சனாக வேலை பார்த்தவன் . என் கிட்ட லெவல் பார்க்கிற கருவி (ரச மட்டம்) ஒன்னு எப்பவும் இருக்கும் . அதை வெச்சுதான், மேசையோ, கதவோ நேரா இருக்கா, இல்லை சாய்ந்து இருக்கான்னு பார்ப்போம் . அது மாதிரி ஒன்னை என் கண்ணுகிட்டே வெச்சா, நான் என்னை பாலன்ஸ் பண்ணிக்க முடியுமா ? அவ்வளவு ஈஸி இல்லேதான் . முதல்லே முடியாது தான் . ஆனா, நாள் பட, நாள் பட நான் நேரா நடக்க பழகிடாதா? “ – சின்ன குழந்தையின் ஆர்வம் ராமன் பேச்சில் ..

டாக்டர் ராகவனுக்கும் அந்த ஆர்வம் தொத்திக் கொண்டது. “ ஆனால், மூளைக்குள், அந்த மாதிரி ஒரு ஸ்பிரிட் லெவல் ( தச்சு நிலை கருவி ) வைக்க முடியுமான்னு தெரியலியே ராமன் . நான் எதுக்கும் மத்தவங்களை கேட்டு பார்க்கட்டுமா ?

ராமன் உடனே மறுத்தார். “ வேண்டாம் டாக்டர் , தப்பா எடுத்துக்காதீங்க. மூளைக்கு உள்ளே வெக்க வேண்டாம் . முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்து என்ன நேர் படுத்திக்கலாம் . ஆனால்,. நான் எல்லா எடத்துக்கும் , ஆளுயர கண்ணாடி தூக்கிக்கிட்டு அலைய முடியாது. என்ன பண்ணலாம் ? “ .

“என்ன பண்ணலாம்? “ டாக்டர் ராகவன் ஒரு சிறந்த மன தத்துவ நிபுணர். அவருக்கு ராமன் , தன் குறை தீர்க்க கடுமையாக யோசனை பண்ணுகிறார், அதற்காக கடுமையாக உழைப்பார், சில தியாகங்களும் செய்வார் என தோன்றியது. அவரிடமே பிரச்னையை விடுவோமே . என்ன தீர்வு கிடைக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போமே!

மீண்டும் , ராமன் முகத்தில் ஒரு பல்ப் எரிந்தது .

“ இப்படி செய்யலாமா டாக்டர்? வெளிலே, என் கண்ணுக்கு பக்கத்திலே ஒரு ஸ்பிரிட் லெவல் வெச்சா, நான் அதை பார்த்து என்னை சரி படுத்திகிட்டு, நேரே நடக்க முடியாதா ? “

டாக்டர் யோசனை செய்தார் . இதுவும் நல்ல ஐடியா தான் முயற்சி செய்து பார்க்கலாமே ! “சரி, எப்படி செய்யலாம் ? “

ராமன் தன் கண்ணாடியை கழற்றினார். “ இந்த கண்ணாடி வலது பக்க ஓரத்திலே, அந்த ரிம்லே ஒரு சின்ன ஒரு ஸ்பிரிட் லெவல் ( தச்சு நிலை கருவி ) வெச்சு கொடுக்க முடியுமா ? அதை போட்டு கிட்டு, அந்த ஸ்பிரிட் குமிழுக்கு சரியா .என்னை நிமிர்த்திக்கிறேன். என் கண் அந்த குமிழ் மேலேயே இருக்க வேண்டும் . முதலில் இது ரொம்ப கஷ்டம் தான் . போகப் போக இது பழகிப்போய் விடும் . என்ன சொல்றீங்க டாக்டர் . இது சரிப் பட்டு வருமா ?”

டாக்டர் ராகவனுக்கு ஒரே பிரமிப்பு. இந்த ராமனுக்கு என்ன ஒரு தெளிவு ? என்ன ஒரு சிந்தனை இந்த எழுபது வயதில் ?

“ என் முடியாது ? கட்டாயம் முயற்சி செய்து பார்க்கலாம் ராமன் ! சபாஷ் ராமன் ! அருமையான யோசனை ! “

டாக்டர் அடுத்த நாளே, குமிழுடன் கூடிய ஒரு கண்ணாடிக்கு ஆர்டர் செய்தார். வேறு வேறு டிசைனுக்கு பிறகு, ஒரு கண்ணாடி, ரிம்மில் சிறிய ஸ்பிரிட் குமிழுடன் தயாரானது .

ராமனை கூப்பிட்டு அதை அணிந்து நடக்க சொன்னார். ராமனுக்கு ஒரே குதூகலம். அந்த கண்ணாடியை போட்டுக் கொண்டு, அந்த குமிழ் நடுவில் இருக்கும்படி பார்த்துக் கொண்டே மெதுவாக நடந்தார். இப்போது அவர் நடை நேர் நடையாகி விட்டது. உடல், வலப் பக்கம் சாயும் போது குமிழ் மேலே போவதை பார்த்து தன்னை நேர் படுத்திக் கொண்டார்.

கொஞ்ச நாளில் குமிழ் பழகி விட்டது . எல்லோரையும் போல நேராக நடக்க ஆரம்பித்து விட்டார் .

இன்று : டாக்டர் ராகவன் கண்ணாடிக்கு ஏகப் பட்ட மகிமை. நாடு முழுவதும் , பர்கின்சன் நோயால் தாக்கப் பட்டு, சாய்ந்து நடக்கும் பலர், இந்த கண்ணாடியை உபயோகப் படுத்த தொடங்கி விட்டனர்.

*****முற்றும்

( Courtesy : Oliver Sacks )

ஆ. கு : ஆப்பிள் தினமும் தான் மரத்திலிருந்து கீழே விழுகிறது. நிலவும் சூரியனும், நட்சததிரங்களும் என்றும் வானிலேயே நிற்கிறது . கீழே விழுவதில்லை

ஆனால், ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது என்று கேட்டு அதற்கு விடையும் கண்டு பிடித்தார் ஐசக் நியுடன்.

உத்வேகம் ( சிந்தனை ) 1 % வியர்வை சிந்துதல் (உழைப்பு ) 99% அவனே மேதை (இது ராமனுக்கும் ,.டாக்டர் ராகவனுக்கும் இருந்தது)

ஸ்ரீமத் பகவத்கீதையிலும் வெற்றி பற்றி சொல்லப் பட்டிருக்கிறது (விடா முயற்சி, வெற்றி பெற வேண்டும் என வைராக்கியம் வெற்றி பெற ஒருவனுக்கு தேவை.

ஆறாவது அத்தியாயம் (ஆத்ம ஸம்யம யோகம்) -

பகவாநுவாச।

அஸம்ஷயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்।
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே॥ 6.35 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: மனம் அடக்க முடியாதது, அலைபாயகூடியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் அதை வசபடுத்திவிடலாம்.