தன் உயிருக்குயிரான மனைவியை கொடூரமாக கொன்று விட்டான் ராஜதுரை. . மனைவியை சுவற்றில் இடித்து கொல்லும்சமயம், அவன் குடி போதையில் இருந்தான்.தன் தவறை உணர்ந்து, மனம் வெறுத்து, தற்கொலை செய்து கொள்ள , ராஜதுரை மாடியிலிருந்து குதித்து விட்டான். ஆனால் இறக்க வில்லை. ராஜதுரைக்கு மூளையில் நல்ல அடி. அவன் தன் சுய நினைவிழந்தான். மீண்டும் கோமாவிலிருந்து மீண்டு வருகையில், அவன் செய்த கொலையைப் பற்றி, ராஜதுரைக்கு எந்த நினைவுமில்லை. அவன் மனைவி பற்றி ஒரு நினைவுமில்லை.போலீஸ் அவனை கேட்ட எந்த கேள்விக்கும் அவனிடம் பதிலில்லை. சோடியம் அமிடால் போன்ற மருந்துகளும் அவன் நினைவுகளை மீட்கவில்லை. ஆனால், ராஜதுரை, தன் மனைவியை சித்திரவதை செய்து கொல்லும் காட்சிகளை பார்த்த சாட்சிகள் மிகவும் வலுவாக இருந்ததால், ராஜதுரை சிறையில் அடைக்கப் பட்டான்..ஆனால், அவன் கொலை செய்யும் போது, அவன் மனநிலை அவன் வசத்தில் இல்லை, ஒரு பைத்தியத்தின் நிலை (Psychomotor seizure ) என்பது கோர்ட்டாருக்கு நிரூபனமானதால், அவனை ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நீதி மன்றம் தீர்ப்பளித்தது.நான்கு வருடங்கள் ஓடின. பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ராஜதுரை தன்னை புரிந்து கொண்டான். அவன் பைத்தியம் மெதுவாக தெளிய ஆரம்பித்து விட்டது.ஆனால், அவனுக்கு தான் செய்த கொலை பற்றி , தனது மனைவி பற்றி எதுவும் நினைவுக்கு வரவில்லை. “ நான் இந்த சமூகத்துக்கு ஏற்றவனில்லை. . நான் பெரிய தவறு இழைத்திருக்கிறேன். இறைவனின் தண்டனை இது. எனக்கு இது வேண்டும்” என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான். அவன்”ராஜதுரை மிகவும் அமைதியாக இருந்தான். யார் வம்புக்கும் போக மாட்டான் . தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தான். அவன் நன்னடத்தை காரணமாக, ஐந்தாம் வருடம் அவன் விடுதலை அடைந்தான்.ராஜதுரை கோவையை சேர்ந்தவன். விடுதலைக்கு பிறகு, அவன் பொள்ளாச்சியில் ஜாகை எடுத்துக் கொண்டு, ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அமைதியாக போய் கொண்டிருந்தான். ஆனால், விதி விளையாடியது.ஒரு நாள், வேகமாக, சாலையில், ராஜதுரை ,மேலேயிருந்து பள்ளம் நோக்கி, தனது சைக்கிளில் வந்து கோண்டிருந்தான். எதிரே, ஒரு கத்துக்குட்டி கார் டிரைவர் எதிரில் வந்து விட்டான். காதலன், காதலியை சந்திப்பது போல, எதிரும் புதிரும் காரும், சைக்கிளும் மோதின. ராஜதுரை சைக்கிளிலிருந்து தூக்கி எறியப் பட்டான். மண்டையில் பலமான அடி. ரத்த உறைவு. ( Massive bilateral Subdural Hamatomas )ராஜதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை. மீண்டும் பிழைத்துக் கொண்டான். இரண்டு வாரம் கழித்து ராஜதுரை கோமாவிலிருந்து மீண்டான். கூடவே, அவனது பழைய நினைவுகளும் மீண்டு விட்டன.அவனது மனைவி நினைவுக்கு வந்தாள் , தான் செய்த கொலை மீண்டும் நினைவுக்கு வந்து விட்டது. “ ஹே கடவுளே !!“ “ என்ன காரியம் செய்து விட்டேன்? “ நான் பாவி “ என கத்த ஆரம்பித்தது விட்டான். கதற ஆரம்பித்து விட்டான். கைகளை உதற ஆரம்பித்து விட்டான்.

டாக்டர்களுக்கு என்ன செய்வது என புரியவில்லை. ராஜதுரைக்கு , தான் செய்த,கொலை மீண்டும் மீண்டும் அவன் நினைவில் வந்து அவனை தாக்கின. தன் தவறை உணர்ந்து, மனம் வெறுத்து விட்டான்.டாக்டர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ராஜதுரை கட்டிலிருந்து எழுந்து, ஜன்னல் வழியாக, தற்கொலை செய்து கொள்ள , மாடியிலிருந்து குதித்து விட்டான்.****கதையை எழுதி முடித்த ராஜதுரை அதற்கு “தண்டனை” என தலைப்பிட்டான். பிறகு ஒரு க்வார்ட்டர் விஸ்கியை சோடாவில் கலந்து திருப்தியாக குடித்தான். அப்போது வாசல் கதவை யாரோ தட்டியது போல தோன்றியது. கதவை திறந்தால், அவன் மனைவி.“ வா வா!! உன்னை தான் நினைத்துக் கொண்டிருந்தேன். என் பெயரிலேயே ஒரு கதை எழுதி இருக்கிறேன். படிக்கிறாயா ?” என்றான் ராஜதுரை .“உனக்கு வேறே வேலையே இல்லை. கதை படி படி என கடிக்கிறாய்!” என்று செல்லமாய் கோபித்துக் கொண்டே அவன் மனைவி அவன் கொடுத்த கதையை படித்தாள்.படித்து விட்டு, கதையை தூக்கி எறிந்தாள். “என்ன கதை இது! உப்பு சப்பு இல்லாமல் ! வேஸ்ட் ! “ என்றாள் அலட்சியமாக. ராஜதுரைக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “என்ன சொன்னே !” என்று அவள் மேல் பாய்ந்தான். குடி வேகம். கண் மண் தெரியாமல் , அவளை சுவற்றின் மேல் தள்ளினான். .மீதிக் கதையை படிக்க இந்த கதையின் முதல் வரிக்கு செல்லவும் ......!முற்றும் ...