மனஸ்தாபம் – கவிதை


சதாகாலமும் நிந்திப்பதிலேயே உன் ஆட்டம்

எதிலிருந்தும் தொடங்குகிறன.

புள்ளப்பூச்சியின் புடுங்கலை ஒத்த

நச்சரிப்பில் அடி நாளங்கள் கூசுகின்றன.

எரிமலையின் வெடிப்பை

வார்த்தைகளாக்கி வதம் செய்கின்றாய் சுகமாய்.சாகாவரம் பெற்ற மலைகளை மடுவாக்குகின்றாய்.

அற்பப் பதரென ஊற்றுப் பெருவெள்ளத்தை உதறித் தள்ளுகிறாய்.அலமார்ந்து சுருங்கி விடுகின்றேன் ஆமையாய்.

நீ- என்னுடன் போராடாதே…

உழுவை மீனாய்

வழுவிச் செல்ல முடியா கழுதை நான்.எனக்குள்ளேயே இருந்து எனையே அழிக்கும்

ஆட்டத்தை

எனக்குள்ளிருக்கும் என் மனமே

எப்போது விடுவதாக உத்தேசம்?

-- நன்றி: இனிது மின்னிதழ்

பாரதிசந்திரன்