Results 1 to 1 of 1

Thread: திருட்டு!

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2017
    Posts
    67
    Post Thanks / Like
    iCash Credits
    1,453
    Downloads
    0
    Uploads
    0

    திருட்டு!

    ஷண்முகத்திற்கு தூக்கம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. புரண்டு புரண்டு படுத்தார். தனது மனைவியும் மகனும் இவ்வளவு கேவலமானவர்களா?

    என்னுடைய சொத்துக்காக என்னையே கொலை செய்யும் அளவிற்கு துணிந்தவர்களா? வருத்தம் அவரை போட்டு வாட்டியது.
    காரணம் இது தான். நேற்று அவரது மகனும், மனைவியும் பேசிக் கொண்டதை தற்செயலாக கேட்டுக் கொண்டிருந்தது தான்.

    மகன் சொன்னான் : “ அம்மா ! அப்பா இப்பத்திக்கு சாக மாட்டார்மா. அவர் செத்தால் தான் நமக்கு இந்த சொத்தெல்லாம் கிடைக்கும். அவர் எல்லா சொத்தையும் தான தர்மத்திற்கே கொடுத்தே அழிச்சிடுவார் போல இருக்கு. பேசாம, நாளை இரவு அவர் தூங்கும் போது, நான் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விடுகிறேன். பழியை, வீட்டுக்கு வந்த திருடர்கள், அவரை கொன்று விட்டார்கள் என்று போலீசில் சொல்லிவிடலாம். அதற்கான ஜோடனை எல்லாம் நான் செய்து விடுகிறேன். நீ என்ன சொல்கிறாய் ? “

    அம்மா சொன்னாள் “ அதெல்லாம் வேண்டாம் கிருஷ்ணா ! அது சரிப்பட்டு வராது ! போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு நம்மை குடைந்தால், நாம் மாட்டிக்குவோம்.! நாம் ஜெயிலுக்கு தான் போக வேண்டியிருக்கும். சொத்தும் கிடைக்காது. அதனாலே நீ பேசாம இரு ! நான் நாளைக்கு அவர் சாப்பாட்டிலே விஷம் கலந்து கொடுத்திடறேன். கிழம் சாகட்டும். ஏற்கெனவே அவருக்கு மூளை சம்பந்த நோய் இருக்கு. அதனாலே, அவரே விஷம் சாப்பிட்டு தற்கொலை பண்ணிகிட்டார்னு , நாம்பளே ஒரு போலீஸ் கேஸ் கொடுத்திடுவோம். நீ என்ன சொல்றே ?

    மகன் கிருஷ்ணா சொன்னான் : “ இது சூப்பர் ஐடியா அம்மா ! அவருக்கு ஏற்கெனவே டிப்ரெஷன். டாக்டர் கொடுத்த மெடிகல் ரிப்போர்ட், மருந்து, எக்ஸ் ரே ரிப்போர்ட் எல்லாம் நமக்கு கை கொடுக்கும். தற்கொலை செய்து கொண்டார் என்று நாமே போலீசில் பிராது கொடுத்தால். ஒரு பிரச்னையும் இருக்காது..இது தான் பெஸ்ட் ஐடியா. “

    இதையெல்லாம் பக்கத்து அறையில் இருந்து கொண்டு கேட்ட ஷண்முகத்திற்கு இது ஒரு பெரிய ஷாக். அவர்களுக்கு நான் என்ன குறை வைத்தேன்./ ஏதோ நாம் போகிற வழிக்கு கொஞ்சம் புண்ணியம் தேடிக் கொள்ள தானே இந்த தான தர்மம் பண்ணுகிறோம்.? நமது சொத்தில் இது சில்லறை காசு ? அதையா சொத்து அழிந்து விடும் என்று பயந்து என்னை ஒழித்து விட பார்க்கிறார்கள்.? இத்தனை வருடங்களாக , இவர்களையா என் சொத்து என நம்பி ஏமாந்து போனேன்? சே! இப்படிப்பட்ட வாழ்க்கை நமக்கு தேவைதானா?
    *****

    அடுத்த நாள் காலை அவரது மனைவி காபி எடுத்துக் கொண்டு வந்தாள். “ என்னங்க ! முகம் வாடி இருக்கு ! ராத்திரி சரியா தூங்கலையா? அதுக்கு தான் டீவி ரொம்ப நேரம் பாக்காதீங்கன்னு சொல்றது. டாக்டரை வேணா வரச்சொல்லட்டுமா ? “ என்று ஆதுரமாக கேட்டாள்.

    சண்முகம் நேரிடையாகவே விஷயத்திற்கு வந்து விட்டார் . “ அதில்லே கலா! நேற்று நீயும், கிருஷ்ணாவும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன்! என்னை விஷம் வெச்சு கொல்ல நீங்க திட்டம் போட்டிருக்கிறது எனக்கு தெரியும் !

    கலாவுக்கு முகம் வெளிறியது. அங்கே கலவரம் குடி கொண்டது. அவள் பேச ஆரம்பிக்குமுன், ஷண்முகம் தொடர்ந்தார் . “ நீ எதுக்கும் கவலைப் படாதே கலா ! என்னை விஷம் வைத்துக் கொல்ல வேண்டாம் . அதில் ஏதாவது சிக்கல் வரும். நீ மாட்டிக் கொள்வாய். எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடு. நான் இன்றே நம்ம வக்கீலை வரச்சொல்லி, நமது கொடைக்கானல் எஸ்டேட், இந்த வீடு, நம்ம தொழிற்சாலை எல்லாவற்றையும் சரி பாதியாக, உன் பேருக்கு உன் மகன் பேருக்கு மாற்றி விடுகிறேன். வங்கி கணக்கு , லாக்கர் அத்துனையும் இன்றே உன் பேருக்கு மாற்றி விடுகிறேன் .

    பின்னர் நானே எனது காரை எடுத்துக் கொண்டு , கொடைக்கானல் போவதாக சொல்லி விட்டு, வழியில் ஏதாவது மரம் அல்லது பாலத்தில் மோதி விடுகிறேன். என் வயதிற்கு சாவு நிச்சயம். ஆனால், பழி உங்கள் பேரில் வராது. நீயும் , கிருஷ்ணாவும் சந்தோஷமாக இருந்தால் அதுவே எனக்கு போதும்.

    கேட்டுக் கொண்டிருந்த கலாவுக்கு , கண்ணில் கண்ணீர் கொப்பளித்தது. வாசலில் நின்று ஒட்டு கேட்டுக்கொண்டிருந்த அவர் மகன், அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்திருந்தான்.. . “ அப்பா என்னை மன்னித்து விடுங்கள் அப்பா!” என்று கதறிக் கொண்டே !

    சிரித்துக் கொண்டார் சண்முகம். "அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் “

    ****
    செல்வத்திற்கு விஷ்வாவிடமிருந்து ஒரு போன்.

    “செல்வம் , நான் ஒரு கதையை உனக்கு இமெயிலில் அனுப்பி வைக்கிறேன் . படிச்சு பார்த்துட்டு, எப்படி இருக்கு, எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம்னு எனக்கு சொல்றியா ? ப்ளீஸ் ! நாளைக்கே சொல்லணும். அதுக்கேத்தா மாதிரி, நான் கதையை மாற்றி, அதை ‘கதை மந்திர்;’ பத்திரிகையின் கதை போட்டிக்கு அனுப்புறேன். போட்டிக்கு நாளன்னிக்கு தான் கடைசி தினம்.” – விஷ்வா தன் நண்பனை கெஞ்சினான்.

    “ சரி, அனுப்பு, படிச்சி பார்த்துட்டு என் கருத்தை சொல்றேன்” !!- என்றான் செல்வம் .
    செல்வத்திற்கு இமெயிலில் விஷ்வா அனுப்பியிருந்த கதை வந்தது.
    அடுத்த நாள் விஷ்வாவிடமிருந்து செல்வத்திற்கு ஒரு போன். “செல்வா கதை எப்படியிருக்கு ? “

    செல்வா சொன்னான் : “ சாரி விஸ்வா ! கதை சரியான குப்பைடா.! தூக்கிப்போட்டு விட்டு வேறே வேலை பாரு !”

    விஷ்வாவிற்கு ஏமாற்றம். “ சரி பரவாயில்லை ! விடு ! எனி வே தாங்க்ஸ் செல்வம் “ என்று போனை வைத்தான் விஷ்வா.

    ****
    பத்து நாள் கழித்து.

    செல்வா குப்பை என்று சொன்ன கதை “ கதை மந்திர்” பத்திரிகையில் வெளி வந்திருந்தது.
    இரண்டாம் பரிசு. ஆசிரியர் : செல்வம்

    பார்த்தவுடன் விஷ்வாவுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. உடனே அலை பேசியில் செல்வத்தை அழைத்தான். “ செல்வா ! நீ செஞ்ச காரியம் உனக்கே நல்லாயிருக்கா? இது பச்சை துரோகம் இல்லையா ? என் கதையை எப்படி உன் கதைன்னு போடலாம் ?”

    செல்வம் சொன்னான் “ அட போடா ! இதை போய் பெரிசு பண்ணிக்கிட்டு! இந்த கதை நல்லாயிருந்தது. அதனாலே நான் என் பேரிலே போட்டுகிட்டேன் ! நண்பருக்குள்ளே இதெல்லாம் சகஜமப்பா! “

    விஷ்வா கேட்டான் “ உனக்கே இது அருவருப்பா தோணலியா செல்வா? நம்பிக்கை துரோகம் இல்லையா ? ”

    செல்வம் சொன்னான் “ இல்லியே ! யார் திருடலே? தமிழ் படங்களில் இல்லாத திருட்டா? உன்னை யார் எனக்கு கதையை அனுப்ப சொன்னாங்க ? என்னமோ சொல்ல வந்துட்டான் ? எனக்கு ஆயிரம் வேலை இருக்கு ! வை போனை “ என்று செல்வம் மொபைலை அணைத்து விட்டான்

    ****
    மூன்றாம் நாள் !

    செல்வத்திற்கு காய்ச்சல் ! அடுத்த பத்தாம் நாள் அவன்
    இந்த உலகிலேயே இல்லை ! செல்வத்தின் ஆன்மா நரக லோகத்தில் ! யம தேவன் எதிரில் !

    அங்கு மனிதரின் பாவ புண்ணியங்களை கணக்கெழுதும் சித்திர குப்தன் சொன்னார் “ இந்த மானுடன் செய்தது மோசடி ! நண்பனின் கதையை திருடி இருக்கிறார்! இவனை அக்னி குண்டத்தில் வீசி எறிய வேண்டும். பின்னர் , இவனை இவன் செய்த பாபத்திற்காக ரத்தமும் சீழும் நிறைந்த வைதரணி ஆற்றில் முக்கி எடுக்க வேண்டும். “

    பின்னர் இவன் பூலோகத்திற்கே மீண்டும் சென்று மூளைக் குறைவு உள்ளவனாக, ஏழைக் குடும்பத்தில் பிறக்க வேண்டும். இதுதான் தண்டனை”

    இதை கேட்ட செல்வம் கதறினான் . “ ஐயோ நான் செய்தது சின்ன பாபம். இதற்கா இவ்வளவு பெரிய தண்டனை ?”

    யம தர்மர் சிரித்தார் “ உங்கள் உலக உபநிஷத்தின் படியும் ,பதஞ்சலி யோகா சூத்ரா மற்றும் பகவத் கீதாவின் படியும் தான் இந்த தண்டனை உனக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது”

    சித்திர குப்தன் யமன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். "உங்கள் உலக ஈசா உபநிஷத் என்ன சொல்கிறது ?

    ISāvāsyamidaṃ sarvaṃ yatkiñca jagatyāṃ jagat |tena tyaktena bhuñjīthā mā gṛdhaḥ kasyasviddhanam || 1st Mantra, Isha-Upanishad

    (ஈசா வாச்யமிதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யம் ஜகது தேனா த்யாகேத்ன புஞ்சித மா கிரத கச்யச்வித்தானம் )

    பொருள் : இவ்வுலகில் எதெல்லாம் மாற்றமுள்ளதோ, அவையெல்லாம் இறைவனுள் அடங்கும். அதனால், கர்மயோகியாய் , மற்றவரின் சொத்துக்கு ஆசைப்படாமல், வாழ்! மானிடா ! அதன் படி நீ வாழ வில்லை.! மற்றவரின் எழுத்தை நீ திருடினாய். நண்பனை ஏமாற்றினாய். அதனாலே உனக்கு இந்த தண்டனை.

    இதையே தான் யோக சித்தர் பதஞ்சலி முனிவரும் சொன்னார் “ திருடாதே, பொய் சொல்லாதே, மற்றவரின் பொருளுக்கு ஆசைப் படாதே என்று . யார் கேக்கறீங்க ? மரணத்திற்கு பிறகு இங்கே வந்து துயரப் படறீங்க !"

    “ஆனால், என்னை ஏன் மீண்டும் பூலோகத்திற்கே, அங்க ஹீனனாக, மூளை குறைபாடுடன் அனுப்புகிறீர்கள் ?“ என்று கெஞ்சினான் செல்வம்

    அதுவும் உங்கள் உலகின் கிருஷ்ணன் சொன்ன பகவத் கீதை சொன்னது

    “ நீ செய்த பாவங்களால், . உனது பிறவிகள் உன்னை உயர்த்தாது. இச்சைகள் அதிகமாகும். மேலும் பாவங்கள் செய்வாய். அதனால், . மீண்டும் மீண்டும், பிறப்பாய், மீண்டும் மீண்டும் துயரம், மேலும் துயரம் ! ஆதி சங்கரர் சொன்னது போல் மாயச்சுழலில் மாட்டிக் கொள்வாய்!"

    யம தேவர் இடை மறித்தார் “இழுத்துப் போங்கள் இந்த பாவியை , அக்னி குண்டத்திற்கு “

    *****முற்றும்

    முத்து கதையை எழுதி முடித்து விட்டு அதற்கு " திருட்டு " என தலைப்பிட்டுவிட்டு தன் நண்பன் கோவிந்தனை அலை பேசியில் அழைத்தான் .

    . “ கோவிந்தா ! , நான் உனக்கு இமெயிலில் ஒரு கதை அனுப்பி வைக்கிறேன் . படிச்சு பார்த்துட்டு, எப்படி இருக்கு, எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம்னு எனக்கு சொல்றியா ? ப்ளீஸ் ! நாளைக்கே சொல்லணும். என்ன ? அதுக்கேத்தா மாதிரி, நான் கதையை மாற்றி, அதை ‘கதைக்களம் பத்திரிகையின் கதை போட்டிக்கு அனுப்புறேன். த்ரில்லர், சஸ்பென்ஸ், ட்விஸ்ட் எல்லாம் வெச்சிருக்கேன். போட்டிக்கு நாளன்னிக்கு தான் கடைசி தினம்.” – முத்து தன் நண்பனை கெஞ்சினான்..

    “ சரி, அனுப்பு, படிச்சி பார்த்துட்டு என் கருத்தை சொல்றேன்” !!- என்றான் கோவிந்தன். . கோவிந்தனுக்கு இமெயிலில் முத்து அனுப்பியிருந்த கதை வந்தது. அடுத்த நாள் முத்துவிடமிருந்து கோவிந்தனுக்கு ஒரு போன். “கோவிந்தா கதை எப்படியிருக்கு ? “

    கோவிந்தன் சொன்னான் : “ ! கதை சூப்பர்டா ! தாராளமா போட்டிக்கு அனுப்பலாம் ! "

    *** முற்றும்



    Last edited by murali12; 09-08-2020 at 06:37 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •