மூன்றா
மிடத்தில் குரு


மனிதவாடை அற்ற சிலமாதப் பொழுதுகளில்,

பொரிக்காக வாய் பிளந்து அலைந்தன

கோயில் குளங்களிலெல்லாம் மீன்கள்.



கால்நடையோ, பறவையோ நீரருந்த வரும் போது,

மொசுமொசுத்த அகோரப் பசியுடைய

அந்த மீன்கள்,

முதலையாய் உருவெடுத்து

அதைக் குதறித் தின்றுவிடக் கூடாதென

கடவுளிடம் மண்டியிட்டு மன்றாடின.



கடவுளும் இவ்வாறே ஆசியளித்தார்…

“உங்கள் குத்தகைக்காரன் நூறாண்டு வாழட்டும்”



குத்தகைக்காரனுக்கு எங்கே தெரியும்?

மாதா – பிதா – குரு என்னவென்று.



மலை முகடுகளிலிருந்து உருண்டு வரும் பாறைகள் சிதற,

மேகத்திற்கும் குளத்திற்கும் நடுவே சூறாவளியொன்று

குளத்திலுள்ள மீன்களை அள்ளிச் சென்று,

பனிக்கட்டிகளுக்கு இடையே தூங்க வைக்கும்

கனவொன்றைக் கண்டன,

பசியாறத் துடித்த

மீன்கொத்திப் பறவைகள்.



பாரதிசந்திரன்