Results 1 to 2 of 2

Thread: ஜனனம் -மரணம்- ஜனனம் !

                  
   
   
 1. #1
  புதியவர் பண்பட்டவர்
  Join Date
  12 Sep 2017
  Posts
  28
  Post Thanks / Like
  iCash Credits
  845
  Downloads
  0
  Uploads
  0

  ஜனனம் -மரணம்- ஜனனம் !

  முத்து முடிவு செய்து விட்டார். தன்னை முடித்துக் கொள்வதென்று. இனி இந்த ஒவ்வாத உலகத்தின் உபாதைகள் தனக்கு வேண்டாம். தற்கொலை தான் தீர்வு தனக்கு, தனது தாளாத துயரங்களுக்கு என்று ஒரு தன்னிலைப் பாட்டிற்கு வந்து விட்டார்.

  வீட்டில் நிதி நிலை சரியில்லை. தனக்கு உடல் நிலை சரியில்லை. நாட்டில் பொருளாதாரம் சரியில்லை. மகன் சரியில்லை. மனைவியும் சரியில்லை.. இந்த கொரோனாவால் , நாட்டில், முழு அடைப்பு . கோவில் , குளம் , டாக்டர் , ஆஸ்பத்திரி என்று கூட வெளியில் போகமுடியாமல், அவதி.

  ஏற்கெனெவே எழுவது வயது பிரச்னைகள், கூடவே ரத்த கொதிப்பும், சர்க்கரை வியாதியும் !! போனசாக இப்போது சளி, இருமல், ஆஸ்த்மா.

  ஐயோ, இப்போது கொரோனாவும் வந்து விட்டால், நம் கதி அதோ கதி தான். அதை விட, பேசாமல், மண்டையை போட்டு விடலாம். நிம்மதியாக. மற்றவருக்கும் நிம்மதி.

  முத்து முடிவுக்கு வந்து விட்டார். மனைவியும் , கல்யாணமாகாத மகனும் , அவர் அவர் அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஏ.சி அறையில். முத்துவிற்கு ஏசி ஒத்துக் கொள்ளாது. அதனால், ரொம்ப நாளாகவே அவருக்கு தனி அறை.

  வீட்டில், தனக்காக வாங்கி இருக்கும் இரண்டு மாத ஸ்டாக் , ரத்த கொதிப்பு, சர்க்கரை, தூக்க மாத்திரை அத்தனை மருந்துகளையும், ஒன்றாக பொடி செய்து, பாலில் கரைத்து குடித்து விட வேண்டியது தான். பின்னர், ஒரு கத்தி எடுத்து, கை நரம்பை வெட்டி , ரத்தம் சொட்ட சொட்ட, ஒரு பக்கெட் தண்ணீரில் கையை விட்டு விட வேண்டும். ரத்தம் உறையாது, தூக்க மாத்திரையால், நரம்பு வெட்டப் பட்ட வலியே தெரியாது. கட்டாயம் மரணம் தான். முடிந்தது இத்துடன் கதை.

  முத்து , தன் மாத்திரை டப்பாவை எடுத்து, அத்தனை மருந்துகளையும் மாத்திரைகளையும் ஒன்றாக பொடி செய்தார். அறுபது தூக்க மாத்திரைகள். தன் சாவுக்கு தாராளமாக போதும். அதையும் சேர்த்தார். வாயில் போட்டார், தண்ணீர் குடித்தார். மீதி மாத்திரைகளையும் விழுங்கி, தண்ணீரை மடக் மடக் என விழுங்கினார். ஒரு கத்தி கொண்டு, தனது இடது கை நரம்பை துண்டித்தார்.

  ரத்தம் சொட்டியது! இல்லை இல்லை, கொட்டியது. நேரே தண்ணீர் பக்கெட்டில் கையை விட்டு , சாய்ந்து கொண்டார். அது தான் அவருக்கு தெரியும். மெதுவாக கண்களை இருட்டியது. அப்பா ! நிம்மதி ! இனி நோய் இல்லை, நொடி இல்லை, நிரந்தர தூக்கம் மரணம் ...

  ***

  யாரோ தன்னை தட்டி எழுப்பியது போல இருந்தது. அவரது மனைவி தான்,

  “ எழுந்திருங்க ! நேரமாச்சு ! பல் தேச்சுட்டு, கீழே போய், பால், பேப்பர் எடுத்துகிட்டு வாங்க! நான் அதுக்குள்ளே காபி போட்டு வைக்கிறேன் “

  முத்து சிரித்துக் கொண்டார். அட இது வெறும் கனவா ?

  ****

  கதையை எழுதி முடித்தார் ஆசிரியர் கதிரவன்.

  தனது மன வலியை, உள்ளக் குமுறலை, அடிக்கடி இப்படித்தான் கதை எழுதி குறைத்துக் கொள்ள முயல்வார். “அப்பாடா, இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.”

  மன வேதனையை மறக்க, குறைக்க , சிலர் ஆன்மிகத்தில் இறங்குவார்கள். ஜாதக நம்பிக்கையில் சிலர் . பலர் “இறைவனே சரண் “ என்று கோவில் குளம் என்று செல்வார்கள்.

  சிலர் குடிக்கு, போதைக்கு அடிமையாவார்கள். சிலர் , தாங்க முடியாமல் தற்கொலையும் செய்து கொள்ள முயல்வார்கள். தன் மன சுமையை குறைக்க , ஆசிரியர் கதிரவன் மேற்கொண்ட கொண்ட வழி இது, கதை எழுதுவது. இது ஒரு வடிகால். தற்கால நிவாரணம்!

  கதைக்கு “ மரணம் “ என்று பெயரிட்டார். தனது நண்பர், நாகராஜன் , இணைய தள பத்திரிகை ஆசிரியர், அவரது ஈ மைலுக்கு தனது குட்டிக் கதையை அனுப்பி விட்டார், பதிவிடக் கோரி!

  கதிரவனுக்கு இன்னும் கதையில் முழு திருப்தி ஏற்படவில்லை. கொஞ்சம் யோசனை பண்ணி, கதையை மாற்ற வேண்டும் .

  அங்கே இங்கே சுட்டு, இன்னும் நிறைய சேர்க்க வேண்டும். முதலில், கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். பிறகு வந்து சஸ்பென்சை, கொஞ்சம் நகைச்சுவையை கோக்கலாம். யாரும் எதிர்பார்க்காத முடிவை கதையில் சேர்க்கலாம். பின்னர் திரும்ப நண்பருக்கு பதிவிட அனுப்பலாம். அருமையான கரு. தன்னைத்தானே தட்டிக் கொண்டார். !

  கீழே போனவுடன் , முதலில் இனைய தள எடிட்டர், தனது நண்பர் நாகராஜனிடம் இது பற்றி பேச வேண்டும். !

  யோசனையோடு, தனது கணினியை அணைத்து விட்டு. தனது வீட்டு மொட்டை மாடிக்கு வந்தார்.மொட்டை மாடி தரை ஈரமாக இருந்தது.

  “அடேடே, மழை பெய்து இருக்கிறது போலிருக்கிறதே. ! ரோடு எப்படி இருக்கிறது பார்க்கலாம் ? “

  கைப்பிடி சுவரை பிடித்துக் கொண்டு வீதியை எட்டிபார்த்தார். அவரோடு கூடவே , அவரது விதியும் எட்டிப் பார்த்தது.

  நாற்பது வருட வீடு. மொட்டை மாடி, ஒற்றை கல் கைப்பிடி. இவரது தொண்ணூறு கிலோ எடையை தாங்க முடியாமல், ஈரமான கைச்சுவர் உடைந்தது. கதிரவன் வழுக்கி விழுந்தார் மொட்டை மாடியிலிருந்து,
  எந்த தடையுமின்றி , இரண்டாம் மாடியிலிருந்து தரையில் வந்து விழுந்தார் .

  அவர் மண்டை உடைந்து உடனே கதிரவன் உயிர் பிரிந்தது. இது ஒரு மரணம்

  ***
  கதிரவன் நண்பரின் (நாகராஜன்) ஈமெயில். அதில் கதிரவனின் குட்டிக் கதை

  “மரணம்” பார்வைக்காக காத்துக் கொண்டிருந்தது. அதை அசிரத்தையாக படித்தார் , கதிரவனின் நண்பர், நாகராஜன், இணைய தள எடிட்டர் .

  “குப்பை ! , என்ன எழுதறாங்க இவங்க ! எவன் படிப்பான் இந்த மாதிரி கதையை, கொஞ்சம் கூட, காதல், ஊடல், ஓடல், கொலை இது எதுவும் இல்லாமல் ?” என்று கோபமாக கதையை தன் கணினியிலிருந்து அழித்தார்.

  இது ஒரு கதையின் “ மரணம்”

  ***

  ஒரு மாதம் கழித்து.

  “ அம்மா, அப்பாவுடைய கணினியை என்ன பண்ணட்டும்? அரத பழசு கணினிமா. இதிலே , அவர் பாஸ் வோர்டு வேற போட்டு இருக்கார்.“


  இறந்து போன கதாசிரியர் கதிரவனின் மகன் கேட்டான் .

  கதிரவனின் மனைவி, “ அது ஒன்னுத்துக்கும் பிரயோசனம் இல்லேடா. பேசாம பீரோ மேலே போட்டு வை. பின்னாடி பாத்துக்கலாம். இப்போ கிளம்பு. அப்பாவோட பேங்க் அக்கௌன்ட்டை “க்ளோஸ்” பண்ணி, பணத்தை எடுக்கணும், பாங்க்லே கூப்பிட்டுருக்காங்க ! “

  ***

  இதுவும் ஒரு கதையின் “ மரணம்”

  ***


  மரணமடைந்த கதிரவன் கதை, , உங்களால் எப்படி படிக்க முடிகிறது ? ஆச்சரியமாக இருக்கிறதா?


  இதை சொல்வது நான் தான் ! கதிரவன் ஆவி! . அரூபமாக ! படிப்பது நீங்கள்.

  சரி, நான் ஏன் உங்களிற்கு இந்த கதையை சொல்ல வேண்டும்? காரணம்

  ரொம்ப சிம்பிள் ! "நான் சொர்க்கம் செல்ல வேண்டும் !"


  அது எப்படி? கதைக்கும் , சொர்க்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம் ?


  மஹா பாரதத்தில், தர்ம புத்திரனிடம், யக்ஷன் கேட்கும் கேள்வி இது ! “ சொர்க்கம் செல்வதில் ஒருவனைத் தோல்வியுறச் செய்வது எது?”


  அதற்கு தர்மர் சொன்ன பதில் இது “உலகத்துடனான இத்தொடர்பினாலேயே {அதாவது பற்று [அ] ஆசையால்} ஒருவன் சொர்க்கம் செல்வதில் தோல்வியுறுகிறான்” .


  அதற்கு தர்மர் சொன்ன பதில் இது “உலகத்துடனான இத்தொடர்பினாலேயே {அதாவது பற்று [அ] ஆசையால்} ஒருவன் சொர்க்கம் செல்வதில் தோல்வியுறுகிறான்” .

  கதையை உங்களிடம் சொல்லி விட்டேன். அதனால், கதையில் இருந்த பற்று அற்று விட்டேன்.! சுவர்க்கமோ, நரகமோ, இனி செல்ல தடை இல்லை. -அங்கு போய், புது புதுக் கதைகளை, மற்றவருக்கு சொல்ல வேண்டும் !

  நன்றி

  இப்படிக்கு

  கதிரவனின் ஆன்மா .


  ****

  படித்துக் கொண்டிருந்த நான், அரவம் கேட்டு தலையை நிமிர்த்தினேன்.

  யாரோ தொண்டையை செருமுவது போல தோன்றியது. புகை போல ஒரு உருவம் எதிரே நின்று கொண்டிருந்தது. ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டேன்.


  பின்னர் தைரியத்தை வ்ரவழைத்துக் கொண்டு, அந்த அருவத்திடம் கெட்டேன்.


  “யார் நீங்க? என் அறைக்கு எப்படி வந்தீங்க ?


  “நானா ? நீங்க இப்போ படிச்சீங்களே, அந்த கதை ஆசிரியர் கதிரவன். 'பிரேத ஜென்மமாக ' உங்க முன் நிற்கிறேன் ? மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க வேண்டும் ! “ – அந்த அருவம், ஆசிரியர் கதிரவன் சொன்னது (சொன்னார்)


  எனக்கு ஆச்சரியம்! ‘என்ன இது, எல்லோரும், இந்த உலக வாழக்கை வேண்டாமெனத் தானே சொல்வார்கள். இவர் ஏன் மீண்டும் பிறக்க வேண்டும் என்கிறார் ?’


  நான் கதிரவனிடம் கெட்டேன் “ நீங்க தான் என் கிட்டே , கதையை சொல்லிட்டீங்களே ? அப்புறம் மேலுலகம் போக தடை என்ன ? ஏன் இப்படி இந்த உலகத்தையே சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?”


  கதிரவன் சொன்னார் : “ அதை ஏன் கேட்கிறீர்கள் தம்பி ! இறந்த பிறகு தேவ லோகம் போனேனா ? அங்கே என்னை திருப்பி விட்டார்கள் ! முதலில், நரக லோகம் போய், உன் பாவங்களை கழுவிக்கொண்டு, அப்புறம் இங்கு வா என்று தள்ளி விட்டார்கள்!”


  எனக்கு வியப்பு ! இது என்ன புதுக் கதை ? தெரிந்து கொள்ள ஆவல்! “ அப்புறம் என்ன ஆச்சு ?”


  கதிரவன் ஆவி தொடர்ந்தது


  “ நரக லோகம் போனேன் ! அங்கேயும் என்னை அனுமதிக்க வில்லை. இறந்த பிறகு, இங்கு வந்தும் உனக்கு கதை சொல்ல ஆசை , பற்று விட வில்லை. அதனால், மீண்டும் பூலோகத்தில் பிறந்து, உன் ஆசைகளை அனுபவித்து விட்டு, அப்புறம் வா ! என்று அனுப்பி விட்டார்கள்.


  இப்போது ஒரு உடலுக்காக அலைகிறேன். மீண்டும் பிறந்து, ஒரு கதாசிரியனாக என் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அப்போது, அந்த ஜன்மத்தில், புதிய ஆசைகள் ஏற்பட்டால், அவை நிறைவேறாவிட்டால், மீண்டும் மீண்டும் ஜனனம் எடுக்க வேண்டும் . பின் மரணம்!.


  ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் பாடலில் சொன்னது போல்,

  “ புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே"


  “மீண்டும் ஜனிப்பது, மீண்டும் மரணமடைவது, திரும்ப திரும்ப மாதாவின் கர்ப்ப பாத்திரத்தில் கிடப்பது என மாறி மாறி வரும். இந்த நிலையை(ஸம்ஸார சாகரத்தை கடப்பது என்பது (என்னால்) இயலாத காரியம்.” என்று அவர் சொன்னார்.


  " நீங்களே சொல்லுங்க தம்பி, , ஆதி சங்கருருக்கே முடியாத காரியம், இந்த கதிரவனால் மட்டும் எப்படி முடியும் !! இந்த மனித ஆசைகளுக்கு பஞ்சமேது? இனி வரும் ஜன்மங்களில், எனக்கு என்ன என்ன ஆசைகள் வரப் போகிறதோ?


  நடிகனாக ஆசை, அரசியல் வாதியாக ஆசை, புகழுக்கு ஆசை, பணக்காரனாக ஆசை, இதெல்லாம் வரலாம் ! இச்சைகளுக்கு ஏது முடிவு ? நான் மீண்டும் மீண்டும் ஜனிக்க தான் வேண்டும். மீண்டும் மீண்டும், இந்த சம்சார கடலில் அலையத்தான் வேண்டும். “


  கதிரவன் கதை போல் சொல்லி முடித்தார். எனக்கு புரியவில்லை, நான் கேட்டேன் : “அப்படி என்றால், இதற்கு என்ன தான் வழி ? இந்த பிறவியிலிருந்து விடுபடுவது எப்படி ?"


  கதிரவன் கொஞ்சம் யோசனை பண்ணினார் . “ அது தான் தம்பி எனக்கும் புரியவில்லை. நான் படித்ததில், ஒரு வழி இருக்கிறது. இந்த ஜன்மத்தில், ஆசை, பற்றை விட்டு விட வேண்டும் !.


  ஆதி சங்கரர் சொன்னது போல, இந்த நிலையை (ஸம்ஸார ஸகர்த்தை) கடப்பது என்பது இயலாத காரியம்.. அவர் சொன்னது, ஒரே வழி, இறைவனை பற்றிக் கொள்ள வேண்டும்


  சங்கரர் சொன்னது போல “க்ருபயா பாரே பாஹி முராரே” என்று ஆசைகளை, இச்சைகளை விட்டு துறந்து, பற்றற்ற நிலையில், இறைவனை இடைவிடாது நினைக்க வேண்டும் . (ஹே முரனை கொன்றவனே! தயைகூர்ந்து (என்னை இந்த ஸம்சாரஸாகரத்திலிருந்து) காப்பாற்று. என்று முனைய வேண்டும் ) அப்போது தான் இந்த சுழலிலிருந்து விடுபட முடியும் ! “


  எனக்கு தோன்றியது !! இதைத்தானே, பதஞ்சலியின் யோக சூத்ரம் சொல்கிறது. "பிரத்யாஹாரா" என்று . புலன்களை மகிழ்விக்கும் விஷயங்களில் இருந்து நம்மை உள்நோக்கி திருப்புவதை குறிக்கிறது "பிரத்யாஹாரா" .


  இறைவனை அறிதல், தன்னை அறிதல், என்று 180 டிகிரி உள்நோக்கி திரும்பி, வெளி உலக இன்பங்கங்களை புறக்கணிப்பது. சம்சார சாகரத்தை கடக்க, ஒரு படி அல்லவா ?  பிரேத ஜன்ம கதிரவன், என் உள்ள எண்ணங்களை புரிந்து கொண்டு சொன்னார் “ நீங்கள் நினைப்பது சரி தம்பி . இதைதான் கீதையும் சொல்கிறது


  “அனன்யாஸ் சிந்த யந்தோமாம் யே ஜனா பர்யுபாசதே தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோக ஷேமம் வஹாம்யஹம்! - பகவத் கீதா ஸ்லோகம்: (கீதா 9- 22) என்கிறது கீதை .


  (வேற சிந்தனை இல்லாமல் என்னையே சிந்திக்கும் அன்பருக்கு அவர்களுடைய நித்ய கர்மங்களை எல்லாம் நானே கவனித்துக் கொள்கிறேன் )


  நம்ப தமிழ் வேதம் நாலாயிர திவ்ய பிரபந்தமும், இதையேதான் சொல்கிறது :


  "உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
  மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
  அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
  துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1 ( திருவாய்மொழி )

  இதை புரிந்து செயல்படு தம்பி ! நான் வரட்டுமா ? இந்த பாழும் உலகில், மீண்டும் ஜன்மம் எடுக்கும் நேரம் வந்து விட்டது ! பை !! ! பை !! ஸீ யு !”

  என்று விடை பெற்றார் கதிரவன் .


  ***


  நானும் எழுந்தேன் ! சினிமாவுக்கு நேரம் ஆகி விட்டது ! பார்த்து விட்டு, பின்னர் கடற்கரைக்கு போய், ஹேமாவுடன் ஜாலியாக பொழுதைக் கழிக்க வேண்டும் . வரும்போது புஹாரியில் சாப்பிட்டு வரவேண்டும். நாளை பல்சர் வண்டி ஒன்று வாங்க லோன் போட வேண்டும் . முப்பது வயதில், எனக்கு ஆயிரம் வேலை இருக்கு !  “அனன்யாஸ் சிந்த யந்தோமாம்” – கீதா சொல்கிறதாம் ..! இதெல்லாம் பெருசுங்களுக்கு ! எனக்கு இல்லை ! இந்த வாழ்க்கை வாழ்வதற்கே ! பின்னால், பார்த்துக் கொள்ளலாம். !


  கண்ண தாசனே சொல்லியிருக்கிறார், நிச்சய தாம்பூலம் படத்திலே:

  “ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் !! அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்! என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்


  உலகம் எந்தன் கைகளிலே : உருளும் பணமும் பைகளிலே ! சோதிச்சு பாத்தா நானே ராஜா வாலிப பருவம் கிடைப்பது லேசா உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கே உண்டு... ஹோய்”

  * முற்றும்
  Last edited by murali12; 05-05-2020 at 02:03 PM.

 2. #2
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  23 Sep 2010
  Location
  பஹ்ரைன்
  Posts
  497
  Post Thanks / Like
  iCash Credits
  24,895
  Downloads
  4
  Uploads
  0
  அருமை. கொஞ்சம் சுற்றலாக இருந்தது. ஆனாலும் நல்ல முடிவு.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •