எனைத் தீண்டினாய்...
சிலிர்த்தேன்....
சிந்தை மயங்கி...
உனைத் தொடர்ந்தேன்...!

உறவுகளுக்கும்...
ஊராருக்கும்...
ஏனிந்த பொல்லாப்பு...?!

உனை விரும்பியது...
என் தவறா..?
ஏனிந்த தகராறு..?!

உனை ஏன் ஒதுக்க வேண்டும்...?
உனை நான் விரும்பியதில்...
சமூகத்திற்கும் பங்குண்டு...!
நன்றி நவில்வேன்... அவர்களுக்கும்...!

இவ் வாய்ப்பினில்...
வா... நாம் தனிமையில்...
உரையாடுவோம்...!

உன்னிடம் .. எனக்குப் பிடித்ததே...
உன் சோம்பல்தனம் தான்...!

ஆனால்.. இனியும்.. நீ...
இங்ஙனம் இருத்தலாகாது...!

நானும்.. திருந்தி... நீயும் திருந்த...
நல்வாக்கு... நான் சொல்வேன்...
என் சொல் கேளாய்...!

நம் நலனே...
நம் சுகங்களின் ஆதாரம்..!
நம் நலனால்...
நானிலமும் நலம் பெறும்...!

நீ பயின்று... மறந்த...
பழக மறுத்த...
பால பாடங்களை... நினைவு கொள்...!

சுத்தம் பேண்...
சுகாதாரம் காண்...!
சுற்றம் போற்று...
குற்றம் போக்கு...!

சுழலும்... உலகினில்...
உழவுத் தொழில்.... ஓங்கச் செய்...!
ஒய்யாரமாக நாம் வாழலாம்...!
ஓராயிரம் ஆண்டுகள்..!

அகத்தினை அழகாக்கு...!
புறத்தினைப் பொலிவாக்கு...!
நம் தலைமுறை தழைத்திடும்...!
ஆயிர*மாயிரம் ஆண்டுகள்...!

அழகு...அணிகலனாய்...
நீர்நிலைகளைப் பொங்கச் செய்..
நம் நிலமகள் - குளிர்வாள்...!
நிம்மதி பெருகிடும்..!...!

உடலுறுதி பெற..
நல் உணவு உட்கொள்...!
பசுங் காய்கறிகளைப்
பதமாக்கிப் புசித்துப் பசியாற்று...!
உன் - உடல் அகம் சீராக...
உணவினில்... சீரகம் சேர்த்துக் கொள்...!

உன் - உடல் அழகு மிளிர்ந்திட ..
பெயரும்.. நிறமும்.. ஒத்த
மஞ்சளையும் வார்த்துக் கொள்...!

நச்சுத் தன்மைப் போக்கிட...
நல்மிளகு உட்கொள்...!
வெந்தயமும் இருந்து விட்டால்...
வேறு எதன் தயவும் தேவையில்லை..!

சுடுநீர் அருந்து...
அதுவே.. நல்மருந்து..!

நம் நலனே...
நம் சுகங்களின் ஆதாரம்..!
நம் நலனால்...
நானிலமும் வளம் பெறும்...!

நான்... வந்த வேலை..
நிறைவு பெற்றது...!
நான்.. விலகும் வேளை..
நெருங்கி விட்டது...!

எப்போதும் ... நீ அழகு...
நான் அழுக்கு...!

எனைத் தொட்டு விட்டால்...
உனைத் தொடர்ந்து வருவேன்..!

விலகி நின்றால்..
விட்டு விடுவேன்...!

சுத்தம் பேண்...
சுகாதாரம் காண்...!