Results 1 to 5 of 5

Thread: அழிவின் ஆரம்பம் !

                  
   
   
 1. #1
  இளையவர் பண்பட்டவர்
  Join Date
  12 Sep 2017
  Posts
  64
  Post Thanks / Like
  iCash Credits
  1,453
  Downloads
  0
  Uploads
  0

  அழிவின் ஆரம்பம் !

  முருகன் படித்தவன் . பீ.ஈ , ஈரோடு கல்லூரியில் முடித்து, சென்னையில் ஒரு கணினி விற்பனை கம்பனியில் , சுமாரான சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். வயது 25. கைக்கும் வாய்க்குமே பற்ற வில்லை. இதிலே ஊரில் இருக்கும் அப்பா அம்மாவிற்கு வேறு மாதா மாதம் பணம் அனுப்ப வேண்டும்!. வேறு வேலை தேடிக் கொண்டிருந்தான். கிடைத்தால் தானே?

  ஒரு ஞாயிறு அன்று, முருகனுக்கு பொழுது போகவில்லை. பக்கத்தில் இருக்கும் ஆம்பா மால் எனும் பெரிய சூப்பர் மார்க்கெட்டிற்கு பொழுதை கழிக்க போனான். கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் அலைந்து விட்டு வெளியே வந்தான். அப்போது அவன் கண்ணில் பட்டது அந்த புதிய பிரம்மாண்டமான வாட்ச் கடை. டிச்சாட் ரிஸ்ட் வாட்ச், சீகோ, ராடோ, ரோலெக்ஸ், ஒமேகா போன்ற விலையுயர்ந்த கை கடிகாரங்கள், பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது. அப்படி என்ன தான் இருக்கப் போகிறது என உள்ளே போய் பார்த்தான்.

  ஒரு சிப்பந்தி, சில பல பணக்கார தம்பதியருக்கு, விலையுர்ந்த கைகடிகாரங்காளை காட்டி, அதன் சிறப்பம்சங்களளை பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார். “ இந்த வாட்ச்லே, நீர்ப்புகாப்பு ரொம்ப அருமைங்க. அப்புறம், இந்த வாட்ச், பல கால அளவுகளைக் காட்டும், கையின் நாடித்துடிப்பைக்கொண்டு வேலை செய்யும் , அப்புறம் இத பாருங்க ! இது விலையுர்ந்த கடிகாரங்க, இதுலே சிக்கலான மற்றும் முழுமையான எந்திரவியல், அது மட்டுமில்லீங்க இது துல்லியமான நேரம் காட்டும்”
  அந்த சிப்பந்தி காட்டின கடிகாரந்களிலேயே, ஒருகடிகாரம் முருகனுக்கு பிடித்திருந்தது. முருகன் மெதுவாக அதன் விலையை பார்த்தான் .Rs. 36000/- ! “யம்மாடி, இது நமக்கு கட்டுப்படி ஆகாது. நம்ம சம்பளமே அவ்வளவு இல்லையே.”
  முருகன், கடையை விட்டு தன் அறையை நோக்கி நடையை கட்டினான். அப்போதைக்கு அதை மறந்தும் விட்டான். பார்த்து, கேட்டு, அனுபவத்தால் புரிந்து ஆராய்ந்து அதை நமக்கு சொல்வது ஞானம். எது வேண்டும் வேண்டாமென சொல்வது ஞானம். இது முதல் கட்டம்.
  ***
  அன்று இரவு.

  தூங்கும் நேரம். முருகன் மனசு அசை போடுகிறது. . அந்த வாட்ச் எவ்வளவு அழகு.! கட்டினால், எல்லாரும் நம்மையே பார்ப்பார்களே ! ஆபிஸ் ஸ்டெனோ கோகிலா கூட, என்னை பார்த்து முறுவலிப்பாளே ! அதுவே பின்னால் காதலாக கூட மாறலாம்! நேரம் போக போக, அந்த கடிகாரம் பற்றியே அவனது மனது சுற்றி சுற்றி வருகிறது . அந்த கடிகாரத்தை அடைய , அனுபவிக்க ஆசைப்படுகிறது, விரும்புகிறது. இதுவே இரண்டாம் கட்டம்.

  அந்த ஆசை முற்றினால், நமது மனது தான் விரும்பியதை, அந்த கடிகாரத்தை அடைய முயற்சியில் இறங்குகிறது. இதுவே மூன்றாம் கட்டம்! . எப்படியாவது அந்த கடிகாரத்தை வாங்கியே ஆக வேண்டும். கடன் கிடைக்காது. நம்ம சம்பளம் போதாது. என்ன பண்ணலாம்? முருகன் யோசனையில் ஆழ்ந்தான். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான்!

  ****
  அடுத்த நாள்.! மாலை ,மணி ஆறு.

  முருகன் , தன் நண்பன் கணேசனிடம் சென்றான். “ கணேசா! அவசரமாக திருவல்லிக்கேணி வரை போக வேண்டியிருக்கு. கொஞ்சம் ஒரு மணி நேரம் உன் மோட்டார் பைக்கை கொடேன் ப்ளீஸ் !” அரை மனதாக, கணேசன் கொடுத்த பல்சர் வண்டியில் ஏறி பறந்தான், நுங்கம்பாக்கம், நெல்சன் மாணிக்கம் ரோடு பக்கம் . அங்கு தானே அவன் தங்கும் வாடகை வீடு இருக்கிறது. அரையிருட்டு, மணி ஏழு இருக்கும். அவனது தெரு ஒட்டி ஒரு முட்டு சந்து. வண்டியை நிறுத்தினான். இந்த பக்கம் அந்த பக்கம் கண்களை ஓட விட்டான். அதிர்ஷ்டம் அவன் பக்கம் . ஒரு மூதாட்டி நடந்து வந்து கொண்டிருந்தாள். ரோட்டில் வேறு ஈ காக்கை இல்லை. வேகமாக அந்த மூதாட்டியை கடந்தான். அவள் கழுத்தில், மின்னிய இரண்டு வட சங்கலியை, மின்னல் வேகத்தில் பறித்தான். . பறித்த வேகத்தில், அந்த மூதாட்டி “ஐயோ”!” என்ற படியே கீழே விழுந்தாள்.


  முருகன் சிட்டாக பறந்து, தனது பல்சரில் ஏறி , யாரும் பார்க்கும் முன், சங்கிலியுடன் தனது அறைக்கு வந்து விட்டான். தனது நண்பன் கணேசனிடம், அவனது பைக்கை திருப்பி கொடுத்து விட்டான்..
  மனம், குறு குறுத்தாலும், வெற்றி வாகை சூடிய சந்தோஷம் முருகனுக்கு. எவ்வளவு எளிதாக, பணத்திற்கு ஏற்பாடு பண்ணி விட்டோம்! ஒரு பிரச்னை கூட இல்லையே ! . நாளைக்கே , நம்ம ரத்தன் லால் சேட் கிட்டே, இந்த நகையை வித்து, கடிகாரம் வாங்கிடனும். கோகிலா பார்க்கிறா மாதிரி, கட்டிக்கிட்டு போகணும். எண்ண அலைகள் விருத்தியாகிக் கொண்டே போனது முருகனுக்கு.

  ***
  அடுத்த நாள்.
  தனது மேனேஜருக்கு போன் பண்ணி, அரை நாள் பெர்மிஷன். வாங்கினான். நேராக நகையை எடுத்து கொண்டு, ரத்தன் லால் சேட் கடைக்கு போனான்.. முதலாளி அவனுக்கு தெரிந்தவர் தான். “ ரத்தன் லால் ! இது எங்க அம்மாவின் நகை. கொஞ்சம் அவசரம். அம்மாக்கு வைத்திய செலவு இருக்கு. கொஞ்சம் நல்ல விலைக்கு எடுத்துக் கொண்டு காசு கொடுத்தால், ரொம்ப உதவியாக இருக்கும்” தன் முகத்தை, சோகமாக வைத்துக் கொண்டு கேட்டான் முருகன்.
  “ஐயோ ! நாங்க பழைய நகையை வாங்கறது இல்லையே ! “ – ரத்தன் லால் மறுத்து விட்டார்.
  விடவில்லை முருகன். “ ப்ளீஸ் ! லால் ! எனக்கு வேறே யாரையும் தெரியாது ! நீங்க தான் எனக்கு உதவி செய்யணும் ! ரொம்ப அவசரம்! – கெஞ்சினான் முருகன்.
  " சரி, உங்களுக்காக வாங்கிக்கிறேன் ! கொஞ்சம், சேதாரம் தள்ளு படி போகும் ! KDM 916 நகை தானே !” :லால் வினவினார்.
  “அது தெரியாதே! நீங்களே பார்த்து ஒரு நல்ல விலை போட்டு எடுத்துக்கோங்க ! குறைந்தது நாப்பதாயிரமாவது வேணும் ! இந்தாங்க ” என்ற படி நகையை கொடுத்தான்.
  சேட் நகையை வாங்கினார். பின்னர் தன் உருப்பெருக்கும் கண்ணாடியை கண்ணில் அணிந்து திருப்பி திருப்பி பார்த்தார். தன் உதட்டை பிதுக்கினார். “ இது கில்ட் நகை முருகன்!! ஐநூறு ரூபாய் கூட தேறாது. இந்தாங்க !” நகையை திருப்பிக் கொடுத்து விட்டார்.
  முருகன் நொந்து விட்டான். இதற்குத்தானா இவ்வளவு பிரயாசை பட்டோம் ! எல்லாம் வியர்த்தம் தானா? அப்போ கடிகாரம் வாங்கும் ஆசையை மறந்து விட வேண்டியது தானா? ..
  திரும்பி நடக்க ஆரம்பித்தான். ஆனாலும், அவனது ஆசை அடங்க வில்லை. மாறாக இன்னும் அதிகமானது. கடிகாரம் வாங்கியே தீர வேண்டும். இன்னொரு நகை பறிப்பு பண்ணலாம். ஆனால் , இப்போது வேண்டாம் ! ஒன்னு செய்யலாம் ! நம்ம கணிணி கம்பனியிலே, மூணு நாளைக்கு முன்னாடி பாங்க்லே போட வேண்டிய பணம் ஐம்பதாயிரம், என்னோட பொறுப்புலே தான் இருக்கே ! அதை எடுத்து செலவு பண்ணிடலாம். பின்னாடி, செயின் பறிப்பு பண்ணி, வித்து, பாங்க்லே கம்பனி கணக்கிலே கட்டிடலாம். யாருக்கும் தெரியாது. ! இப்போதான் நகை பறிப்பு நமக்கு ரொம்ப லாகவமாக வருதே ! “ முடிவு கட்டி விட்டான். ஆசை, பேராசை, இப்போது அவனது புத்தியை மறைத்தது.
  ****
  ரத்தன் லால் சேட் கடை

  முருகன் போனவுடன், ரத்தன் லால் சேட் கடையின் சிப்பந்தி, தன் முதலாளியை வினவினார். “ ஏன் முதலாளி, நகை நல்ல 22 கேரட் நகை தானே. நீங்க வாங்கி, நல்ல விலைக்கு வித்திருக்கலாமே ! ஏன் அதை போலின்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டீங்க. பாவம், அம்மாவின் வைத்திய செலவுக்கு அந்த பையன் என்ன செய்வானோ ?"
  ரத்தன் லால் சேட் மெதுவாக சிரித்தார். “ அந்த பையன் பொய் சொல்றான் தீரஜ்! அது அவன் அம்மா நகை இல்லை ! அந்த நகையில், ஒரு ஓரமா, கொஞ்சம் ரத்தம் இருந்தது ! யதேற்சையாக, உருப்பெருக்குங்கண்ணாடிலே தெரிஞ்சுது. எனக்கு சந்தேகமா இருந்தது. எதுக்கு நாம போய், இந்த நகையை வாங்கி, பின்னாடி போலிஸ் , கேஸ்னு அலையணும்? அதான் அப்படி சொல்லி அவனை கழட்டி விட்டுட்டேன் !”
  ****
  முருகனின் அலுவலகம் :

  முருகன், அவனது கம்பனியை அடைந்த போது, வாசலில் போலிஸ் நடமாட்டம். . அவன் நண்பன் கணேசன் மற்றும் நண்பர்கள் வெளியில் நின்று கொண்டிருந்தனர். “என்ன ஆச்சு ?” முருகன், கணேசனை வினவினான்,
  அதற்குள், போலிஸ் இன்ஸ்பெக்டர் அவனிடம் வந்து விட்டார். “ நீங்க தான் முருகனா? நேத்து இரவு , ஏழு மணி அளவிலே, நெல்சன் மாணிக்கம் ரோடு பக்கத்திலே, ஒரு மூதாட்டி நகையை பறிச்சிங்க தானே ! உண்மையை சொல்லுங்க!”
  " நானா! நான் நேத்து திருவல்லிக்கேணி தானே போயிருந்தேன் ! என் நண்பன் கணேசனின் பல்சரிலே!”- முருகனுக்கு உதறல் எடுத்து விட்டது. வாய் குழற ஆரம்பித்து விட்டது.
  இன்ஸ்பெக்டர் மிரட்டினார் “பொய் சொல்லாதீங்க முருகன் ! கண்காணிப்பு காமரா காட்டிக் கொடுத்து விட்டது. நீங்க பறிச்ச வேகத்திலே, அந்த அம்மா கழுத்து அறுபட்டு, இப்போ ஆஸ்பத்திரிலே இருக்காங்க “
  வேறே வழியில்லாமல், உண்மை அத்தனையும் சொல்லி விட்டான். நகையை எடுத்துக் கொடுத்தான். போலிஸ், அவன் கையில் விலங்கு மாட்டி இழுத்துக் கொண்டு சென்றது. அவன் வாழ்க்கை, நாசமானது. முருகனின் ஆசை, அவன் தகுதிக்கு மேல் ஆசை, மீண்டும் மீண்டும் கருதுவதால், அந்த ஆசை பேராசையாகி, புத்திநாசத்தில் கொண்டு விட்டது. அதனால், அவன் வாழ்க்கை வீணானது! .

  ****

  பகவத் கீதை சொல்கிறது ( சாங்க்ய யோகா , 62, 63 ) :

  “ ஒரு மனிதன் விஷயங்களைக் , மீண்டும் மீண்டும் கருதும்போது , அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான்.”
  முருகன் விஷயத்தில் இது நிஜமானது.

  (த்⁴யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|
  ஸங்கா³த்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோ⁴ऽபி⁴ஜாயதே ||2-62||

  க்ரோதா⁴த்³ப⁴வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்⁴ரம:|
  ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த்³பு³த்³தி⁴நாஸோ² பு³த்³தி⁴நாஸா²த்ப்ரணஸ்²யதி ||2-63||)

  கீதை இதையும் சொல்கிறது :

  பற்றற்ற மனம் நமக்கு நண்பன். கட்டுப்பாடின்றி ஆசைப்படும் மனம் நமக்கு பகைவன். ஆனால் நாம் தான் அதை தவறாக மாற்றி புரிந்து கொண்டோம் . ஆசையே நம் இன்பத்திற்கு காரணம் என நமக்கே மாற்றி சொல்லிக் கொள்கிறோம். அனைத்துக்கும் நாம் ஆசைப்படுகிறோம் அதனால் அவதிப் படப்போவது நாம்தான் பின்னால் , என்று அறியாமல் !

  இதையே
  உத்³தரேதா³த்மநாத்மாநம் நாத்மாநமவஸாத³யேத்|
  ஆத்மைவ ஹ்யாத்மநோ ப³ந்து⁴ராத்மைவ ரிபுராத்மந: - என்கிறது பகவத் கீதா (10-20) .


  ****முற்றும்


 2. #2
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  23 Sep 2010
  Location
  பஹ்ரைன்
  Posts
  502
  Post Thanks / Like
  iCash Credits
  34,427
  Downloads
  4
  Uploads
  0
  நல்ல பாடம்.

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
  Join Date
  06 May 2007
  Location
  Tirupur
  Posts
  3,005
  Post Thanks / Like
  iCash Credits
  35,536
  Downloads
  12
  Uploads
  1
  பேராசைக்கு கிடைத்த நல்ல பாடம்.
  " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
  தற்கொலை செய்து கொள். !
  தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
  இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

 4. #4
  இளையவர் பண்பட்டவர்
  Join Date
  12 Sep 2017
  Posts
  64
  Post Thanks / Like
  iCash Credits
  1,453
  Downloads
  0
  Uploads
  0
  நன்றி டல்லாஸ்

 5. #5
  இளையவர் பண்பட்டவர்
  Join Date
  12 Sep 2017
  Posts
  64
  Post Thanks / Like
  iCash Credits
  1,453
  Downloads
  0
  Uploads
  0
  நன்றி சூரியன் !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •