கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்தது திமுக. அப்போது தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்த திமுகவின் ஆ.ராசா 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், 2008 ஆம் ஆண்டு 2 ஜி அலைக்கற்றை விற்பனை செய்ய உத்தரவிட்டார் எனவும், இதன் காரணமாக 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது.

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று 2 ஜி அலைக்கற்றை வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், 2 ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கலைஞர் "அநீதி வீழும் ; அறம் வெல்லும் என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பினை வரவேற்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி
IBC Tamil