ஊரோ மேட்டுக்காடு
திரும்பும் திசையெல்லாம் பனைமரத்துக்காடு

அதிகாலையிலும் அந்திமாலையிலும்
கிர்ர் கிர்ரென்னும் பனையேறுவோரின்
தலைநார்ச் சத்தமும்

பனையின் மண்டைக்குள் போகும்போது
சலசலக்கும் ஓலைச்சத்தமும்
இன்றும் நினைவை விட்டகலவில்லை

சொட்டு சொட்டாய் வடியும் பதநீரை
சொட்டு விடாமல் வடித்தெடுத்துக்
கொண்டுதந்து குடிக்கவைத்து
பதங்காச்சி பாகாக்கி
இதமாகப் பானையில் வார்த்து
கணக்காக நாள்கூட்டி
எனக்காக தந்த சுவை
வாழுகின்றன நினைவில் மட்டும்.

கற்பக விருட்சமெனப் பெயர்பெற்ற
கரும்பனைக் கூட்டத்தினை
கள்வடியும் பருவமாக்கி
கறந்தெடுக்கக் காத்திருந்து
மறந்திடாது மெருகேற்றி
ஆண்பனையும் பெண்பனையும்
அரும்பிவரும் நாட்கணக்கில்
கனிரசமாம் பதநீரை
கண்ணில் கூட காண முடியவில்லை

அங்கொன்றும் இங்கொன்றும்
அருமருந்தாய் காணப்படும்
கற்பகத்தை நினைத்துத்தான்
வாழமுடிகிறது.

மேட்டுக்காடான ஊரிலிருந்து
மழைக்காலத்தில் உருண்டோடும்
நீரோடி குளங்கள் நிறைய
வாய்க்காலுக்கு நிலமொதுக்கி
அரசர்கள் அன்றுதந்தார்

இன்றதனை ஆக்கிரமித்தன சுயநலங்கள்.

பதநீரும் பானைக் கருப்பட்டியும்
நீரோடும் வாய்க்கால்களும்

இன்று நினைவில் மட்டுமே வாழுகின்றன.