மூன்று வாரத் தொடர்
வாரம் இரண்டு

குண்டு ஒண்ணு வெச்சிருக்கோம்
-ஆர். தர்மராஜன்

_______________________________________________________________________
முன்கதை: நடுநிசி நெருங்கும் நேரத்தில்... பாபுவும் ஜோவும் பனிவயல்
கிராமத்திற்குள் நுழைகின்றார்கள். அவர்கள் நோக்கம் அங்கு குண்டு வைத்து
சேதம் விளைவிப்பது.

_______________________________________________________________________

இரண்டு டார்ச்களின் பளீரென்ற வெள்ளை வெளிச்சம் விழுந்தது ஒரு பெரிய போர்ட் மீது.

போர்டில்… மஞ்சள் வண்ணப் பின்னணியில்… தடிமனான கறுப்பு எழுத்துக்களில்…

மூன்று பாஷைகளில் பனிவயல் என்ற பெயர் தெரிந்தது. முதல் வரிசையில் தமிழில்…

கீழே ஹிந்தியில்… மூன்றாவதாக ஆங்கிலத்தில்.

“பாபு, இது ஒரு ரயில்வே ஸ்டேஷன்.”

“கரெக்ட், ஜோ. நாம வந்த வேலை முடியப்போகுது. ஒரு ரயில்வே ஸ்டேஷனைத் தகர்த்தோம்னா -”

“ஸ்டேட் கவர்மென்ட் என்ன… சென்ட்ரல் கவர்மென்டே அரண்டு போயிடும்,” என்று முடித்தான் ஜோ.

இருந்த ஒரே ஒரு பிளாட்பாரத்திற்கு வந்தார்கள். ஒரு மூலையில் ஒரு மின் விளக்கு சொற்ப

வெளிச்சத்தைத் தூவிக்கொண்டிருந்தது. மற்றபடி இருட்டு. மயான அமைதி.

அப்படியும் இப்படியுமாக டார்ச் வெளிச்சத்தை வீசினார்கள். ஸ்டேஷனில் கட்டிடம் என்பதற்கு

ஓடு வேயப்பட்ட ஒரே ஒரு நீளமான அறைதான் இருந்தது. பூட்டப்பட்டுத் தெரிந்தது. ஜன்னல் கதவுகள்

சாத்தப்பட்டிருந்தன. பிளாட்பாரத்திற்கு அப்பால் வெளிச்சத்தை வீசினான் ஜோ. இரண்டு தண்டவாளங்கள்

நேராகப் போய் இருட்டில் மறைந்தன.

தாழ்ந்த குரல்களிலேயே பேசினார்கள் இருவரும்.

“சின்ன ஸ்டேஷன்,” என்றான் ஜோ
.

“உபயோகத்தில் இல்லயோ?” என்றான் பாபு, வெளிச்சத்தை மெதுவாக நகர்த்தியபடி. “யாரையுமே-”

அந்த வினாடி ஒரு முனகல் கேட்டது. திடுக்கிட்டுப் போன இருவரும் சட்டென்று டார்ச்களை

அணைத்தார்கள். பக்கத்தில் இருந்த தூணுக்குப் பின்னால் ஒண்டிக்கொண்டார்கள். மூச்சைப்

பிடித்துக்கொண்டு சில வினாடிகள் அசையாமல் நின்றார்கள். பின்... முனகல் வந்த திசையை

அனுமானித்துக்கொண்டு… தயக்கத்துடன் வெளிச்சத்தை வீசினார்கள்.

முழுவதும் போர்த்தியபடி ஒரு உருவம் படுத்திருப்பதை வெளிச்சம் காட்டியது. போர்வைக்குள்

ஒரு வினாடி ஒரு சிறிய அசைவு ஏற்பட்டு அடங்கியது. கூடவே ஒரு மெல்லிய இருமல் சத்தம்.

வெளிச்சத்தை நகர்த்தினார்கள். மேலும் இரண்டு உருவங்கள்… போர்வைகளுக்குள் முடங்கிப்

படுத்திருப்பது தெரிந்தது. ஜாக்கிரதையாக வெளிச்சத்தை ஒரு சுற்று கொண்டு வந்தார்கள்.

வேறு எங்கும் யாரும் இருப்பதற்க்கான எந்த அறிகுறியும் இல்லை.

டார்ச்களை அணைத்துவிட்டு, இருட்டில் சில நிமிடங்களைக் கழித்த பிறகு...

(...தொடரும்)