ஐந்து வாரத் தொடர் - வாரம் இரண்டு
கடத்தலுக்கு கெட்டிக்காரன்

ஆர். தர்மராஜன்

___________________________________________________________________________
முன்கதை சுருக்கம்: கோடீஸ்வரர் தனபாலின் ஒரே வாரிசு லைலா
கடத்தப் படுகிறாள். அவளை மீட்க பணத்துடன் அவள் காதலன் கௌதம்
வரவேண்டும் என்பது கடத்தல்காரனின் நிபந்தனை.

___________________________________________________________________________

“கேட்டுடலாம்,” என்ற தனபால், காலையில் பேசியவனைத் தொடர்பு கொண்டார்.

“என்ன முடிவு எடுத்தீங்க, மிஸ்டர் தனபால்?” என்றது அந்த ஆண் குரல்.

“பணத்தோட... நீங்க சொல்ற ஸ்பாட்டுக்கு கௌதம் வருவான்.”

“போலீசுக்குப் போகலையே?”

“ஐயோ... இல்லவே இல்லை... நம்புங்க!”

“குட். இப்ப ரூட் போட்டுத் தரேன். நோட் பண்ணிக்குங்க. அந்த கௌதமை

சாயங்காலம் அஞ்சு மணிக்கு புறப்படச் சொல்லுங்க.”

அன்று மாலை... சுமார் ஐந்து மணிக்கு கௌதம் ஒரு ரெக்சின் பையில் பத்து லட்சம்

பணத்துடன்... அவனுடைய அபாஷி மோட்டார்பைக்கில் புறப்பட்டான்.

ஐந்து நிமிடங்கள் கழித்து தனபாலின் செல் ரிங் அடித்தது. அதே எண்.

“கௌதம் புறப்பட்டுட்டான்... பணத்தோடதான்...” என்றார் படபடப்பாக.

“இப்ப இன்னொரு விஷயம் மிஸ்டர் தனபால்... அஞ்சு நிமிஷம் கழிச்சு நீங்களும்

கார்ல புறப்படணும். நாங்க சொன்ன ஏரியாவுக்கு வாங்க... ஆனா மெயின்

ரோட்டிலேயே நிறுத்திக்கிங்க. எங்ககிட்ட இருந்து அடுத்த போன் வர்ற வரைக்கும்

அங்கேயே வெய்ட் பண்ணுங்க.”

“வாட் டூ யூ மீன்? நீ சொன்ன மாதிரிதான்...”

“சொல்லறதை அப்படியே கேட்டு நடந்தீங்கன்னா... உங்க பொண்ணோட

பாதுகாப்புக்கு நாங்க உத்திரவாதம்.”

தளர்ந்து போய் சோபாவில் சரிந்தார் தனபால். “சரி... வரேன்.”

ஐந்து நாற்பதுக்கு... ஈரோடு–பாலக்காடு பைபாஸ் ரோட்டில்... மோட்டார்பைக்கில்

வந்துகொண்டிருந்த கௌதம்... சட்டென்று இடது பக்கம் ரோட்டோரமாய் இருந்த

அந்தப் பெயர்ப்பலகையை கவனித்தான்.

பவள சித்தர் மடம்... 3 கி. மீ.

அந்த இடத்தில் ஒரு மண் பாதை பிரிந்து போனது. அந்தப் பாதையில் வண்டியைச்

செலுத்தினான். போகப் போக... செடி கோடி மர வகைகளின் அடர்த்தி அதிகரித்து

வெளிச்சத்தைத் தடுக்க... இருள் சாயம் பூசியது.

பைக்கின் ஹெட்லைட்டை பளிச்சிட வைத்தான். சிறிது தூரம் சென்ற பிறகு

மரங்களின் அடர்த்தி வெகுவாகக் குறைய... சட்டென்று ஒரு வெட்ட வெளி வந்தது.

அதன் மையத்தில் ஒரு பாழடைந்த மண்டபம்.

இதுதான் பவள சித்தர் மடமா? என்று எண்ணியபடி பைக்கை நிறுத்தினான். பணப்

பையை எடுத்துக்கொண்டான். கொண்டுவந்த டார்ச் லைட்டை உயிர்ப்பித்து

சுற்றுமுற்றும் வெளிச்சத்தை வீசினான். வெளிச்சக்கதிர் மண்டபத்தின் சிதிலமடைந்த

சுவர்களையும்... காட்டுத்தனமாக வளர்ந்திருந்த புதர்களையும்... மண்டபத்திற்குப்

பின்னால் அடர்த்தியான மர வளர்ச்சியையும் காட்டியது.

“யாரங்கே?” குரல் கொடுத்தான். “நான் கௌதம்.”

பதிலுக்கு... நிசப்தம்.

(... தொடரும்)