சிறுகதை (113 வார்த்தைகள்) by ஆர். தர்மராஜன்

இடைவெளி

“சிந்து, இது கூரியர்ல வந்தது.” ஒரு கவரை நீட்டினாள் விடுதி மனேஜரம்மா.

வாங்கிக்கொண்டு தன் அறைக்கு விரைந்தாள் சிந்து. கவர் தன் தந்தையிடமிருந்து
வந்திருந்ததால்... வேலை முடிந்து வந்த களைப்பையும் பொருட்படுத்தாமல்
கவரைப் பிரித்தாள். அதில் ஒரு காசோலை... கூடவே சுருக்கமாக ஒரு கடிதம்.

சிந்து,
இந்த பத்தாயிரம் ரூபாய்க்கு செக்... உனக்குத்தான். உதயாவோட கல்யாணம் போன மாசம்
நல்லபடியா நடந்தது.
அப்பா.


அழுகையை அடக்கிக் கொண்டு... செல்லை எடுத்து அப்பாவிடம் பேசினாள்.

“ஏம்பா... தங்கச்சி கல்யாணத்துக்கு நான் வரக்கூடாதுன்னு முடிவு எடுத்தீங்க... இல்லையா?”

“அப்படித்தான்னு வெச்சுக்க!” அப்பாவின் குரலில் கடுமை தெறித்தது.

“எனக்கு ஏம்பா இவ்வளவு பெரிய தண்டனை?”

“ஓஹோ... மறந்துட்டியா? சரி... கேட்டுக்க. காலேஜ்ல... படிக்கறதுக்கு பதிலா...
லவ்வுகிவ்வுன்னு போய்... பிடிவாதமா அவனையே கல்யாணம் பண்ணிட்டு... மூணே மாசத்துல
டைவோர்ஸ்ல மோதிகிட்டவ நீ. உதயாவோ... எந்த கிளர்ச்சியிலையும் சிக்காம... நல்லா படிச்சு...
நல்ல வேலைல சேர்ந்து... உன்னால் சரிஞ்ச குடும்ப கவுரவத்தை தூக்கி நிறுத்தினவ.
உங்களுக்குள்ள இந்த இடைவெளி... எங்களுக்கு எப்பவும்... எதுலேயும் தெரியும்... ∴போனை வை!”

(முற்றும்)