சிறுகதை (104 வார்த்தைகள்)by ஆர். தர்மராஜன்

பொண்ணு பொறந்த சந்தோஷம்


பதினைந்து வருடங்களுக்குப் பிறகு சோளவாசலுக்கு வந்தேன். கிராமம் மாறியாதாகத் தெரியவில்லை.
மகுடபதியின் வீட்டிற்கு சிரமம் இல்லாமல் வந்து சேர்ந்தேன். சிறிது புதுப்பிக்கப்பட்டிருந்தது வீடு.

“டோய் சோமு!” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டான் மகுடபதி. பரஸ்பரம் விசாரித்து முடிந்ததும்
எனக்கு ஒரு தட்டு நிறைய கேசரி கொடுத்தான். அமிர்தமாக இனித்தது.

“வீட்ல விசேஷமா?” என்றேன்.

“கனகாவுக்கு பொண்ணு பொறந்திருக்கு,” என்றான். முகத்தில் சூரிய வெளிச்சத்தின் பிரகாசம்.
“சந்தோஷத்தக் கொண்டாடத்தான் இனிப்பு. ஏன்னா... இந்தப் பொண்ணு பின்னால எங்களுக்கு
பொழப்பு தருவா.”

சோளவாசலில் பெண் சிசுக் கொலைகள் அதிகம் என்று சமீபத்தில் எங்கோ படித்த ஞாபகம்
உள்ளே கீறியது. பட்டென்று அதைச் சொல்லிவிட்டு, “நீயாவது பொண்ணு பொறந்தா சந்தோஷப்
படறியே. நல்லதுடா,” என்றேன்.

உரக்க சிரித்தான். “டோய்... கனகா எங்க வீட்டு பசு மாடுடா. நான் பொண்ணுன்னு சொன்னது
கனகாவுக்குப் பொறந்த கன்னுக்குட்டிய. பின்னால அது பசுவா வளந்து... கனகா மாதிரியே
எங்களுக்கு பால் விக்கற பொழப்பு தரும் இல்லியா?”

(முற்றும்)