சிறு கதை (130 வார்த்தைகள்) / ஆர். தர்மராஜன்


வேலை கிடைச்சிடுச்சு


“நாளக்கி நம்ம பையனுக்கு இன்டர்வியூ. உங்கப்பாவை முதியோர் இல்லத்துல
விடறதைப் பத்தி முடிவு எடுக்கணும்.”

“ரெண்டுக்கும் என்ன கனக்ஷன், கோமதி?” என்றார் சண்முகம்.

“கேளுங்க. இந்தக் கம்பனில பெரிய போஸ்ட்ல இருக்கற ஜேம்ஸ்...
உங்கப்பாவோட முன்னாள் ஸ்டூடன்ட். ஸோ, உங்கப்பா ஒரு ரெகமெண்டேஷன்
லெட்டர் கொடுத்தா... மனோஜுக்கு வேலை கிடைச்சுடும். பாவங்க... அவனும்
மூணு வர்ஷமா கஷ்டப்படறான்.”

“அப்பா ஒத்துக்க மாட்டார்னு தெரியாதா?”

“பாருங்க, லெட்டர் குடுத்தா உங்கப்பா நம்மகூட இருக்கலாம். இல்லைன்னா
முதியோர் இல்லம்தான்... சொல்லிட்டேன்.”

அன்றிரவு தூக்கத்தில் பாதியைத் தியாகம் செய்து அப்பாவை சம்மதிக்க
வைத்தார் சண்முகம்.

மறுநாள் இன்டர்வியூ முடிந்து... மதியம் சந்தோஷச் செய்தியுடன் திரும்பினான்
மனோஜ்.

கோமதிக்கு முகமெல்லாம் பளிச். “அப்பா நம்மகூடவேதான் இருக்கணும்...
சொல்லிட்டேன்,” என்றாள்.

மாலை தாத்தாவுடன் வாக்கிங் போனான் மனோஜ்.

“முகம் வாடியிருக்கே தாத்தா. லெட்டர் விஷயம் உங்களுக்கு வருத்தம்தான்,
இல்லையா?”

“இருக்காதாடா? நான் இதுவரைக்கும் யாருகிட்டேயும் எதுக்காகவும்-”

“தெரியும் தாத்தா. அதனாலத்தான் அந்த லெட்டரை மிஸ்டர் ஜேம்ஸ்கிட்ட தரலை.
கிழிச்சுப் போட்டுட்டேன்.”

தாத்தா முகத்தில் சட்டென்று பிரகாசம்.

“ஆனா இது நமக்குள்ளயே இருக்கட்டும் தாத்தா... சரியா?” தாத்தாவை
முதியோர் இல்லம் எனும் சாபத்திலிருந்து காப்பாற்றியதுதான் அவனுக்கு
வேலை கிடைத்ததை விடப் பெரிய சந்தோஷம்.

(முற்றும்)