சிறுகதை (121 வார்த்தைகள்) / ஆர். தர்மராஜன்

ஜெயில் பாதுகாப்பு


கையெழுத்திட்டேன். சிறையிலிருந்து இந்த அனாதைக்கு விடுதலை.

“என்ன வயசாவுது?” வார்டன் கேட்டார்.

“அம்பது,” என்றேன், உள்ளுக்குள் குறுகியபடி.

“இருபது வயசுல உள்ள வந்தே... பல தடவை தப்பிக்கப் பாத்து... பல மண்டைகளை
உடைச்சு... ப்ச்! எப்பவோ ரிலீஸ் ஆயிருக்கணும்... ஒழுங்கா மரியாதையா இருந்திருந்தா.”

சுதந்திரக் காற்றுக்குள் பிரவேசித்தேன். என் ஒரே நண்பன் மாசி வந்திருந்தான்.
அவன் பைக்கில் விரைந்தோம்.

“தப்பிக்க பல ஐடியா... ரகசியமா அனுப்பினியே, மாசி,” என்றேன். “ஒண்ணுகூட உருப்படலைடா.”

பைக்கை நிறுத்தினான். “எப்படி உருப்படும்? உன்ன ரொம்ப காலம் உள்ள வெக்கத்தான் ஐடியா...
நீ தப்பிக்க இல்ல.”

அதிர்ச்சி என்னை அறைந்தது. “வாட்? டேய்...”

என்னைக் கையமர்த்தினான். “பாரு ரகு... உனக்கு மொதல்ல கெடச்சது அஞ்சு வர்ஷம்.
நீ வெளிய வந்ததும் உன்னப் போட்டுத் தள்ள ஏற்பாடு பண்ணியிருந்தான் உன் எதிரி. அதான்...
உன்ன வெளிய வரவிடாம பண்ண முடிவு செஞ்சேன்... தப்பிக்கன்னு சொல்லி உட்டாலக்டி
ஐடியாவா அனுப்பினேன். உள்ளதான் உனக்கு பாதுகாப்புன்னு எனக்கு மட்டுந்தான் தெரியும்.”

“இப்ப மட்டும்?”

“உன் எதிரியும்... அவன் ஏற்பாடு செஞ்சவங்களும்... இப்ப உயிரோட இல்ல. இனிமே எதுக்கு
உனக்கு ஜெயில் பாதுகாப்பு?”

(முற்றும்)