ஒரு நிமிட கதை (136 வார்த்தைகள்) / ஆர். தர்மராஜன்

கோடீஸ்வர பிரபு



“ஹலோ.“

“பிசினஸ் மாக்னெட் பிரபு அவர்களே… உங்க ஒரே வாரிசு... உங்க பொண்ணு... இப்ப எங்க கஸ்டடியில.“

“இருக்காதே. அவ என் பக்கத்தில்தானே இருக்கா.“

“நான் சீரியசாப் பேசறேன்.“

“நானுந்தான். என் பொண்ணப் பேசச் சொல்லணுமா?“

“நான் சொல்றத நீங்க நம்பலையோ?“

“நீ கடத்தியிருக்கறது பொண்ணுதான்... ஆனா என் பொண்ணில்லை.“

மறுமுனையில் இணைப்பைத் துண்டித்து... செல்லை வீசி எறியாத குறையாய் மேஜை மேல் போட்டான் அபிஷேக். ஆவேசமாக...விருட்டென்று திரும்பினான்.

பக்கத்தில்...ஒரு சோபாவில்... ஒரு பெண். அவள் கைகள் பின்வாக்கில் கட்டப்பட்திருந்தன.

அவள் வாய்மேல் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்தரியை உரித்துவிட்டு... தன் விழிகளை உருட்டி உறுமினான் அபிஷேக்.
“ஏய்! நீ கோடீஸ்வரர் பிரபுவோட மகள்னு ஏண்டி பொய் சொன்னே?“

“பாரு, என் பேரைக் கேட்டே. ஐஸ்வர்யான்னு சொன்னேன். என் அப்பா பேரைக் கேட்டே. பிரபுன்னேன். கோடீஸ்வரரா...ன்னு கேட்டே, ஆமான்னேன். உடனே என்னைக் கடத்திட்டு வந்து... எல்லாம் தெரியும்ங்கற நெனப்புல... யாருக்கோ போனைப் போட்டு நீ ஏமாந்தா என் தப்பா?“

“புதிர் போடறியாடி?“

“இல்லை. எங்கப்பா பேரு கோடீஸ்வரர். அவரைப் பிரபுன்னுதான் கூப்பிடுவாங்க. அதத்தான் சொன்னேன்.“

அபிஷேக் முறைத்தான். ஐஸ்வர்யா தொடர்ந்தாள். “எங்கப்பா பேர்ல மட்டுந்தான் கோடி... நிஜத்துல இல்லை. ஸோ, என்னைக் பத்திரமா வீட்டுல விட்டீன்னா உன்னைக் காட்டிக்குடுக்கலை... என்ன?“

வேறு வழியில்லாமல் சம்மதித்தான் அபிஷேக்.

(முற்றும்)


அடுத்த வாரம் ... குறை