ஒருநிமிட கதை / ஆர். தர்மராஜன்

மூலிகை ரசம்


“நீதான் மொதலாளியா?” வந்தவன் கேட்டான்.

“எடிட்டர்,” என்றான் ஜெயபால். “முதலாளின்னு சொல்லிக்கறதில்லை. உக்காருங்க.”

வந்தவன் உறுமினான். “யோவ்! உன்னோட பத்திரிக்கைல எழுதிருக்கே... நான் கள்ளச் சாராயம் காச்சறேன்னு...”

“அதுக்கு...?”

“அது கள்ளச் சாராயம் இல்ல... மூலிகை ரசம். என் பேரே மூலிகை முத்தண்ணா... தெரியுமா?”

ஜெயபால் சிரித்தான். “நூதனமான பேரு வெச்சாலும்... சாராயம் சாராயம்தான்.”

“அது மூலிகை ரசம்தான்... ஒடம்புக்கும் மூளைக்கும் நல்லதுன்னு நீ மாத்தி எழுதணும். இல்லன்னா... தீய வெச்சி ஏத்திடுவேன்.”

“மிரட்டலா?”

“சந்தேகமா? என்னோட பின்பலம் பாக்கறியா?” முத்தண்ணா தன் செல்லை எடுத்து ஒரு பெரும்புள்ளி அரசியல்வாதியைத் தொடர்பு கொண்டு பேசினான்.

பிறகு அரசியல்வாதயிடம் ஜெயபால் தாழ்ந்த குரலில் பேசி... செல்லைத் திருப்பிக் கொடுத்தான். “சரி... மாத்தி எழுதிடறேன்,” என்றான். “அதுக்குப் பிரதிபலன்...?”

“கேளு.”

“இந்தப் பத்திரிக்கையை நீ எடுத்துக்க.”

“சூப்பர்மா! உனக்கென்ன வேணும்?”

“உன் மூலிகை ரசம் பிசினசை நானும்... இப்ப என்கூடப் பேசினாரே அவரும் எடுத்துக்கறோம்.”

“டேய்! கிண்டலா?”

“நீ ஒத்துக்கலைன்னா... நாங்க உன்னைத் தீ வெச்சு ஏத்திடுவோம்,” என்றான் ஜெயபால், ஒரு வெற்றிச் சிரிப்போடு.

(முற்றும்)