கணக்குல புலி (ஒரு நிமிட கதை) ஆர். தர்மராஜன்

“முகுந்தன் மாமாவுக்கு மேரேஜ் இன்விடேஷன் போச்சாடா?” ராமன் கேட்டார்.
“போகாமலாப்பா? அவர் நமக்கு எவ்வளோ வேண்டப்பட்டவர்.”
“பத்து நிமிஷம் முன்னாடி அவரோட போன்ல பேசினேன். நாளைக்கு கல்யாணம்னு இப்ப நான் சொல்லித்தான் அவருக்குத் தெரியறதாம். அவர் அட்ரஸுக்கு இன்விடேஷன் நீதானே அனுப்பினாய்?”
“ஆமாம்.”
“அட்ரஸ கரெக்டா எழுதியோன்னோ?”
“எழுதினது பாலு. கரெக்டாத்தான்--”
“சதா கணக்கு கணக்குன்னே நெனச்சிண்டிருப்பானே, அந்த கணக்குப் புலியா?”
“ஆமாம்பா.”
“அவன கூப்பிடு.”
ஐந்து நிமிடங்களில் பாலு வந்தான். “டே பாலு, இதுதானேடா நீ எழுதின அட்ரஸ்?” என்று முகுந்தனின் விலாசம் எழுதப்பாட்ட தாளைக் காண்பித்தார் ராமன்.
பாலு உன்னிப்பாக அதைப் பார்த்துவிட்டுக் கேட்டான். “ஆமாம். ஆனா... இதென்ன மாமா, பத்து பார் அஞ்சு?”
“அவரோட டோர் நம்பர்டா. சரியாத்தானே எழுதினாய்?”
பின்னந்தலையை சொறிந்தான் பாலு. “ஹி... ஹி... அந்த பார் இருக்கே... அதை வகுத்தல்னு நெனச்சுண்டு... பத்தை அஞ்சால வகுத்து ரெண்டுன்னு எழுதியூட்டேன். ஏன் மாமா, ஏதாவது ப்ராப்ளம் ஆயூடுத்தா?”
(முற்றும்)