இருள் சூழ்ந்த தனிமையில்
ஆழ்ந்த மெளனத்தில்
மார்ப்புத் தொனிகளை
சோதிக்கும் கருவிகளின்றி
எனக்காய் என் ஒருவனுக்காய்
உறக்கத்தை தொலைத்து விட்டு
உதிரத்தை பாய்ச்சி
கொண்டிருக்கும்
இதயத்தின் துடிப்பொலிகளின்
குறுஞ்செய்தி ஒன்றை
உற்று நோக்கியபடி இருந்தேன்

துகில் விலக்கிய ஒருத்தியும்
கொலை கார மிருகமும்
நட்சத்திர கூட்டமும்
அதனிடையே ஒரு நடைபாதையும்
விஷம் உமிழ்ந்த நாகமும்
பெண் சென்ற கால்தடமும்
திடீரென சூழ்ந்த மேகமும்
அடர்ந்த ஒரு காடும்
இடை இடையே எனது
வருங்கால துன்பமும்
என மாறி மாறி
என்னுள் நீண்ட ஒரு பயணம்
போனதில்
களைத்து விட்ட மனம்
இறுதியாய் எட்டிப்பார்த்தது
எதையோ

அங்கு நான் தொலைந்து
போயிருந்தேன்
காதுகள் மட்டும் அடைந்திருந்த
நிசப்தம்
மெல்ல மெல்ல ஊடுருவி
உயிரின் வேர் முடிச்சுகளில்
உறைந்து கிடந்தது

மெல்ல கண்விழித்த போது
நான் அங்குதான்
இருந்தேன்
நானாக இல்லை
அனைத்துமாய் இருந்தேன்

புத்தனின் தாகம் தீர்த்த
அந்த ஒரு போதி மரம்
இதுவாகவும் இருக்கலாம்

- கவியரசன்