எல்லா டாக்குமென்டுகளும் சரியாக இருக்கின்றன. வரி கட்டுகிறோம். நிலத்தின் அனுபவ பாத்தியமும் நம்மிடம் இருக்கிறது. நாம் தான் நிலத்தின் உரிமையாளர் என்று நம்பிக்கையோடு இருப்போம். எல்லா அனுபவ உரிமையும் நம்மிடம் இருந்தாலும் நம் நிலத்தை வேறொருவர் விற்க முடியுமா? என்று கேட்டால் ஆம் என்று சொல்ல முடியும். எப்படி சாத்தியம் என்கின்றீர்களா?

இதோ எங்களிடம் வந்த ஒரு வழக்கின் விபரம் உங்களுக்காக.

சமூகத்தில் பிரபலமான ஒருவரின் நிலம் அது. தற்போதைய விலையோ கோடானுகோடி. அப்பிரபலம் காலமாகி விட அவரின் குடும்பத்தாருக்கு நிலம் இருக்கும் இடம் தெரியும். அத்துடன் விட்டு விட்டார்கள்.இப்படியான ஒரு சூழலில் வில்லாதி வில்லன் ஒருவன் இந்த நிலத்தின் மீது கண் வைக்கிறான். காரியங்கள் விறுவிறுவென நடக்க ஆரம்பிக்கின்றன.

அந்த இறந்து போன பிரபலத்தின் தாத்தாவின் பெயரும், வில்லாதி வில்லனின் தாத்தாவின் பெயரும் ஒன்றாக இருக்கிறது. இனிஷியலும் ஒன்றே. வில்லாதி வில்லன் அந்த நிலத்தை தன் தந்தையின் நிலம் என்றுச் சொல்லி, கோர்ட்டில் அதன் உரிமையாளர் என்று ஆர்டரும் வாங்கி விடுகிறான். அதன் பிறகு அந்த நிலத்தை வேறொருவரிடம் விற்றும் விடுகின்றான். நிலத்தின் உண்மையான உரிமையாளர் அவ்விடத்தில் இல்லாத காரணத்தால் அந்த நிலத்தை விற்று, அதை பிளாட் போட்டு விற்று விடுகின்றார்கள்.

இந்தச் சூழலில் பிரபலத்தின் வாரிசுகள் நிலத்தைப் பார்வையிட வந்த போது, வில்லாதி வில்லன் செய்து வைத்திருக்கும் வில்லத்தனத்தை அறிகின்றார்கள். எங்குச் சென்றாலும் அத்தனை டாக்குமெண்டுகளும் முற்றிலுமாய் மாற்றப்பட்டு இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். (வழக்கு முடிய எத்தனை ஆண்டுகாலம் ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்)

எப்படி இப்பிரச்சினையில் இருந்து வெளிவருவது?

நிலம் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்குமா?

இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் நம்மிடம் இந்தப் பிரச்சினை வருகிறது.

இந்தப் பிரச்சினையில் உண்மையான உரிமையாளரின் உரிமையை எப்படிக் கண்டுபிடித்து நிலை நாட்டுவது? அதற்கான ஆவணங்களை தேடிப்பிடித்து, சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து நிலத்தினை மீட்டெடுக்க உதவினோம்.

குறிப்பு : ரெவன்யூ சர்வே ரெக்கார்டு என்பது வெகு முக்கியமான நிலம் சம்பந்தப்பட்ட அரசு ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளர்களின் பெயர்கள் இந்த ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தவறும் பட்சத்தில் இது போல பிரச்சினைகள் வரக்கூடும். எதிர்காலத்தில் நிலம் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்கின்றார்கள். ஆகவே நிலம் வைத்திருப்போர் அவசியம் கவனிக்க வேண்டியது இந்த ஆவணம்தான்.

நிலம் நம் பெயரில் இருக்கிறது, பட்டா இருக்கிறது என்பதற்காக அமைதியாக இருந்து விட வேண்டாமென்பதுதான் இந்தப் பதிவின் சாராம்சம்.