#நாங்கள்தான்_இலைகள்பேசுகிறோம்..

ஏற்றத் தாழ்வு
எங்களுக்கும் உண்டு; கறிவேப்பிலை, புதினா ,
துளசி உயர்ந்த ஜாதிகள்..

மனிதர்களை போலன்று நாங்கள்; தேவையில்லை எனில்
கத்திரி மண்வெட்டி கதிர் அறுவாள் ஒன்றின்மூலம் எங்களுக்கு விசாரணையின்றி மரண தன்டனை நிச்சயம்!

காற்று எங்களோடு
கம்பெனி சேர்ந்தால் போதும் உடனிருக்கும் இலைகளோடு உரசி உரசி
ஊர்புறணி அளப்பதாய்
ஒரே குற்றச்சாட்டு!

சிலநேரம் மழை எனும் பிரம்புகளால் அடிபட்டு அடிபட்டு துவண்டு மீண்டும் எழ மூன்று நாளாகும்!

நாங்கள் நடிகர்களும் இல்லை! ரஜினிகாந்தும் இல்லை! ஆனாலும்
எங்களுக்கு எப்போதும் மூத்திர அபிஷேகம்!

ஏன்.. எங்களால்
எழுந்து வரமுடியாதெனும் தைரியத்தில் அந்த நாய் கூட ஒற்றைக்கால் தூக்கி....

இதுபோதாதென்று ஆடு எனும் ராஜபக்சே எங்கள் இனத்தை மொத்தமாய் கருவறுப்பதும் உண்டு..

வெறும் இலைகள் என ஏழைகளைப்போல ஏளனமாய் யாரும் பார்க்க வேண்டாம் !

இலைகளல்ல நாங்கள்! இலவசமாக மனிதர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் !

எங்கள் கிளைகள் எங்கள் கைகள் ;வியர்க்கும்போது வசிறிகள் வீசுவோம்!

எங்களிடமும் ரோஷக்காரி உண்டு; தங்கத்தையே தட்டுல வச்சாலும் தண்ணீரோடு சேராது தாமரை இலை!

எங்களிலும் மழலைகள் உண்டு;
தொட்டாலே சினுங்கும் தொட்டாச்சினுங்கிகள்!

மனிதர்களைப்போலவே தவறுகள் செய்து திருந்தினோம்; உசிலம்பட்டியில் தொப்புல்கொடிகளை
அரளி இலைகளால் அறுத்ததைதான் சொல்கிறோம் !

அம்மைநோய்
பேய்களை விரட்டுவதில் பெரும்பங்கு வகிக்கும் பெருமைக்காரி வேப்பிலைக்காரி!

எந்த விருந்துக்காகவும் தடால் புடாலென
தட்டுக்கள் தயாரிக்கும் வாண்டையார்
வாழைக் குடும்பம் என ..

ஏதோ ஒரு வகையில் யாருக்காவது உதவிக்கொண்டே இருக்கிறோம் உதவாக்கரைகள் அல்ல. !!!

இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்
யானை மட்டுமென
யார் சொன்னது? நாங்கள் உறைவிடத்தை விட்டு உதிர்ந்து இறந்தாலும் உரமாகும் வரம் பெற்றவர்கள் !!!