Results 1 to 1 of 1

Thread: சென்னை மழை அனுபவங்கள்-2015

                  
   
   
 1. #1
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  17 Mar 2008
  Posts
  1,037
  Post Thanks / Like
  iCash Credits
  25,037
  Downloads
  39
  Uploads
  0

  சென்னை மழை அனுபவங்கள்-2015

  கடந்த 2015 டிசம்பர் மாத முதல் நாள் செவ்வாய் கிழமை.
  மாலை நான்கு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் பலரும் விரைவாய் வீடு செல்ல துடித்தார்கள். கனமழைக்காலங்களில் சென்னையில் வாகன வேகம் மணிக்கு ஒரு கிலோமீட்டர் என்பது சில வருடங்களுக்கு முன்பும் மேலும் சென்ற வார மழையிலும் கற்ற பாடமாக இருந்தது. மேலும் அடையாற்றின் கரை ஓரம் இருந்த சிலரின் வீட்டில் வெள்ளம் புகுந்ததும் அவர்கள் துரிதப்பட காரணமாயிருந்தது. ஆனாலும் அந்த வார வேலையை கருத்தில் கொண்டு பலரும் வேகமாக பணியில் ஈடுபட்டனர். ஐந்தரை மணிக்கு மேல் புறப்பட்டவர்கள் பாடு திண்டாட்டம் தான். கொட்டும் மழையில் சாலையில் வெள்ளம் ஆறாய் பெருகி ஓட வாகனங்கள் நத்தை வேகத்தில் நகர்ந்து பிறகு சாலைகள் அடைக்கப்பட்டதால் நின்று விட்டன. பலரும் வாகனங்களை நம்பி பயனில்லாமல் நடந்து செல்ல ஆரம்பித்தனர். அவர்களில் நானும் ஒருவன். நான் வீடு வந்து சேர்ந்த போது இரவு மணி பத்துக்கு மேல் ஆகி விட்டது. ஈர உடைகளை மாற்றி விட்டு உணவு முடித்து தூங்கினேன். நாங்கள் இருக்கும் பகுதிகும் ஆற்றுக்கும் (அடையாறு) சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

  புதன் கிழமை-அதிகாலை மூன்றரை மணி இருக்கும்.
  செல்போன் ஒலித்தது. பதட்டமான குரலில் "வீட்டுக்குள்ள எல்லாம் முட்டிக்கால் அளவு தண்ணி வந்திடுச்சு" என்றார் உறவினர். நம்ப முடியாமல் இருந்தது. உடனே வருவதாக சொல்லி விட்டு அங்கு சென்ற போது கண்ட காட்சி வியப்பாய் இருந்தது. அந்த அதிகாலையில் சாலைகளில் பலர் மூட்டை முடிச்சுகள், கைகளில் பிள்ளைகள் என அலைந்து கொண்டிருந்தனர். இதற்கு முன்பு எப்போதுமே அந்த அளவுக்கு வெள்ளம் வந்து யாரும் பார்த்ததில்லை. அருகிலிருந்த சேர்மன் திருமண மண்டபத்தில் சிலர் அடைக்கலமாக பலர் மாநகராட்சி பள்ளிகளில் தஞ்சம் புகுந்தனர்.

  காலை ஆறு மணி:
  ஆற்றின் கரையோரம் இருந்த இன்னொரு உறவினருக்கு போன் செய்தேன். அவர் சூளைப்பள்ளத்தில் உள்ள அஞ்சலி மகால் என்ற மண்டபத்தில் இருப்பதாக அறிந்து அங்கே போனேன். அங்கே ஜன்னல் அருகே சிலர் கூடியிருக்க அருகே போய் பார்த்தால், பக்கத்து தெருவில் ஒரு வீட்டை மூழ்கடித்து வீட்டின் மேல் ஓட்டுக்கு மேலே வெள்ளம் ஓடுகிறது. பக்கத்தில் இருந்த மாடி வீட்டில் முதல் தளத்தில் பலர் நின்றிருக்க "போலிஸ்க்கு போன் பண்ணி எங்களை எப்படியாவது காப்பாத்துங்க. இங்க அம்பது பேர்கிட்ட இருக்கோம்" என்றார்.

  செல்போனில் முயற்சி செய்தால் அதற்குள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன. ஏதாவது ஏற்பாடு செய்றேன் என அவரிடம் சொல்லிவிட்டு மகாலில் தங்கியிருந்த உறவினர் குடும்பத்தை அழைத்துக்கொண்டு வந்தேன். தீயணைப்பு துறை வண்டிகளும் ஒரு லாரியில் இரண்டு படகுகளும் வந்திருந்தது மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. வரும்போது ஒரிடத்தில் கழுத்தளவு தண்ணீர். அங்கிருந்த இளைஞர்கள் முதியோர்களை கைத்தாங்கலாக பிடித்து உதவி செய்ய, எப்படியோ உறவினர்களை வீட்டுக்கு அழைத்து வந்தேன். மேலும் ஓரிரு உறவினர் குடும்பங்களையும் வீட்டுக்கு வந்து தங்க சொல்லி விட்டு வந்தேன். மாடி வைத்து கட்டியிருந்த கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலுமே இது தான் நடந்தது. உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், எதிர் வீட்டுக்காரர்கள் என யாராவது வந்து தங்கியிருந்தார்கள்.

  வழக்கமாக வரும் செய்தி தாள், பால், மின்சாரம், தொலைபேசி, பேருந்துகள், பிரதான சாலையிலிருந்த கடைகள் இவையெல்லாம் முன் அறிவிப்பின்றி விடுமுறை எடுத்துக்கொண்டன.

  நாங்கள் இருக்கும் எம்.ஜி. ஆர் நகர் பகுதிக்கு தெற்கே ஆறு (அடையாறு). வடக்கே க.க.நகர். (கலைஞர் கருணாநிதி நகர்)
  நேரம் செல்ல செல்ல சாலைகளில் நீர் மட்டம் உயர்ந்து கொண்டேயிருந்தது. பிரதான நூறடி சாலையிலே வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வந்த மக்களால் சாலை பரபரப்பாகியிருந்தது. நூறடி சாலையின் இருபுறமும் வரிசையாக தெருக்கள். இடது புறம் பத்து. வலதுபுறம் பதிமூன்று. வெள்ள நீர் மட்டம் உயர உயர ஒவ்வொரு தெருவிலும் வெள்ளம் பாய்ந்தது. தெருக்களின் இரண்டு பக்கங்களிலும் நீர் பெருகி வர ஒவ்வொரு தெருவாக அழையா விருந்தாளியாய் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. சில வீடுகளில் அவசர அவசரமாக மணலை கொட்டி கற்களை வைத்து அடைத்தார்கள். ஆற்றின் கரையோர வீடுகளிலும் ஆற்றில் கலக்கும் கால்வாய் ஓரம் இருக்கும் வீடுகளிலும் முதல் தளம் அளவுக்கு வெள்ளம் வரும் போது சிறு தடுப்புகள் எம்மாத்திரம்...? அவர்கள் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. ஆனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக டி.வி, குளிர்சாதனப்பெட்டி, துவைக்கும் எந்திரம் இவற்றையெல்லாம் சற்று உயரமான இடங்களில் வைக்க முடிந்தது.

  காலை பதினொருமணி.
  சில தெருக்களில் நிறுத்தியிருந்த கார் வண்டிகளின் மேல் மட்டத்தை மட்டும் தான் பார்க்க முடிந்தது. நீருக்குள் மூழ்கியிருந்த இரு சக்கர வாகனங்களின் கைப்பிடிகள் மட்டும் தான் வெளியில் தெரிந்தது. மளிகை கடை, துணிக்கடை, மருந்து கடை என பல கடைகளில் நீர் புகுந்தது. ஆற்று வெள்ளம் பெருகி வழிந்து பேருந்துகள் செல்லும் பிரதான சாலையை தொட்டு விட்டது. சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் குழாய்க்கு மேலே நீர் மட்டம் இருந்தது. இரு சக்கர வாகனங்களில் நீரை கிழித்துக்கொண்டு செல்ல முயன்று இயலாமல் பலரும் தள்ளிக்கொண்டு சென்றனர். க.க நகர் ஏற்கனவே நீரில் தத்தளித்துக்கொண்டிருந்தது. அது சற்று தாழ்வான பகுதி. ஆற்று வெள்ளமும் அங்கே பாய்ந்தது. அங்கும் பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது. கார்கள் நீரில் மூழ்கின. மழை இன்னும் தொடர்ந்து கொட்டிக்கொண்டிருந்தது. வீட்டில் மேல் மாடியிலிருந்து பிளாஸ்டிக் குழாய் வழியாக வரும் தண்ணீர் மோட்டார் வைத்து இறைப்பது போல் வந்து கிணற்றில் விழுந்து கொண்டிருந்தது.

  மதியம் இரண்டு மணி.
  மாலை ஆறு மணி போல் வெளிச்சம் குறைந்திருந்தது. சாலை முழுதும் இடுப்பளவு தண்ணீர் ஆறு போல் ஓடியது. ஒரே ஒரு மளிகை கடை மட்டும் திறந்திருக்க அங்கே தீப்பெட்டிகளும் மெழுகுவர்த்திகளும் தீர்ந்து போயின. பெரும்பாலும் மொத்தமாய் உணவு சமைக்கவே பலரும் பொருட்கள் வாங்கினர். எங்கிருந்தோ மிதந்து கொண்டு வந்த வரப்பட்ட பெரிய பிளாஸ்டிக் நீர்த்தொட்டியை ஒரு தெருவில் சில இளைஞர்கள் தள்ளிக்கொண்டு போனார்கள். (அது இரண்டாக உடைக்கப்பட்டு படகாக பயண்படுத்தப்பட்டதாக கேள்வி.). காய்கறி மார்க்கட்டில் காய்கறிகள் மூட்டையாக கட்டப்பட்டு எடுத்து வைக்கப்பட்டன. ஆனாலும் அழுகி விடும் என்பதால் அன்று மாலை கிலோ பத்து ரூபாய் என விற்கப்பட்டதாக சொன்னார்கள். நீர் மட்டம் ஏறிக்கொண்டே இருந்தது பயத்தை ஏற்படுத்தியது. அலையடித்து ஓடும் வெள்ளம் மூடியிருந்த கடைகளில் மோதி திறக்க முயற்சித்தது.

  மாலை ஆறு மணி.
  நகர் முழுவதும் வெள்ளம் ஆறாய் ஓட மின் வசதியில்லாமல் கருமிருட்டு. நகருக்குள் இருக்கிறோமா, ஆற்றில் இருக்கிறோமா என சந்தேகமே வந்தது. மண்டபத்தில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு பொருட்களை சிலர் மூட்டையாக கட்டி தோளில் வைத்து எதிர் வெள்ளத்தில் கால்களை அளாவி போய்க்கொண்டிருந்தனர். ஆங்காங்கே டார்ச் லைட்டுகளின் வெளிச்சம் நீரின் ஓட்டத்தை ரசிக்கச்செய்தது. வெள்ளம் வடிய எத்தனை நாட்கள் ஆகுமோ என்ற கவலை ஒரு புறம். வீட்டில் வந்து தங்கியிருப்பவர்கள் இரவுக்குள் தரை தளத்துக்குள் தண்ணீர் வந்து விடும் என ஆரூடம் சொல்ல, நீர் மட்டம் உயர்வதையும் கவனித்து, அலமாரியில் இருக்கும் பொருட்கள், சான்றிதழ்கள் டி.வி வாசிங் மெசின் போன்றவை முதல் மாடிக்கு குடி போனது. நாங்கள் இருப்பது பிரதான சாலைக்கு அருகே. ஆற்றின் ஓரம் இருந்த முதல் மாடி வீட்டில் இருந்தவர்கள் நிலை கிட்டத்தட்ட வீட்டுச் சிறை தான். தரை தளம் மூழ்கிய அளவுக்கு அங்கெல்லாம் தண்ணீர். பெரிய பெரிய மாடி வீட்டில் இருந்தவர்களுக்கும் சோறிருந்தால் குழம்பில்லை குழம்பிருந்தால் சோறில்லை என்ற நிலை. இருந்த உணவை பங்கிட்டு எப்படியோ இரவு பொழுதை கழித்தார்கள்.

  இரவு பதினொரு மணி.
  இருட்டில் நகரமெங்கும் நீரில் மிதந்திருக்க நாய்களின் அழுகை ஒலி போன்ற ஊளையிடும் சத்தம் மனதை கலவரப்படுத்தியது. அவ்வப்போது சிறு தூறலுடன் மழை இப்போது ஓய்ந்திருந்தது. தெரு வாசலில் நீர்மட்டம் உயர்வது நின்று போயிருந்தது. பல வீடுகளில் மெழுகுவர்த்தி பற்றாக்குறையினால் அகல்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் இரவு தண்ணீர் உயராது என உறுதியாய் நம்ப முடியாததால் என் தாயாரை மேல் மாடி அறைக்கு போகும் படி சொல்ல, அவர்களோ மழையே அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் அதெல்லாம் நம் வீட்டுக்குள் தண்ணீர் வராது என உறுதியாக சொல்லி மேல் மாடி செல்ல மறுத்து விட்டார்கள். அவர்கள் வேண்டுதலில் பிள்ளையாரும் அம்மனும் (காமாட்சி, காளி, கருமாரி) தேங்காய் சம்பாதித்துக் கொண்டார்கள். நாய்களின் ஊளை சத்தத்தில் சரியான தூக்கமில்லாமல் அவ்வப்போது விழிப்பு ஏற்பட டார்ச் லைட் மூலம் தெருவில் நீர் மட்டத்தை அறிந்து நீர் உயராததை கண்டு மகிழ்ந்தோம்.

  வியாழக்கிழமை கிழமை காலை விடிந்தது. மழை விட்டிருந்தது. சாலைகளில் வெள்ளம் தொடை வரை ஓடிக்கொண்டிருந்தது. செய்தி தாள் இருபது ரூபாய், பத்து ரூபாய். பாலுக்கு மிக நீண்ட வரிசை. ஓரிரு நடைபாதை கடைகள் முளைத்தன. சிலர் தங்கள் உறவினர்களை பிள்ளைகளை தேடிக்கொண்டிருந்தார்கள். படகு மூலம் மீண்டு வந்தவர்கள் தனித்தனியே பிரிந்து போனதால் ஏற்ப்பட்ட தவிக்க முடியாத நிலை. திருமண மண்டபத்தில் தங்கியிருந்த பலர் மாநகராட்சி பள்ளிகளில் சென்று தங்கினார்கள். தெருக்களில் இன்னமும் தண்ணீர் வடியவில்லை. ஓடவும் இல்லை.

  நேரம் கடந்தது.....
  தண்ணீர் ஓடியது. ஆனால் நேற்று தெற்கு பக்கம் (க.க நகர் பக்கம்) ஒடிய தண்ணீர் இப்போது வடக்கே (ஆற்றுப்பக்கம்) ஓடியது. என்ன அதிசயமோ இந்த பகுதியில் அன்று மாலையே தண்ணீர் முழுவதுமாக வடிந்து விட்டது. ஏதோ மாயாஜாலம் நிகழ்ந்த்தைப் போல் இருந்தது. எப்படி அவ்வளவு வெள்ளம் வந்தது. ஒரே நாளில் சாலையில் வந்த சுவடே தெரியாமல் போனது...?

  சாலையில் சிதறியிருந்த குப்பைகள் மட்டும் வெள்ளத்துக்கு சாட்சியாக இருந்தது. வீட்டில் தங்கியிருந்த உறவினர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று சுத்தப்படுத்தினார்கள். அவர்களில் சிலர் வீட்டில் தண்ணீர் ஏழு அடி உயரம் வரை வந்து போன வடு இருந்தது. பொருட்கள் வீடு முழுதும் இறைந்து குப்பைகளாகி இருந்தன.

  உயரத்தில் வைத்து விட்டு வந்த டிவி, துவைக்கும் இயந்திரம், அரைக்கு இயந்திரம், மேசை மின் விசிறி எல்லாம் தரையில் விழுந்து கிடந்தன. பூட்டி வைத்த பீரோக்களில் துணிகள் ஈரமாகி இருந்தன. படுக்கும் பாய்கள் தலையணைகள் நீரில் ஊறிக்கிடந்தன.

  ஆற்றின் கரையோரம், ஏரிகளின் கரையோரம் இருந்தவர்களின் அனுபவத்தோடு ஒப்பிட்டால் மேற்கண்ட என்னுடைய அனுபவம் ஒரு கொசுறு தான்.

  இந்த இரண்டு நாட்களில் சென்னையின் சுரங்க பாலங்கள் வழியாக வாகனங்கள் போக முடியாத சூழல் இருந்தது. ஆறுகளுக்கு மேலாக அமைந்த பாலங்களில் வெள்ளம் பாலத்துக்கு மேல் பாய்ந்ததால் அங்கும் வாகனங்கள் போக முடியாமல் பல பகுதிகள் தீவுகளாய் இருந்தன. இது தவிர்த்து சில இடங்களில் வாகனங்கள் பேருந்துகள் இயங்கியது. எனினும் இந்த இரண்டு நாட்களும் பெரும்பாலும் நிவாரண பொருட்கள் என யாருக்கும் போய் சேர்ந்திருக்க வாய்ப்பு மிக குறைவு.

  வெள்ளிக்கிழமை காலை, உறவினர்கள் தங்கள் இல்லம் திரும்பினார்கள். எட்டு மணிக்கு மேல் பேருந்துகள் ஓடத்துவங்கின. மிதமான வெயில் அடித்தது. அலுவலக பக்கம் போய் பார்த்தேன். மின்சார வசதி இல்லாமல் ஜெனரேட்டர்களில் டீசலும் இல்லாததால் அன்றும் விடுமுறை. பிரதான சாலைகளில் கூட ஆங்காங்கே படகுகள் இருந்தன.

  வேளச்சேரியில் ஒரு பகுதி மக்களை மீட்க படகு போக்குவரத்து நடந்துகொண்டிருந்தது. பேருந்துகளும் படகுகளும் அருகருகே ஒற்றுமையாய் நகர்ந்தன. இந்த மூன்று தினங்களும் மின்சாரம், அலைபேசி, ATM, விமான சத்தம், வாகனங்களின் சத்தம் இவையெல்லாம் இல்லாமல் இருந்தது நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய சென்னையை நினைவு படுத்தியது. ஆங்காங்கே தன்னார்வ தொண்டர்கள் உணவு வகைகள் விநியோகித்துக்கொண்டிருந்தார்கள். மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனால் வானொலியில் இன்னமும் கனமழை இருப்பதாக சொல்ல பலரும் பயந்தார்கள்.
  ஆம்... இப்போதெல்லாம் மழை என்றாலே சென்னை மக்களுக்கு பயம் வந்து விடுகிறது.

  வானத்தில் அவ்வப்போது ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டிருந்தன.
  அன்று மாலை மழையில் நனைந்து கொண்டே பிள்ளைகளுடன் கத்தி அழுது கொண்டே உறவினர்கள் ஓடி வந்தார்கள். "செம்பரம்பாக்கம் ஏரி ஒடைஞ்சு ஊருக்குள்ள வெள்ளம் வருதாம்" என்றார்கள் பதறி கதறி பதட்டமான குரலில். கண்களில் பயமும் கண்ணீரும். சீக்கிரம் எல்லா பொருளையும் மாடிக்கு எடுத்துட்டு போங்க என்றார்கள். ஓடி வந்ததில் ஒரு சிறுவன் எங்கோ தவறி விட்டதாக சொல்லி அழுதார்கள். ஹெலிகாப்டரில் வந்தவர்கள் வேறு இடம் போக சொல்லி கையை அசைத்ததாக சொன்னார்கள். இரண்டு மூன்று மாடி வீடு கட்டியவர்களும் ஓடினார்கள். அப்படியெல்லாம் பெரிய ஆபத்து எதுவும் நேராது என கூடுமான வரை அவர்களை சமாதான படுத்தி விட்டு சாலைக்கு சென்று பார்த்தேன் எங்கும் மக்கள் வெள்ளம். பதட்டத்தில் அலைந்து கொண்டிருந்தார்கள். சிலர் பிள்ளைகளை தேடிக்கொண்டிருந்தார்கள். ஜப்பானில் வெடிகுண்டு வெடித்ததில் சாலைகளில் மக்கள் ஓடுவது போல் ஒரு புகைப்படத்தில் இருக்குமே அந்த காட்சி நினைவு வந்தது. ஆனால் அதை விட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி சென்னை. ஆங்காங்கே புரளி வதந்தி என்றும் சிலர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக அந்த பரபரப்பு அடங்கியது.

  ஆற்றின் கரையோரம் போய் பார்த்தேன். தண்ணீர் பெருமளவு குறைந்து ஓடிக்கொண்டிருந்தது. கரையோரம் இருக்கும் கோயில் முழுமையாய் தெரிந்தது. முந்தைய நாள் அங்குள்ள பெரிய அய்யனார் சிலைக்கு கழுத்து வரை நீர் ஓடியதாக சொன்னார்கள். அய்யனார் சிலை இரண்டு மாடி உயரத்துக்கும் மேலானது.

  சனிக்கிழமை விடிந்தது. இன்னமும் மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் சில இடங்களில் மின்சாரம் கிடைக்கப்பெற்றோம். சில ATM..இயங்க துவங்கியது. இது வரை மழை வெள்ளம். இப்போது நிவாரண வெள்ளம் என்றால் அது மிகையல்ல. மதங்களை கடந்து, (சென்னை மக்கள் சாதிகளை எப்போதோ கடந்து விட்டார்கள்-சான்றிதழ்கள் தவிர) ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு கடந்து, கட்சி பேதம் கடந்து... ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர். கிட்டத்தட்ட அனைத்து அமைப்பினரும், அனைத்து கட்சியினரும் ஏதாவது ஒரு நிவாரண பணியில் ஈடுபட்டார்கள்.

  பத்திரிக்கைகள், வானொலி பண்பலை வரிசைகள், தொலைகாட்சிகள் என அனைத்துமே நிவாரண பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டன. அரசும் அன்று, சில தினங்களுக்கு பேருந்து பயண கட்டணம் இலவசம் என அறிவித்தது. நேரு விளையாட்டரங்கில் நிவாரண பொருட்கள் வந்து சேர்ந்தன. பாரிமுனையில் ஜெயின் சமூகத்தவர்கள் உணவு தயாரித்து வண்டி வண்டியாய் பல இடங்களுக்கும் அனுப்புவதை பார்த்தேன். இஸ்லாமிய அமைப்பினர் நிவாரண பணிக்காக வண்டிகளில் மழையில் நனைந்தபடி அலைவதை பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட எல்லோருமே தன்னால் இயன்ற ஒரு உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை பார்க்க முடிந்தது. அதை பார்த்த போது நினைத்துக்கொண்டேன் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதில் வியப்பில்லை.

  இவை ஒரு புறமிருக்க சென்னையில் ஐப்பசியில் அடை மழை பெய்வதும் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி நகர்களில் வெள்ளம் பாய்வதும் புதிதல்ல. சில வருடங்களுக்கு முன்பு கூட வெள்ள நிவாரணமாக இரண்டாயிரம் கொடுத்தார்கள். அதில் கூட்ட நெரிசலில் 42 பேர் இறந்ததும் இதே எம்.ஜி.ஆர் நகர் மாநகராட்சி பள்ளியில் தான் நடந்தது. அப்போதெல்லாம் கூட ஆற்றை ஒட்டிய பகுதிகளான நந்தம்பாக்கம், சூளைப்பள்ளம், ஜாபர்கான்பேட்டை, சைதாபேட்டை கோட்டூர்புரம் போன்ற பகுதிகள் தான் பாதிக்கப்படும். இப்போது போல் ஆற்று நீர் க.க நகர், மேற்கு மாம்பலம் எல்லாம் பாய்ந்ததை பார்த்ததில்லை.

  ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகளாக மாறி விட்டன. (நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள சூளைப்பள்ளம் கூட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செங்கல் சூளையும் கீரை தோட்டங்களும் இருந்த இடங்கள் தான்.) வரலாறு காணாத மழை என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம். ஆனாலும் நீரை பயண்படுத்தும் முறையில் நாம் இன்னும் சரியான மேம்பாடு அடையவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். செம்பரம்பாக்கம் நீர் ஒரே நாளில் 29000 கன அடி திறந்து விட்டதாக செய்திகள் சொல்கின்றன. அது வரும் வழியில் உள்ள சிறு ஏரிகளின் நீரையெல்லாம் கொண்டு வந்ததன் மூலம் ஒரு லட்சம் கன அடி நீர் பாய்ந்ததாக சொல்கிறார்கள். ஆனால் எந்த முன்னறிவிப்பும் இல்லை. அரசு தரப்பில் முன்னறிவிப்பு செய்ததாக சொல்கிறார்கள். சென்னை முழுவதுமே வெள்ளம் சூழ்ந்து இருந்தது. ஆனால் ஆற்றின் கரையோரம் இருந்த மக்கள் கூட முன்னறிவிப்பு செய்யவில்லை என புலம்பினார்கள்.

  செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து விட்டதாக ஏற்ப்பட்ட புரளியால் நூற்றுக்கனக்கானவர்கள் பதறி பரிதவித்து ஓடினார்கள். பதட்டத்தில் பிள்ளைகளை தொலைத்து விட்டு தேடி தவித்தார்கள். அரை மணி நேரத்தில் வெள்ளம் நகரை மூழ்கடித்து விடும் என்று அழுதார்கள். இத்தனைக்கும் நாங்கள் இருக்கும் பகுதிக்கும் செம்பரம்பாக்கத்துக்கும் 20-30 கிலோமீட்டர் தூரம். உண்மையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு என்ன, அப்படி எதுவும் உடைப்பு ஏற்ப்பட்டால் எத்தகைய இன்னல்கள் வரும் என்பதெல்லாம் சரியாக தெரிந்தவர்கள் மிக மிக குறைவு. என் சிறு வயதில் ஆற்றில் வெள்ளம் வந்து கரையோர மக்கள் பாதிக்கப்ப்டும் போதெல்லாம் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டார்கள் என்றும் உடைந்து விட்டது என்றும் சொல்லக்கேட்டதுண்டு.

  முன்பெல்லாம் ஆற்றில் கோடை காலம் தவிர மற்ற மாதங்களில் எப்போதும் ஒரு ஆள் உயரத்துக்கு மேல் தண்ணீர் இருக்கும். எப்போது சென்றாலும் ஆற்றில் நீந்தி குளிக்கலாம். நான் நீச்சல் கற்றதெல்லாம் அந்த ஆற்றில் தான். இன்று என் பிள்ளைகள் ஆற்றில் குளிக்க வேறு ஊருக்கு தான் செல்ல வேண்டும். அப்படியே சென்றாலும் நீச்சல் தெரியாததால் இறங்க அச்சம்.

  1986 என நினைக்கிறேன் அப்போதும் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து விட்டது என சொல்லிக்கொண்டார்கள். அப்போது கூட ஆற்றின் ஓரம் இருந்த பகுதிகள் மட்டும் தான் பாதிக்கப்பட்டது. அப்போதெல்லாம் சென்னையில் இத்தனை மக்கள் நெருக்கம் இல்லை. இப்போது கடந்த சில வருடங்களாக அந்த ஆறு (அடையாறு) கழிவு நீர் கலக்கும் கால்வாய் போல தான் இருந்தது. இதோ வெள்ளம் வடிந்து மீண்டும் அதே நிலைக்கு வந்து விட்டது.

  மழை எல்லா வருடமும் ஒரே அளவில் பெய்வதில்லை. சென்னையில் குடி நீருக்கு கூட வீராணம் ஏரியிலிருந்து லாரிகள் மூலம் நீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது என பல காரணங்கள் இருக்கலாம். அதனால் நீரை தேக்கி வைக்க முயற்சி நடந்து, பின் பெரு மழையால் வந்த வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் திறந்து விட்டிருக்கலாம். ஒரு யூகம் தான்.

  ஆனால், வெள்ளம் வந்த பிறகு அரசுகள் நிவாரணத்துக்காக கோடி கோடியாய் செலவு செய்கின்றன. அந்த ஆற்றை சீரமைப்பதில் கொஞ்சம் கவனம் வைத்திருந்தால் ஒரே நாளில் வடிந்து கடலுக்கு போன அந்த நீரை தக்க வைத்திருந்திருக்கலாம். வெள்ளத்தால் இப்போது ஊர்களை மூழ்கடித்த அந்த ஆறு இப்போதே கழிவு நீர் கால்வாயாக மாறிவிட்டது. ஆற்று நீரை மழை நீரை சேமிக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம். திடீர் வெள்ளத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம்?. சென்னை மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. குடிநீருக்கு என்ன செய்ய போகிறோம்..? இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இது போன்ற ஒரு மழை வந்தால் என்ன நடக்கும்..? மாறி வரும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகள் கவலை ஏற்படுத்துகின்றன. இப்போதும் மக்களில் பலர் இலவசங்களுக்காகவும் பணத்துக்காகவும் ஓட்டு போட தயாராய் இருக்கிறார்கள்.

  ஆற்றின் கரை ஓரங்களில் இருப்பவர்கள் கூட ஆற்று வெள்ளம் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் என அரசியல்வாதிகளை கேட்டதாக கேள்விப்பட்டதில்லை.

  முன்பு ஒரு முறை நிவாரண பணம் பெற சென்றவர்களில் 42 பேர் இறந்ததாலோ என்னவோ இந்த முறை வங்கிகளில் பணம் சேர்க்கப்படும் என்கிறார்கள். அரசிடமிருந்து அரசியல்வாதிகளிடமிருந்து பலரும் பணம் பெறுவது புதிதல்ல. முன்பு ஓட்டுக்காக.. இப்போது நிவாரணம் என்ற பெயரில்..

  முன்பெல்லாம் ஏற்பது இகழ்ச்சி என்பது மக்கள் மனதளவில் பதிந்து இருந்தது. உண்மையிலேயே அதிகமாய் பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் எதையும் இலவசமாக வாங்க கூச்சப்படுவார்கள். இப்போதெல்லாம் இலவசமாய் பெறுவது என் பிறப்புரிமை என்ற ரீதியில் மக்கள் மன நிலை மாறியிருப்பதை உணர முடிகிறது. எங்கள் பகுதியில் தன்னார்வ அமைப்பினர் ஒரு லட்ச ரூபாய் அளவு நிவாரண பொருள் கொண்டு வந்திருந்து அங்கே முட்டி போதிய கூட்டத்தால் சமாளிக்க முடியாமல் திருப்பி அனுப்பினார்கள். காவலர்கள் அருகிலிருந்தும் சமாளிக்க முடியவில்லை. முன்பெல்லாம் எத்தனை கஷ்டப்பட்டாலும் இலவசமாக வழங்குவதை முண்டியடித்து வாங்கும் குணத்தை பார்த்ததில்லை. இப்போது அந்த குணம் மாறிவிட்டது. மாற்றியது யார்..?

  இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இப்போது வந்த வெள்ளம் போல் இப்போது இருப்பவர்கள் யாரும் முன்பு பார்த்ததில்லை. அப்படியே கன மழை பெய்து வெள்ளம் வந்தாலும் சாலைகளில் வெள்ளம் வருமா என்பது சந்தேகமே. ஏதோ நாம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததே என ஏன்னிக்கொள்ள வேண்டியது தான். முன்பே குறிப்பிட்டது போல் ஆற்றின் கரையோரம், ஏரிகளின் கரையோரம் இருந்தவர்களில் அனுபவத்தோடு ஒப்பிட்டால் மேற்கண்ட என்னுடைய அனுபவம் ஒரு கொசுறு தான்.
  Last edited by Keelai Naadaan; 09-01-2016 at 11:39 AM. Reason: எழுத்துப் பிழை திருத்தம் மற்றும் பத்தி சீராடல் செய்யப்பட்டது

  கீழை நாடான்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •