செல்வா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மரபுக் கவிதை எழுத முயலும் அன்பர்களுக்காக இந்தத் திரியைத் தொடங்குகிறேன். அன்பர்கள் பங்கேற்றுப் படித்துப் பயிற்சிகளை முயன்றுபார்த்துப் பின்னூட்டமிடுவது என்னை ஊக்குவிக்கும். -- ரமணி

சடுதியில் யாப்பு

முன்னுரை

யாப்பிலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளை விரைவில் அறிந்துகொண்டு மரபுக் கவிதை ஆர்வலர்கள்
தாம் சொந்தமாகக் கவிதை முயல்வதற்கு உதவுவது இந்தச் சிறுநூலின் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை ஒரு மேல்-கீழ் (top-down) நோக்கில் பார்த்தால் அதன் கூறுகள் இப்படித் தெரியும்:
பாடல்/செய்யுள் -> அளவு -> அடி -> தொடை -> ஓசை -> தளை -> சீர் -> அசை -> எழுத்து -> மாத்திரை

இந்தக் கூறுகளை எளிதில் நினைவிற் கொள்ள ஒரு அகவற் செய்யுள்:

பாடல் என்பது செய்யுள் ஆகும்;
பாடல் அளவுடன் பயின்றே அமையும்;
அடிகள் கணக்கில் அமையும் அளவே;
அடியின் அளவு சீர்கள் கணக்கே;
அசைகள் கணக்காய் அமையும் சீரே;
அசையில் எழுத்துகள் அசையும் ஒருங்கே;
எழுதப் படுவன எழுத்துக ளாகும்;
எழுத்தொலிக் காலம் மாத்திரை யாகும்;
சீர்கள் தளைக்கச் செவ்விதின் ஓசையின்
வேர்கள் அமைய விளங்கும் பொருளே;
ஒலிக்கும் எழுத்தை ஒருங்கில் அமைத்தே
பலவகை தொடுப்பதில் பயிலும் தொடையே.

யாப்பின் மேலுள்ள கூறுகள் ஒரு புகழ்பெற்ற ஔவையார் செய்யுளில் எவ்விதம் அமைந்துள்ளன என்று பார்ப்போம்.
கூறுகளின் விவரங்களை அவற்றைப் பற்றிப் படிக்கும்போது அலசுவோம். இப்போது நாம் அறியவேண்டியது
ஒரு செய்யுளில் உள்ள கூறுகளை இனங்கண்டு கொள்வது மட்டுமே.

(நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

பாடல்/செய்யுள்
இந்தப் பாடல் அல்லது செய்யுள் வெண்பா (அதிலும் நேரிசை வெண்பா) என்னும் பாவகையைச் சேர்ந்தது.

அளவு
வெண்பாவின் அளவு நான்கு அடிகள்.

அடி
வெண்பாவின் நான்கு அடிகளில் முதல் மூன்றும் நான்கு சீர்களைக் கொண்ட அளவடி யாகவும்,
ஈற்றடி மூன்று சீர்களைக் கொண்ட சிந்தடி யாகவும் அமையும்.

சீர்
இந்த வெண்பாவில் ஈரசைச் சீர்களும் (உதாரணம்: ஆற்-றங், கரை-யின்), மூவசைச் சீர்களும்
(உதாரணம்: விழு-மன்-றே, பழு-துண்-டு) கொண்ட சீர்கள் பயில்கின்றன.

அசை
மேற்சொன்ன மூவசை/ஈரசைச் சீர்களின் அசைகள் அமைந்த வகைகளுக்கு உதாரணங்கள்:
ஆற்-றங் -> ஆற்-றங் -> நேரசை-நேரசை
கரையின் -> கரை-யின் -> நிரையசை-நேரசை
வாழ்வதற் -> வாழ்-வதற் -> நேர்-நிரை
கொப்பில்லை -> கொப்-பில்-லை -> நேர்-நேர்-நேர்
உழுதுண்டு -> உழு-துண்-டு -> நிரை-நேர்-நேர்

ஈரசையாக மொத்தம் எட்டு வகைகளும், மூவசையாக மொத்தம் பதினாறு வகைகளும் உள்ளன.
அவற்றில் சில வகைகளே மேலுள்ள செய்யுளில் பயில்கின்றன.

எழுத்து
அவலோகிதம் என்னும் யாப்பாய்வு மென்பொருள் இந்த வெண்பாவை ஆய்ந்து தரும் எழுத்துகள் இப்படி:
உயிரெழுத்துகள்: 4
மெய்யெழுத்துகள்: 21
உயிர்மெய்யெழுதுகள்: 42

உயிர்/மெய்/உயிர்மெய் எழுத்துகள் பாலபாடமாதலால் இவற்றைச் செய்யுளில் இனம் கண்டுகொள்க.

மாத்திரை (குறில்: 1, நெடில்: 2, மெய்/ஆய்தம்: 1/2)
ஆற் -> 1 1/2 மாத்திரை
கரை -> 3 மாத்திரை
அரசறிய -> 6 மாத்திரை
வேறோர் -> 4 மாத்திரை
உழுதுண்டு -> 4 1/2

தளை
வெண்பாவின் அனைத்துச் சீர்களுக்கு இடையிலும் வெண்டளை மட்டுமே பயிலும்.
வெண்டளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்று இருவகைப்படும்.
விவரங்களைத் தளை இயலில் பார்ப்போம்.

ஓசை
வெண்டளை மட்டுமே பயில்வதால் வெண்பாவில் அமைவது செப்பலோசை யாகும்.
செப்பல் ஓசை என்பது ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லுவது போல அமைவதாகும்.

தொடை (எதுகை: இரண்டாம் எழுத்து ஒன்றுதல், மோனை: முதல் எழுத்து ஒன்றுதல்)
முதல் இரண்டு அடிகளிலும், அடுத்த இரண்டு அடிகளிலும் முதற்சீரின் இரண்டாம் எழுத்துகள் ஒன்றி வருவது காண்க.
ஆற்-வீற், உழு-பழு
இவை தவிர முதலிரண்டு அடிகளில் வரும் எதுகை இரண்டாம் அடியின் இறுதிச் சீரிலும் அமைவது காண்க.
ஆற்-வீற்-ஏற்

முதலடி தவிர மற்ற அடிகளில் முதலாம்-மூன்றாம் சீர்களின் முதல் எழுத்துகள் ஒன்றி மோனையாக வருவது காண்க.
வீற்-விழு, உழு-ஒப், பழு-பணிக்

எதுகை மோனைகளின் எழுத்தொலிகள் எங்ஙனம் செய்யுளை எளிதில் நம் நினைவில் இருத்துகின்றன என்பதையும் காண்க.

யாப்பிலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளான மாத்திரை -> எழுத்து -> அசை -> சீர் -> தளை -> அடி -> தொடை -> அளவு -> பா -> பாவினம்
இவற்றை இனிவரும் இயல்களில் விவரமாகப் பார்ப்போம்.

*** *** ***