Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 29

Thread: தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

                  
   
   
 1. #13
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
  1. மூன்று நாலடி நிலைமண்டில ஆசிரியப்பா + குறள் வெண்செந்துறை

  ஆ1. மழலைச் செல்வம்
  (அளவியல் ஆங்கில சானட்: நிலைமண்டில ஆசிரியப்பா)

  செந்நெல் இதழ்கள் செப்பும் மழலை!
  என்னை மறந்தே இறைவச மானேன்!
  கரும்பு வண்ணக் கருவிழிச் சுழலை
  விரும்புதல் கொள்ளும் வெகுளி யானேன்.

  வண்ணப் பூச்சியின் மலர்தா வல்போல்
  கண்கள் அலையக் கண்துளிர்த் தேநான்
  என்னுள் கொண்டேன் ஏக்கம்: என்மேல்
  மின்னல் வீழ்ந்துள் விழிப்புறு வேனோ?

  என்னிடம் குறையிலை இல்லைய வரிடம்
  சின்னக் குழந்தை சிறுமியோ சிறுவனோ
  இருவரும் விழைந்தே சென்றன வருடம்
  கருவரம் உண்டெனக் கணித்தது வெறுமனோ?

  என்னுள் உயிரொன் ரேறும் காலம்
  இன்றோ என்றோ வென்றெம் ஓலம்!

  --ரமணி, 07/03/2015

  *****

 2. Likes jaffy liked this post
 3. #14
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Nov 2007
  Location
  பாலைவனம்
  Posts
  2,785
  Post Thanks / Like
  iCash Credits
  54,831
  Downloads
  114
  Uploads
  0
  அபாரமான தமிழறிவு. பிரமிக்கிறேன்.
  தொடர்ந்து எழுதுங்கள்.
  அன்புடன்...
  செல்வா

  பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

 4. #15
  இளையவர் பண்பட்டவர்
  Join Date
  10 Aug 2010
  Posts
  78
  Post Thanks / Like
  iCash Credits
  30,752
  Downloads
  0
  Uploads
  0
  ரமணி ஐயா, நீங்கள் மன்றத்தின் பொக்கிஷம்.

  உங்களுடைய ஆக்கங்கள் தொய்வில்லாமல், மன்றத்தில் நாளும் இடம் பெற வேண்டும்.

  உங்களுடைய மொழி ஞானம் பிரம்மிப்பை தருகிறது.

 5. #16
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  அன்பர்கள் செல்வா மற்றும் jaffy அவர்களுக்கு வணக்கம்.

  நீங்கள் நினைப்பது போல நான் தமிழ் இலக்கியத்தை முறையாகக் கற்றவனோ, முயன்று படித்தவனோ அல்ல. சொல்லப் போனால் மகாகவி பாரதியார் கவிதைகளைக் கூட நான் முழுவதும் படித்ததில்லை. ஆயினும் என் யாப்பிலக்கண ஆர்வத்தில் அவ்வப்போது நான் புனையும் கவிதைகளுக்குத் தேவைப்படும் பின்னணியாகப் பழந்தமிழ்ப் பாடல்கள் படிப்பதுண்டு.

  என் தாழ்மையான கருத்தில், ஆர்வம் உள்ள யாரும் தமிழ் மரபில் கவிதையோ கதையோ முயன்று சீராக எழுதலாம். இலக்கணம் பயிலும் ஆர்வமும், பயின்றவற்றில் தொடர்ந்து முயலும் ஆர்வமும் இருந்தால் தமிழ் அறிந்தவர் யாரும் கவிஞராகவோ எழுத்தாளராகவோ ஆகலாம்.

  அன்புடன்,
  ரமணி
  Last edited by ரமணி; 02-05-2015 at 03:22 AM.

 6. #17
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
  2. மூன்று நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை

  ஆ2. குடும்பக் குமிழிகள்
  (அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

  அப்பாவின் குட்டியென்றே ஆகிநின்றேன் அப்போதே
  எப்போதும் அம்மாவே என்றிருந்தேன் சின்னாளே
  தப்பாமல் எதிலும் தலைநீட்டும் அப்பாவே
  ஒப்பாரி யம்மாவே ஒப்பவிலை பின்னாளே.

  கல்யாணம் ஆனதுமே கடமைகளாய்க் கதித்தனவே
  இல்லாளும் அன்னையாரும் இன்முகமே வேட்டனரே
  நல்விதமா யிருகுழந்தை நலம்தந்தான் விதித்தவனே
  பல்லாண்டு வாழ்ந்தனரே பாட்டிதாத்தா வீட்டினிலே.

  ஆயினநாள் இன்றுநாங்கள் அறுபதினும் நனியெனவே!
  தாயன்புப் பிள்ளையவன் தந்தையன்புச் சேயிழையும்
  போயினரே திருமணத்தில் புக்கவரும் தனியெனவே!
  நோயற்ற வாழ்வெனினும் வாயற்ற ஆவினமே!

  கூட்டுக் குடும்பமொன்று குமிழிகளாய்ப் பிரிந்ததுவே
  காட்டாற்று வெள்ளத்தில் கதியற்றே உடைந்ததுவே.

  --ரமணி, 12/03/2015

  *****

 7. #18
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
  2. எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

  இ2. மருள்மலர்
  (அளவியல் இத்தாலிய சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

  வானின்று வரர்தூவும் மலர்களிலே ஒருமலரோ
  கானின்று விகசித்தே கருவண்டு சூழ்-இனமோ
  நானென்றன் முற்பிறப்பில் நற்கரும வாழ்வினிலோ
  ஆனின்று உய்விக்கும் அறுமுகனாய் ஒருமகனோ
  தேனுண்டு கண்ணுறங்கும் தெய்வீகத் திருமுகமோ
  தானுண்டு தனக்குள்ளே தனதென்று வாழ்மனமோ
  ஊணுண்டு உலவுகின்ற உயிரெனவே வாழ்முனமே
  மானொன்று பார்ப்பதுபோல் மலர்விழிகள் உருவகமே!

  அரவொன்று தீண்டியதோ அடிவயிற்றில் நஞ்செனநான்
  உரமின்றிக் குமைகின்றேன் உயிர்பெற்ற உறவினிலே
  வரமொன்று கேட்டேனே வகையின்றிக் கேட்டேனோ
  நரம்பியலில் கோளாறால் நாளங்கள் துஞ்சுவதாம்
  உருவமுண்டு மிழலையுண்டு உளஞ்சொல்லும் திறனிலையே
  கருகமணிக் கோவையெனக் கனகமாலை வேட்டேனோ?

  --ரமணி, 19/03/2015

  *****

 8. #19
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
  3. இரண்டு நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா

  இ3. கணிணிச் செயலியும் புதுக்கவிதையும்
  (அளவியல் இத்தாலிய சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

  சொற்பலவும் சேர்ப்பதிலே தொட்டுவரும் குற்றென்றோ ... ... [குற்று = குறை; syntax error]
  பற்பலவாம் குறியீடு பக்கமொன்று தப்புதலோ ... ... [error in punctuation]
  சொற்பொருளை ஆய்ந்தெழுதித் தொட்டதிலே தப்பெனவோ ... ... [semantical error]
  சற்றோடி என்செயலி தத்திநிற்கும் வெற்றென்றே! ... ... [செயலி = computer program]

  என்றிருக்கும் போதிவண்நான் எத்தனை யோவிதமாய்த்
  தன்னளவில் நன்கியங்கித் தக்கபலன் தந்திடவே
  இன்றுபல வேசெயலி எண்ணியெழு துந்திறனைக்
  குன்றெனவே என்வசத்தில் கொள்கணினிக் கோவிதன்நான். ... ... [கோவிதன் = நன்குணர்ந்தோன், expert]

  இத்தனையொ ழுங்கிருந்தும் ஏன்கவிதை யாப்பினிலே
  வித்தகனாய் ஆகாமல் மீக்கூரும் ஓசையற
  தெத்துசொல்லே எண்ணமதைச் செப்புவதாய் வாக்கியமே
  குத்துடைத்துத் தொங்கவிட்டுக் கூறிடுதல் காப்பெனவே ... ... [காப்பு = அணி]
  சொத்தையைப்பு துக்கவிதைச் சொர்ணமலர்ப் பூசையென
  எத்தனைநாள் இன்னும்நானும் ஏமாறும் பாக்கியமோ?

  --ரமணி, 24/03/2015

  *****

 9. #20
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
  3. எட்டடித் தரவு + நாலடித் தரவு + குறள் வெண்செந்துறை

  ஆ3. மரபே இதயம்!
  (அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

  நாளெல்லாம் பாடுபட்டால் நாலுவரிக் கவிதைவரும்
  கோளொன்றும் குணமொன்றும் குறியெனவே கொண்டமர்ந்தேன்
  வாளென்றே இலக்கணத்தால் வகையில்லா எதுகைவரும்
  நீளில்லா மோனைவரும் நிலையெல்லாம் விண்டெறிந்தேன்
  தாளொன்றும் தலையொன்றும் சார்வதிலே தளைதட்ட
  வேளொன்று வினையொன்று விளைவொன்று வந்ததுவே
  ஆள்வினையை விட்டிடாமல் அரும்பொருளைக் களைகட்டக்
  கேள்விஞானம் கல்விஞானம் கேவலமாய் நின்றதுவே.

  பேசாமல் புதுக்கவிதைப் பேரினிலே எழுதிடவோ?
  கூசாமல் சொற்றொடரைக் குறைத்திடவோ மழுங்கிடவே?
  ஏசாமல் படிப்போரும் இருக்கையிலே பழுதுறுமோ?
  வீசாமல் தரித்துநின்றால் விளையாதோ ஒழுங்கெனவே?

  இதயமென்று துடித்தொன்று இயங்கிடுமே வேரெனவே
  எதையுமிங்கு மரபினிலே எழுதுவதே சீரெனவே.

  [கோள் = கொள்கை, கோட்பாடு; நீள் = ஒளி; நிலை = இடம்;
  தாள்-தலை = உறுசீரின் முடிவும் வருசீரின் முதலும்; வேள் = விருப்பம்;
  ஆள்வினை = முயற்சி; வீசாமல் = விரித்துநீட்டாமல்.]

  --ரமணி, 10/04/2015

  *****

 10. #21
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
  4. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை

  இ4. எந்திரப் புலமைவேலை ஏன்தோழி!
  (அளவியல் இத்தாலிய சானட்: ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை:
  இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)


  அந்தியின் வண்ணங்கள் அழகினை விரிக்கும்
  மந்திரம் மேவும் மாலன்கை யாழி!
  வந்துநீ காண வழியிலையே தோழி!
  சிந்தனை யெல்லாம் திருவிரல் அரிக்கும்
  விந்தைகள் புரிந்தவை விசைகளில் தரிக்கும்
  எந்திரப் புலமைவேலை ஏனோ தோழி?
  உந்துதல் பலவாக உதிர்ந்திடும் ஊழி
  தந்திரம் எல்லாம் தகவென வரிக்கும்!

  பெண்ணெனும் இயல்பின் பெற்றிமை உள்ளுவாய்
  பெண்மையின் மென்மையைப் பெரிதும் வஞ்சித்தே
  வண்ணங்கள் இழந்தே வாடுதல் விடுதோழி!
  பெண்மையாய்ப் பொலியும் பேற்றினைக் கொள்ளுவாய்
  உண்மையில் நீசெயும் ஊழியம் சிந்தித்தே
  வண்மையால் வந்துசேரும் வளங்கொள்ள இதுநாழி!

  [ஆழி = சக்கரம்; விசை = கணினி விசைப்பலகை விசைகள்;
  ஊழி = வாழ்நாள்]

  --ரமணி, 11/04/2015

  *****

 11. #22
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
  4. நான்கு ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை

  ஆ4. என்னில்லம் என்னில்லமான கதை
  (அளவியல் ஆங்கில சானட்: ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை:
  இயைபுத் திட்டம்: அஆஅஆ, இஈஇஈ, உஊஉஊ, எ-ஏ)


  கிடைநிலை மூன்றடுக்காய்க் கீழ்முதல் மாடியே
  தடையிலா வாஸ்து சக்திகள் அருள்தரும்
  மடைதிறந்த வெள்ளமாய் வரும்தென்றல் ஆடியே!

  வான்கூரை மேல்மாடம் மாலையின் பொருள்தரும்
  கான்சூழும் புள்ளிசை கவனத்தை ஈர்க்கும்
  தேன்சூழும் மலர்வண்டு திண்டாடிக் கால்வைக்கும்!

  எழுந்திரு விடிந்தது எனக்காலைக் கதிர்பார்க்கும்!
  முழுநிலா சன்னல்வழி முகம்காட்டிக் கால்வைக்கும்!
  இழுபறியாய்ச் சுற்றிலுமே இன்றுபல அடுக்ககமே!

  வானம் துண்டாகி வருமெனக்கோர் பங்கென்றே
  கானப் பறவையின் கவின்சிறகுத் துடிப்பிலையே
  மோன உதயமும் முழுநிலவும் எங்கென்றே!

  விண்ணும் மண்ணும் வேருடன் மறையும்
  கண்ணில் மனிதன் கவலைகள் உறையும்!

  --ரமணி, 12/04/2015

  *****

 12. #23
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
  5. இரண்டு கலிவிருத்தம் + ஒரு கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை

  இ5. கணிணித் துறையே கவையென்று...
  (அளவியல் இத்தாலிய சானட்: வெண்டளைக் கலிவிருத்தம் + குறள் வெண்செந்துறை:
  இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)

  வான்சூழும் நீலம். வடிவம் உறுமேகம்.
  தான்வீழும் செங்கதிர்த் தண்ணொளி ஜாலத்தில்
  வானவில் லைவிஞ்சும் வண்ணமிகு கோலத்தில்
  மோனச் சிரிப்பில் முகிழ்க்கும் உறவாகும்!
  தேன்மலர் வண்டுகள் தேடிச் சிறகோயும்;
  கானுறும் பண்ணில் கனியுள்ளம் சீலத்தில்;
  ஆன்றமையும் சாந்தி அகம்வர ஞாலத்தில்
  தோன்றும் இறைமையில் தொல்லை அறுந்தோயும்!

  இவையெதுவும் காணா(து) இளநெஞ்சம் இன்று
  கவையென்று கொள்ளும் கணிணித் துறையில்
  சுவையின்றிச் சொல்லின்றிச் சோப்புக் குமிழ்செய்(து)
  அவையே நிலையென்(று) அவனியை வென்றே
  தவமென்று கொண்டே தனிமை அறையில்
  சவமென்று முடங்கி சலத்தில் அமிழ்வெய்தும்!

  [கானுறும் = செவியுறும்; சீலத்தில் = ஒழுக்கத்தில்;
  கவை = வேலை, அக்கறை; சலம் = சுழற்சி, பட்சபாதம்,
  மாறுபாடு, போட்டி, பிடிவாதம்.]

  --ரமணி, 13/04/2015

  *****

 13. #24
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  அன்புடையீர்!

  கல்லூரிப் படிப்பை முடித்ததும் நான் ’பாபா அணு ஆராய்ச்சி நிலையம்’
  அனுப்பியிருந்த நேர்காணல் மடலில் மகிழ்ந்து சென்னையில் இருந்து
  மும்பைக்குத் தனியாக தாதர் விரவுவண்டியில் பதிவுசெய்யப் படாத
  இருக்கையில் முப்பது மணிநேரம் அமர்ந்து பயணித்தேன்.

  என் நண்பன் இதே வேலைக்கு ஒருநாள் முன்னதாகவே மடல் வந்து
  முதல்நாள் கிளம்பிச் சென்றவன் என்னை தாதர் மாதுங்கா ரயில் நிலையம்
  வந்து கூட்டிச் செல்வதாகச் சொல்லியிருந்தான். பயணத்தில் புனே-மும்பை
  ரயில்வே தடத்தில் அதிகாலை சென்றபோது மேற்குத் தொடர்ச்சி மலையின்
  இயற்கை அழகை ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

  ரயில்வண்டியில் வாசல் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு காலைத்
  தொங்கப்போட்டபடி அங்கும் இங்கும் கண்ணோட்டி ரசித்த காட்சிகள்
  இன்றும் என் நெஞ்சில் பசுமையாக. இந்தப் பாடலில் நான் ரயில்
  சக்கரம் எழுப்பும் ஒலியை எதிரொலிக்கும் வகையில் சொற்களை
  அமைத்துள்ளேன். பாடலைப் பற்றி அன்பர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

  அன்புடன்,
  ரம்ணி

  *****

  தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
  5. இரண்டு கலிவிருத்தம் + ஒரு கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை

  ஆ5. படித்ததும் கிடைத்ததும்
  [அளவியல் ஆங்கில சானட்: கலிவிருத்தம் (விளம் விளம் விளம் மா) + குறள் வெண்செந்துறை:
  இயைபு: அஆஅஆ, இஈஇஈ, உஊஉஊ, எ*எ]


  புனேநகர் கடந்ததும் பூத்ததே எங்கும்
  சினேகிதம் நடம்பயில் சிலிர்ப்பினில் இயற்கை!
  அனேகமாய்ப் பசுமையே, அருவிகள் தொங்கும்
  முனேவரும் குகைத்தடம் முடுக்கிடும் மயற்கை!

  இயற்கையின் நடக்கையில் எழுந்திடும் ஆடல்
  நயம்படும் முகத்துடன் நடம்புரி மங்கை!
  கயங்கிடும் கருந்திரள் கசிந்திடும் தூறல்
  இயன்றிடும் வெடித்திடும் இசைத்திடும் கங்கை!

  படிப்பினை முடித்தவன் பார்க்கவோர் வேலை
  கிடைப்பதற் கென்றுநான் கிடந்தவண் சென்றேன்
  கடுமையாய் வந்தநேர் காணலோர் காலை
  கடிதமும் வருமெனக் கனவுகள் கண்டேன்.

  வந்ததோ மறுப்பென; வாழ்விலே இறைவன்
  தந்தவோர் வேலையில் தங்கியே நிறைவன்!

  --ரமணி, 13/04/2015

  *****

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •