எனக்கென்று ஒரு நாள் வரும்...
என் பேச்சுகள் பொன்மொழிகளாகும்,
என் எழுத்துகள் கவிதைகளாகும்,
என் நடை உலகின் பாதையாகும்,
என் அசைவுகளால் ஆகாயநடுக்கம் வரும்...

தங்கங்கள் என் அங்கங்களில்
கிடக்கத் தவம் செய்யும்..
செல்வங்கள் பிச்சை கேட்டு
வீட்டு வாசல் தேடி வரும்..

என் கரங்கள் வரங்களாகும்,
என் கோபங்கள் சாபங்களாகும்,
நான் தொட்ட சாம்பல் கூட
கொல்லிநோய்களைத் தீர்க்கும்,

ஏசிய வாய்களும் அடைத்துப்
பேசாது போகும் - தூற்றிய
மண்ணின் ஒவ்வொரு துகளும்
மன்னிப்பு கேட்டு மன்றாடும்..

எந்நாள் என்று தெரியாத,
அந்நாள் வருமென்ற நம்பிக்கையிலேதான்
இந்நாள் உறக்கம்
என்னால் விதைக்கப்படுகிறது,
கட்டாந் தரையில் கூட...