உன் பாதச்சுவடுகளால் வரையப்பட்ட
கோலங்களை, அந்தக்கால
மேஜிக் சிலேட்டு போல்
அழித்துச் செல்லும் அலைகள்...

உன் பேச்சின் ஒலியில் கசியும் இனிமையின்
வலிமையிடம் தோற்றுப் போனதால்,
கண்ணீர் விட்டு வீசிக் கொண்டிருக்கும்
உப்புக் காற்று....

உனக்காகவே படைத்து, விதைத்து,
அறுவடை செய்து, பக்குவப் படுத்திய
சுண்டலை விற்றுக் கொண்டிருக்கும்
சிறுவர்கள்...

துப்பட்டாவை வானமாக்கி, அதற்குள்
மங்கை முகத்தை நிலவாக்கி
நித்தம் முத்தம் ஊட்டிக் கொண்டிருக்கும்,
நவநாகரீக நல்லக் காதலர்கள்...

இவற்றையெல்லாம் துறந்து,
நிதமும் உன்னைக் காண்பதற்காகவே,
கடற்கரையில் நடைபயணம்
மேற்கொள்ளும் ஞானியாக நான்...

"உன்னுடன் இன்று பேசப்போகும்
முதல் வார்த்தைதான் அறியுமோ
வருங்கால மகிழ்ச்சியான நம் இல்லறத்தின்
விதை, தான் என்பதை..."
என்று நினைத்தாலும், பயத்தில் நேரத்தை மட்டுமே
கேட்டுத் திரும்புவதால் நானும் அலையாகிறேன்....