Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: மௌனமான ஆனந்தம்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0

    மௌனமான ஆனந்தம்

    இரவு இரண்டாவது ஆட்டம் படம் பார்ப்பது, அதுவும் சனிக்கிழமை என்றால் எனக்கு மிகவும் பிடித்த ஓன்று. ஆனால் இன்று நண்பனை இறக்கி விட்டு தனியாக வண்டியில் வரவேண்டியதாகி விட்டது. வழக்கமாக வரும் பாதை இல்லை. ஒரே குண்டும், குழியுமாக இருக்கிறது. மிக கவனமாக பாதையை பார்த்துக்கொண்டு வருகிறேன். அந்த வளைவில் திரும்பும்போது, எதோ ஒரு வெள்ளை உருவத்தின் மீது விளக்கு வெளிச்சம் பட்டு திரும்பியது. அது ஒரு வினாடி நேரத்திற்குள் இருக்கும். அது மனித உருவம் போன்றுதான் இருந்தது.

    எனக்கு "திக்" என்றிருந்தது. இந்நேரத்தில் யார் இங்கு நிற்க கூடும்.? வேறு ஏதாவது இருக்கும் என்று நினைக்கையில் அடுத்த வளைவிலும் அதே போன்ற ஒரு உருவத்தில் வெளிச்சம் பட்டு திரும்பியது. கண்டிப்பாக அது மனித உருவம்தான்.அப்போதுதான் நான் சுற்றுப்புறத்தை கவனித்தேன். ஒற்றை சாலை. இருமருங்கிலும் விட்டு விட்டு வேலியாய் முட்செடிகள். வேலியை தாண்டி அங்கங்கே தென்னை மரங்கள். வேகமேடுத்துக்கொண்டிருக்கும் கற்று, அதன் "ஹோ" வென்ற இரைச்சல். என் வண்டியின் வெளிச்சத்தை தவிர மெல்லிய நட்சத்திர வெளிச்சம். அடுத்த வளைவு நெருங்கியது. இன்னும் எத்தனை வளைவுகள் உள்ளதோ ? என்றபடி இப்போது மெதுவாக வண்டியினை திருப்பினேன். பாதிவளைவில் வண்டியை நிறுத்தி, எதாவது தென்படுகிறதா என் பார்த்தேன். எதுவும் இல்லை.

    "அப்பாடா " என்றிருந்தது.

    வண்டியை நகர்த்தினேன். வண்டியின் பின்புறம் எதோ நகர்ந்து சென்றதைபோல் இருக்கவே. பின்னோக்கும் கண்ணாடியில் பார்த்தேன். வெள்ளை உருவம் ஒன்று வண்டியின் பின்புறத்தில் சாலையைக் கடந்துகொண்டிருந்தது. ஜிவ் என்று என் உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்தது. வண்டியை நிறுத்திவிட்டு கதவு திறந்து இறங்கினேன். ஆவிகள் பற்றியெல்லாம் எனக்கு சிறு வயது முதலே நம்பிக்கை கிடையாது. ஆனாலும் தனிமையும் இருட்டும் என்னை பயமுறுத்தியது. அந்த வெள்ளை உருவம் போன திசையில் நோக்கினேன்.

    "ஓ.."

    வேலியின் மறுபுறம் அது சற்று தூரமாக நின்று கொண்டிருந்தது. எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. திடீரென்று அது குனிந்து உட்கார்ந்தது. அதன் தோற்றம் அது முகத்தை தன் கைகளால் மூடி அழுவது போல இருந்தது. நான் வேகமாக வண்டிக்கு திரும்பி வீடு வந்து சேர்ந்தேன். அன்றைய மீதி இரவு தூக்கமில்லாமல் கடந்தது.

    நண்பனை அழைத்து விபரம் சொன்னேன். அவன் சிரித்தான். நான் எதையோ பார்த்து பயந்துவிட்டதாக கூறினான். அன்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால், பகல் பொழுதில் அந்த இடத்தை ஒருமுறை சென்று பார்த்து வரலாம் என்று தோன்றியது.

    மறுத்த நண்பனையும் அழைத்துக்கொண்டு, அவ்விடத்தை அடைந்தேன். இரவில் என்னை பயமுறுத்திய அந்த இடம் பகல் பொழுதில் அமைதியாக இருந்தது. செம்மண் சாலை, முழுவதும் பள்ளங்கள். நான் வண்டியை நிறுத்தி, அந்த உருவம் நின்றுகொண்டிருந்த இடத்தை அடைந்தேன். நண்பன் பின்னால் தொடர்ந்தான். எதுவுமே எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை. அந்த உருவம் ஏன் உட்கார்ந்து கொண்டு அழவேண்டும்? சுற்றிலும் பார்வையை ஓடவிட்டேன். தூரமாக ஒரு பாழடைந்த வீடு தெரிந்தது. அதை நோக்கி நடக்க தொடங்கினேன். நண்பன் என்னை தடுத்தான்.

    " அங்கே போகவேண்டாம் பாம்பு நிறைய இருக்கும் இடம்போல் தெரியுது." என்றான்.

    " எப்படி சொல்ற?" என்று நான் வினவினேன்.

    " பார் வீட்டை சுற்றிலும் புற்றுகள் நிறைய இருக்கு" என்றான்.

    " கரையான் புற்றுகள் தானே, பரவாயில்லை. வா கிட்டத்தில் செல்லலாம்." என்றேன்.

    " அட உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு , கரையான் புற்றில் பாம்பு இருக்கும்-னு உனக்கு தெரியாதா? வா போகலாம்" என்று என் கையை பிடித்து இழுத்து வந்து வண்டியில் அமரவைத்து , அவனே வண்டியையும் ஓட்டினான்.

    "இங்க பாரு, ஆவி, பேய் -னு சொல்லிக்கிட்டு இப்படி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காம ஒழுங்கா ஊருக்கு போற வழியப் பாரு. இன்னும் பத்து நாள்தான் இருக்கு தங்கச்சி கல்யாணத்திற்கு. புரியுதா? சாயங்காலம் நானே வந்து உன்னை வண்டி ஏத்தி விடறேன். சரியா? அஞ்சு மணிக்கெல்லாம் தயாரா இரு என்ன?" என்றபடியே என்னை வீட்டில் விட்டு சென்றான்.

    ஆவி, பேய் எல்லாம் பிறரை பயமுறுத்தி துன்புறுத்தும் என்றுதானே சொல்வார்கள். அப்படி இருக்க அந்த உருவம் மட்டும் ஏன் அழவேண்டும். இந்த சிந்தனையிலே ஊருக்கு வரும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். கொறிப்பதற்கு கடலையும், தண்ணீரும் வாங்கிவந்து தந்தான் நண்பன்.

    "பத்திரமா போ. இன்னும் ரெண்டு மூணு நாள்-ல நான் வருவதாக அம்மாவிடம் சொல் என்ன? தங்கச்சியையும் சமாதானப்படுத்து. நான் வரலைன்னு கோபப்படுவா " என்றான்.

    "சரிடா சீக்கிரம் வரப்பாரு" என்றபடியே நன்றாக சாய்ந்து அமர்ந்தேன்.

    சீரான வேகத்தில் பேருந்து போய்கொண்டிருந்தது. நிறைய இடம் காலியாகவே இருந்தது. சில்லென்ற காற்றும், கடந்த இரவு தூக்கமின்மையும் என் கண்களை சுழற்றியது.

    திடீரென நெற்றியில் வலி உணரவே விழித்துக்கொண்டேன். அனிச்சையாக என்கைகள் நெற்றியைத் தடவியது. பேருந்து நின்றிருந்தது.

    ஒரு இளம்பெண் அவசரமாக உள்ளே ஏறிவந்தாள்.

    " என்னம்மா கிறுக்கு பிடிச்சிருக்கா உனக்கு.? இப்படியா குறுக்கே வந்து நிப்ப ? கொஞ்சம் போயிருந்தாலும் உன்னோட உயிரு போயிருக்கும். " என்று சப்தம் கேட்டது.

    என்னைப்போல் நிறைய பேருக்கு அடிபட்டிருக்க வேண்டும். எல்லாருமே முணுமுணுத்தார்கள்.

    " ரெண்டு பேர் என்ன வெரட்டுனாங்க அதான் பயந்து போய் இப்படி செஞ்சுட்டேன். ரெண்டு ஊரு தள்ளி என்னைய இறக்கி விட்டுடுங்க உங்களுக்கு புண்ணியமாப் போகும்." என அந்த இளம்பெண் கெஞ்சினாள்.

    " சரி போய் இரு" என்றபடியே விளக்குகள் அனைத்தையும் எரிய விட்டார் ஓட்டுநர்.

    அவள் தயங்கி தயங்கி வந்து வெறுமனே இருந்த என் இடப்பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.

    அவளைப்பார்த்து ஒரு வெற்றுப் புன்னகையை உதிர்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடினேன்.

    ஒரு மெல்லிய விசும்பல் ஒலி தொடர்ந்து கேட்கவே, சட்டென்று கண்விழித்தேன். அனைத்து விளக்குகளும் அணைந்த நிலையில், தூக்க விளக்கு மட்டும் மெலிதான வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தது. எங்கிருந்து அந்த சப்தம் வருகிறது என சுற்றிலும் பார்த்தேன்.

    என் இடப்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த அந்தப்பெண்தான். குனிந்து அழுதுகொண்டிருந்தாள். என் மனதிற்குள் ஏதோ பொறி தட்டியது. இது அந்த உருவம்....

    நான் பார்த்துக்கொண்டிருக்கையிலே அந்தப்பெண் ஒரு கரும்புகையாக மாறி சட்டென்று ஜன்னல் வழியாக வெளியேறினாள். ஒரு வினாடிக்குள் நடந்துவிட்ட இந்த நிகழ்வால் நான் பிரமை பிடித்தவன்போல் அமர்ந்துவிட்டேன்.

    'என்னை சுற்றி என்ன நடக்கிறது?. நான் காண்பதெல்லாம் என்ன? ஏதாவது எச்சரிக்கையா? இல்லது ஆபத்தின் அறிகுறியா?' மிகவும் குழப்பத்துடனே இருந்தேன்.ஊருக்கு வந்திருந்த நண்பனிடமும் இதைப்பற்றி வாயே திறக்கவில்லை.

    தூரத்து உறவினர் ஒருவர் உளவியல் நிபுணராக இருப்பது எனக்குத் தெரியும். அவரைப்பற்றிய விபரங்களை அம்மாவிடம் சேகரித்தேன். தங்கை கல்யாணத்திற்கு அழைப்பதுபோல் அவரை சென்று பார்த்துவிட்டு வரலாம் என முடிவு செய்து நண்பனையும் அழைத்து சென்றேன்.

    " ஆவி இருக்கிறது என்று நிருபித்தவர்கள் உண்டா என்று கேட்டால், இல்லை. ஆனால் அதை உணர்ந்ததாக கூறுபவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். ஏனென்றால்., இது மாதிரியான அனுபவங்கள். தனிப்பட்ட முறையில்தான் எல்லோருக்கும் அமைகிறது. அதனால் அதை நிருபிப்பதற்கு வாய்ப்பு இருக்காது.

    இறந்தவர்களின் ஆன்மா மீண்டும் மனிதர்களோடு தொடர்பு கொள்ள சிலரை மட்டுமே தேர்வு செய்யும். அப்படி தேர்வு செய்யும் மனிதர்கள் தன்மீது திணிக்கப்படும் அந்த மூன்றாவது உணர்வின்மீது ஏற்படுகின்ற பயத்தில்தான் மனச்சிதைவுக்கு ஆளாக நேரிடுகிறது என ஒரு ஆய்வாளர் கூறி இருக்கிறார்.

    ஆழ்நிலை தியானம் செய்வதால் கூட ஒருவர் மீது நம் எண்ணங்களை திணிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதில் உனக்கு ஏற்பட்ட அனுபவம் எது என்று என்னால் கூற முடியவில்லை. ஆனால் பயப்பட தேவை இல்லை. பிரித்தறியும் திறனை நீ கொண்டிருக்கிறாய் என்றே நான் நினைக்கிறேன்."

    உளவியல் நிபுணர் சொன்னவைகளில் எனக்கு முழுமையாக ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. ஆனால் யாரோ நம்மோடு தொடர்கொள்ள முயல்கிறார்கள் என்பது மட்டும் திடமாக தெரிந்தது. திரும்பி வரும் வழியில் வீட்டில் யாருக்கும் இதை தெரியப்படுத்த வேண்டாமென்று நண்பனை கேட்டுக்கொண்டேன். அவனும் சிறிது கவலையோடு சம்மதித்தான்.

    திருமண வேலைகளில் இந்த உணர்வு மறந்தே போனது. மீண்டும் வேலைக்கு திரும்பினேன். அந்த உருவத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நள்ளிரவு ஆட்டத்திற்கு சென்றால் நண்பன் சந்தேகப் படுவான்.கவலையும் படுவான் எனவே, அந்த நேரத்தை கணக்கில் கொண்டு, நள்ளிரவில் அந்த ஒற்றை சாலையை வந்தடைந்தேன். அந்த வீட்டின் மீது வெளிச்சம் படுமாறு வண்டியைதிருப்பினேன்.

    " அடக்கடவுளே " வண்டி மோதிவிடும் தூரத்தில் அந்த உருவம்

    சட்டென்று வண்டியை நிறுத்தினேன். என் நாக்கு உலர்ந்து விட்டது. கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் சத்தம் எழ வில்லை. உருவத்திற்கு முகம் என்று எதுவும் இல்லை. ஒரு இளம்பெண்ணை வெள்ளைத் துணியினால் முழுவதும் மூடினால் எவ்வாறு இருக்குமோ அப்படி இருந்தது அந்த உருவம். என் விளக்கின் ஒளியினால் அந்த உருவத்தின் நிழல் பின் பக்கம் விழவில்லை. ஐந்தடி இடைவெளியில் நின்ற அந்த உருவம் மெதுவாக திரும்பியது. அந்த பாழடைந்த வீட்டினை நோக்கி நகர ஆரம்பித்தது. நான் என்னிலை மறந்து பயத்தின் விளிம்பில் இருந்தேன்.

    சற்று தூரம் நகர்ந்த பின் அது நின்றது பின் திரும்பியது. அது என்னை அழைப்பது போலிருந்தது. எதோ ஒரு சக்தியினால் உந்தப்பட்டவன் போல் நான் வெளியில் இறங்கினேன். அந்த உருவம் நின்ற திசையில் நடந்தேன்.நான் நடக்க தொடங்கியதும் அதுவும் அந்த வீட்டினை நோக்கி நகர்ந்தது. மெதுவாக அந்த வீட்டினை அடைந்தோம். வீட்டின் பெரிய கதவுகள் மிகப்பெரிய பூட்டினால் பூட்டப்பட்டு இருந்தது.

    அந்த உருவம் அந்த கதவின் உடே சென்று மறைந்தது. என்னிலை நான் உணர ஆரம்பித்தேன். திரும்பி போய்விட எத்தனித்தேன். ஆனால் ஒரு மெல்லிய முனகலும், விசும்பலும் என் காதில் விழுந்தது. எங்கிருந்து அந்த சத்தம் வருகிறது என் கவனமாக கேட்டேன். கண்டிப்பாக அது வீட்டின் உள்ளே இருந்துதான் வருகிறது. ஒருவேளை இந்த பேயின் இருப்பிடம் இதுவாக இருக்குமோ ? என்ன ஆனாலும் பரவாயில்லை இதை இன்றோடு முடிக்க வேண்டும் என்ற வெறி எனக்குள் வந்தது. அந்த வீட்டினை சுற்றி வந்தேன். நான்கு ஜன்னல்கள் பெரிய மரக்கட்டைகளால் ஆணிகொண்டு அடித்து மூடப்பட்டிருந்தது. அதை திறப்பதோ அல்லது வாசலைத் திறப்பதோ நடவாத காரியம்.

    அந்த விசும்பல் சத்தம் கேட்டுகொண்டே இருந்தது. நான் திரும்பவும் வண்டிக்கு வந்தேன். வண்டியை கிளப்பினேன். வண்டியின் பின்னால் அந்த உருவம் வந்து நின்றது. நான் விரைந்தேன். கொஞ்ச தூரம் பின்னால் வந்த உருவம் பின் மறைந்து போனது.

    நேராக நண்பன் வீட்டினை அடைந்தேன். அவனை எழுப்பினேன்.

    " என்னடா இந்த ராத்திரியில் எங்கே போகணும்." என்றான் கலவரத்தோடு.

    " ஒன்றும் பேசாதே என்னோடு வா " என்றபடி இரண்டு கடப்பாரை மற்றும் பிற ஆயுதங்களையும் எடுத்து வண்டியில் போட்டேன்.

    நேராக அந்த வீட்டை நோக்கி போனேன். முன்பு போல் வண்டியை நிறுத்தி, வீட்டினை அடைந்தேன். "கேள்" என்பதுபோல் நண்பனிடம் சைகை செய்தேன். அவன் மிரண்டான். மெல்லிய விசும்பல் ஒலி அவன் காதுகளுக்கும் கேட்டிருக்க வேண்டும்.

    " டே வேணாண்டா ஏதாவது பேயா இருக்கப்போவுது. போயிடலான்டா " என்றான்.

    கையோடு கொண்டு வந்திருந்த கடப்பாறையை அவனிடம் கொடுத்து பூட்டை உடைக்க சொன்னேன். ஒரு உருட்டுக்கட்டையை தயாராக ஓங்கி பிடித்தவாறு நான் நின்றேன். பூட்டு உடைந்தவுடன் என் வலக்காலால் கதவினை மிதித்தேன். கதவு மெல்ல திறந்தது.

    அங்கே கண்ட காட்சி.

    "அடப்பாவமே" என் இருவரும் கிட்டத்தட்ட அலறினோம்.

    நான் பேருந்தில் பார்த்த அதே இளம்பெண் கால்களிலும் கைகளிலும் பெரிய சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கிடந்தாள். சங்கிலிகளின் மறு முனை ஒரு தூணில் பிணைக்கப்பட்டிருந்தது. மீந்துபோன சாப்பாட்டின் வாசமும், அவளின் உடல் வாசமும் சேர்ந்து ஒரு குமட்டல் நெடியை ஏற்படுத்தி இருந்தது. அவள்தான் விசும்பிக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் மூடியே இருந்தது.


    அந்த புகழ்பெற்ற மருத்துவமனையில் ஒரு அறையில் அவள் படுத்திருந்தாள். நினைவு திரும்பி இருந்தாள். அவளை அவ்வாறு அடைத்து வைத்த இரண்டுபேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

    " அந்த பாவிகள் தான் அப்பாவை கொன்றவர்கள். என் சித்தியையும் துணியில் சுற்றி எரித்தனர். என்னையும் கையெழுத்துக் கேட்டு, கொன்று விடுவதாக மிரட்டினார்கள். எனக்கு தெரியும் கையெழுத்துப் போடும்வரை என்னை இவர்கள் கொல்லமாட்டார்கள். என் னை யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா என்று நான் இறந்து போன என் சித்தியை நினைத்து உளறிக்கொண்டே இருந்தேன். ஆனால் உங்களுக்கு எப்படி தெரியும் நான் அங்கே இருந்தேன் என்று.?" என்று கேட்டாள்

    " அதெல்லாம் நினைத்து நீ குழப்ப வேண்டாம் அமைதியாக ஓய்வெடு. எல்லாம் நல்லபடியாக நடக்கும்." என்றபடி நானும் நண்பனும் வெளியே வந்தோம். இருவர் முகத்திலும் ஒரு மௌனமான ஆனந்தம்.

  2. #2
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    32
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0
    பேய் கதை போல் தொடங்கி ஜதார்த்தக் கதையாக நகர்கிறது இந்த த்ரிளர் கதை.

    சுவாரஷ்யமாக இருந்தது. வாழ்த்துக்கள் டெலஸ்.
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    யாரையாவது கொஞ்சம் பயமுறுத்திப் பார்க்கலாம் என்ற நினைப்புதான்.(நெனப்புதான் பொழப்பக் கெடுக்குமோ!!)

    நன்றி, சே. சபீக்ஷனா

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    கதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்.
    ரமணி

  5. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    மிக்க நன்றி. ரமணி அவர்களுக்கு.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    நல்ல கதை. வாழ்த்துகள்.

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    நன்றிகள்.

  8. #8
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    நமக்கேற்பட்ட சில அனுபவங்கள் இதுபோல காரணங்களினால் ஏற்பட்டதுதான என நினைக்கவைக்கக்கூடிய கதை!
    என்றென்றும் நட்புடன்!

  9. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    உண்மைதான் பிள்ளை அவர்களே. எனக்கும் ஒரு அனுபவம் உண்டு. ஆனாலும் நான் இதுவரை ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.

    நன்றி.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by dellas View Post
    உண்மைதான் பிள்ளை அவர்களே. எனக்கும் ஒரு அனுபவம் உண்டு. ஆனாலும் நான் இதுவரை ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.

    நன்றி.
    இந்த விடையத்தை தனித்திரியாக்கி 'அமானுட அனுபவங்கள்' மற்ற உறுப்பினர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாமே!
    என்றென்றும் நட்புடன்!

  11. #11
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல கோணம்தான் பிள்ளை அவர்களே.

    ஆனால் " பேய் பிடித்த பயலுவ எல்லாம் சேர்ந்து ஒரு திரி தொடங்கி இருக்கா -னு " ஒரு பேச்சு வராதா?

    ஒரு பொது அறிவுக்காக கேட்கிறேன் அவ்வளவுதான்.

  12. #12
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    கதை நகர்த்திய விதம் அருமை. இறுதிவைரை அழகாக நகர்தியுள்ளீர்கள்.
    இடையிலே சில ஆலாபனைகள் ஏன் வந்ததென்று தெரியவில்லை. உதாரணமாக தங்கையின் திருமணம்.
    ஆனால் அதுகூட சில ஊகங்களை வாசிப்பவருக்கு கொடுக்கிறது. நான் நினைத்தேன் வரப்போகும் தங்கையின் கணவர் கொடூரமானவரோ என்று. அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி தான் அவ்வாறு வந்ததோ என்று.


    அதுசரி. பேய் இருக்கா இல்லையா?
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •