சிங்காரவேலு கூறுகிறார்:

என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. சண்டையில் சேர்ந்தேன். பல ஊர்கள் சுற்றிப் பல தண்ணீர் குடித்து, பல வீரச் செயல்கள் செய்ய வேண்டு மென்று எனக்கொரு ஆசை. படங்களில் 'ஸ்டன்டு'களைப் பார்த்துப் பார்த்து எனக்கும் பல 'ஸ்டன்டு'கள் நடத்த வேண்டுமென்ற துடிப்பு. பட்டாளத்தில் புகுந்தால் இதற்கெல்லாம் இடம் கிடைக்குமல்லவா? சேர்ந்து வைத்தேன். துப்பாக்கி பிடிக்காத கையும் ஒரு கையா? சண்டை போடாத மனிதனும் ஒரு மனிதனா?

நான் ஓரளவு படித்துத் தொலைத்திருந்ததால் பட்டாளத்தில் சேர்ந்ததும் எனக்குக் குமாஸ்தா வேலைதான் கொடுத்தார்கள். என்றாலும் பரேடுகள், பயிற்சிகள் துப்பாக்கி பிடித்தல், ஓடுதல், ஒளிதல், முன்னேறுதல், பின்வாங்குதல் முதலிய எல்லா விவகாரங்களும் அங்கே உண்டு. 1941-ல் இந்தியாவில் பயிற்சிகளை முடித்தபின் 1942-ல் பர்மா போர்முனைக்குப் போய்ச் சேர்ந்தேன்.

நங்கள் இந்தியாவிலிருந்து பர்மாவை நோக்கி முன்னேறும்போது, பர்மாவில் இருந்த எங்கள் துருப்புக்கள் பர்மாவை ஜப்பானியரிடம் கோட்டை விட்டு விட்டுப் பின்வாங்கத் தொடங்கின! எதிரிகளை எதிர்ப்பதற்குப் பதிலாக நாங்கள் எங்களைச் சேர்ந்த வீரர்களையே எதிர்கொண்டழைத்தோம். ஆகவே நாங்கள் முன்னேற்றத்தை நிறுத்திக்கொண்டு இந்திய எல்லைக்குள் பத்திரமாக இருந்தோம்.

எங்களுக்கு அதே இடத்தில் தங்கி எல்லையைப் பாதுகாக்கும்படி மேலிடத்து உத்தரவு வந்தது. ஜப்பானியரைத் தடுத்து நிறுத்துவதாகப் பெயர் பண்ணிக்கொண்டு நாங்கள் வேளா வேளைக்கு எங்கள் சாப்பாட்டையும் பயிற்சிகளையும் கவனித்து வந்தோம். ஜப்பானியரைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேவையே எங்களுக்கு வரவில்லை. விவரம் தெரியாமல் அந்தக்குட்டை மனிதர்கள், தாங்கள் பிடித்த நாடுகளையே கட்டிக் காக்கத் தெரியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால், அவர்களது அடுத்த இலக்கு இந்தியா என்பதற்காக, அவ்வப்போது சின்னஞ்சிறு சலசலப்பையும் எதிரிகள் ஏற்படுத்தாமல் இல்லை. கண்ணாமூச்சி விளையாட்டைப் போல் பறந்து வந்து குண்டுகளை வீசினார்கள். காடுகளில் ஒளிந்துகொண்டு கொரில்லா மிரட்டு மிரட்டினார்கள்.

தளவாடச் சாமான்களும் உணவுப் பொருள்களும் கல்கத்தாவிலிருந்து லாரிகளில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. அவற்றைச் சேமித்துக் கொண்டு எல்லைப் பிராந்தியத்தில் காவல் காத்த படைகளுக்குத் தேவையானவற்றை அனுப்பிக் கொண்டிருந்தோம். காவல் படைகளுக்கு அப்போது போர்க் கருவிகள் தேவைப்படவில்லை. சாப்பாட்டுச் சாமான்கள் மட்டுமே தினசரி ஒழுங்காகக் காலியாகிக் கொண்டிருந்தன!

சுறுசுறுப்பை நாடிச் சென்று, சோம்பலை வளர்த்துக் கொண்டிருந்த இந்தச் சமயத்தில்தான், எனக்குச் சுறுசுறுப்பூட்ட வந்தாள் பேரழகி லியோ. இயந்திரம்போல் உப்புச் சப்பில்லாமல் ஓடிக்கொண்டிருந்த நாட்கள் திடீரென்று எனக்கு ஒளி வீசி மகிழ்வூட்டத் தொடங்கின.

நாங்கள் தங்கியிருந்தது நான்கு புறங்களிலும் மலைகளால் சூழப்பெற்ற அழகியதொரு பள்ளத்தாக்கு. ஐந்தாறு மைல்களில் ஒரு சில கிராமங்கள் சிதறிக் கிடப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். மலைச்சாதி மக்கள் அங்கே இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்தார்களாம். அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

சாமான்களை லாரிகளில் ஏற்றி இறக்குவதற்காக அடுத்த கிராமத்திலிருந்து வேலையாட்கள் வரவழைக்கப்பட்டார்கள். சுமார் இருபது வீடுகள் உள்ள அந்தக் கிராமம் முழுவதுமே எங்களுக்காக உழைக்க முன் வந்தது.

கிராமத்தின் தலைவன் ஷியானுக்கு அரைகுறையாக ஆங்கிலம் பேசத் தெரியும். மணிபூரில் சில ஆண்டுகள் ஏதோ ஒரு வெள்ளைக்காரன் வீட்டில் காவலாளியாக இருந்தவனாம். இப்போது நாற்பதுக்கு மேல் வயதாகி விட்டது. அவனுடைய உதவியால் அந்தக் கூட்டத்தை ஒருவகையாகச் சமாளிக்கத் தொடங்கினோம். கிராமவாசிகள் எல்லோரும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். செம்பொன் மேனி படைத்தவர்கள். தலைவன் ஷியானைத் தங்களது தந்தையாகப் பாவித்து நடந்துகொண்டார்கள்.

முதல் நாளின் முதற்பார்வையிலேயே அத்தனை பேர்களிலும் லியோ தனித் தன்மை வாய்ந்த பெண்ணாகத் தோன்றினாள். ஒரு முறை எதேச்சையாகப் பார்த்துவிட்ட என் கண்கள் ஒன்பது முறை அவளைப் பார்க்கத் தூண்டின.

வயது பதினெட்டு இருக்கும். தளதளவென்று பளிச்சிடும் பசலைக் கீரைக் கொழுந்து போன்ற தேகம். இடுப்பில் பச்சை நிற லுங்கி கட்டிக்கொண்டு, மேலே கேரள நாட்டுக் கிராமப் பெண்களைப்போல் ஒரு தாவணியைப் போட்டுக் கொண்டிருந்தாள். கைகளில் தந்தத்தால் செய்த வளையல்கள். தலைமுடியை வாரிவி்ட்டு இரு கூறாகப் பிரித்துத் தலையைச் சுற்றிலும் வட்டமாகக் கட்டிக் கொணடிருந்தாள். இடது காதின் அருகே ஏதோ ஒரு காட்டு மலர் இரண்டு இலைகளுடன் சிரித்துக் குலுங்கியது. அவளைப் பார்த்தால் உடலை வளைத்துக் கூலி வேலை செய்யக்கூடிய பெண்ணாகத் தோன்றவில்லை.

வேலையாட்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த என் மேலதிகாரி, "ஏன் அந்தப் பெண் அங்கே விளையாடிக் கொண்டிருக்கிறாள்?" என்று என்னிடம் சற்றுக் கோபமாய்க் கேட்டார்.

நானும் உடனே கோபத்தை வரவழைத்துக் கொண்டு அந்தக் கிராமத் தலைவன் ஷியானிடம், "அவள் இங்கே வேலை செய்ய வந்திருக்கிறாளா? இல்லை, விளையாட வந்திருக்கிறாளா?" என்று கடுமையான குரலில் கத்தினேன்.

"விளையாட வந்திருக்கிறாள்" என்று அமைதியாகப் பதிலளித்தான் ஷியான். இதைக் கேட்டதும் என் மேலதிகாரிக்குத் தூக்கிவாரிப்போட்டது.

"அவள் என்னுடைய செல்ல மகள், சாஹேப்!" என்று சிரித்துக் கொண்டே கூறினான் ஷியான்."நீங்கள் வேண்டுமானால் தலைகளை எண்ணிப் பாருங்கள். எத்தனை பேருக்குக் கூலி உண்டோ" அத்தனைபேரும் வேலை செய்கிறோம். நானும் என் மகனும் வேலைக்கு வந்து விட்டதால், வீட்டில் இருக்கப் பிடிக்காமல் லியோவும் எங்களுடன் வந்திருக்கிறாள். அவளுக்கும் அவள் தாயாருக்கும் ஒத்துக் கொள்ளாது. லியோ பெரிய சண்டைக்காரி,"

அதிகாரி அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டு மேலே சென்றார். நான் ஷியானிடம் பேச்சுக் கொடுத்து அவன் வாயைக் கிளறினேன். தன்னுடைய மகளின் அருமை பெருமைகளை அடுக்கிக் கொண்டே போனான் அவன். அவள்தான் அந்தக் கிராமத்துக்கே முடிசூடாத ராணியாம். மணிப்புரியில் பெரிய சந்தைகள் கூடும்போது அவளையும் கொண்டு போய் வேடிக்கை காட்டுவானாம். பெண்கள் அந்த நகரத்தில் நடனமாடுவதைப் பார்த்து விட்டால், அதே நடனத்தை வீட்டில் வந்து ஆடிக் காண்பிப்பாளாம் லியோ. அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளை அந்தச் சுற்று வட்டாரத்தில் எங்குமே கிடையாதாம். கிராமத்தில் எல்லோருமே அவளைச் "சின்னப் பெண்ணே" என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவார்களாம்.

மாலை நான்கு மணிக்கெல்லாம் அன்றைய வேலை முடிந்தது. மலைச் சாதியினரை உற்சாகப் படுத்துவதற்காக அவர்களுக்குச் சிறிதளவு உணவுப் பொருளைத் தினமும் வழங்கும்படி கூறியிருந்தார் என்னுடைய மேலதிகாரி.

தேயிலைத் தூள், சர்க்கரை, பால்பொடி இவற்றை முதல்நாள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தனுப்பினேன். கடைசியாக "லியோ" என்று அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டவுடன் அவள் திகைத்து விட்டாள். ஒருகணம் என்னை வெறுத்துப் பார்த்துவிட்டு, ஒரு கரத்தை இடுப்பில் மடித்து வைத்தபடி, மறு கையை ஆட்டி அவள் நடந்து வரும் அழகைக் கண்டபோது, எனக்கு மணிபுரி நாட்டிய மங்கையரின் நினைவு வநதது. எல்லோருக்கும் கொடுத்ததைப் போல் இரு மடங்கு சர்க்கரையையும் தேயிலையையும் அவளிடம் நீட்டினேன்.

உதட்டைப் பிதுக்கிக் கொண்டே, வேண்டாம் என்று கையசைத்துவிட்டு, அவள் அப்பாவிடம் எதையோ சொல்லிக் கல கலவென்று நகைத்தாள். அவள் பேசிய மொழி எனக்குப் புரியவில்லை."வேலை செய்யாமல் கூலி வாங்கக் கூடாது" எனறு கூறினாளாம் அவள். "அதனால்தான் உனக்கு இரண்டு பங்கு" என்று நான் சொல்லியும் அவள் கேட்கவில்லை. 'சட்'டென்று தன் தகப்பனின் கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டே வந்த வழியில் திரும்பினாள்.

மறுநாள் அவள் வருவாளோ, வர மாட்டாளோ என்ற கவலை எனக்கு, ஆனால் தவறாது வந்து சேர்ந்தாள். அவளுடைய தகப்பன் நேரே என்னிடம் வந்து, "லியோவையும் இன்றிலிருந்து வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று வேண்டினான். எனக்கு வியப்புத் தாங்க முடிய வில்லை. "பாவம்! விளையாட்டுப் பெண்ணை ஏன் தொந்தரவு செய்கிறாய்?" என்றேன்.

"நானா தொந்தரவு செய்கிறேன்? வீட்டுக்குப் போனதிலிருந்து இவள் தொந்தரவைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. பிடிவாதம் பிடித்து ரகளை செய்து விட்டாள்."

லியோவின் பெயரையும் பட்டியலில் எழுதிக் கொண்டேன். அவள் வேலை செய்வதைப் பார்த்து அத்தனை கிராம வாசிகளும் ஆச்சரியப்பட்டார்கள்.

அன்றைக்குச் சாயங்காலம் எல்லோருக்கும் ரொட்டித் துண்டுகள் கொடுத்தனுப்பிய நான் அவளுக்கு மட்டும் கொடுக்கவில்லை. முதல் நாள் என்னை அலட்சியம் செய்தவளை, சீண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைத்தேன். எல்லோருக்கும் கொடுத்து முடிக்கும் வரையில் ஒரு ஓரமாக நின்றுகொண்டு இருந்தவள், கடைசியாக வந்து என் எதிரில் நின்றாள். மொழி தெரியாத படியினால், 'உனக்கு இன்றைக்குக் கிடையாது' என்பது போல் குறும்புச் சிரிப்புச் சிரித்தேன். ஏக்கத்துடன் ஒருகணம் என்னைப் பார்த்துவிட்டு, வேகமாகத் திரும்பி நடந்தாள்.

"லியோ!...ஏ,லியோ!...ஏ, லியோ!"

திரும்பிப் பார்த்தாள்,வரச்சொல்லித் தலையசைத்தேன். தலையைக்குனிந்து கொண்டே என்னிடம் வந்தாள்.

"இந்தா!"- ஒரு முழு ரொட்டியை நான் அவளிடம் நீட்டியபோது அவள் கரங்களும் நீண்டன. வாங்கிக் கொண்டு நிதானமாகத் தன் முகத்தை உயர்த்தி என்னை நோக்கினாள். முதல் நாள் சிரித்த ஏளனச் சிரிப்பு இப்போது அவளிடம் இல்லை. கண்களின் ஓரங்களில் இரு நீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன. 'இந்த அன்புக்காகத்தானே நான் உங்களிடம் கூலி வேலை செய்ய வந்தேன்?' என்று அவள் தன் கண்களால் கூறுகிறாளா?

காட்டுப் புதர்களின் மத்தியில் அவள் திரும்பி மறையப் போகும் சமயத்தில், என்னை ஒரு முறை நின்று பார்த்துவிட்டு வேகமாக நடந்தாள். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு இன்ப நாளாக இருந்தது எனக்கு.

ஆறு மாதங்கள் சென்றன.எங்கள் பட்டாளம் முன்னேறவும் இல்லை; பின் வாங்கவும் இல்லை. இன்னும் ஓரிரண்டு வருடங்களுக்கு நாங்கள் அதே இடத்தில் தங்கியிருக்க நேரிடும் என்று படைத் தலைவர்கள் பேசிக்கொண்டார்கள். நானும் லியோவும் பழகிய விதத்திலும் முன்னேற்றமும் இல்லை; பின் வாங்குதலும் இல்லை. எப்போதாவது என்னைப் பார்த்து அவள் ஒரு புன்சிரிப்பை உதிர்ப்பாள். ஓரிரண்டு வார்த்தைகள் பேசுவாள். அன்றைக்குப் பொழுது அபூர்வப் பொழுதாகக் கழிந்ததாக நினைத்துக் கொள்வேன். சரியாக ஓராண்டு முடிவதற்குள், 'லியோ' ஓரளவு ஆங்கிலமும் இந்தியும் பேசக் கற்றுக்கொண்டாள். பட்டாளத்தில் இந்த இரு மொழிகளும் மணிப் பிரவாளத்தில் அடிபட்டன.

ஒரு நாள் லியோவும் அவள் தகப்பன் ஷியானும் வேலைக்கு வரவில்லை. ஷியானுக்கு உடல் நலமில்லையாம். மறுநாள் அதற்கு மறுநாளும் கூட அவர்கள் வரவில்லை. எழு வாரமாகியும் ஷியானுக்கு உடம்பு தேறவில்லையாம். லியோவின் தம்பியைத் தனியே அழைத்து, "உன் அக்காள் ஏன் வருவதில்லை?" என்று கேட்டேன். தகப்பனாருக்கு உதவி செய்வதற்காக அவள் வீட்டில் தங்கிவிட்டாளாம். அந்தப் பையனிடம் அவர்களுக்காக உயர்தரமான தேயிலையும் பால் பொடியும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினேன்.

எங்கள் முகாமிலிருந்து நான்கு மைல் தூரத்தில் அவர்கள் கிராமம் இருந்தது. எப்படியாவது அங்கே போய் அவர்களைப் பார்க்க வேண்டு மென்று எனக்கு ஆவல். ஆனால் அந்தப்பகுதியின் கிராமங்களைப் பற்றிப் பட்டாளத்தார்களிடையே பயங்கரமான பல கதைகள் உலவின. அந்த மலைச்சாதியார்கள் தங்கள் மத்தியில் அன்னியர்கள் யாரும் நடமாடுவதை விரும்புவதில்லையாம். அந்த மலைச்சாதியார் ஆண்-பெண் விகற்பமின்றி மிகவும் சரளமாகப் பழகக் கூடியவர்களாதலால், அதனைத் தவறாகப் புரிநது கொண்ட சில அன்னியர்கள் தங்கள் உயிரையே அவர்கள் மத்தியில் பலி கொடுத்திருக்கிறார்களாம். "வழக்கமாக வெளியாட்கள் அங்கே போவதில்லை; அப்படிப் போனவர்கள் உயிருடன் திரும்பி வந்ததில்லை" என்று கூறிப் புரளியைக் கிளப்பி விட்டார்கள்.

'என்ன வந்தாலும் சரி; போயே தீருவது' என்ற முடிவுக்கு வந்த நான், லியோவின் தம்பியிடம் என் எண்ணத்தைக்கூறினேன். " நாளைக்கு மறுநாள் எங்கள் முகாமை விட்டு வெளியில் செல்வதற்கு அநுமதி பெற்றிருக்கிறேன். வேலையும் கிடையாது. உங்கள் கிராமத்துக்கு வரலாமா? உன் அப்பாவைக் கேட்டு வா" என்று சொல்லி அனுப்பினேன்.

லியோவின் தம்பியின் பெயர் லம்குப்பா. குறித்த நாளில் அவனே என்னை அழைத்துக்கொண்டு போக வந்துவிட்டான். எதற்கும் முன் யோசனையுடன் தற்காப்புக்காக என் கைத் துப்பாக்கியோடு கிளம்பினேன். இறக்கமும், ஏற்றமும், வளைவுகளும் கொண்ட மலைக் காட்டுப் பாதை, சில இடங்களில் விசாலமாகவும், சில இடங்களில் குறுகலாகவும் இருந்தது. சில இடங்களில் குன்றுகளின் வழியாகவும் புதர்களுக்குள்ளும் நாங்கள் நடந்து சென்றோம்.

மூன்று மைல்கள் கடந்த பின்னர் ஒரு பெரிய அருவிக்கரை யோரத்துக்கு நாங்கள் வந்தோம். குன்றின் உச்சியைப் பிளந்துகொண்டு குதித்தோடிப் பாய்ந்தது அருவி. அதிலிருந்து புகை மண்டலம் போல் எழுந்த நீர்த்துளிகளில் சூரியனின் கதிர் ஏழு வர்ணங்களில் வானவில்லாய்ப் பிரதிபலித்தது. மெய்மறந்து நின்றுவிட்டேன். முரட்டுப் பட்டாளத்தானாகிய என்னைக்கூட அந்த இடம் கவிஞனாக மாற்றிவிடும்போல் தோன்றியது.

"அதோ!"என்று மலையடிவாரத்தை நோக்கிச் சுட்டிக் காட்டினான் லம்குப்பா. அங்கே கூரை குடிசைகளின் சிறு கூட்டம் ஒன்று தெரிந்தது.வட்டக் குடைகளை நட்டு வைத்தாற்போல் சுமார் இருபது வீடுகள். தரையிலிருந்து வீடுகள் எழும்பாமல், பரண்களைப்போல் மரக் கால்களின் மேல் குத்துக் குத்தாக நின்றன. பையனிடம் விசாரித்தேன். காட்டு மிருகங்கள் இரவு வேளைகளில் நடமாடக் கூடுமாதலால், உயரத்தில் மரத்தளங்கள் போட்டு, குடிசைகள் கட்டி வசிப்பது அவரகள் வழக்கம்.

"ஓஹோ!..ஓஹோ!... என்று ஒரு தேன் குரல் மலைச்சரிவிலிருந்து அபூர்வ ராகம்போல் ஒலிக்கத் தொடங்கியது. உற்றுப் பார்த்தேன். கோவேறு கழுதையின் மேல் உட்கார்ந்துகொண்டு உல்லாசமாக ஆடி அசைந்த வண்ணம் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தாள் லியோ. அவளுடைய தம்பி கைகொட்டிச் சிரித்தான். "பாருங்கள், அந்தச் சின்னப் பெண் உங்களைப் புது மாப்பிள்ளையாக்கி விட்டாள்!" என்று கேலி செய்தான். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இதற்குள் லியோ எங்கள் அருகில் நெருங்கி, தான் கழுதையிலிருந்து இறங்கிவிட்டு, என்னை ஏறிக்கொள்ளச் செய்தாள்.

"பார்த்தீர்களா! பர்த்தீர்களா! புது மாப்பிள்ளையை வரவேற்பதற்குத்தான் நாங்கள் கழுதையுடன் ஊர் எல்லைக்கு வருவோம்" என்று கூறினான் லம்குப்பா. எனக்குப் பெருமை தாங்கவில்லை. "உண்மையா லியோ?"என்று கேட்டேன். அவள் முகம் நாணத்தால் சிவந்தது. ஓரக் கண்களால் அவள் என்னை நோக்கிவிட்டுக் கழுதையைப் பிடித்துக்கொண்டு வேகமாய் நடந்தாள்.

லியோவின் வீட்டு மரப் படிகளில் அவள் தகப்பனும் தாயாரும் என்னை எதிபார்த்துக் கொண்டிருந்தார்கள். "சாஹேப், உங்களுக்கு என்மீது இத்தனை பிரியமா?" என்று கேட்டான் ஷியான். அவன் மனைவி, " நீங்கள் வருவதாய்க் கேள்விப்பட்டவுடனேயே இவருக்கு உடம்பு குணமாகிவிட்டது" என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

விருந்து மிகவும் பலமாக இருந்தது. அரிசியிலிருந்து இறக்கிய ஒருவகைப் பானத்தைக் கிண்ணத்தில் ஊற்றிக் கொடுத்தார்கள். பச்சை மூங்கில் குழாயில் வேகவைத்த ஒரு வகைச் சர்க்கரைப் பொங்கலைப் பரிமாறினார்கள். அதற்குப் பெயர் மூங்கில் சோறாம். இன்னும் பலவகை உணவுகள் என் எதிரில் வந்தன. முடிந்தவரையில் ஒரு கை பார்த்தேன். லியோவின் வீட்டு முதல் விருந்தல்லவா?

சாப்பாட்டுக்குப் பிறகு சிறிது நேரம் ஷியானுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, விடை பெற்றுக்கொண்டேன். "இரண்டுநாள் கழித்து வழக்கம்போல் நானும் லியோவும் வேலைக்கு வருகிறோம்" என்று ஷியான் என்னிடம் கூறி "அம்மா! சின்னப் பெண்ணே! விருந்தாளியை வழியனுப்பிவிட்டு வா" என்றான் லியோவிடம்

தன்னை நன்றாகச் சீவி சிங்காரித்துக் கொண்டு என்னுடன் கிளம்பினாள் லியோ. தலையைச் சுற்றியிருந்த பின்னல் முழுவதும் ஒரே மலர் மயமாக விளங்கியது. இளம் பச்சை 'சில்க்'கில் மார்புத் துண்டும், பச்சை லுங்கியுமாக வெளியில் வந்தாள். மணிப்புரிக் கடைகளில் அவள் அப்பா வாங்கிக் கொடுத்த கழுத்தணிகளும் வளையல்களும் அவள் அழகுக்கு அழகு செய்தன. கிராமத்தின் எல்லை வரையில் என்னைக் கழுதைமீதேற்றிவிட்டு, தான் மட்டும் நடந்து வந்தவள், பிறகு எனக்கு முன்னால் ஜம்மென்று ஏறி உட்கார்ந்துகொண்டாள். அருவிக் கரை அருகில் நெருங்க நெருங்க அவள் உள்ளமும் நெகிழ்ந்து கொடுத்து உருகத் தொடங்கிவிட்டதோ என்னவோ! மிக மெல்லிய இனிய குரலில் உல்லாசமாகப் பாட்டிசைக்க முற்பட்டாள்.

என் மனம் அதற்கு முன்பாகவே பாகாய்க் கசிந்து சொட்டத் தொடங்கியது. கழுதையின்மேல் எனக்கு முன்னால் அவள் உட்கர்ந்தவுடனேயே அது என்வசம் இல்லை. கோவேறு கழுதை அப்போது செங்குத்தான ஏற்றத்தை கடந்துகொண்டிருந்ததால், அவளை யறியாது அவள் என்னுடைய மார்பின்மீது சாய்ந்து வரவேண்டி யிருந்தது. இதையெல்லாம் அவள் சிறிதேனும் விகற்பமாக நினைத்ததாய்த் தெரியவில்லை. மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருந்தவள் சிறுகச் சிறுகக் குரலை உயர்த்தி வானத்தின் உச்சிக்கு எட்டவிட்டாள். நான் என்னை மறந்தேன். ஏதோ ஓர் இனம் புரியாத உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பதாக எனக்கு எண்ணம்.

அதே நிமிஷத்தில் அவளிடம் என் உள்ளத்தைத் திறந்து காட்டிவிட வேண்டுமென்று தோன்றியது. ஆயிரம் ஆயிரம் சொற்கள் என் தொண்டைவரையிலும் அலை மோதிவிட்டுப் பின்னால் சென்றன.'லியோ! என் உயிருக்குயிரான லியோ! நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது! உன்னைக் கல்யாணம் செய்துகொண்டு உங்கள் கூட்டத்தாருடன் கலந்து விடுகிறேன். அல்லது நீ என் மனைவியாகி, என்னருமைத் தமிழ்நாட்டுக்கு என்னுடன் வந்துவிடு! இரண்டில் நீ எதைச் செய்கிறாய்? முடிவு உன்னுடையது. என்னை மணந்து கொள்வதற்கு உனகுப் பரிபூரண சம்மதமா?'

லியோவின் பாட்டு 'டக்'கென்று நின்றவுடன், "லியோ!" என்று பதற்றத்துடன் அவளது தோள்களைப் பற்றினேன். சட்டென்று திரும்பி என் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய பார்வையில் இத்தனை கொடூரமா? நான் சொல்ல நினைத்த வார்த்தைகள் எனக்குச் சதி செய்துவிட்டன. தோளின் பிடியைப் பயந்துபோய் இறுக்கமாக்கிக்கொண்டே,'லியோ!...லியோ..." என்று தடுமாறிக்கொண்டே இருந்தேன்.

அவள் என்ன நினைத்தாளோ? கழுதை மேலிருந்தவள் கீழே குதித்துக் காளிதேவியாக மாறிவிட்டாள். கண்களை உருட்டி விழித்துக்கொண்டு, தலையில் சுற்றியிருந்த மலர் மாலையைப் பிய்த்து என் முகத்தில் வீசினாள். "நாட்டு மனிதர்கள் கேவலமானவர்கள்; சுயநலக்காரர்கள்; மரியாதை கெட்டவர்கள்" என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டிநாள்.

என்னுடைய வாய் அடைத்துக்கொண்டது. 'தப்பாக நினக்காதே! என்னை மணக்க உனக்குச் சம்மதமா என்றுதான் கேட்கிறேன். பிறகு ஏன் எனக்குப் புது மாப்பிள்ளைக் குச் செய்யும் உபசாரமெல்லாம் செய்தீர்கள்? 'என்று கேட்க வேண்டுமென்று என் மனம் துடித்தது. ஆனால் மனத்தின் துடிப்புக்கு வாய் ஒத்துழைக்கவில்லை. பயத்தால் ஏதேதோ உளறினேன். நடந்தது அவ்வளவுதான். கழுதையின் மேலிருந்த என்னைத்தன் கரங்களால் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு, அதைத் திருப்பிக்கொண்டு வந்தவழியே நடந்தாள் லியோ. சோர்ந்துபோய்க் கைத் துப்பாக்கியை இடுப்பிலிருந்து எடுத்துக்கொண்டு முகாமை நோக்கி நடந்தேன்.

இரண்டு நாள் கழித்து அவள் தந்தையும் தம்பியும் மாத்திரமே வேலைக்கு வந்தார்கள். லியோ என்னை ஏமாற்றி விட்டாள்.' நாளை வருவாள், மறுநாள் வருவாள்' என்று மேலும் ஒரு வாரம் பொறுத்திருந்தேன்; வரவில்லை. மெல்ல அவளுடைய தம்பியை அழைத்து, லியோவிடம் தனியாகக் காரணம் கேட்டு வரச் சொன்னேன். அடுத்த நாள் காலையில் அவன் என்னிடம் வந்து, "அவளுக்கு உங்கள்மேல் கோபமாம்; அதனால் தான் வரவில்லையாம்" என்றான். ஆனால் தினந்தோறும் அவள் என்னைப் பற்றி அவனிடம் கேட்கத் தவறுவதில்லையாம். அந்தக்காலத்துக் கதைத் தலைவனுக்குத் தூது சொல்லத் தோழி கிடைத்ததுபோல், எனக்கு அவள் தம்பியான தோழன் கிடைத்தான். அவனிடம் என் அந்தஸ்தையும் வெட்கத்தையும் விட்டு என் மன நிலையை விளக்கினேன்.

மாலை வேளைகளில் நான் காட்டருவிக்குக் குளிக்கப் போவதாகவும், மறுநாளும் போகக் கூடுமென்றும் அந்தப் பையனிடம் சொல்லிவைத்தேன். என் ஆவல் வீண்போகவில்லை. மறுநாள் மாலை அங்கே லியோ வந்திருந்தாள். இருவரும் பேசிக்கொள்ளாமலே பாறைகளில் உட்கார்ந்திருந்தோம். பிறகு, நானே எனக்குள் பேசிக்கொள்வதுபோல், அன்றைக்கு அவளிடம் சொல்லத் தயங்கிய விஷயங்களை யெல்லாம் சொன்னேன்.

லியோவின் அகன்ற கண்களில் தண்ணீர் துளும்பியது. "நான் தான் தப்பாக நினைத்துக்கொண்டேன். எங்களை மனிதர்களாக மதிக்காமல் விளையாட்டுப் பொம்மைகளாக நகரத்து மனிதர்கள் சிலர் நினைப்பதுண்டாம். நீங்கள்கூட அப்படித்தானோ என்று நினைத்துவிட்டேன். அதனால்தான் உங்கள்மீது வெறுப்பு ஏற்பட்டது." அன்றிலிருந்து வாரம் ஒருமுறையாவது நாங்கள் அந்த அருவிக்கரையில் சந்திப்பது வழக்கம். வாரந் தவறாமல் மனக்கோட்டைகள் பெரிதாகி வளர்ந்துகொண்டே வந்தன. லியோவும் நானும் சண்டை முடிந்தவுடன் திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிட வேண்டுமென்று எங்களுக்குள் முடிவு செய்துகொண்டோம். தகப்பனும் தாயாரும் தன்னை முழு மனதோடு என்னுடன் அனுப்புவார்கள் என்று அவள் கூறினாள். இடையிலிருந்த மற்றத் தொல்லைகளை நாங்கள் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. ஒருவரை யொருவர் கண்டுவிட்டால் போதும். பயங்கரமான உலகப்போர் என்ற ஒன்று நடந்துகொண்டிருப்பதையே நாங்கள் மறந்துவிடுவோம்.

ஆனால் உலகப்போர் எங்களை மறக்கவில்லை. எந்த யுத்தம் எங்களை ஒன்று சேர்த்ததோ, அதே யுத்தம் திடீரென்று எங்களைப் பிரிக்கவும் சதி செய்தது. நெடுநாட்கள் எங்களுக்கெதிராகப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த ஜப்பானியர்கள், பெரும்படையுடன் உக்கிரமாக எங்களை இருபுரமும் வளைத்துக்கொண்டு தாக்கினார்கள். கோஹிமா, மணிபுரி முதலிய இடங்களில் பலமான சண்டை. மேலிடத் திலிருந்து எங்களை மணிபுரிக்குப் பின்வாங்கச் சொல்லி உத்தரவு வந்துவிட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எங்களோடு நெருங்கிப் பழகிய மலைச்சாதியினர் எங்கள் நிலை கண்டு தேம்பித் தேம்பி அழுதனர். எங்களைச் சுற்றியிருந்த கூட்டத்தில் லியோவை மட்டிலும் காணோம். ஷியானுக்கும் லியோவின் தம்பிக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு, அருவிக்கரையை நோக்கி கண்மண் தெரியாமல் ஓடினேன்.

நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் மறைவிடத்தில் சோகமே உருவாக உட்கார்ந்துகொண்டிருந்தாள் லியோ. வீட்டிலிருந்து எனக்காகத் தேநீர் தயாரித்துகொண்டு வந்திருந்தாள். சுள்ளிக் குச்சிகளைப் பொறுக்கிவைத்து நெருப்புப் பற்றவைத்து அதைச் சூடாக்கினாள். முதலில் தான் ஒருவாய் குடித்துவிட்டு, என்னிடம் கிண்ணத்தை நீட்டினாள். ஒன்றுமே பேசாமல் நான் அதை மறுத்துத் தலையாட்டினேன்.

லியோவின் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. "இதை வேண்டாமென்று சொல்லாதீர்கள்; எங்கள் சாதியில் கணவனுக்கு மனைவி செய்யும் பணிவிடை இது" என்றுகூறி, கிண்ணத்தை என் வாயருகில் கொண்டுவந்தாள். பிறகு என்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து என்னிடம் நீட்டினாள்."உங்களை வழியனுப்பியவுடன் நான் இந்த அருவியில் குதிக்கப் போகிறேன்" என்று அவள் கூறியதைக் கேட்டவுடன் ஒருகணம் தவி்த்தேன். எனக்குக் கிலி பிடித்துக்கொண்டது.

"எப்படியும் திரும்பி வநது உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன். எனக்காகக் காத்திரு" என்று பல முறைகள் சொல்லி அவளிடம் கெஞ்சிய பிறகுதான் அவளுடைய மனத்தை ஒருவாறு என்னால் மாற்றுவதற்கு முடிந்தது.

"கட்டாயம் வருவீர்களா?" என்று பன்னிப் பன்னிக் கேட்டாள்.

"கட்டாயம் வருவேன்"

ஆறுமாதங்கள் சென்றன. கால் நடையாகவே மணிபுரிக்குப் பின்வாங்கிய நாங்கள், பிறகு சண்டை செய்து ஜப்பானியரைப் பர்மாவுக்குள் விரட்டிக்கொண்டே முன்னேறினோம். டிடிம் என்ற இடத்தில்தான் எங்கள் பழைய முகாம் இருந்தது. அதற்கு அடுத்தாற்போல்தான் லியோ வசித்த கிராமம்.

டிடிமுக்கு வந்தவுடன் நான் எதிரே திரண்டிருந்த அபாயத்தைக் கண்டு சிறிதும் அஞ்சவில்லை.மூர்க்கத்தனமாக என்னோடிருந்த வீரர்களையும் சேர்த்துக்கொண்டு கிராமத்தை நோக்கி ஓடினேன். ஜப்பானியர் சிலர் அங்கே பதுங்கியிருப்பதாகத் தவல் கிடைத்தது. அருவிக்கரையிலிருந்து கிராமத்தை நோக்கினோம். பகீரென்று எங்கள் அனைவருக்கும் நெஞ்சு பற்றி எரிந்தது. வீடுகள் யாவும் தீக்கிரையாகி வெந்து கொண்டிருந்தன. ஒரே அழுகையும், ஓலமும், கூக்குரலும் ஊளையுமாக ஒலித்தன.மனிதர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடுவதைக் கண்டேன்.

என் கால்களுக்கு வெறி பிடித்து விட்டது. எனக்குப் பின்னால் என் நண்பர்கள் ஓடி வந்தார்கள்.ஜப்பானியர்கள சிலர் தலைதெறிக்க ஓடுவதைக் கண்டேன். கண்களில் பட்டவர்களைச் சுட்டு வீழ்த்திக் கொண்டு அவர்கள் பறந்தார்கள். லியோவின் வீடும் அதையடுத்த இரு வீடுகளும் இன்னும் நெருப்புக்கு இரையாகாமல் தப்பி நின்றன. லியோவின் வீட்டிலிருந்து பயங்கரக் கூக்குரல். பலகைக் கதவை ஒரே உதையில் நொறுக்கிக் கொண்டு உள்ளே பாய்ந்தேன். லியோவின் தந்தை ஷியான் உயிரற்ற சவமாக ஒருபுறம் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். தாயாருக்கு எதிரில் ஒரு ஜப்பானியச் சிப்பாய் துப்பாக்கியும் கையுமாக நின்று கொண்டிருந்தான். ஆளுக்கொரு புறமாக இரண்டு ஜப்பானிய வெறியர்கள் என்னருமை லியோவைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கண்களில் மிருக வெறியும், உடலில் குடிவெறியும் ஏறியிருந்தன. முகத்தில் கத்திமுனையால் குத்தி அவள் கூக்குரலை அடக்கப் பார்த்தனர். என்னைக் கவனிக்கக் கூட அவர்களுக்கு நேரமில்லை.

நான் எப்படி அந்த மூன்று குள்ளையர்களையும் ஒருவனாக நின்று கொன்று தீர்த்தேனென்று எனக்குத் தெரியாது. எனக்குள்ளே இருந்த லியோவின் உணர்ச்சி அவர்களை அப்படிப் பழி தீர்த்துக் கொண்டது. ஒரு மரத்தூணுக்குப் பின்புறம் என்னை மறைத்துக்கொண்டு துப்பாக்கியில் குண்டுகள் தீருமட்டு்ம் அவர்களைச் சுட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் செத்து விழுந்த பிறகும் சுட்டேன்.

"சிங்கா பாபு! சிங்கா பாபு!" என்று அலறிக்கொண்டே என் கால்களில் விழுந்து கட்டிக்கொண்டாள் லியோ. முகமெங்கும் ஒரே ரத்தக்கறை. கத்தி முனைகள் இரண்டு மூன்று இடங்களில் ஆழமாகக் கீறியிருந்தன. பயத்தால் அவளால் எதுவுமே பேச முடியவில்லை. என்னைக் கண்ட ஆனந்தம்கூட அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும்.

அவள் தாயாரும் நானுமாக அவளுக்கு முதற்சிகிச்சைகள் செய்தோம். "வந்துவிட்டீர்கள், பாபு! வந்துவிட்டீர்கள்! நீங்கள் என் தெய்வம்! என் தெய்வம்!" என்று அவள் மெலிந்த குரலில் முணு முணுத்தாள். என்னைக் கண்டு புன்முறுவல் பூக்க முயற்சி செய்தாள். என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

இந்த இன்பமெல்லாம் கால் மணிநேரமே நிலைத்திருந்தது. எங்கள் படைத்தலைவரும் சிப்பாய்களும் அந்த வீட்டருகே வந்தவர்கள் என்னைக் கண்டுவிட்டார்கள். "இது என்ன கூத்து? புறப்படு, சிங்காரம்" என்று அலறினார் தலைவர். எனக்கு அவரிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. லியோ மெல்லத் தன்னுடைய தலையை வேறு பக்கமாக நகர்த்திக்கொண்டாள்.

"இதோ, அரைமணிநேரத்தில் வந்துவிடுகிறேன். முன்னால் போய்க்கொண்டிருங்கள்" -நான் கெஞ்சினேன்.

"டேய்!" என்று அடுத்த சிப்பாய்ப் பக்கம் திரும்பினார் அவர். "அவன் வருகிறானா என்று கேள். இல்லாவிட்டால் இதே இடத்தில் அவனைச் சுட்டுத் தள்ளிவிட்டுப் புறப்படு!" என்று உத்தரவு போட்டார். லியோ நடுநடுங்கிப் போய் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டாள். "போய் வாருங்கள், பாபு! என்னை மட்டும் மறந்துவிடாதீர்கள். திரும்பி வந்து என்னை அழைத்துப் போங்கள்!".

படுகளத்தில் ஓலமிட்டழுவதற்கு நேரமேது? லியோவின் கண்ணீரும் ரத்தமும் படிந்திருந்தன என் விரல்களில். உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலையில் அவள் இல்லை. என்றாலும் அக்கம் பகத்துக் காடுகளில் எதிரிகள் ஒளிந்திருந்ததால் திரும்பவும் அங்கே வந்து என் அருமை லியோவை.....

என்னுடைய பட்டாளத்து நண்பன் ஒருவன் என் கையைப் பிடித்து வெடுக்கென்று இழுத்து வெளியே தள்ளினான். இன்னும் ஒரு நிமிஷம் என்னால் அவர்களுக்குத் தாமதமானால், என்னையே படைத் தலைவரின் உத்தரவுக்கு அஞ்சிச் சுட்டுவீழ்த்தி யிருப்பார்கள். நான் அவர்களுடன் நடைப் பிணம்போல் உனர்விழந்து நடந்தேன்.

சண்டை ஓய்ந்த பின்னர் சரியாக ஓராண்டு சென்றவுடன் எனக்குப் பட்டாளத்திலிருந்து விலகிக்கொள்வதற்கு அநுமதி தந்துவிட்டார்கள். இனி நான் இந்திய -பர்மா எல்லைக்குச் செல்ல வேண்டும். போவதற்கு முன்பு எனக்குப் பிடித்த கதாசிரியரிடம் என்னுடைய கதையைச் சொல்லிவிட்டுப் போக வேண்டுமென்பதற்காகவே இதை உங்களூக்கு எழுதுகிறேன்.

முடிவுரை:

சிங்காரவேலுவின் முதல் கடிதத்திலிருந்த முக்காலே மூன்றுவீசம் கதையும் இவ்வளவுதான். இவ்வளவு நாட்களாக இதை வெளியிடாமலிருந்ததற்குக் காரணம், சிங்காரவேலு லியோவைத் தேடிச் சென்ற முயற்சியின் பலன் என்ன என்று எனக்குத் தெரியாமல் இருந்ததுதான்.

நான்கு தினங்களுக்கு முன்பு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தச் சிறு கடிதத்தை இங்கே தருகிறேன்:

அன்புள்ள ஐயா,

மணிப்புரி வரையிலும் சென்று, அங்கிருந்து டிடிமுக்கு வாரச்சந்தை கூடுவதற்காகச் செல்லும் வியாபாரிகள் கூட்டத்தோடு லியோவின் கிராமத்துக்குப் போனேன். குதிரைகளிலும் மாடுகளிலும் கோவேறு கழுதைகளிலும் சாமான்களை ஏற்றிச் செல்லும் நாடோடி வியாபாரிகளின் கூட்டம் அது. அங்கே நான் போய்ச் சேர்வதற்குப் பட்ட கஷ்டங்களை விவரித்துத் தங்களுக்குத் துன்பம் கொடுக்க விரும்பவில்லை. அவ்வளவு கஷ்டங்களும் அவள் முகத்தை நான் ஒருமுறை கண்களால் கண்டிருந்தால் பஞ்சாகப் பறந்திருக்கும்.

ஆனால் என்னுடைய லியோ இப்போது அங்கே இல்லை. தினந்தோறும் என் வரவை எதிபார்த்து அருவிக்கரைக்கு வந்துகொண்டிருந்தாளாம். வேறு யாரையும் மணந்து கொள்வதற்கு அவள் மறுத்துவிட்டாளாம்.

கடைசியில் என்னைத் தேடிக்கொண்டு அவள் தமிழ்நாட்டுக்கே புறப்பட்டு விட்டாளாம். அவளுக்கு மொழி தெரியாது: அவளிடம் பணம் இல்லை: நம் நாட்டு மனிதர்களின் பழக்கவழக்கத்திற்கும் அவள் வாழ்க்கைக்கும் வெகுதூரம். மனிதர்களை எளிதில் நம்பிவிடுவாள்.

என்னைத் தேடிக்கொண்டு புறப்பட்டுவிட்ட லியோவை நான் எங்கே எப்படித் தேடிக்கண்டுபிடிப்பது? நல்ல அழகி; நல்ல இளமை; புறப்படும்போது மஞ்சள்பட்டு மேல்துணியும், பச்சைநிற லுங்கியும் உடுத்திக்கொண்டிருந்தாளாம். தலையிலே காட்டு மலர்கள். கைகளில் தந்த வளையல்கள். அவள் என்னிடம் வந்து சேர்வாளா? நாங்கள் இந்தப் பிறவியில் கணவனும் மனைவியுமாக ஒன்றாய் வாழ்வோமா?

எனக்குப் பதில் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள்.

உங்களன்புள்ள, சிங்காரவேலு.


நன்றி.
அகிலன் சிறுகதைகள்.