பச்சை மண்ணில்
பாத்திரங்கள் செய்து,
இச்சையோடு விளையாடும்
கூட்டாஞ்சோறு!
* கட்டங்களுக்குள்
நொண்டியடித்து,
களிப்போடு விளையாடும்
சில்லு!
-
* வண்ண வண்ண காகிதங்களால்
அலங்காரம் செய்து,
ஆசை மனங்களைப் போல்
ஆகாயத்தில் பறக்கவிடும்
பட்டம்!
-
* எட்டுத் திக்கும்
சிட்டாய் பறக்கும்
கோட்டிப் புல்!
-
* அறிவை விருத்தி செய்து
ஆனந்தத்தையளிக்கும்
ஆடு புலி ஆட்டம்!
-
* கண்ணுக்கும், கழுத்துக்கும்,
கைகளுக்கும் உடற்பயிற்சியாய்
அஞ்சாங்கல்!
-
* இந்தக் குழியை அள்ளினால்
இத்தனை காய்கள் கிடைக்குமென்று,
வாழ்வின் திட்டமிடுதலை
வலியுறுத்தும் பல்லாங்குழி!
-
* வேர்வையை வெளியேற்றி,
தசை நார்களை வலுப்படுத்தும்
கோலாட்டம், கும்மி, சடுகுடு!
-
* இந்த அற்புத
பாரம்பரிய விளையாட்டுகளை
மறந்து விட்டு,
கிழித்துப் போட்ட புத்தகங்களாய்
இன்றைய குழந்தைகள்!
-
* மாற்றுவோம்…
குழந்தைகளை மட்டுமல்ல
பாட திட்டங்களையும்!
-
————————
— தேன் தமிழன்,நெய்வேலி.
நன்றி: வாரமலர்