“தந்தாய்!” எனநான் தந்தையை அழைக்கையில்
தரிசனம் தருபவள் ‘தாய்’ காண்மின்!
“குழந்தாய்!” என்றொரு மழலையைக் கொஞ்சிடில்
குறுநகை புரிபவள் ‘தாய்’ காண்மின்!

“நினைத்தாய்!” எனநான் தலைவியை வாழ்த்திட,
நேரில் நிற்பவள் ‘தாய்’ காண்மின்!
“இனித்தாய்!” என்றெனை இல்லாள் புகழ்ந்திட,
இருப்பவள் அங்கும் ‘தாய்’ காண்மின்!

“எழுதாய்!” என்றொரு கவிஞனை விழைந்திட,
எட்டிப் பார்ப்பவள் ‘தாய்’ காண்மின்!
“ஏனழுதாய்?” எனப் பரிவொடு வினவிட,
இரக்கம் சுரப்பவள் ‘தாய்’ காண்மின்!

விருந்‘தாய்’ வந்தோர்க்(கு) “அருந்தாய்!” என்(று)ஊண்
விளம்பிட வருவது ‘தாய்’ காண்மின்!
“திருந்தாய்!” எனச் சிறு பிழைகளைக் கனிவொடு
திருத்திட முயல்வதும் ‘தாய்’ காண்மின்!

“பொருதாய்!” எனுமோர் கொற்றவன் ஆணையில்
போர்ப்பறை முழக்கம் ‘தாய்’ காண்மின்!
“பொருதாய்!” எனுங்கால், அகிம்சை நெறிதனைப்
போதிப்பவளும் ‘தாய்’ காண்மின்!

பிறவியின் வித்‘தாய்’, பெறற்கரும் முத்‘தாய்’
பெரும்புகழ் வகிப்பவள் ‘தாய்’ காண்மின்!
பெண்மையின் சொத்‘தாய்’ பிள்ளைமேல் பித்‘தாய்’,
பேரருள் புரிபவள் ‘தாய்’ காண்மின்!

எழுத்‘தாய்’ வந்(து), அதில் இனி‘தாய்’ ஒலிக்கும்
இலக்கிய நாதம் ‘தாய்’ காண்மின்!
எண்ணறு சொற்களின் புணர்ச்சி வனப்பினில்
இலங்குபவள் தமிழ்த் ‘தாய்’ காண்மின்!

- தொ.சூசைமிக்கேல்.கீற்று :];: