அன்பு அன்னைக்கு,

வஞ்சமில்லாதொரு மகன் இவனென்றே
புஞ்சைநிலம் விற்றுப் பொருள்பணமாக்கி
பொறியியல் படிப்பது சேர்க்கவழியின்றி,
மொழியியல் சேர்த்தீர் மகிழ்மனம் கொண்டேன்...

சென்று பயின்றேன் சீர்மிகுதமிழை,
நன்கு அறிந்தேன்நா நுனிமொழியை,
சொந்த மொழியினில் பணியேதுமின்றி,
வந்த மொழிபேசியவ் வேலையைப் பெற்றேன்....

பெரியநிறுவனம் பெரும்பொருள் சேர்த்தே,
குறையச் சம்பளம் நானுனக்குவந்தேன்,
கேளிக்கையால் சேர்த்தஎம் பொருளோ -ஓட்டை
வாளியிற் சேர்ந்த கங்கையின்நீரே...

வீட்டுமனையொன்றிவண் கண்டபின்னே,
வீட்டுப்பணியதை நீ துறந்தறுத்து,
இங்குவருவாய் எழில்மிகு ஊரில் ,
தங்கிவருவாயில் இறுதிக்கழிப்பாய்...

என்று கடிதம் எழுதிமுடித்து,
சென்று அஞ்சலின் வாயினிலிட்டு,
உதிரநீர்மையை கண்களிலகற்றி - கத்திப்
பதுமைவிற்றேன் தெருவோரத் தினிலே.....