ஓபன் மென்டார் (www.openmentor.net) என்பது புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை. எந்தப் பாடத்தையும், எந்த நேரத்திலும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தச் செலவுமே இல்லாமல் கற்கலாம்; அதே போல் கற்பிக்கலாம். 'யாவர்க்கும் இலவசக் கல்வி' என்பதே இந்த இயக்கத்தின் இலக்கு. இதனை சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் சென்னை ஆன்லைனும் இணைந்து வழங்குகின்றன.

இந்த இணையவழி வகுப்புகளை இரு பள்ளிகளிலும் உள்ள 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் திரை முன் அமர்ந்து கவனித்தார்கள். மாணவர்கள், ஆசிரியருடன் எழுத்து மூலமும் குரல் வழியாகவும் உரையாடினார்கள். கேள்வி கேட்டுப் பதில் பெற்றார்கள். சேது பாஸ்கரா பள்ளி மாணவர்கள், வெங்கடேஸ்வரா பள்ளியின் ஆசிரியர் பாடம் நடத்துகையில் திரையில் அவரை நேரடியாகப் பார்த்தே கற்றார்கள்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்தினால் பற்பல பயன்கள் விளையும். இருந்த இடத்திலிருந்தே ஆசிரியர் பாடம் நடத்தலாம். அதை மாணவர்களும் இருந்த இடத்திலிருந்தே கவனிக்கலாம். இருவருக்கும் பயணம், நேரம், செலவு,அலைச்சல் மிச்சமாகும்.

இன்னொரு வசதி, ஒரு பள்ளியின் மாணவர்கள், வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைக் கவனிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட துறையில் ஆசிரியர்களின் நிபுணத்துவம், உலகம் முழுக்கப் பயன்படுகிறது. வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் உள்ள ஆசிரியர்களையும் இந்த வகையில் நம் உள்ளூர் மாணவர்களுடன் இணைக்க முடியும். வீடுகளில் இருந்து மாணவர்கள் கற்கும் போது, அவர்களின் பெற்றோரும் இந்த வகுப்புகளைக் கவனிக்க வாய்ப்புண்டு. இதன் மூலம் கல்வியின் வீச்சினை அவர்களும் அறிய முடியும்.

ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்கள், பல உண்டு. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் என்றே பல உண்டு. இத்தகைய பள்ளிகளுக்கு இந்தக் கல்வி முறை, அற்புத வரம் என்றே கொள்ளலாம். அவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இதனால் நிறைய பயன்கள் உண்டு.

வகுப்பறையில் மாணவர்கள் முன்பு நின்று வகுப்பு எடுக்கையில் சில கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் கணினி முன் இருந்து, இணைய வழியில் கல்வி கற்பிக்கையில் மேலும் பல சாத்தியங்கள் உண்டு. ஆசிரியர் குரல் மூலமும் பேசலாம்; கரும்பலகையில் எழுதுவது போலவே, pen tablet என்ற கணிப் பலகையில் எழுதலாம்; ஒலி-ஒளிக் கோப்புகளைத் திரையிட்டுக் காட்டலாம்; பவர் பாய்ன்ட் முறையில் சில வகுப்புகளை நடத்தலாம்; அனிமேஷன், கிராஃபிக்ஸ் காட்சிகளையும் திரையில் காட்டலாம்; பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் விளக்க இந்தக் காட்சி வழிக் கற்பித்தல் பெரிதும் உதவும்.

இ-வகுப்பு இல்லாத நேரத்திலும் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பிப் பதில்களைப் பெறலாம். நல்ல அகலக்கற்றை வசதி இருக்குமானால், மாணவர்களும் ஆசிரியரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தே 'வீடியோ சாட்' மூலம் உரையாட முடியும். அத்தகைய வசதி, எல்லா இடங்களிலும் கிடைக்கும் காலமும் மிக அருகில்தான் உள்ளது.

ஆசிரியர் பயன்படுத்தும் கணினித் திரை, இணையம் வழியாக அனைத்து மாணவர்களின் கணினித் திரையில் தெரியும். அதேபோல், அவர் தன் கணினியில் செய்து காட்டும் அனைத்தும்,மாணவர்களின் கணித் திரையிலும் தெரியும். இது, கிட்டத்தட்ட இணையவழி வகுப்பறை (Virtual Class Room) போன்றதே.

இப்படி எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்ட இந்த இ-கற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களும் பள்ளி - கல்லூரி - பல்கலைக்கழகங்களும் தங்களைத் தகவமைத்துக் கொண்டால் பெரிய கல்விப் புரட்சியே நிகழும் என்பது உறுதி. மாணவர்கள் மட்டுமின்றி, வேலைக்குச் செல்பவர்கள், இல்லத்தரசிகள்,வாழ்நாள் முழுதும் படிப்பவர்கள் எனப் பலரும் இந்தக் கல்வியைப் பெறலாம். ஒவ்வொரு வகையான மாணவர்க்கும் அவர்களுக்கு ஏற்ற விஷயங்கள் சொல்லித் தரப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) மாணவர்கள், Java, C, Oracle, SAP, PHP, டாட் நெட் போன்ற பாடங்களைக் கற்கலாம்; கணக்கியல் மாணவர்கள் Tally, பரஸ்பர நிதி, வரி விதிப்பு, காப்பீடு போன்ற பாடங்களைக் கற்கலாம். பல பாடங்களையும் இங்கு கற்றுத் தருகிறார்கள். ஆங்கிலத்திலும் இந்தியிலும் உரையாடக் கற்கலாம்; லினக்ஸ் இயங்கு தளத்தின் அடிப்படைகள், ·போட்டோஷாப், எக்ஸ்செல், வேர்ட், நேர மேலாண்மை, ஆளுமைத் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றையும் கற்கலாம்; இவை அல்லாமல் உங்களுக்கு ஏதும் புதிய பாடங்களைக் கற்க வேண்டும் என்றால் அது குறித்த உங்கள் ஆர்வத்தினையும் தெரிவிக்கலாம். அதற்கு உரிய ஆசிரியர்கள் கிடைத்ததும் அந்தப் பாடமும் கற்பிக்கப்படும். ஒரே மாணவர் எவ்வளவு வகுப்புகளில் வேண்டுமானாலும் சேர்ந்து பயன் பெறலாம்.

அதே போன்று ஏதேனும் ஒரு துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள், தாங்கள் அறிந்தவற்றைக் கற்றுத் தர வேண்டும் என விரும்பினால், அவர்களும் ஆசிரியர்களாக இதில் பங்கு பெறலாம். புகைப்படக் கலை, சமையல் கலை, தோட்டக் கலை, விவசாயம்.... என உங்களுக்கு எந்தத் துறையைப் பற்றியாவது ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இருக்குமானால் அவற்றையும் இந்தத் தளத்தின் மூலம் முழு உலகிற்கும் எடுத்துரைக்கலாம். இதில் கற்பவர்களுக்குக் கட்டணம் இல்லை; அது போலவே கற்பிப்பவர்களுக்கும் ஊதியம் இல்லை. ஆனால், ஒருவர் தன் முழு நேரத்தையும் இதற்குச் செலவிட வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்ற வகையில் வாரத்திற்குச் சில மணி நேரங்கள் செலவிட்டால் போதும். அவரது அறிவு, பலரின் உள்ளத்தில் ஒளிகூட்டும்.

இதற்கென்று தனிச் செலவு ஏதுமில்லை. மாணவர் நோக்கில், அவரிடம் ஒரு கணினியும் இணைய இணைப்பும், தலைப்பேசி (ஹெட்போன்) வசதியும் இருக்க வேண்டும். அகலக்கற்றை இணைய இணைப்பு (பிராட்பேண்ட்), அவசியத் தேவை. dialup இணைப்பு, இந்த இ-வகுப்புக்குப் போதாது. இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் போதும். அவர், இ-வகுப்புக்குத் தயார்.

அவர், www.openmentor.net என்கிற இணையதளத்திற்குச் சென்று தன் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைக் கொண்டு பதிய வேண்டும். அந்தத் தளத்தில் ஒவ்வொரு மாதமும், பல்வேறு விதமான பாடங்களில், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும். அதில் எந்தப் பாடங்களில் அவருக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதில் சேர்ந்து கற்கலாம். அவர் தேர்ந்தெடுக்கும் பாடம் நடைபெறும் வகுப்பு குறித்த தகவலை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களிலும் கிட்டதட்ட இதே முறைதான். அங்கு கணினி, இணைய இணைப்புடன் அரங்கு, ஒலிபெருக்கி வசதி, LCD Projector, திரை ஆகியவை இருந்தால் போதும். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், ஒரே வகுப்பில் இணைந்துகொள்ளலாம்.

இணையவழி வகுப்பு மட்டுமின்றி, இணையவழித் தேர்வுகள் (online examinations) நடத்தும் வசதியும் இந்தத் தளத்தில் உள்ளது. எல்லாப் பாடங்களிலும், வினாக்கள் தரப்படும், 30 வினாக்களை மாணவர்கள் 30 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும். இது objective type questions என்று சொல்லப்படுகின்றது. எவ்வளவு மதிப்பெண் பெற்றனர் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இது போன்ற மாதிரி வினாக்களினால் அவர்கள் தங்கள் திறமையையும், நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

இந்த இணையவழித் தேர்வு வசதியைச் செல்பேசி மூலமும் இலவசமாகப் பெறலாம். GPRSவசதியுள்ள செல்பேசி ஒன்றின் மூலம் இணையவழித் தேர்விற்கான மென்பொருளைத் தரவிறக்கினால் போதும். பிறகு தேவையான கேள்வித்தாள் தொகுப்பை Openmentor.net தளத்தின் மூலம் நீங்கள் அவ்வப்போது இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம்.

இதுதவிர, இதே இணையதளம் மூலமாக வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் பெறத் திட்டங்கள் வகுத்து வருகிறார்கள். கற்போர், தங்கள் சுயவிவரங்களைப் பதிவு செய்யலாம்; பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், அந்த விவரங்களைக் கவனிப்பார்கள். அதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை நேர்முகத்திற்கு அழைத்துப் பணியில் அமர்த்தும் வாய்ப்பு உண்டு. இந்த நேர்முகத்திற்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தும் விதமாக மாதிரி நேர்முகத் தேர்வுகளையும் இந்த இணைய தளம் வழங்கி வருகிறது.

முதலில் அடிப்படைக் கல்வி, துறை சார்ந்த படிப்புகள், மொழித் திறன், அது தொடர்பான ஆளுமைப் பயிற்சி, பின்னர் மாதிரி நேர்முகத் தேர்வு, பின்னர் வேலை வாய்ப்பு என அனைத்துச் சேவைகளையும் ஓபன் மென்டார்.காம் ஒருங்கிணைத்து அளிக்கிறது. இவை அனைத்தும் இலவசம் என்பது, நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், அதுவே உண்மை.

இந்த ஓபன் மென்டார்.காம் இணையதளத்தினை வடிவமைத்துள்ள சாஃப்ட்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனம், ISO 9001:2000 சான்றிதழ் பெற்றது; பல்வேறு மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. மென்பொருள் தரச் சோதனை, மென்பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட பல நிலைகளிலான சேவைகளை ஒரு கூரையின் கீழ் சாஃப்ட்ஸ்மித் நிறுவனம் அளித்து வருகிறது. வணிகக் கூரறிவுத் தீர்வுகள், செல்பேசி நுட்பச் சேவைகள், அயலகப் பணி ஒப்படைப்பின் மூலம் பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறது. இதன் தலைவர் நாகராஜனும் பொது மேலாளர் முருகானந்தமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள்.

வாழ்வை எளிதாக்கு' என்பதே இலக்கு. ஏற்கெனவே 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் உள்பட, பல்கலைக்கழகங்கள் பலவற்றின் தேர்வு முடிவுகளையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது. கல்வியின் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

ஆசிரியர்கள், கல்வி நிறுவன அதிபர்கள், நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள்.... உள்ளிட்ட ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். இந்த ஓபன் மென்டார் தளத்தினைப் பயன்படுத்த வாருங்கள். இதில் உங்கள் நண்பர்களையும் இணையுங்கள். கல்வி கற்க இனி எந்தத் தடையும் இல்லை என்ற செய்தியைப் பரப்புங்கள். பட்டணங்கள் முதல் பட்டி தொட்டிகள் வரை கல்விச் சுடர் ஒளிரட்டும்;அறிவு வெளிச்சம், அகிலம் எங்கும் பரவட்டும்.