Results 1 to 3 of 3

Thread: ஒற்றைச் சக்கர வண்டி - ஆஸ்திரேலியக் காடுறை கதை 1

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    ஒற்றைச் சக்கர வண்டி - ஆஸ்திரேலியக் காடுறை கதை 1

    புத்தாண்டின் முன்னிரவுப்பொழுது! வறண்ட கோடையின் மத்தியில் வெக்கையானதொரு இரவு. எங்கும் இருட்டு – திணறடிக்கும் கும்மிருட்டு! காய்ந்த ஓடைப்பாதையின் புதர்மூடிய வரப்புகளும் கண்ணுக்குத் தென்படாத காரிருள். வானைக் கருமேகமெதுவும் சூழ்ந்திருக்கவில்லை. வறண்ட நிலத்தின் புழுதிப்படலமும் தொலைதூரத்தில் எங்கோ எரியும் காட்டுத்தீயின் புகையுமே அந்த இரவின் இருளைக் கனக்கச் செய்திருந்தன.

    கரடுமுரடான பாதை ஓடையை சந்திக்கும் இறக்கத்தில் யாரோ நடந்துவருவது போல் காலடித்தடம் கேட்டது. அது ஒரு ஆங்கிலேயத் தொழிலாளியின் நறுக்கான நடை போல் அல்லாது களைத்து வீடுதிரும்பும் ஒருவனின் சோர்ந்த நடைபோன்றிருந்தது. இன்னும் சொல்வதானால் பழைய நினைவுகளை அசைபோட்டபடி யாரோ இங்கும் அங்கும் நடமாடுவதைப்போன்று நிதானமாகவும் நம்பிக்கையற்றதாகவும் இருந்தது அது. மங்கலாய்த் தெரிந்த முரட்டு வெள்ளை கால்சராயும் கம்பளியாலான வெளிர்நிற மேலங்கியும் தூரத்தினின்று பார்ப்பதற்கு இருளில் ஒளிரும் பிசாசைப்போல் தோன்றிற்று.

    குட்டைப் புதர்களையும் குத்துமுட்செடிகளையும் ஒட்டியிருந்த பாதையைக் கடந்து, நீர் அரித்தோடிக் காய்ந்த இடுக்குகளையும் பள்ளங்களையும் கடந்தவன், உலைக்களம் வெடித்து வெளியேறும் வெப்பக்காற்றுக்கீடாகத் திணறடிக்கும் வெம்மையை சுவாசத்தில் உணர்ந்தான். இரட்டைத்தடுப்பு கம்பிவேலியை ஒட்டி சிலதூரம் நடந்தபின் திரும்பி ஒரு வெள்ளைநிற மரக்கதவை அடைந்தான். அங்கு ஒரு வீடு இருந்தது. அதை வீடென்பதை விடவும் சிறுகுடில் என்றால் பொருந்தும்.

    சுண்ணாம்பு அடிக்கப்பட்ட பலகைகளாலான சுவர்களையும் மரப்பட்டைகளாலான மேற்கூரையையும் கொண்டிருந்தது. அவன் சத்தமெழுப்பாமல் கொல்லைப்புறம் சென்று, தனித்தமைந்திருந்த அடுக்களைக்குள் சென்று ஒரு தீக்குச்சியைப் பற்றவைத்தான். மேசையின் ஒரு விளிம்பில் ஒரு மெழுகுவர்த்தி நின்றுகொண்டிருந்தது. அவன் அதைப் பற்றவைத்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான்.

    அடுக்களையின் சுவர்ப்பலகைகள் விரிசலுற்றும் கூரையின் மரப்பட்டைகள் மக்கிப்போயும் இருந்தன. களிமண்தரையில் இருந்த ஒரு பெரிய மண்ணடுப்பின் பக்கங்கள் பழுப்புநிறத்தில் அழுக்கடைந்தும் அதன் பின்புறம் கன்னங்கரேலென்று கரிபடிந்தும் காணப்பட்டன. இதுவரை வெள்ளைச்சுண்ணாம்பை தன் கண்ணால் பார்த்ததில்லை என்பதை பறைசாற்றியது அது. கிட்டத்தட்ட ஒருவாரத்து சாம்பல் அடுப்பில் குவிந்துகிடந்தது. அடுப்புக்கு மேலே வெதுவெதுப்பான நீருடன் ஒரு கரிய வாளியொன்று கரிபடிந்த கொக்கியில் மாட்டித்தொங்கிக்கொண்டிருந்தது. கொக்கி ஒரு சங்கிலியின் மூலம் மேலே இருக்கும் புகைபடிந்த குறுக்குச்சட்டத்தோடு பிணைக்கப்பட்டிருந்தது.

    அந்த மனிதன் ஒரு முட்கரண்டியை எடுத்து வாளி நீரை ஆராய்ந்தான். பச்சை மாட்டிறைச்சித்துண்டு – அவன் எதிர்பார்த்ததுதான். வேகத் தொடங்குவதற்கு முன்பே அடுப்பு அணைந்துபோயிருந்தது. அடுக்களையில் ஒரு பைன் மர மேசையும், மாவு கொட்டிவைக்கும் மரத்தொட்டியும், நேர்த்தியான பெட்டகமும், பக்கப்பலகையும் தச்சனின் கைவண்ணத்தால் அமைந்திருந்தன. பெட்டகத்தின் மேற்புறம் ரொட்டித்துகள்களாலும், எண்ணெய்ப்பிசுக்காலும், தேநீர்க்கறைகளாலும் அழுக்கடைந்திருந்தது. ஒரு மூலையில் பள்ளிப் பயிற்சிப் புத்தகமும், பக்கத்தில் கல்லாலான மைப்புட்டியும் ஒரு பேனாவும் இருந்தன. அந்தப்புத்தகத்தில் திறந்திருந்த பக்கத்தில் செய்யுள் வடிவில் ஒரு பெண்ணின் கையெழுத்து காணப்பட்டது ‘கருத்து வேறுபாடு’ என்று தலைப்பிடப்பட்டு.

    அவன் அந்தப் புத்தகத்தை எடுத்து கிழிக்க முனைந்தான். அட்டை கடினமாய் இருந்தமையால் அது மூர்க்கமாய் தன் எதிர்ப்பைக் காட்டியது. மனத்தை மாற்றிக்கொண்டவனாய் புத்தகத்தைக் கீழே வைத்தான். பிறகு மேசைப்பக்கம் சென்றான்.

    அழுக்குப் பீங்கான் பாத்திரங்கள் ஒரு பக்கமும், கறைபடிந்த செய்தித்தாள் கற்றையும், ஒழுங்கற்று வெட்டப்பட்ட ரொட்டியும் ஓரங்களிலும் பரவிய கொழுப்புடன் ஒரு பெரிய பாத்திரமும், ஒரு டப்பா சர்க்கரைப்பாகுமென மீந்த உணவுகள் ஒருபக்கமுமாக மேசை அலங்கோலமாய்க் கிடந்தது. சர்க்கரைப்பாகு டப்பாவின் பக்கங்களில் வழிந்து செய்தித்தாளில் பரவியிருந்தது. கத்திகள் சர்க்கரைப்பாகின் பிசுக்கால் தாளுடன் ஒட்டிக்கிடந்தன. பாத்திரங்களைக் கழுவும் முயற்சி நடந்ததன் சாட்சியாக பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரும் அதற்குள் ஒன்றிரண்டு கோப்பைகளும், ஒரு பழந்துணியும் இருந்தன.

    அவன் ஒரு கோப்பையை எடுத்தான். தன் உள்ளங்கைக்குள் இறுக்கிப் பிடித்து பலங்கொண்டவரை அழுத்தினான். கோப்பை நொறுங்கிப்போனது. இப்போது சற்று இறுக்கம் தளர்ந்தாற்போல் உணர்ந்தான். உடைந்த துகள்களை எடுத்துக்கொண்டு கையில் மெழுகினைப் பிடித்தபடி வெளியில் இருந்த குப்பைமேட்டைத் தேடிச் சென்றான். சாம்பல்குவியலில் காலால் ஒரு உதைவிட்டு துளையுண்டாக்கி அதில் அவற்றைப் போட்டுமூடினான். மறுபடியும் அவன் ஆத்திரம் தலைதூக்கியது. வீட்டின் பின்புற வாசலை விடுவிடுவென அடைந்து தடாரென்று கதவைத் திறந்து வேகமாய் நுழைய, இருட்டில் சன்னமாய் ஒரு குரல் ஒலித்தது.

    “அப்பா… நீங்களா? என்னை மிதித்துவிடாதீங்கப்பா”

    அந்த அறையும் அடுக்களையைப் போன்றே அதிகப் பொருட்களின்றி வெறுமையாயிருந்தது. மலிவான அமெரிக்க மேசைவிரிப்புடன் ஒரு மேசையும், ஒரு பக்கத்தில் ஒரு நீளிருக்கையும் இருந்தன. நீளிருக்கையின் மேல் ஒரு நார்மெத்தையும் அழுக்கு போர்வையும், உறையில்லாத தலையணை ஒன்றும் குவியலாய்க் கிடந்தன. மேசைக்கும் நீளிருக்கைக்கும் இடையிலிருக்கும் தரையில் அதே போன்றதொரு நார்மெத்தையில் முரட்டுக் கோணியை விரிப்பாக்கி, அழுக்குத்துணிமூட்டையைத் தலையணையாக்கிப் படுத்திருந்தான், வெளிறி மெலிந்த முகமும் கருநிறக்கண்களுமுடைய சிறுவன் ஒருவன்.

    “இங்கே என்ன செய்கிறாய் மகனே?” தகப்பன் கேட்டான்.

    “அம்மாவுக்கு மறுபடியும் தலைநோவு மோசமாகிவிட்டது. சத்தமின்றி உள்ளே வந்து இங்கேயே ஸோஃபாவில் தூங்கும்படி உங்களிடம் சொல்லச் சொன்னாள். நான் சாமான்களை கழுவவும் அடுக்களையை சுத்தம் பண்ணவும் தொடங்கினேன். ஆனால் அப்பா… எனக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டது.”

    “ஏன்? என்னாச்சு மகனே?” அவன் பதற்றமாய்க் கேட்டபடி மெழுகுவர்த்தியை மகனின் முகத்தருகில் பிடித்தான்.

    “ஓ… பெரிதாய் ஒன்றுமில்லை அப்பா… கொஞ்சம் முடியாமல் இருந்தது. இப்போது பரவாயில்லை.”

    “ஒவ்வாத உணவு ஏதேனும் உட்கொண்டிருந்தாயா?”

    “எனக்குத் தெரிந்து எதுவுமில்லை… இந்த வெப்ப வானிலைதான் காரணமாக இருக்குமென்று நினைக்கிறேன்.”

    தகப்பன் படுக்கையை விரித்து, மெழுகை அணைத்துவிட்டுப் படுத்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு சிறுவன் அமைதியின்றிப் புரள ஆரம்பித்தான்.

    “ஆ.. அப்பா… ரொம்ப வெப்பமாக இருக்கு. எனக்குத் திணறுகிறது.”

    தகப்பன் எழுந்து மெழுகினைப் பற்றவைத்தான், சுவர்ப்பலகை விரிசல்களை மறைத்து ஒட்டியிருந்த செய்தித்தாளைக் கிழித்தெறிந்தான். நாற்காலியை முட்டுக்கொடுத்து கதவை நன்றாகத் திறந்துவைத்தான்.

    “ஆங்… இப்போது முன்பைவிட நன்றாக உள்ளது அப்பா” என்றான் சிறுவன்.

    அந்தக் குடிலில் மூன்று அறைகள் நீளவாக்கிலும் ஒன்று அகலவாக்கிலும் இருந்தன. வீட்டின் முன்னால் ஒரு வராந்தாவும் அதையொட்டி இறக்கிய ஒரு கொட்டகையும் இருந்தன. குதிரை கட்டுமிடமும் கருவிகளைப் போட்டுவைக்கும் அறையும் கொட்டகையில் பாதியிடம் பிடித்திருந்தன.

    தகப்பன் அடுத்த அறையின் கதவை மெதுவாகத் திறந்துவைத்தான். அங்கே இருந்த நீளிருக்கையில் மற்றொரு சிறுவன், இரண்டாமவன் படுத்திருந்தான். அவன் பார்ப்பதற்கு சற்று ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தான். அவன் ஒரு அழுக்கு சட்டையணிந்திருந்தான். அவனுடைய போர்வை விலகி பெரும்பகுதி தரையில் கிடந்தது. தலையணையும் தூரப்போயிருந்தது.

    தகப்பன் எல்லாவற்றையும் சரிசெய்து அவனை ஒழுங்காகப் படுக்கவைத்து, அவன் புரண்டு கீழே விழுந்துவிடாதபடி படுக்கையை ஒட்டி சில நாற்காலிகளை நகர்த்திவைத்தான். யாரோ இந்த அறையைத் துடைக்கத் துவங்கி பாதியிலேயே விட்டிருப்பதைக் கவனித்தான்.

    மூன்றாவது அறைக்கதவோரம் நின்று அந்த அறையிலிருந்து ஆழ்ந்த மூச்சு வருவதைக் கூர்ந்து கவனித்தான். பின் மிக மெதுவாக அந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான். பழங்கால வடிவமைப்புடனான நான்கு கம்பங்களுடைய செடார் மரக்கட்டிலும், இழுப்பறைகளுடனான மேசையும், மரத்தொட்டிலும் அங்கிருந்தன. அங்கொருத்தி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். அவள் பார்ப்பதற்கு பெரியவளாகவும், வலிமை பொருந்தியவளாகவும், ஆரோக்கியமானவளாகவும் இருந்தாள். கருங்கூந்தலுடனும் சதுரமான முகத்தோற்றத்துடனுமிருந்தாள். இழுப்பறை மேசையின் மேல் உணவுண்ட தட்டு, கத்தி, முட்கரண்டி, உடைந்த முட்டையோடுகள், தேநீர் குடித்த கோப்பை மற்றும் கோப்பைக்கான ஏந்துதட்டு யாவுமிருந்தன. பக்கத்தில் இரண்டு மெழுகுவர்த்திகள், ஒன்று கடுகு டப்பாவின் மீதும் மற்றொன்று ஊறுகாய் புட்டியின் மீதும்.

    அவன் அறையைக் கடந்து கொட்டகைக்குச் சென்றான். மூலையில் இருந்த கூளப்பை அருகிலிருந்து குதிரைகளை இழுத்துவந்து சேணங்களை அவிழ்த்தபின் அவற்றை கட்டுத்தறியில் கட்டினான். முடித்துவிட்டு உள்ளே வரும்போது தரையில் இருந்த எதிலோ தடுமாறி, கீழே விழுந்துவிடாமல் சமாளித்து தவிர்த்தான். பாதியளவு அழுக்கு நீருடன் ஒரு வாளியும், தேய்க்கும் துடைப்பானும், சில ஈரமான பழந்துணிகளும், அரைக்கட்டி மஞ்சள் சவர்க்காரமும் அங்கிருந்தன. அனைத்தையும் கொண்டுபோய் வெளியில் வைத்துவிட்டு வந்து படுத்தபோது மூத்தவன் சொன்னான்.

    “என்னால் குதிரைகளின் சேணத்தைத் தூக்கிக் கழற்ற முடியவில்லை அப்பா. தரை துடைக்கும் வேலையிலிருக்கும்போது அம்மா தேநீரும் முட்டைகளும் கேட்டதால் பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டேன். அதன்பின் பாப்பாவை தூங்கச்செய்தேன். அதற்குபிறகுதான் உடல்நிலை மோசமாகிவிட்டது. என்னால் தரையைத் துடைக்கும் வேலையைத் தொடரமுடியவில்லை. அந்த வாளியை எடுக்கவும் மறந்துபோய்விட்டேன்.”

    “பாப்பா ஏதாவது குடித்தாளா, மகனே?”

    “ஆமாம் அப்பா, நான் அவளுக்கு பாலும் ரொட்டியும் கொடுத்தேன். அவள் நிறைவாக சாப்பிட்டாள். கன்றுக்குட்டிகளைத் தொழுவத்தில் அடைத்து கதவை மூடிவைத்தேன். இன்று காலையில் ஒரு பெரிய விறகுக்கட்டையைக் கொண்டுவந்தேன். அம்மா மோசமாவதற்கு முன் இத்தனையும் செய்தேன் அப்பா”

    “நீ அந்த வேலையைச் செய்திருக்கக் கூடாது. உன்னைச் செய்யவேண்டாமென்று சொல்லியிருக்கிறேன் அல்லவா? ஞாயிற்றுக்கிழமையன்று நான் அதை செய்திருப்பேன். கனமான அந்த மரக்கட்டையை வண்டியில் ஏற்றும் கடினமான வேலையை நீ செய்யவில்லைதானே?"

    “அப்பா, பெரிய மரக்கட்டையை வண்டியில் ஏற்றுமளவுக்கு நான் நல்ல திடமாக இருக்கிறேன்.”

    தந்தை ஓய்விருக்கையில் சாய்ந்தமர்ந்து கைகளைத் தலைக்குப் பின்னே கோர்த்து சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.

    “அப்பா, உங்களுக்கு களைப்பாக இல்லையா?”

    “இல்லை மகனே.. அவ்வளவாக இல்லை, நீ கட்டாயம் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். தூங்க முயற்சி செய்.”

    இப்போது குழந்தை அழத்தொடங்கியது. சில நொடிகளிலேயே தாயின் குரல் கேட்டது.

    “நீல்ஸ், நீல்ஸ்… எங்கேயிருக்கிறாய் நீல்ஸ்?

    “என்ன எம்மா?”

    “உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், எனக்குப் பைத்தியம்பிடிப்பதற்குள் இந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அப்பால் போ… எனக்கு மண்டை வெடித்துவிடும்போல் இருக்கிறது.”

    தகப்பன் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்து ஒரு கோப்பை தண்ணீரை எடுத்துச் சென்றான்.

    “அவளுக்கு தண்ணீர்தான் தேவைப்பட்டிருக்கிறது” தகப்பன் தாயிடம் சொல்வதை சிறுவன் கேட்டுக்கொண்டிருந்தான்.

    “ஆமாம், அவளுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறதென்று நான்தான் சொன்னேனே… கிட்டத்தட்ட அரைமணி நேரமாய்க் குழந்தையின் வீறிடலோடு நானும் கத்திக்கொண்டிருக்கிறேன். ஒருத்தரையும் காணோம். நாள் முழுவதும் இப்படி யார் உதவியுமில்லாமல் கிடக்கிறேன். இரண்டு நாளாய் கண்ணில் துளித்தூக்கம் இல்லை.”

    “ஆனால்…. எம்மா… நான் இங்கே வந்தபோது நீ நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாய்”

    “அடப்பாவி… எப்படி உன்னால் இப்படி வாய்கூசாமல் பொய் சொல்ல முடிகிறது? த்தூ… ஒரு வார்த்தை கூட உண்மை பேசாத ஒரு ஆளிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறேனே.. கடவுளே… என்னைக் காப்பாற்று. இப்படி ஒரு பொய்யனோடு ஒவ்வொரு இரவும் என் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறதே…”

    தன் பால்யத்தை நரகமாக்கும் இத்தகைய கொடூரமான மற்றும் அவமானகரமான காட்சிகளைக்கண்டு பயத்தால் நடுக்கமுற்றுப் படுத்திருந்தான் மூத்தவன்.

    “ஷ்…. எம்மா… நல்லதனமாப் பேசு… குழந்தைகள் இருக்கிறார்கள்.. அவர்களுக்குக் கேட்டுவிடும்.”

    “அவர்களுக்குக் கேட்டால் கேட்கட்டுமே. எனக்கொன்றும் கவலையில்லை. இன்றில்லாவிட்டால் கூடிய விரைவில் அவர்களே தெரிந்துகொள்வார்கள். இது கடவுளுக்கே தெரியும்… நான் செத்தொழிந்து போயிருக்கலாம்."

    “எம்மா… நல்லதனமாப் பேசு”

    “நல்லதனம்… த்தூ…”

    குழந்தை மறுபடியும் அழ ஆரம்பித்தது. தகப்பன் முதல் அறைக்கு வந்து தன் சட்டைப்பையிலிருந்து எதையோ எடுத்துவந்து குழந்தையிடம் கொடுத்தான்.

    “நீல்ஸ்… உனக்கென்ன பைத்தியமா, இல்லை என்னைப் பைத்தியமாக்க பார்க்கிறாயா? குழந்தையிடம் அந்த கிலுகிலுப்பையைக் கொடுக்காதே… ஒன்று நீ ஒரு பைத்தியக்காரனாயிருக்கவேண்டும், இல்லையென்றால் ஒரு முட்டாளாயிருக்கவேண்டும். என் நிலைமையைப் பார்த்தும் இப்படி செய்கிறாயே… கொஞ்சமாவது என்னைப்பற்றி நினைத்துப்பார்த்தாயா… நீயெல்லாம்… “

    “அது கிலுகிலுப்பை இல்லை எம்மா.. ஒரு பொம்மைதான்”

    “மறுபடியுமா? நாளைக்கே குப்பைக்குப் போகப்போகிற உருப்படாத ஒன்றுக்கு பணத்தை எறிகிறாயே... இங்கே உன் மனைவி பொந்து மாதிரியான வீட்டில் விரல் நகம் தேய்கிற அளவுக்கு மாடாக உழைக்கிறாள்.. அவள் படுப்பதற்கு ஒரு நல்ல விரிப்பு கூட இல்லை. உனக்குப் போய் என்னைப்போல் ஒரு அறிவார்ந்த மனைவி… ச்சீ… மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டு என் தலைக்கு ஈரத்துவாலை கொண்டுவா. எனக்கு இப்போது கொஞ்சமாவது வாசிக்கவேண்டும்.. அப்போதாவது என் மூளை நரம்புகள் குளிர்கின்றனவா என்று பார்க்கவேண்டும்…”

    தகப்பன் முதல் அறைக்கு வந்தபோது, சிறுவன் வெளிறிய பார்வையோடு படுக்கையில் அமர்ந்திருந்தான்.

    “என்ன விஷயம் மகனே? ஏன் அமர்ந்திருக்கிறாய்?” தகப்பன் மகனை நோக்கிக் குனிந்து அவன் முதுகில் இதமாய்த் தொட்டான்.

    “ஒன்றுமில்லை அப்பா, நான் கொஞ்சநேரத்தில் சரியாகிவிடுவேன். கவலைப்படாதீர்கள் அப்பா..”

    “உனக்கு வலி எவ்விடத்தில், மகனே?”

    “தலையிலும் வயிற்றிலும் அப்பா… ஆனால்… இன்னும் கொஞ்சநேரத்தில் சரியாகிவிடும். எனக்கு இப்படி அடிக்கடி ஆகும்தானே..”

    ஒன்றிரண்டு நிமிடங்களில் அவனுடைய நிலை இன்னும் மோசமானது.

    “உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், நீல்ஸ்.. அந்தப் பையனை அடுக்களைப்பக்கம் அல்லது வேறெங்காவது அழைத்துக்கொண்டு போ… இல்லையென்றால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும். ஒரு குதிரையைக் கொல்லுமளவுக்கு இப்போது வெறியாக இருக்கிறேன். என்னை பைத்தியக்கார முகாமுக்கு அனுப்பத்தான் உனக்கு விருப்பமா?” கத்த ஆரம்பித்தாள் பெண்.

    “இப்போது முன்பை விடவும் கொஞ்சம் நன்றாக உணர்கிறாயா மகனே?” தகப்பன் கேட்டான்.

    “ஆமாம் அப்பா, முன்னைவிடவும் பரவாயில்லை. இன்னும் சில நிமிடங்களில் சரியாகிவிடுவேன்.” வெளிறியும் நலிந்தும் காணப்பட்ட சிறுவன் சொன்னான்.

    “நீ இந்த நீளிருக்கையில் படுத்துறங்கு மகனே.. தரையை விடவும் இது கொஞ்சம் குளிர்ச்சியாக உள்ளது.”

    “வேண்டாம் அப்பா, நான் இங்கேயே தூங்குகிறேன். இங்கும் சற்று குளிர்ச்சியாகவே உள்ளது.”

    தகப்பன் மகனின் படுக்கையை சரிசெய்துவிட்டு மகன் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் தன் தலையணையை அவனுக்கு வைத்துவிட்டான். பிறகு அடுக்களை சென்று அடுப்பைப் பற்றவைத்து கெட்டிலில் ஒரு குவளை நீரூற்றி கொதிக்கவைத்தான். பிள்ளைகளுக்குப் பல்முளைக்கும் தருவாயில் ஏற்பட்டிருந்த உபாதைகளை மறுபடி நினைவுக்குக் கொண்டுவந்து கலங்கினான். தன் காலணிகளைக் நீக்கிவிட்டு படுக்கையில் சாய்ந்தபோது தாய் அழைத்தாள்.

    “நீல்ஸ், நீல்ஸ்… அடுப்பைப் பற்றவைத்தாயா என்ன?”

    “ஆமாம், எம்மா”

    “அப்படியானால் உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், எனக்கு ஒரு கோப்பை தேநீர் தயாரித்துக்கொடு. இத்தனைக்கும் பிறகு அதுவாவது எனக்கு இதம் தரட்டும்.”

    அவன் மீண்டும் எழுந்துசென்று தீயைத் தூண்டி கெட்டில் நீரைக் கொதிக்கவைத்தான். அதற்குள்ளாகவே அவள் பலமுறை ‘இன்னுமா கொதிக்கவில்லை’ என்று கேட்டுக்கொண்டிருந்தாள். அவன் ஒன்றன் பின் ஒன்றாக இரு கோப்பைத் தேநீரை அவளிடம் கொடுத்தான். தேநீர் கொழகொழவென்றும், சர்க்கரைப்பாகுபோல் மிகுந்த இனிப்பாக இருப்பதாகவும் குறைசொன்னாள். சொல்லிவிட்டு இன்னும் கேட்டு வாங்கிக் குடித்தாள்.

    “இப்போது எப்படியிருக்கிறாய் மகனே?” அவன் மீண்டுமொருமுறை படுக்கையில் சாய்ந்துகொண்டே மகனைக் கேட்டான்.

    “பரவாயில்லை அப்பா, நீங்கள் விரும்பினால் மெழுகை அணைத்துவிடலாம்.” என்றான்.

    தகப்பன் மெழுகை ஊதி அணைத்து மறுபடியும் படுக்கையில் சாய்ந்தான். அவன் இன்னும் பணி உடுப்பைக் களையவில்லை. இப்போதிருக்கும் மெல்லிய சிறிய மேலங்கியைவிடவும் நல்லதாகவும் பெரியதாகவும், கெட்டியானதாகவும் பின்னப்பட்ட ஒன்றை வாங்க உத்தேசித்து பணம் சேர்த்துக்கொண்டிருந்தான். அதனால் அதே பழைய உடுப்புடன் படுப்பதென்பது வழக்கமாகிப்போனது. படுத்த சிறிது நேரத்தில் அவன் மகனின் பக்கம் குனிந்து கிசுகிசுத்தான்.

    “தூங்கிவிட்டாயா மகனே?”

    “இல்லை அப்பா”

    “மறுபடியும் மோசமாக உணர்கிறாயா?”

    “இல்லை, அப்பா”

    மௌனம்.

    “எதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறாய், மகனே?”

    “எதுவுமில்லை, அப்பா”

    “ஆனால்… ஏதோ இருக்கிறது. உன்னை வருத்தும் அது என்னவென்று என்னிடம் சொல்”

    “எதுவுமில்லை அப்பா… இதுதான்… அதாவது நான் பெரியவனாவதற்குள் எல்லாம் சரியாகிவிடும் அல்லவா அப்பா?"

    தகப்பன் உள்ளுக்குள் கலங்கியவனாய் சில நிமிடங்கள் பேசாது இருந்தான்.

    “இந்தக் கேள்வியை இப்போது ஏன் கேட்கிறாய் மகனே? இதையெல்லாம் மறந்திருப்பாய் என்று நினைத்திருந்தேன். நீ குழந்தையாய் இருக்கும்போதுதான் இந்தக் கேள்வியை அடிக்கடி என்னிடம் கேட்பாய். மாயங்களை நம்பும் வயதைக் கடந்துவிட்டாய். ஏன் எப்போதும் பெரியவனாகும் பீதியையே பற்றியிருக்கிறாய்?"

    “தெரியவில்லை அப்பா, எனக்கு அடிக்கடி வேடிக்கையான சிந்தனைகள் வரும். உங்களுக்குத் தெரியுமா அப்பா, நான் குழந்தையாய் இருந்து வளர்ந்து பெரியவனாகி, வயதாகி இறந்துபோய்விட்டதாகக் கூட நினைத்துக்கொள்வேன்..”

    “இன்று உனக்கு உடல்நிலை சரியில்லை மகனே. அதுதான் காரணம். நீ மிகவும் அற்புதமானவன். சூரியனின் வெய்யில் கொடுமையே எல்லாவற்றுக்கும் காரணம். இப்போது தூங்கு. இப்படியே விழித்துக்கொண்டு படுத்திராமல் நன்றாகத் தூங்கி எழு. விரைவிலேயே பெரியவனாவாய்.”

    சட்டென்று தாய் கத்தினாள். “இரண்டுபேரும் அமைதியாய் இருக்கமாட்டீர்களா? இந்த நேரத்தில் என்ன பேச்சு? கொஞ்சமாவது நான் தூங்கவேண்டாமா? நீல்ஸ், வந்து இந்தக் கதவை மூடு, உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், எனக்குப் பைத்தியம் பிடிக்காமலிருக்கவேண்டுமானால் அந்தப் பையனின் வாயையும் மூடு”

    தகப்பன் எழுந்துசென்று கதவை மூடிவந்தான்.

    “நன்றாக தூங்கி எழு, மகனே” தகப்பன் மகனின் காதில் கிசுகிசுத்துவிட்டு மறுபடி படுக்கையில் சாய்ந்தான்.

    தகப்பன் கொஞ்சநேரம் பொறுத்து மீண்டும் எழுந்தான். மெதுவாகச் சென்று மெழுகுவர்த்தியை எடுத்து அடுப்புத் தணலில் பற்றவைத்து எடுத்துவந்து சிறுவனின் முகத்தில் ஒளி படாதபடி ஓரமாய் வைத்தான். கொஞ்சநேரம் மகனின் முகத்தையே உற்றுநோக்கியிருந்தான். தகப்பன் தன்னைக் கவனிப்பது அந்தச் சிறுவனுக்கும் தெரிந்திருந்தது. அவன் அமைதியாக உறங்குவது போல் நடித்தான். சற்றுநேரத்தில் உறங்கியும்போனான். முந்தைய பல வருடங்களைப் போலவே அந்த வருடமும் கழிந்துபோனது.

    தகப்பன் விடிகாலை நான்கு மணிக்கு எழுந்துவிட்டான். அவன் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள ஒரு பண்ணை நகரத்தில் வேலைபார்த்துவந்தான். அவன் வேலைக்கு நடுவே குடும்பத்தையும் பண்ணையையும் நடத்தப் போராடிக்கொண்டிருந்தான். காலை உணவுக்கு பன்றியிறைச்சியை சமைத்துவைத்தான். பாத்திரங்களைக் கழுவி, அடுக்களையை சுத்தம் செய்தான். சிறுவர்களுக்கு ரொட்டியும் அவர்களுக்குப் பிடித்தப் பன்றிக்கொழுப்பும் வைத்துக்கொடுத்தான். தாயும் குழந்தையும் எழுந்தபின் அவர்களுக்கு தேநீர், பால், ரொட்டி இவற்றைத் தரும்படி மூத்தவனிடம் சொன்னான்.

    சிறுவன் மூன்று பசுக்களையும் கறந்து பாலைக் கொண்டுவந்து வைக்கும்போது தாய் அழைப்பது கேட்டது.

    “நீல்ஸ்… நீல்ஸ்…”

    “என்ன அம்மா?”

    “கூப்பிட்டால் ஏனென்று கேட்கமாட்டாயா? மூன்று மணி நேரமாக கத்திக்கொண்டிருக்கிறேன். உன் அப்பா போய்விட்டாரா?”

    “ஆமாம் அம்மா”

    “நன்றி கடவுளே… அந்த ஆளுடைய ஓயாத தொணதொணப்பிலிருந்து நிம்மதி. நீ போய் எனக்கு ஒரு கோப்பை தேநீரும், ஆஸ்திரேலியப் பத்திரிகையும் கொண்டுவா. இந்தக் குழந்தையைக் கொண்டுபோய் சுத்தம் செய்து உடைமாற்று. அவள் எழுந்து பலமணி நேரமாகிறது.”

    இவ்வாறாக அங்கு அடுத்தப் புத்தாண்டு துவங்கியது.

    *******************************************************************

    மூலம்: ஹென்றி லாசன் அவர்கள் எழுதிய A child in the dark and a foreign father என்னும் ஆங்கிலச் சிறுகதை.
    துணைத்தலைப்பு: இருட்டில் ஒரு குழந்தையும் அதன் வெளியூர்த் தகப்பனும்.
    மூல ஆசிரியர் குறிப்பு: ஹென்றி லாசன் அவர்கள் (1867-1922) ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கவிஞரும் எழுத்தாளருமாவார். 1949 இல் ஆஸ்திரேலிய அரசின் அஞ்சல் தலையிலும், 1966 இல் ஆஸ்திரேலியாவின் (அச்சடிக்கப்பட்ட முதல்) பத்து டாலர் தாளிலும் இடம்பெற்றப் பெருமைக்குரியவர்.

    சென்ற செப்டம்பர் மாத மஞ்சரி இதழில் வெளியான படைப்பு.
    நன்றி: கலைமகள் குழுமம்.
    Last edited by கீதம்; 22-12-2013 at 09:08 PM.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    இருவரில் ஒருவர் பொறுமையாக இருந்தால்தான் வாழ்க்கைச் சக்கரம் உருளும் என்பது உலகின் எந்த பகுதியாய் இருந்தாலும் உண்மைதானே.
    மொழி பெயர்த்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  3. Likes கீதம் liked this post
  4. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by மும்பை நாதன் View Post
    இருவரில் ஒருவர் பொறுமையாக இருந்தால்தான் வாழ்க்கைச் சக்கரம் உருளும் என்பது உலகின் எந்த பகுதியாய் இருந்தாலும் உண்மைதானே.
    மொழி பெயர்த்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    கதையை பொறுமையாக வாசித்துக் கருத்துரைத்து ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி மும்பை நாதன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •