நல்ல சிந்தனைகளும், மன அமைதியுடன் பற்றுகளின்றி வாழ்பவர்களை ஆழ்ந்த தூக்கம் தழுவ ஆம்பிக்கும். இந்த தூக்கமே அவர்களுக்கு ஞானம் கிட்டுவதற்கு இயற்கை காட்டிய வழியாகும். மன அமைதியுடன் தூங்க மூளை நரம்புகளை அமைதிப்படுத்த வேண்டும்.நரம்புகளைத் தூண்டும் காம எண்ணங்கள், அசைவ உணவுகள் ஆகியவற்றால் தூக்கம் கெடும் வாய்ப்புண்டு. கசகசா, சீரகம், கொத்தமல்லி போன்றவையும், குறைந்த அளவு உணவு, நல்ல எண்ணங்கள், சிறு உடற்பயிற்சி, தியானம் போன்ற அமைதியான தூக்கத்தை அருகில் கொண்டு வருகின்றன. அதற்கு பதில் வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட தூக்கமுண்டாக்கி மருந்துகளை உட்கொள்வதால் பலஹீனம், சோர்வு, புத்துணர்ச்சியின்மை, ஞாபகமறதி மற்றும் பலவித மருந்தடிமைத்தன்மை ஏற்படுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தி மன அமைதியை உண்டாக்கும் அழகான மூலிகைதான் பாஸிபுளோரா.
பாஸிபுளோரா இன்கார்னேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாஸிபுளோரேசியே குடும்பத்தைச் சார்ந்த பாஸிபுளோராவில் உள்ள ஏபிஜெனின், லுட்டியோலின், குர்சிட்டின், கேம்பரால், ஹார்மின், ஹார்மலின், ஹார்மால், ஹார்மலால் போன்ற வேதிச்சத்துக்கள் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் தன்மையுடையவை. குளோனிடின் என்னும் மருந்தைவிட சிறப்பு வாய்ந்தவை பாஸிபுளோரா பூக்கள். உண்பதற்கு
சுவையான பாஸிபுளோரா பூக்களிலிருந்து ஜெல்லிகள், ஜாம் தயார் செய்யலாம்.
பாஸிபுளோரா பூக்களின் பூவிதழ் களை மட்டும் பிரித்து 35 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி, 250 கிராம் சீனி சேர்த்து காய்ச்சி, பாகு பதத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு படுக்கும்பொழுது 10 முதல் 15 மில்லியளவு நீருடன் கலந்து சாப்பிட தூக்கம் நன்கு உண்டாகும். மனகுழப்பம் நீங்க பாஸிபுளோரா பழம், பூ மற்றும் இலைகளை நன்கு உலர்த்தி, பொடித்துவைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியை 200 மிலி நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி, இரவில் குடிக்கலாம். மலைப்பிரதேசங்களில் பாஸிபுளோரா கொடிகள் அழகுக்காக வேலியோரங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் பழங்களும் சுவையானவை. அவற்றையும் உட்கொள்ளலாம்.
நன்றிகள் :டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை