குளிர்பருவம் இன்னும் முடியவில்லை
ஆனாலும் இப்போதே…
பாடுகின்றன பறவைகள் கிளையமர்ந்து.
மூடுபனி மறைந்துபோனது
இந்நாளை இன்னும் அழகாக்கிவிட்டு.
சூரியன் வெளிப்பட்டுவிட்டது.
ஓ.. வாருங்கள் என்னோடு…
வாட்டில் மரத்தைக் கண்டுகளிக்க!

தங்கத்தைப் பதுக்கிக் குவித்து
தாமே வைத்துக்கொள்ளட்டும் கருமிகள்!
உண்மையில் இங்கேதான் இருக்கிறது
உலகுக்கு அறிவிக்கப்படாத கருவூலம்!
பொன்மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கி
பாதசாரிகளின் பாதையெங்கும் பூவிரித்து
கண்ணையும் நெஞ்சையும் நிறைக்குமிந்த
வாட்டில் மரத்துக்குதான் எவ்வளவு வாஞ்சை!

ஆஹா.. நூதனம்! வியத்தகு விநோதம்!
மகிழ்ச்சி வடிந்துவிட்ட கோப்பையொன்றில்
வழிய வழிய பரவசத்தை நிறைத்தாற்போல்
கவலையும் எரிச்சலும் மறக்கடிக்கப்பட்டு
களிப்பேருவகை கொள்கிறது மனம்,
மரங்காட்டும் மாயவித்தையின் முன்!

ஏழையோ பணக்காரரோ…
மிளிர்கின்ற மரத்தை சற்றே நின்று ரசித்து
நன்றிமிகுதியால் வாழ்த்துபவர் எவரோ…
அவரே நண்பனாகிவிடுகிறார் அம்மரத்துக்கு!
கட்சியோ, மதமோ, சாதியோ, நிறமோ
சார்ந்திருப்பது எதுவானால் என்ன?
மரத்தை நேசிப்பவர் மனிதம் நேசிப்பது உறுதி.

எல்லையில்லா வானம் நோக்கி
எழுகின்றன மரங்கள் பூமியினின்று.
சொர்க்கத்தின் நீலத்துக்குப் போட்டியாய்
வாரிவழங்குகின்றன வாழ்வின் குதூகலத்தை
தங்கள் மஞ்சள் பச்சை வண்ணங்களால்!
மானுட வினைப்பயனின் அடையாளமாகவே
மலர்கின்றன வாட்டில் மரங்கள்!

குளிர்பருவம் இன்னும் முடியவில்லை
ஆனாலும் இப்போதே…
பாடுகின்றன பறவைகள் கிளையமர்ந்து.
மூடுபனி மறைந்துபோனது,
இந்நாளை இன்னும் அழகாக்கிவிட்டு.
சூரியன் வெளிப்பட்டுவிட்டது.
ஓ.. வாருங்கள் என்னோடு…
வாட்டில் மரத்தைக் கண்டுகளிக்க!

(தோரா வில்காக்ஸ் எழுதிய ‘The wattle tree’ என்னும் ஆங்கிலக்கவிதையின் தமிழாக்கம்)

படம் நன்றி: இணையம்