சொல்கிறார்கள்…
நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!

இருள் போர்த்திய இரவின் அமைதியில்
ஆகாயவெளியெங்கும் செவிமடுத்துக்கிடப்பினும்
எண்ணற்ற குரல்வளையினின்று எழும் இன்னிசையை
ஏனோ நம்மால் கேட்கவியலவில்லை.

சொல்கிறார்கள்…
நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!

சொர்க்கத்தில் கேட்டிருக்கலாம்
சொக்கவைக்கும் அவ்வினிய கானம்!
பூமிக்குத் தெரியவேண்டியது இதுதான்…
எண்ணிலா பனித்துளியாய் இறங்குவதெல்லாம்
விண்மீன்களின் மௌன அழுகைத்துளிகளே!

சொல்கிறார்கள்…
நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!

மேலே தேவர்கள்… கீழே மனிதர்கள்…
நடுவிருக்கும் ஆகாயத்தில்தான் நடக்கிறது
கானமும் கரையலும்!
கானம் எப்போதும் உயரே சென்றிட,
கண்ணீர் மட்டும் பொழிகிறது கீழே!

சொல்கிறார்கள்…
நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!


(எழுதியவர் ஹரிவம்ஷ்ராய் பச்சன்(1907-2003). இருபதாம் நூற்றாண்டின் இந்திக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். எண்ணிலா அற்புதக் கவிதைகளால் அனைவரையும் கவர்ந்தவர். இந்திக் கவிஞர் சம்மேளனத்தின் முக்கியக் கவிஞர். இந்தி இலக்கியத்துக்காற்றிய தொண்டுக்காய் இந்திய அரசால் பத்மபூஷண் விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இவர் இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் தந்தையுமாவார்.மூலக்கவிதை கீழே.)

कहते हैं तारे गाते हैं

कहते हैं तारे गाते हैं!
सन्नाटा वसुधा पर छाया,
नभ में हमने कान लगाया,
फिर भी अगणित कंठों का यह राग नहीं हम सुन पाते हैं!
कहते हैं तारे गाते हैं!

स्वर्ग सुना करता यह गाना,
पृथिवी ने तो बस यह जाना,
अगणित ओस-कणों में तारों के नीरव आँसू आते हैं!
कहते हैं तारे गाते हैं!

ऊपर देव तले मानवगण,
नभ में दोनों गायन-रोदन,
राग सदा ऊपर को उठता, आँसू नीचे झर जाते हैं।
कहते हैं तारे गाते हैं!