(சிறு வயதில் படித்தது)

தெனாலி ராமன் என்பவர் கிருஷ்ணதேவராயரின் அவையில் ஒரு விகடகவி. அவரது திறமையினால் அரசரிடம் மிகவும் நற்பெயர்
பெற்று வந்தார். ஒரு நாள் அரசர் தெனாலி ராமனின் திறமையை சோதித்துப் பார்க்க எண்ணினார்.

"தெனாலி ராமா! நீ எதாவது ஒரு தகவல் கூறு. அது சரியாக இருந்தால் உன்னைத் தூக்கிலிடுவேன். தவறாக இருந்தால், உன் சிரத்தைக் கொய்வேன். எங்கே கூறு பார்க்கலாம்" என்றார்...

அரசவையில் அவருக்கு இருந்த பல எதிரிகளுக்கு இது ஆனந்தத்தை ஏற்படுத்தியது. ஒழிந்தான் ராமன் என்றே எண்ணினர்...

சற்று சிந்தித்த தெனாலி ராமன் இவ்வாறு கூறினார்,"மன்னா நீங்கள் என் சிரத்தைக் கொய்யப் போகிறீர்கள்".

மன்னரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆம், ஏனெனில் தூக்கிலிட்டால் தெனாலி ராமன் சொன்னது பொய்யாகி விடும். பொய் ஆனால் சிரத்தை தானே கொய்ய வேண்டும். ஒரு வேளை சிரத்தைக் கொய்தால் தெனாலி ராமன் சொன்னது உண்மையாகி விடும். உண்மையாகும் பட்சத்தில் தூக்கில் தானே இட வேண்டும்.. தெனாலி ராமனின் புத்திக்கூர்மையை எண்ணி மன்னர் அகமகிழ்ந்தார். அவனது எதிரிகள் ஏமாந்தனர்.