சிறுதை உத்திகள்: கதை சொல்லும் உபாயங்கள்
2. நாட்குறிப்புகள்

நாட்குறிப்புகள் மூலம் கதை சொல்லும் போது எது உண்மையில் நடந்தது, எது கதைமாந்தர் மனதில் நடந்தது என்று வாசகர் தெளிவாக அறியும் படியாக எழுதுதல் வேண்டும். இதில் குழப்பம் இருக்குமானால் அது ஆசிரியர் வேண்டுமென்று அமைத்ததாக இருக்கவேண்டும்.

புகழ்பெற்ற தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் நாட்குறிப்புகள் மூலம் கதை சொன்னதாக அவசரத் தேடலில் கிடைக்கவில்லை. அப்படி ஏதேனும் கதைகள் இருந்தால் வாசகர்கள் குறிப்பிடலாம்.

1. எனினும், உதகை சத்யன் என்பவர் எழுதிய "’குண்டு’ குமாரின் டயரி" என்னும் கதையில் இந்த உபாயம் பயன்படுத்தப் படுகிறது:
http://www.vallamai.com/?p=2923. கதையிலிருந்து ஓரிரு மேற்கோள்கள் கீழே.

10-07-2010
இன்று பள்ளித் தொடக்க விழா. விழா முடிந்ததும் என் நண்பர்கள் என்னைச் சுற்றிக்கொண்டனர். ‘குண்டு… குண்டு… குண்டு குமார்் எனக் கை தட்டி என்னைச் சுற்றிக் கூத்தடித்தார்கள். ‘கத்திரிக்காய்,,, கத்திரிக்காய்,,, குண்டு கத்திரிக்கா,,,, எந்த கடையில நீ அரிசி வாங்கறே?் எனப் பாடி, என்னைக் கேலி செய்தார்கள், நான் அழுதுவிட்டேன்.
...

05-09-2010
அம்மாவைக் கட்டாயப்படுத்தி, இன்று டாக்டரிடம் சென்றேன். டாக்டர் என்னைப் பற்றி முழுதாக விசாரித்தார். என் பழக்க வழக்கங்கள், சாப்பிடும் உணவு… என்று பல்வேறு விவரங்களைக் கேட்டார். கடைசியாக அவர் எனக்கு எந்த மருந்தும் தேவையில்லை, தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி ஏதாவது செய் என்று சொன்னார். கட்டாயம் நான் தினமும் ஸ்நாக்சுக்குச் சாப்பிடும் பிசாவைத் தவிர்க்கச் சொன்னார்.

2. நாட்குறிப்புகளைக் கதையில் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம். இந்தக் கதையில் வரும் நாட்குறிப்புகள் நிகழ்த்தும் மனமாற்றங்கள் அற்புதம்!

ஆலந்தூர் மன்னனின் ’யாதுமாகி...’ சிறுகதையில் ஒரு டயரியே கதையாகவும் கதையே டயரியாகவும் இணைந்து, இழைந்து இரும்பைப் பொன்னாக்குகிறது. கதைசொலல், காட்சிகள், கதைமாந்தர் குணங்கள், கதையின் நடை, களன், காலம் என்று எல்லாக் கூறுகளிலும் சிறந்ததாக விளங்கும் இந்தச் சிறுகதை, கதையெழுத விழையும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒன்று.
http://www.tamilhindu.com/2011/09/yaathumaagi/

கதையிலிருந்து ஒரு சின்ன ’சாம்பிள்’:

நான் ஒரு டிவி தொடர் தயாரிப்பாளர். எந்த டிவி என்பதைச் சொன்னால் இந்தக் கதையைப் படிப்பதை நீங்கள் நிறுத்திவிடக்கூடும். அதைவிட எந்தத் தொடர் என்று சொன்னால் சர்வ நிச்சயமாக நிறுத்திவிட்டு உடனடியாக ஆசிரியருக்கு நீங்கள் கடிதமும் எழுதக்கூடும் ’ஏன் இவனையெல்லாம் இங்கே அனுமதிக்கிறீர்கள்?’ என்று. சுருக்கமாக இந்தியா முழுக்க சாமியார்களைக் குறித்து, அவர்களைச் சுற்றி பின்னப்ப்ட்ட கதைகளின் பின்னால் இருக்கும் மர்மங்களை பகுத்தறிவுடன் அலசி அளிக்கும் தொடரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதில் நான் ஒரு முக்கியமான பாகம். நான்தான் சாமியார்களைக் கண்டுபிடிப்பேன். அவர்கள் குறித்த நம்பிக்கைகளை அலசுவேன். அதை எப்படிக் காட்டுவது என்பதைத் தீர்மானிப்பேன். பிறகு அந்த நம்பிக்கைகளை மெதுவாக உடைப்பேன். கஞ்சா அடிக்கும் சாமியார், பிணம் சாப்பிடும் சாமியார், தண்ணி அடித்துவிட்டு குறிசொல்லும் சாமியார் என்று வகை வகையான சாமியார்களையெல்லாம் நாங்கள் காட்டியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்.

3. ரமணியின் ’அவன் அவள்’ சிறுகதையின் முடிவில் இந்த உத்தி கதைமாந்தரின் குணத்தைக் குறிப்பாகச் சொல்லப் பயன்படுகிறது.
http://www.indusladies.com/forums/st...65-2980-a.html

அட! டயரிகூட எழுதுகிறாளா என்ன?

கீதாவின் டயரி அவள் ஊருக்குச் சென்ற சனிக்கிழமையுடன் நின்றிருந்தது. எடுத்துச்செல்ல மறந்துவிட்டாள், பாவம் என்றுணர்ந்து ஆவலுடன் பக்கங்களைப் புரட்டியபோது கண்கள் பனித்தன.

ஜனவரி 5, சனி.
அன்று நூலகத்தில் தூங்கியது தப்புத்தான். மிகவும் கோபித்துக் கொண்டார். தவறை உணர்ந்தாலும் மன்னிப்புக்கேட்க மனம் சண்டித்தனம் செய்கிறது. அவர்மீதும் தவறு இருக்கிறது. நான் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாமோ?

ஜனவரி 6, ஞாயிறு.
வரவர எங்களுக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை மூள்கிறது. ஆஃபீஸிலிருந்து பெரும்பாலும் லேட்டாகவே வருகிறார். இன்றுகூட என்ன ஆஃபீஸ்? கேட்டால் கோபம் வருகிறது. லீவு நாட்களில் நண்பர்கள் படையெடுப்பு. எனக்கு எப்போதும் அடுப்புத்தான். இவருக்கு செஸ், புத்தகங்கள் இருந்தால்போதும், நான்கூட அப்புறம்தான். எனக்கோ அவர் சுவைகளில் நாட்டம் இல்லை. பொங்கல் கழிந்ததும் கொஞ்சம் ஊருக்குப் போய்வந்தால் தேவலாம்.

*****