ஆகாய வீதியில் மேகங்கள்
விபத்துள்ளாகி கண்ணாடிகள்
உடைந்து தெறித்தோடியது

காக்கைகள் குளித்துக்
கொண்டிருக்க
கள்ளப்பார்வை
நீட்டியது அந்த நிலா

ஜன்னல்களுக்கு மேலே
வடிந்துக் கொண்டிருந்தவொன்று
வாசலில் படுத்துக் கொண்டது

எலக்ட்ரான்கள் வெடித்து
இறங்கிச் சென்ற
மின்சாரத்தைத் திருடியது
இடிதாங்கி

கனியாகிக் கொண்டிருந்த
காய்களின் பதவியேற்பு
விழாவில் மலர்தூவி வாழ்த்தியது
வானம்

குருவிகள் போட்டச்
சித்திரங்களை மழித்து
கழுவிக் கொண்டன கற்சிலைகள்

குடைக்குள் ஒளிந்துக்
கொண்டு மின்மினிகளுடன்
ஒரு கண்ணாம்பூச்சி

சக்கரம் கடித்தவுடன்
வானத்தை நோக்கி
காறித் துப்பியது
சாலையோரக் குழி

இருட்டின் முடிவில்
சொப்பனங்கள் சிதறிக் கொள்ளும்
நேரமாதலால் விடை பெற்றது
மழைக் கால நினைவுகள்

-நீச்சலகாரன்