Results 1 to 9 of 9

Thread: ரமணியின் கதைகள்: மானுடம் போற்றுதும்

                  
   
   
 1. #1
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0

  ரமணியின் கதைகள்: மானுடம் போற்றுதும்

  மானுடம் போற்றுதும்
  ரமணி

  பாட்டிலைக் கவனமாகத் திறந்து, சாய்த்து, பியர் கிளாஸையும் சாய்த்து, அதன் உட்சுவர் வழியே பொன்னிற பியரை வழியவிட்டு முக்கால் பங்கு நிரப்பிய வாசுதேவன், "கோபி, உன் சவாலை நான் ஏற்கிறேன்" என்றான்.

  "சும்மா இரய்யா, அவன் ஏதோ விளையாட்டுக்குச் சொல்றான்" என்றான் ஸ்டீபன், தன் பாட்டிலைத் திறந்தபடி.

  "இல்லை ஸ்டீபன். ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக நல்லவன்னு நான் ஆணித்தரமாக நம்பறேன். இதை என்னால் நிரூபிக்க முடியும்."

  "அதுக்காக உன் குழந்தையைப் பணயம் வைக்க முடியுமா?"

  "என் குழந்தையைப்பற்றி எனக்கு கொஞ்சம்கூடக் கவலையில்லை. மணி நாலுதான் ஆறது, ப்ராட் டேலைட். வடபழனி இங்கிருந்து எட்டு கிலோமீட்டர். சாதாரணமாக இருபது நிமிஷத்தில் போயிடலாம். ஆட்டோக்காரன் தெரியாதவனா இருந்தால் என்ன? எங்க மாமனார் வீட்ல டெலிபோன் இருக்கு, இங்கேயும் டெலிபோன் இருக்கு. ’வாட் கேன் ஹாப்பன்’?"

  "ஆட்டோ நம்பரை நீ நோட் பண்ணக்கூடாது" என்றான் கோபி, தன் கிளாஸை நிரப்பியபடி.

  "கோபி திஸ் இஸ் டூ மச்" என்றான் ஸ்டீபன் கூர்மையாக. "விளையாட்டு வினையாய்டக்கூடாது."

  "நீ ஒண்ணும் கவலைப்படாதே ஸ்டீபன். கோபி இஸ் ரைட். ஆட்டோ நம்பரை நோட்பண்ணுவது என் நம்பிக்கைக்கு முரணானது. திருடன்கூட அடைப்படையில் நல்லவன்னு நான் நம்பறபோது ஒரு ஆட்டோ டிரைவரை நம்ப முடியாதா?"

  "உன் மனைவி ஊர்ல இல்லாத இந்த நேரத்தில நீ ஒரு பெரிய, தேவையில்லாத ரிஸ்க் எடுக்கற, அவ்வளவுதான் நான் சொல்வேன்."

  "வாசு, ஃபர்கெட் இட். நான் சும்மா கலாட்டா பண்ணினேன்."

  "அப்ப ஒத்துக்க என்னுடைய கருத்தை."

  "நோ! ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக நல்லவன் என்கிற கருத்தை நான் மறுக்கிறேன். மனிதர்களில் பெரும்பாலோர் ஆதாரமாக நல்லவர்னு சொல்லு, ஒத்துக்கறேன். ஆனால் ஒவ்வொரு மனிதனும் என்பது சரியல்ல."

  "ஐ ரிபீட், ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக நல்லவன், அது கொலைகாரனாக இருந்தாலும்கூட. உன்னைக் கன்வின்ஸ் பண்ண நான் என் நாலுவதுப் பையனைத் தனியா, முன்பின் தெரியாத ஆட்டோல எங்க மாமனார் வீட்டுக்கு அனுப்பணும், ஆட்டோ நம்பரை நான் நோட்பண்ணக்கூடாது, அவ்வளவுதானே? வெரி சிம்பிள்!"

  நண்பர்கள் மூவரும் தன் கிளாஸைக் கையில் எடுத்துக்கொள்ள, ஸ்டீபன், "இப்படித்தான் ’மேயர் ஆஃப் காஸ்ட்டர்பிரிட்ஜ்’ நாவல்ல குடிவெறியில் தன் மனைவியைத் தொலைச்சான்" என்றான்.

  "நல்லவேளை, ஞாபகப்படுத்தினே! நாம இன்னும் ஆரம்பிக்கலை. தவிர, இது ஒரு பார்ட்டி இல்லை. சும்மா ஜாலியா ஆளுக்கு ரெண்டு பாட்டில் பியர் சாப்பிடப்போறோம். நாம ஆரம்பிக்கறதுக்கு மின்ன நான் என் குழந்தையை அனுப்பிடறேன். அப்புறம் நான் குடிவெறியில செஞ்சிட்டேன்னு சொல்லிடக்கூடாது பாரு? குட்டிப்பையன்?"

  "என்னப்பா?" என்று கேட்டபடி பெட்ரூமிலிருந்து ஓடிவந்தது குழந்தை. "பாட்டி வீட்டுக்குப் போலாமாப்பா?"

  நீல ஷார்ட்ஸ், அரைக்கை வெள்ளை மல் ஜிப்பாவில் குழந்தையின் சந்தனநிறம் அடங்கித் தெரிந்தது, ட்ரேஸிங் காகிதத்தில் தெரியும் தங்க நகையாக. அமெரிக்கக் கொடி வண்ண வரிகளில் ஸாக்ஸ், மஞ்சள் ஷூ அணிந்து, ஜிப்பாவுக்குள் மைனர்செயின் மார்பில் புரளத் தலையைத் திருப்பியபடி அது பார்த்தபோது ஸ்டீபனுக்கு ஒரு கணம் வயிற்றை என்னவோ செய்தது.

  "குட்டிப்பையன், இந்த மாமா ரெண்டு பேர்க்கும் விஷ்பண்ணு?"

  "குடீவனிங்" என்று கைநீட்டியது. "எனக்கும் கொஞ்சம் கூல் டிரிங்க்பா?"

  "வாட்’ஸ் யுவர் நேம்?" என்றான் ஸ்டீபன், குழந்தையின் கையைப்பற்றிக் குலுக்கியபடி.

  "மை நேமிஸ் ஶ்ரீகுமார். எனக்கும் கூல் டிரிங்க் வேணும்ப்பா?"

  "இப்பத்தானே கண்ணா நீ ஃப்ரூட்டி சாப்பிட்டே? பார், உன் தொப்பைகூட இன்னும் ஜில்லுனு இருக்கு!"

  சிரித்தது. "போலாமாப்பா பாட்டி வீட்டுக்கு?"

  "போலாமே! ஆனா, முதல்ல நீ மட்டும் போறயாம் ஆட்டோல ஜாலியா. கொஞ்ச நேரம் கழிச்சு நான் ஸ்கூட்டர்ல வருவேன். அப்பாவுக்குக் கொஞ்சம் வேலை இருக்கில்ல?"

  "ஏன்ப்பா என்னைமட்டும் தனியா அனுப்பறே?"

  "தனியா அனுப்பலை கண்ணா! நீ ரிக்*ஷாவில ஸ்கூல் போறல்ல, அதுமாதிரிதானே? லுக், நாம ரெண்டுபேர்க்கும் ரேஸ். நீதான் ஆமை. நான் முயல். இந்த கோபி மாமா நரி. நீ ஃபர்ஸ்ட்டு கிளம்பிட்டே. முயல் இப்ப தூங்கிட்டிருக்கு. அது கொஞ்ச நேரம் கழிச்சு, திடீர்னு முழிச்சுப் பார்த்துட்டுக் கிளம்பும். பார்த்தா, அதுக்குள்ள ஆமை பாட்டி வீட்டு கேட்டைத் தொட்டு வின் பண்ணிடும்!"

  குழந்தை கொஞ்சம் யோசித்தது. பின் அவன் கன்னத்தைத் தொட்டுத் திருப்பி, "இங்க பார், ஆட்டோவைவிட ஸ்கூட்டர்தானேப்பா ஃபாஸ்ட்டா போகும்? அப்ப முயல்தானே வின் பண்ணும்?"

  "அதனாலதான் நான் கொஞ்சம் கழிச்சுக் கிளம்பப்போறேன்."

  *** *** ***

 2. #2
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  நிசமாகவே அந்த முயல் தூங்கிப்போனது. பந்தயத்தை நடத்திய நரியும், பார்த்த முயலின் தோழனும்கூடத் தூங்கிப்போயின.

  பியரில் ஆரம்பித்த பார்ட்டி காக்டெயிலாக மாறிவிட அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் எல்லாவற்றையும் மறந்து மதுவெள்ளத்தில் மூழ்கித்திளைத்து தற்காலிகமாக அடங்கிப்போனார்கள்.

  நிர்ணயித்த இலக்கை ஆமை அடையவில்லை என்ற தகவல் மூன்று முறை தொலைபேசியில் முயற்சிக்கப்பட்டு, அந்தத் தொலைபேசி எடுப்பார் இல்லாத கைப்பிள்ளையாகச் சிணுங்கி, அழுது, முயலின் குறட்டையில் ஓய்ந்துபோனது.

  நான்காம் முறையாகத் தொலைபேசப்பட்டபோது விழித்துக்கொண்டான். சுற்றிலும் இருள் சூழத்தொடங்கியிருக்க, அவன் அதிர்ந்து எழுந்தபோது சுவர்க்கடியாரத்தில் கதவு திறந்துகொண்டு அந்தக் குருவி ஒருமுறை கூவியதைப் பார்த்தான்.

  நீ எப்பப்பா வருவே?
  ரெண்டு முள்ளும் ஸிக்ஸ்க்கு வரும்பார் அப்ப வந்திடுவேன்.
  ஓ காட்!

  குழந்தை இன்னமும் வந்துசேரவில்லை என்ற செய்தி தொலைபேசியில் இடற, இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது.

  நான் உடனே வரேன் என்று சொல்ல நினைத்து, "ழான் உழனே வழேன்" என்றான்.

  தலை கனத்து உணர்வுகள் இன்னமும் மரத்திருக்க குளியல் அறையை நோக்கிச் சென்றபோது நினைவுகளில் பின்னகர்ந்தான்.

  கோபி, உன் சவாலை நான் ஏற்கிறேன்.
  ஆட்டோ ஃப்ளையோவர் வழியா போகுமா டாடி?

  மாலை நாலு மணியளவில் கோபி, ஸ்டீபன் பார்த்திருக்க, கண்ணில் எதிர்ப்பட்ட ஒரு ஆட்டோவை நிறுத்தி நம்பர்கூடக் குறித்துக்கொள்ளமல் குழந்தையை ஏற்றி அனுப்பியாயிற்று.

  ஆட்டோ டிரைவர் பருமனாக, மேலுதடு முழுவதும் மீசை வைத்துக்கொண்டு பக்கங்களில் நீளத் தூண்களாக இறங்கும் கிருதாக்களுடன், வலது கையில் வாட்ச்சும் சிகரெட்டுமாக இருந்தார். குழந்தையை மட்டும் அனுப்பியபோது அவனை ஒருமாதிரியாகப் பார்த்தது போலிருந்தது.

  உலகத்தில் எவ்ளோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றல், அரசியல், பயங்கரவாதம் தினமும் நடக்கிறது! நீ என்னடான்னா எல்லா மனிதர்களும் அடிப்படையில் நல்லவர்கள்னு பேத்தரையே?

  நீ சொல்ற செயல்கள்ல ஈடுபட்டு இருக்கிறவங்க உலகத்தோட ஜனத்தொகையில் எத்தனை பெர்சென்ட் இருக்கும்? அரை பெர்சென்ட், ஈவன் ஒரு பெர்சென்ட்? என்னய்யா இது, நூத்துல ஒருத்தன் தற்காலிகமா ஒரு கெட்ட செயல்ல ஈடுபடும்போது அவனைத் திருத்துவையா, அவனுக்குத் துணைபோவையா?

  ஒருதுளி விஷம் சேர்ந்தாலும் குடத்திலுள்ள பால் முழுதும் விஷமாய்டறதே? பார்க்கப்போனா நீ சொல்ற ஒரு பெர்சென்ட்டால இந்த உலகமே ஒருநாள் அழியப்போறது.

  இந்த உலகம் அவ்வளவு எளிதில் அழியாது ஸ்டீபன். புறநானூற்றுல சொல்லியிருக்காப்பல கிடைக்கமுடியாத இந்திரர் அமிழ்தமே கிடைத்தாலும் அதைப் பகிர்ந்து உண்பவர்களும், வீண் கோபம் கொள்ளாதவர்களும், விழிப்புடையவர்களும், புகழ் எனில் உயிரும் கொடுப்பவர்களும், சமத்துவ விரும்பிகளும், சமதர்ம நோக்குடையவர்களும், தமெக்கென வாழாப் பிறர்க்கென வாழுபவர்களும் உள்ளவரை இந்த உலகம் அழியாது.

  இவன் ஒருத்தன், புறநானூறு-அகநானூறுன்னு கதையடிப்பான், இந்த கம்ப்யூட்டர் யுகத்தில. ஓகே, நீ சொல்றபடி பார்த்தாக்கூட நூத்துல ஒருத்தன் கெட்டவனாறது, இல்லையா ஸ்டீபன்?

  அதுமாதிரி இல்லை கோபி! ஒரு மனிதனுடைய ஜீன்களில் நல்லவன் கெட்டவன்கிற செய்தி இல்லை. லுக் அட் இட் திஸ் வே! ஒவ்வொரு மனிதனும் ஒரு நடமாடும் கம்ப்யூட்டர். எ வாக்கிங், பயலாஜிகல் கம்ப்யூட்டர். உயிர்தான் அந்தக் கம்ப்யூட்டரை இயக்கும் மின்சக்தி. மனம் அதன் பேசிக் ஆப்பரேட்டிங் சிஸ்டம். ஐம்புலன்கள் அதன் உள்வாங்கும் அமைப்புக்கள். அதே ஐம்புலன்கள்--ஒரு வேளை காதுகள் தவிர்த்து--வெளியிடும் அமைப்புக்கள். மூளை அதன் ஞாபக அடுக்குகள்.

  தினசரி அலுவல்களில் கம்ப்யூட்டருடன் உறவாடும் நண்பர்களுக்கு இந்த உதாரணம் பிடித்துப்போய் அவர்கள் கவனத்தை ஈர்த்ததைக் காணமுடிந்தது.

  ஐ ஹாவ் மேட் எ பாயின்ட் என்ற சந்தோஷத்துடன் தொடர்ந்தான்.

  ரைட், இந்த கம்ப்யூட்டருடைய அடிப்படை வேலைகள் என்ன? உயிர் வாழ்வது, இனம் பெருக்குவது. இந்தக் கம்ப்யூட்டருக்குத் தேவையான தகவல்கள் என்ங்கிருந்து கிடைத்தன? ஒரு காலகட்டம் வரையில் இயற்கையில் இருந்து. இப்பவும் இயற்கை ஒரு மாபெரும் தகவல்தளம்--டேட்டாபேஸ். அப்புறம் மனிதனே மனிதனுக்காக உருவாக்கிய தகவல் தளங்கள்: வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மதக்கோட்பாடுகள், இலக்கியம், விஞ்ஞானம், கலைகள் போன்றன.

  இந்தக் கோணத்தில் பார்ப்பது சுவாரஸ்யமாகத்தான் இருக்கு.

  யோசித்துப்பார் கோபி! மனிதன் தனக்கு வேண்டிய தகவல்களை இயற்கை என்னும் தகவல்தளத்திலிருந்து இழுத்துக்கொண்டவரை அவனுக்குள் பேதங்கள், பிரிவுகள் இல்லாமல் இருந்தது. தகவல்களுக்காக மனிதனை மனிதன் சார்ந்தபோதுதான் நல்லது கெட்டது என்கிற அடிப்படைப் பிரிவினையும் அதையொட்டி உயர்ந்தது தாழ்ந்தது இன்னும் பல பிரிவுகள் தோன்றின. மனிதர்களில் சிலர் அமைத்த தகவல்தளங்களை மனிதர்களில் சிலர் சிதைத்ததன் விளைவுதான் உலகில் நாம் காணும் தீச்செயல்கள்...

  *** *** ***

 3. Likes ஜானகி, கீதம் liked this post
 4. #3
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  ஜெமினி மேம்பாலத்தில் ஸ்கூட்டர் தம் பிடித்து ஏறி, இடப்புறம் வளைந்து சரிந்தபோது பின்னால் அமர்ந்திருந்த கோபி, "ஐ’ம் வெரி சாரி வாசு! ஐ ஃபீல் கில்ட்டி" என்றான்.

  "ப்ளீஸ் டோன்ட். நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை."

  "எனக்கென்னவோ பயமா இருக்கு வாசு! என்ன செய்யறதுன்னே புரியலை. பேசாம போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்திரலாமா?"

  "டோன்ட் பானிக்யா. இப்பத் தேவையானது லாஜிகல் திங்க்கிங். எனக்கு இன்னும் அந்த ஆட்டோ டிரைவர்மேல் நம்பிக்கை இருக்கு."

  "குழந்தையை அனுப்பி மூணு மணி நேரமாகப்போகுது வாசு!"

  "இந்த அளவு தாமதத்திற்கு நிச்சயம் ஒரு எளிய, முறையான காரணம் இருக்கும் கோபி. நீ மிருணாள் சென்னோட ’ஏக் தின் ப்ரதி தின்’ மூவிபற்றிக் கேள்விப்பட்டிருக்க, இல்ல?"

  "மனித உறவுகளுக்கு மட்டும் இல்லை வாசு... மனிதனோட அலட்சியங்களுக்கும் சுயநலம்தான் காரணம். என்னோட குழந்தை இல்லயேங்கற சுயநல உணர்வாலதானே நான்கூட அந்த ஆட்டோ நம்பரைக் குறிச்சிக்கலை? தட்ஸ் வொய் ஐ ஃபீல் கில்ட்டி."

  "இட்ஸ் நோபடீஸ் மிஸ்டேக் கோபி. நிச்சயம் இதுக்கு ஒரு சாதாரணமான காரணம் இருக்கும். ஏதாவது பெரிய ஊர்வலம், அல்லது ஆட்டோ பிரேக்டவுன்..." அல்லது ஏதாவது ஆக்ஸிடென்ட் என்று மனதில் ஓடிய எண்ணத்தைத் தவிர்க்கமுடியாமல் கண்கள் கனத்தன.

  கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஒரு வாகனப் பட்டறையின்முன் அந்த ஆட்டோ காலியாக நின்றிருந்தது.

  இவர்கள் அதை இனம்கண்டுகொள்ள முடியாமல் கடந்தபோது பட்டறையில் இருந்த பையன் ஒருவன் கைதட்டிக் கூப்பிட்டபடி பின்னால் ஓடிவர, வாசுவின் மனதில் நம்பிக்கை வேர்கள் துளிர்விட்டன.

  "சார், ஒங்க பேர் வாசுதானே?--ஆட்டோ டயர் பஞ்சராய்டுத்து--தாஸ் உங்க கொய்ந்தய வேற வண்டில கூட்டிட்டுப்போறேன்னு சொல்லச் சொன்னாரு."

  "தாஸ் யாரப்பா?"

  "அவர்தாங்க இந்த ஆட்டோ டைவரு. இவராண்டதானே ஒங்க கொய்ந்தய அனுப்ச்சீங்க?"

  "என் பேர் எப்படித் தெரியும்?"

  "ஒங்க ஊட்லர்ந்து கெளம்பறப்ப ஒங்க ஸ்கூட்டர் நம்பர தாஸண்ணன் நோட்பண்ணிக்கிட்டாராம். கொய்ந்தய வண்டில வுட்றச்ச ஒங்க தோஸ்த் ’வாசு நீ செய்யறது நல்லால்ல’னு சொன்னதைவெச்சு ஒங்க பேர் தெரிஞ்சுக்கிட்டாராம். நீங்க எப்படியும் இந்தப்பக்கம் வருவீங்கன்னு தாஸண்ணன் பார்த்திட்டிருக்கச் சொன்னாரு."

  "குழந்தையை எப்ப, எந்த வண்டியில கூட்டிட்டுப் போனாரு? அவர் வண்டி எப்ப பங்க்சராச்சு?"

  "கொய்ந்தயக் கூட்டிட்டுப்போய் ஒரு அவர் இருக்குங்க. தாஸண்ணனுக்குத் தெரிஞ்ச மணிங்கறவரோட ஆட்டோ தற்செயலா வந்தது. அதில ரெண்டுபேரும் ஏறி டைவர் சீட்ல குந்திகினு, பின்னால கொய்ந்தய வெச்சுக்கினு போனாங்க. மின்னால அஞ்சரை மணிக்கு தாஸண்ணனோட ஆட்டோ பஞ்சர்னு தள்ளிக்கிட்டு வந்தாரு. வள்ளுவர் கோட்டமாண்ட எதோ பெரிய தொய்ச்சங்க ஊர்வலம் போச்சாம். ஒரே கல்ட்டாவாயி சோடாபாட்டில்லாம் வுட்டுக்கிட்டாங்களாம். ரோடேல்லாம் கிளாஸு பீஸு, பஞ்சராய்ட்டாதுன்னு சொன்னாரு."

  "குழந்தைக்கு ஒண்ணும் ஆகலயேப்பா? நீ பார்த்தியா குழந்தையை?"

  "கொய்ந்தைக்கு ஒண்ணியும் ஆவலிங்க. அதுமாட்டு சிரிச்சிக்கினு அவங்களோட போச்சு"

  *** *** ***

 5. Likes ஜானகி liked this post
 6. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  24 Jan 2012
  Location
  Bangalore
  Age
  60
  Posts
  2,259
  Post Thanks / Like
  iCash Credits
  47,548
  Downloads
  7
  Uploads
  0
  தொடருமா...???
  ஜெயந்த்.

  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
  இனிதாவ தெங்குங் காணோம்…

 7. #5
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  (இறுதிப் பகுதி)

  டபழனி அருகில் மாமனார் வீட்டை அடைந்தபோது குழந்தை இன்னும் வந்துசேரவில்லை என்னும் செய்தி அவனைத் தாக்கியது. மாமியாரின் கண்களில் கண்ணீர் தெரிந்தது. மாமனாரின் வார்த்தைகளில் கனல் தெறித்தது.

  கனத்த இதயத்துடன் திரும்பியபோது மனத்தின் நம்பிக்கை விளக்குகள் அணைந்துபோய் குழந்தையைப் பற்றிய கேள்விகள் கவலையாக விஸ்வரூபம் எடுத்து இருளாக விரிந்தன.

  கைகள் இயந்திரமாக ஸ்கூட்டரின் கொம்புகளைப் பற்றிச் செலுத்த, பின்னால் கோபி ஒரு ரோபோபோல் அமர்ந்திருக்க, ஆர்காடு சாலையின் சோடியம் விளக்குகளின் ஒன்றை ஒன்று குறுக்கிடும் ஒளிப்படலங்களில் சாலை நடுவே இருக்கும் வேலிகளின் நிழல்களில் தற்காலிக டைமன் கட்டங்கள் அமைந்து விலக, பார்க்கும் இடம் எல்லாம் குழந்தை தெரிந்தது. சிரித்தது. அழுதது. துவண்டது. துடித்தது. ஓய்ந்தது. மீண்டும் சிரித்தது.

  *** *** ***

  வீட்டை அடைந்தபோது அந்த ஆட்டோ டிரைவர் தாஸ் அவனுக்காகக் காத்திருக்க, அருகில் ஸ்டீபன் முகம்மலர நின்றிருந்தான்.

  "ஸாரி ஸார், ரொம்ப பேஜாராய்ட்டது! பாம்குரோ ஓட்டலத் தாண்டினதும் ஒரு ஊர்வலத்தில மாட்டிக்கிட்டேன். சோடா பாட்டில்லாம் வுட்டு சாலைய நாறடிச்சிட்டாங்க. ஒரு அவரு ஓரங்கட்டிட்டு அப்பால வண்டிய எடுத்தா, பத்தடி போறதுக்குள்ள டயரு பஞ்சரு. அப்டியே மெதுவாத் தள்ளிக்கினுபோய் நம்ம சங்கரலிங்கம் கடைல வுட்டுட்டு, டயர்டா இருந்திச்சா, கொஞ்சம் நாஸ்த்தா பண்ணிட்டு--பையன் ஒண்ணும் வாண்டான்னுட்டான்--இதுக்குள்ளாற நம்ம மணி வரவே அவன் வண்டில பையனைக் கூட்டிட்டுப் போனேனா, கமலா தியேட்டராண்ட போலீஸ்காரன் நிறுத்திட்டான். ’எங்கய்யா கொழந்தயக் கடத்திட்டுப் போறீங்க’ன்னு மடக்கி, எவ்ளோ சொல்லியும் கேக்காம டேசன்ல ஒக்காரவெச்சிட்டான். எஸ்.ஐ. வந்தாத்தான் வுடுவேன்னுட்டான். அங்கயே ஒரு அவரு ஆயிட்டது. ஒரு வழியா கெஞ்சிக் கூத்தாடி மணிய டேசன்ல வுட்டுட்டு, நான் மட்டும் பையனைக் கொண்டுபோய் விட்டீங்க. ஒங்க மாமியார் வூட்ல லெப்ட்ரைட் வாங்கிட்டாங்க. போலீஸ்ல ரிபோர்ட் பண்ணுவேன்னாங்க. போலீஸ்கிட்டர்ந்துதாமே வரேன் வெளக்கி ஸொல்லி, திரியும் டேசனுக்குப்போய் மணியக் கூட்டுக்கினு, அப்பால கடையிலபோய் வண்டிய எடுத்துகினு வரேங்க. ரொம்ப பேஜாராட்ச்சுய்யா, ஸாரிங்க."

  "உன்மேல ஒண்ணும் தப்பில்லை தாஸ்", என்றான் கோபி. "உன்னோட நல்ல மனசுக்கு நாங்க ரொம்பக் கடமைப்பட்டிருக்கோம். நியாயப்படி உன்னோட ரிட்டர்ன் டிரிப்க்கும் நாங்க உனக்குப் பணம் தரனும். கமான், மறுக்காத, வெச்சுக்க!"

  "ஒரு துளி விஷம்னு சொன்னேன். இப்பத்தான் புரியுது", என்றான் ஸ்டீபன், டிரைவர் சென்றதும். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு."

  "யு ஆர் ஆஃப்டரால் ரைட் வாசு", என்றான் கோபி. "ஸுச் அன்யூஷ்வல் கட்ஸ்!"

  "என் கருத்து வெறும் நம்பிக்கை மட்டுமல்ல கோபி. அது ஓர் உணர்வு. ஒரு ஆக்ஸிடன்ட் ஆறபோது நாலுபேர் உதவ ஓடிவரும்போதும், ஒரு கண்ணில்லாதவன் சாலையைக் கடக்க முயலும்போது யாரோ ஒருவன் உதவ முன்வரும்போதும், ஏன், ஒரு தெரியாத இடத்துக்கு வழி கேக்கறபோது, கர்மசிரத்தையா ஒருவன் முன்வந்து வழிகாட்டும்போதும் எனக்கு மானுடத்தின் பேரில் நம்பிக்கை அதிகரிக்கிறது. நான் சொன்னதுபோல நாம் நம் தகவல்தளங்களை சீரமைக்கவேண்டும், குறைந்தது நம் சந்ததிக்காக."

  *** *** ***


  ண்பர்களிடம் விடைபெற்று மீண்டும் மாமனார் வீடு சென்றபோது குழந்தை ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக்கொண்டது. அவன் கேள்விகளுக்குத் தான் அழவோ பயப்படவோ இல்லை என்றது. அந்த டிரைவர் மாமா, இன்னொரு டிரைவர் மாமா, போலீஸ் மாமா எல்லோரும் நல்லவர்கள் என்றது. சாக்லெட் கொடுத்தார்கள் என்று சட்டைப் பையிலிருந்து சாக்லெட் உறையை எடுத்துக்காட்டியது. வழியில் பெரிய யானையைப் பார்த்ததாகக் கூறியது.

  குழந்தையைத் தழுவித் தடவி ஒன்றும் காயங்கள் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு கண்ணீர் உகுத்தான்.

  அவனது செய்கைகளைக் கவனித்த அவன் மாமியார், "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு. நானே இப்பத்தான் கவனிச்சேன்", என்றார். "இனிமேல் இதுமாதிரி விஷப்பரிட்சை எல்லாம் வேண்டாம்."

  "என்ன சொல்றேள் நீங்க?"

  "குழந்தையின் கழுத்தைப் பாருங்கோ."

  *** *** ***

 8. #6
  இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
  Join Date
  12 Aug 2012
  Location
  சென்னை
  Posts
  577
  Post Thanks / Like
  iCash Credits
  62,323
  Downloads
  25
  Uploads
  0
  கதை மிக மிக நன்றாக இருந்தது. கடைசி ட்விஸ்ட் பிரமாதம்.

  வாழ்த்துக்கள்.

 9. #7
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  18 Aug 2013
  Location
  Mumbai
  Posts
  318
  Post Thanks / Like
  iCash Credits
  6,108
  Downloads
  2
  Uploads
  0
  மானுடம் பற்றிய கருத்தை அற்புதமாக விவாதப்பொருளாக்கி ஒரு நல்ல கதையை படைத்து இருக்கிறீர்கள்.

  கதையின் இறுதியில் ஒரு திருப்பம் தந்து சுவை கூட்டுவது எப்படி என்று புதிய எழுத்தாளர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காகவே எழுதப்பட்ட கதை போல இருக்கிறது.

  பதிவுக்கு நன்றி.

  மும்பை நாதன்

 10. #8
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  54,288
  Downloads
  10
  Uploads
  0
  கதையில் புனைந்த ’ட்விஸ்ட்’ ஒரு ’உந்துதலுக்காக’ மட்டுமில்லை. உண்மையில் கதையை 1990-ஆம் வருடம் நான் எழுதியபோது, ஆரம்பத்தில் எப்படி முடிப்பது என்று யோசிக்கவில்லை. முடிவை நெருங்கியபோது அந்தத் ’திருகு’ ஒன்றுதான் கதைக்கு இயற்கையான முடிவு என்று தோன்றியது.

  இப்படி யோசிப்போம். குழந்தையின் கழுத்துச் சங்கிலியை அபகரித்தது யார்? தாஸா, மணியா, அல்லது அந்த போலீஸ்காரரா? அல்லது சங்கிலி எங்காவது நழுவி விழுந்திருக்கலாமா? இந்தக் கேள்விக்கு விடை கதாசிரியருக்கும் தெரியாது, ஆண்டவனுக்கே வெளிச்சம்!

  வாசுவைப் பொறுத்தவரை அவன் இன்னமும் அந்த ஆட்டோ டிரைவர் தாஸ் சங்கிலியைத் திருடவில்லை என்று நம்ப இடமிருக்கிறது. நிச்சயமாகத் தெரியாவிட்டாலும் தாஸ் மூலமாக அவன் தன் நண்பர்களையும் ’கன்வின்ஸ்’ செய்ததால் இப்போது அவன் தன் நம்பிக்கையை (’அது ஒரு உணர்வு’) இன்னமும் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அல்லது இந்த நிகழ்ச்சி அவனை மிகவும் பாதித்து அவன் தன் நம்பிக்கையை மாற்றிகொள்ளவும் இடமிருக்கிறது.

  கோபி, ஸ்டீபன் இவர்களை பொறுத்தவரை, வாசுவின் நம்பிக்கை கண்ணெதிரே நிரூபிக்கப்பட்டிருப்பதால், அவர்களும் மனிதன் அடிப்படையில் நல்லவன் என்ற கருத்தில் நம்பிக்கை வைக்க இடமிருக்கிறது.

  அந்த மாமியாரை பொறுத்தவரையில் இத்தகைய நம்பிக்கைக்கே இடமில்லை--அது ’விஷப்பரிட்சை’. ஆனால் அந்தக் குழந்தை எல்லா ’மாமா’க்களும் நல்லவர்கள் என்கிறது.

  இத்தனை சிக்கல்கள் நிறைந்தது வாழ்க்கை. நம்பிக்கைகள் பொய்யாகலாம், அவ்வாறு ஆவது தற்காலிகமாகவும் இருக்கலாம். சிறுகதை என்பது வாழ்க்கையின் ஒரு slice--சீவல் என்பதால் நான் இக்கதையை இவ்வாறு எழுதினேன்.

 11. #9
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  18 Aug 2013
  Location
  Mumbai
  Posts
  318
  Post Thanks / Like
  iCash Credits
  6,108
  Downloads
  2
  Uploads
  0
  மிகவும் சரி. ஒரு கதையின் முடிவில் கதாசிரியர் அமைத்திருக்கும் திருப்பம் ஒவ்வொருவர் மன நிலையில் என்னென்ன எண்ண ஓட்டங்களை ஏற்படுத்தும், எந்த மாதிரியான தாக்கத்தை உருவாக்கும் என்று உங்கள் விரிவான விளக்கத்தின் மூலம் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.

  பொறுமையுடன் விளக்கியதற்கு நன்றி.

  மும்பை நாதன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •