ரமணியின் கவிதைகள்

பொதுவாக எனக்கு மரபுக் கவிதைகள் பிடிக்கும். புதுக் கவிதைகளில் நாட்டமில்லை. இந்தத் திரியில் நான் இதுவரை எழுதிய கவிதைகளப் பகிர்ந்துகொள்வேன்.

1. கவிதையை/கழுதையைக் கட்டிப் போடு!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

புதுக்கவிதை யென்றுநான் புனைந்திட முனைந்தது
புதுக்கழுதை யாகியே புறங்கால் உதைவிட்டுத்
தலைதெறித்(து) ஓடியும் திரிந்தும் கணிணியின்
வலைமின் தாள்களை விழுங்குவது கண்டதை
அசைசீர் தளைதொடை ஓசை கொண்டுவந்(து)
இசைவலி யுறுத்திக் கட்டிப் போட்டேனே.

உதைத்தது கடித்துக் குதறிவிட் டாலோ
பதைத்தது விடுத்தெனை ஓடிவிட் டாலோ
நியதி இல்லா சுதந்திர உரிமையில்
அவதி யுறுவது அடியேன் அன்றோ?
--ரமணி 20/11/2012

*****

2. என்னதான் பிடிக்கும்?
(மரபில் புதுக்கவிதை)

(கலித்தாழிசை)
என்னதான் உனக்குப் பிடிக்கும் என்றேன்.
கோபித்துக் கொண்டாள்.
என்னத்தான் உனக்கு பிடிக்கும் என்று
சொன்னேன் என்றேன்.
என்ன, ஸ்மார்ட் என்று நினைப்போ?
எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
என்முகம் இப்போது சுருங்கியது கண்டு
எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்றேன் என்றாள்!
--ரமணி 21/11/2012

(இணைக்குறள் ஆசிரியப்பா: 22/12/2012)
என்னதான் உனக்குப் பிடிக்கும் என்றேன்.
கோபித்துக் கொண்டாள்.
என்னத்தான் உனக்குப் பிடிக்கும்
என்று சொன்னேன் என்றேன்.
ஸ்மார்ட் என்று நினைப்போ?
எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
என்முகம் இப்போது
சுருங்குதல் கண்டு
எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்றேன்
என்றாளே பார்க்கலாம் என்முகம் மலரவே!
--ரமணி 22/11/2012

*****