Page 18 of 23 FirstFirst ... 8 14 15 16 17 18 19 20 21 22 ... LastLast
Results 205 to 216 of 273

Thread: ரமணியின் கவிதைகள்

                  
   
   
 1. #205
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,138
  Downloads
  10
  Uploads
  0
  ஒட்டியும் வெட்டியும்: காதல்
  (நிலைமண்டில ஆசிரியப்பா)

  ஒட்டி

  கண்ணும் கண்ணும் கலந்தே பேசும்
  வண்ணத் துள்ளல் வளரும் காதல்!
  எண்ணத் தியைபில் இன்சொற் கேட்டே
  பண்ணாய் ஆர்க்கப் பரவச மாமே! ... 1

  காத்திருப் பதுவோர் காலச் சுமையே
  பார்த்துவிட் டாலோ பரபரப் பாகும்!
  வேர்க்கும் கையில் விதிர்க்கும் மெய்யில்
  ஆர்க்கும் இதயம் காதில் ஒலித்தே! ... 2

  தென்றல் சுகமாய் தெய்வம் எதிராய்
  அன்றில் வண்ணம் அகத்தில் விரிய ... ... [அன்றில் = மயில் போன்ற பறவை, இங்கு மயில்]
  மன்றில் ஆடும் மாந்தர் மனங்கள்
  இன்றென நேற்றென என்றும் கூடும்! ... 3

  காலம் நிற்கக் காலம் விரைய
  ஏலும் உள்ளத் தினிமைப் பகிர்வில்
  கையும் மெய்யும் கட்டுணும் போதில்
  வையம் மறந்தே வானம் வருமே! ... 4

  சின்னச் சின்னச் செப்பிய மாகப் ... ... [செப்பியம் = திரும்பத் திரும்ப உச்சரித்தல்]
  பொன்னின் சொற்கள் பொருளைத் தேடா
  இன்னும் இன்னும் இன்னும் என்றே
  வன்னம் கூட்டும் வாயுறை தேடும்! ... 5 ... [வாயுறை = உறுதிமொழி; வாயின் உறையாகிய இதழ்கள்]

  இன்பக் கனவில் இருவர் மனதும்
  என்றும் வேண்டும் இதுபோல் எனினும்
  அன்னை தந்தை ஆசியைக் கொள்ளும்
  தன்னம் பிக்கை தாங்கும் தவிப்பே! ... 6

  வெட்டி

  காதலிப் பதுவும் கள்குடிப் பதுவும்
  போதையில் ஒன்றெனில் பொய்யிலை யென்பேன்
  கண்ணும் கண்ணும் கலப்ப தெல்லாம்
  பண்படும் மாயையின் பாதை யென்பேன். ... 1

  காத்திருப் பதுவோர் கால விரயம்
  பார்த்தலில் கொள்ளும் பரபரப் புடனே
  இருவர் ஈர்ப்பில் இயைவதன் பின்னே
  மருவுடல் சுரக்கும் வேதியல் திரவமே. ... 2

  தென்றல் சுகமும் தெய்வம் எதிரும்
  அன்றில் வணமும் அகத்தின் மோகமே
  மன்றில் ஆடும் மனத்தின் காதலில்
  என்றும் நிலைக்கும் ஈடென் றில்லை. ... 3

  ஆண்பெண் நேசம் அகமுறும் காமம்
  வேண்டும் இயற்கை விளையாட் டாகும்
  இருவர் மனமும் இயைவதன் சிறப்பு
  திருமணம் பின்னே தெருவினில் அல்ல! ... 4

  காஞ்சன மொழிகள் காக்கைப் பொன்னே
  ஆஞ்சொலல் எல்லாம் ஆறுத லாகா
  இன்னும் இன்னும் என்றே வேண்டில்
  பின்புலம் யாவும் பெற்றிமை யென்றே. ... 5 ... [பெற்றிமை = பெருமை, செய்யவேண்டும் முறை]

  இன்பக் கனவெலாம் இல்லறம் பின்னே
  துன்பம் வாழ்வில் துளிவந் தாலும்
  அன்னை தந்தை ஆசியா லோசனை
  என்றும் வாழ்வில் இன்புறச் செயுமே. ... 6

  --ரமணி, 30/12/2014, கலி.15/09/5115

  *****

 2. #206
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,138
  Downloads
  10
  Uploads
  0
  வைகுண்ட ஏகாதசித் துதி
  (காவடிச் சிந்து)

  பாம்பணையில் துஞ்சுமது சூதன் - அவன்
  . பாதவிணை பற்றுவோர்க்கே ஏதும் - ஒரு
  . . வினையால்வரும் துயர்நீங்கிடும்
  . . இனிமேல்வரும் பிறப்பென்றிலை
  பாதம் - அதைப் - பாரும். ... 1

  மார்கழியாம் மாதமுறும் நாளாம் - அது
  . வைகுண்டம் கண்ணிலுறும் நாளாம் - அன்று
  . . பெருமாளவர் ரத்னாங்கியில்
  . . அரங்கத்தினில் கொலுவீற்றிடப்
  பாரும் - அருள் - சேரும். ... 2

  ஞானபுலன் கர்மபுலன் பத்தும் - அதை
  . நாடிநலி வாகுமனச் சொத்தும் - தந்தே
  . . பகற்பத்தினில் ராப்பத்தினில்
  . . பரந்தாமனின் புகழ்பாடிட
  ஞானம் - உறும் - மோனம். ... 3

  நாரணனின் நாமஜபம் நாளும் - கொள்ள
  . நன்மையதே வந்துநம்மை யாளும் - அவன்
  . . திருமார்புறை யலைமாமகள்
  . . உடன்சேர்ந்தருள் நலம்சேரவே
  நாடும் - அருள் - கூடும். ... 4

  பாற்கடலில் பள்ளிகொள்ளும் மாயன் - அவன்
  . பாமரரைக் காத்தருளும் ஆயன் - அவன்
  . . புகழ்பாடவே புவிமீதினில்
  . . மகிழ்வாகிடும் வருநாளெனப்
  பார்ப்போம் - வினை - தீர்ப்போம். ... 5

  --ரமணி, 01/01/2015, கலி.17/09/5115

  *****

 3. #207
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,138
  Downloads
  10
  Uploads
  0
  பிரதோஷ நாயகன் துதி
  (காவடிச் சிந்து)

  மந்தரக்கோ மத்தெனவே நாட்டி - அதில் ... ... [கோ = மலை]
  . வாசுகியை நாணெனவே பூட்டி - பாற்
  . . கடலைக்கடை அமுதம்வர
  . . அமரர்குலம் அசுரர்குலம்
  ஆலம் - எழ - ஓலம்! ... 1

  கண்ணுதலான் பாதவிணை தேடி - தேவர்
  . கண்ணிருள அச்சமுடன் ஓடி - அவர்
  . . நலம்காத்திட நஞ்சைக்கொள
  . . மலைமாதவள் விதிர்ப்போடவர்
  கழுத்தைக் - கரம் - அழுத்த ... 2

  நீலமணி யாயெழுந்த காளம் - அந்த
  . நீள்சடையான் கண்டசிறு கோளம் - அவர்
  . . உமையாளிடம் கொளும்தேவராய்
  . . மழுமான்தனைக் கரமேந்தவே
  நீளும் - வினை - மாளும்! ... 3

  நந்திதலைக் கோடுமிசை நாதர் - அவர்
  . அந்தியிலே ஆடுகின்ற வேதர் - அவர்
  . . பதமாடலில் மனமோய்ந்திட
  . . பவநீக்கமும் கதிமுக்தியும்
  நாடும் - உள்ளம் - கூடும்! ... 4

  வாணியவள் வீணையினை மீட்ட - வெள்ளை
  . வாரணனும் வேய்குழலைக் கூட்ட - அங்கே
  . . மலரோனவன் கரச்சீர்தர ... ... [சீர் = தாளம்]
  . . மதுசூதனன் முழவார்ந்திட
  வாட்டம் - தீர்க்கும் ஆட்டம். ... 5

  வீரணரின் லிங்கவுரு மீது - ஆறாய்
  . வீழுகின்ற நீர்பொழியும் போது - அதை
  . . விழிநாடிட வினையோடிட
  . . வருநாளெலாம் இனிதாகிடும்
  வண்ணம் - வரும் - திண்ணம். ... 6

  --ரமணி, 02/01/2015, கலி.17/09/5115

  *****

 4. #208
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,138
  Downloads
  10
  Uploads
  0
  ஆதிரைத் திருநாள் துதி
  (காவடிச் சிந்து)

  தாருகவ னந்தனிலே சாது - வெல்லாம்
  . தற்பெருமை கொண்டிருந்த போது - ஈசன்
  . . இரந்தேயுணி யுருவங்கொள
  . . அரிமோகினி அரிவையெனத்
  தானே - முன்னின் - றானே. ... 1

  சாதுவெலாம் மோகினையை நாட - அவர்
  . தாரமெலாம் சுந்தரனோ டாட - துறவோர்
  . . முனிவாலெழும் எரியால்வரும்
  . . வனயானையும் பிறசெல்வமும்
  செய்தார் - சொல்லால் - எய்தார். ... 2

  ஆனையுரி ஆடையெனக் கொண்டார் - ஈசன்
  . மானுடுக்கை அக்கினியைக் கண்டார் - அவை
  . . கரமேல்வர வலிபூதமும்
  . . பரமேஸ்வரன் பதம்கீழுற
  நடனம் - ஆகும் - படனம். ... 3

  தாருவனம் ருத்திரனாய் ஆடும் - ஈசன்
  . தாண்டவமா னந்தமனம் ஓடும் - தில்லை
  . . நடராசனை சிவகாமியை
  . . திருவாதிரை தினம்காணவே
  தருவாம் - அருள் - உருவாம். ... 4 ... [தருவாகும் அருள் உருவாகும்]

  சேந்தனாரின் பக்திமனம் கொண்டே - நாமும்
  . சேர்ந்துகளித் தேகளியை உண்டே - ஈசன்
  . . கழல்நாடியே கதிதேடியே
  . . மழுவாயுதம் வினைகொள்ளவே
  செய்வோம் - வாழ்வில் - உய்வோம். ... 5

  --ரமணி, 02-05/01/2015, கலி.20/09/5115

  *****

 5. #209
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,138
  Downloads
  10
  Uploads
  0
  பிரதோஷத் துதி: கேட்பேன் உன்னை!
  (இயைபுக் குறள் வெண்செந்துறை)

  நந்திதலைக் கொம்பிடையே நர்த்தபதம் ஆடுவதைக் காணும் மாலை
  வந்தபோதும் மனமதிலே வாழாதே வேறெதையோ தேடும் வேலை!

  வானமெலாம் வண்ணத்தின் ஆனந்தம் சூழுவதைக் காணும் வேளை
  நானெதையோ எண்ணத்தில் நாடியதில் ஆழுவதில் வீழும் ஏழை!

  ஆரணத்தில் மந்திரமும் ஆலகண்டன் பண்ணொலியும் ஆர்க்கும் போதில்
  காரணத்தை நாடுமனம் கட்டுண்ணும் எண்ணவொலி ஆரும் காதில்!

  கண்ணெதிரே நீராடும் கனகலிங்கம் கார்மனதில் கல்லாய்த் தெரியும்
  எண்ணமெலாம் ஏதேதோ இன்பமென ஐம்புலனும் கனலாய் எரியும்!

  சுற்றினிலே காளைமீது சோதியனாய் ஊர்காணும் அம்மை யப்பன்
  பற்றுதனில் ஆழ்மனதில் பாமரனாய் வாழ்ந்துவரும் நானோர் மப்பன்!

  கார்க்கடலாம் என்னுள்ளம் கடைவதிலே எழுவதெலாம் காக்கைப் பொன்னே
  பாற்கடலின் நஞ்சுண்ட பாசுபதன் பாதவிணை பற்றேன் என்னே!

  கண்டதுவும் கொண்டதுவும் காட்சியெனக் கோலமென வாழும் என்னை
  மிண்டிநீயும் ஆட்கொண்டு மித்திரனாய்க் காத்தருளக் கேட்பேன் உன்னை!

  [மிண்டி = நெருங்கி, நெம்பி, முன்தள்ளி]

  --ரமணி, 17/01/2015, கலி.03/10/5115

  *****

 6. #210
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,138
  Downloads
  10
  Uploads
  0
  பிரதோஷத் துதி
  நின்றுனைப் பாடும் நிலை
  (அகவற் பின்னல்: எதுகை மோனை இயைபுடன்)

  மூலச் சொற்கள்
  கூடும் ஆடும் ஓடும் தேடும் பாடும் நாடும்

  1. சந்தி

  சந்தியில் செம்மை சாயமாய்க் கூடும்
  வந்துறும் பாதம் மகிழ்வுடன் ஆடும்
  சிந்தையில் உள்ளமும் செவ்வையில் ஓடும்
  பந்தமென் றொன்றே பக்கலில் தேடும்
  வந்தனை கூறிடும் வாயது பாடும்
  எந்தை ஈசனின் இன்னருள் நாடும்! ... 123456

  2. ஆலயம்

  ஆலமர் செல்வனின் ஆலயம் நாடும்
  காலது நின்றிடக் காட்சியும் கூடும்
  மேலவன் தெய்வத மேனியைப் பாடும்
  மேலுறும் நீரிலுன் மேனியும் ஆடும்
  வாலறி வன்புகழ் வண்ணம் தேடும்
  கோலம் உள்ளம் குமிழ்த்தே ஓடும்! ... 615243

  3. திருவுலா

  காரணன் மஞ்சனக் காலமும் ஓடும்
  வேரது உலவியே வெளியினை நாடும்
  ஆரணன் உருவினை ஆரணம் தேடும் ... ... [ஆரணம் = வேதம்]
  ஆரமும் பண்ணிசை யாய்-உடன் கூடும் ... ... [ஆரம் = தேவாரம்]
  தோரணப் பூக்களும் தொங்கலில் ஆடும்
  நாரி யிடத்தனை நாதமும் பாடும்! ... 364125 ... [நாதம் = நாதஸ்வரம்]

  4. உறவு

  அன்பே சிவமென் றகமும் பாடும்
  துன்பம் யாவும் துகளென் றோடும்
  இன்பம் ஒன்றே இனியென் றாடும்
  உன்னதம் உவகையை உள்ளமும் நாடும்
  ஒன்றே உளதெனும் உண்மையும் கூடும்
  நன்றே என்றதை ஞாலம் தேடும்! ... 532614

  5. தியானம்

  அடங்கும் உள்ளம் அமைதியைத் தேடும்
  உடம்பால் மனதால் உயிர்படும் பாடும்
  திடம்பட விளங்கத் திண்மையும் கூடும்
  விடமென் றறியா வினைகளும் ஓடும்
  விடங்கொளும் சிவத்தின் விழுமம் நாடும்
  உடனெழும் உவகையில் உள்ளம் ஆடும்! ... 451362

  6. யதார்த்தம்

  ஆலயச் சூழலில் அகமகிழ்ந் தாடும்
  வேலை முடிந்ததும் வீட்டினைத் தேடும்!
  காலுறும் தரையே கனியென நாடும்
  ஞாலமும் இதுவே நன்றெனப் பாடும்!
  காலம் எதையும் கருதா தோடும்
  காலன் கொள்ளும் காலமும் கூடும்! ... 246531

  7. நான்
  இன்றென் கூடும் இழிவினில் ஆடும்! ... ... [கூடும் = உடலும்]
  கன்றாய் ஓடும் மனமும் தேடும்!
  நின்றுனைப் பாடும் நிலையெவண் நாடுமே!

  --ரமணி, 31/01/2015, கலி.17/10/5115

  *****

 7. #211
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,138
  Downloads
  10
  Uploads
  0
  காலைப் போதில்...
  (ஒன்பதுசீர் ஆசிரிய விருத்தம்: தேமா தேமா கூவிளம் கருவிளம் கருவிளங்காய்
  . தேமா மா மா மா)


  காலைப் போதில் காவிரி மணலடி குறுகுறுக்கக்
  . காலை எட்டிப் போட்டே செல்வேன்
  சோலைத் தென்றல் துல்லிய மலர்மணம் சுமந்தபடி
  . துள்ளித் துள்ளித் தோளை அணைக்கும்
  நீல வானம் நிர்மல முனிவரின் மனமெனவே
  . நீள நெடுகப் பரந்தே விரியும்
  காலைச் சோதி கண்விரி யிளங்கனல் பரபரக்கக்
  . காணும் நெஞ்சில் கவலை போமே!

  --ரமணி, 06/02/2015

  *****

 8. #212
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,138
  Downloads
  10
  Uploads
  0
  பிரதோஷத் துதி
  அருகிலுள போது...
  (வண்ணப் பாடல்)

  (திருப்புகழ் பாடல் 5-இன் சந்தம்
  ’விடமடைசு வேலை அமரர்படை சூலம்
  . விசயன்விடு பாண ... மெனவேதான்’)


  தனதனன தான தனதனன தான
  . தனதனன தான ... தனதான

  அருகிலுள போது குருடனென நானும்
  . அறியமனம் ஆழ்தல் ... தெரியாதே
  உருவுதனை வேண்டும் நறுமலர்கள் தூவும்
  . உறவுதனை நாடும் ... வழியொன்றே
  வருவினைகள் போக உளவினைகள் மாள
  . மரணைவரு நேரம் ... நலமாக
  எருதிவரும் ஈசன் விரலிலுறும் சேவை
  . எனமனதில் நானும் ... நிறைவேனே! ... 1

  மலரிணையில் தூவும் மலர்களெடு போதில்
  . மனவளையில் ஏதோ ... நினைவேறும்
  கலவமென நாடி எனதெனவே சேரும்
  . கழிவுகளில் ஆர ... மகிழ்வேனே
  நிலைதவறும் ஈன மனதிலுறும் மாயை
  . நினைவுகளை நீதான் ... கொளவேணும்
  பலவினைகள் சேரும் பருவமிது போதும்
  . பரமனெனை ஆண்டு ... அருளாயோ?. ... 2

  [கலவம் = மயில்தோகை]

  --ரமணி, 16/02/2015

  *****

 9. #213
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,138
  Downloads
  10
  Uploads
  0
  சிவராத்திரித் துதி: பேசவெண் நாமம்
  (கந்த பத்யம் பாணியில் நான்மாத்திரை ஈரசைச்சீராய்ச்
  சிந்தடி அளவடி மாறிவரும் அமைப்பு)


  பேசும் எண்நா மங்கள்
  மாசை நீக்கும் மாயை போக்கும்
  வாசம லர்பல தூவி
  நேசன் சிவனை நினையென் மனமே. ... 1

  பவாய நமவென் றாலே
  அவாவும் பிறவிய னைத்தும் நீங்கும்
  கவாலி எங்குமி ருப்போன்
  சர்வா யநமக்ஷ சாற்றும் நாமம். ... 2

  வருந்த வேண்டுவ தில்லை
  உருத்தி ரநமஹ உள்ளம் ஏறின்
  வருமும் மலமும் போக
  நரனேத் தும்மோர் நாமம் பசுபதி. ... 3

  உக்கிர நமவென வுரைக்க
  பக்குவ மனமுற பயமும் நீங்கும்
  எக்கண மேனும் சொலவே
  மக்களைக் காக்கும் மாதே வன்பேர். ... 4

  பேருரு நாமம் பீமன் என்றால்
  யாரும் சொல்ல யாங்கணு மமைதி
  பாரின் திசைகள் காக்க
  ஏருரு நாமம் ஈசா னன்பேர். ... 5

  சிவராத் திரிநாள் சொலவே
  கவனம் கொள்வோம் கண்டனி னெண்பேர்
  தவறா மல்நாம் இந்நாள்
  சிவனின் நாமம் சிந்தை கொள்வோம். ... 6

  --ரமணி, 17/02/2014

  *****

 10. #214
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,138
  Downloads
  10
  Uploads
  0
  திருக்குறள் பொழிப்புரை: சென்னைத்தமிழ் குறட்பாக்களில்
  (இதுபோல் இன்னும் உரைநடையில் இங்கே:
  http://www.eegarai.net/t1839-topic?theme_id=13&tt=1)


  121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
  ஆரிருள் உய்த்து விடும்.

  பெர்சுங் களுக்கு மருவாதி கொட்த்துநட
  வர்ச்சிகினு நிக்காதே மாமு.

  127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
  சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

  வார்த்தையைப் பார்த்துநீ வுட்லேன்னா வெத்தலைப்
  பாக்குதான் போடுமும் வாய்.

  140. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
  கல்லா ரறிவிலா தார்.

  இன்னாநீ பட்ச்சாலும் சேந்துக்க ஊரோட
  இல்லேன்னா பேஜாரு நீ.

  200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
  சொல்லிற் பயனிலாச் சொல்.

  ஒம்வார்த்தை யூஸ்-இல்லே னாலூஸ்டாக் கூடாது
  கம்முனு நீ-இரு மாமு.

  391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக.

  இன்னாநீ பட்ச்சாலும் நீபட்ச ஜோருக்கு
  நின்னுநீ ஷோக்கா இரு.

  396.. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
  கற்றனைத் தூறும் அறிவு.

  குழிதோண்ட்னா தண்ணி குபீர்னு வரல?
  பொழியுண்டா பட்ச்சவ னுக்கு!

  423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  எவன்-எத்தச் சொன்னாலும் எட்துக்கா தேநீ
  மவனேவுன் புத்தியையூஸ் பண்ணு.

  505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
  கருமமே கட்டளைக் கல்.

  ஜபர்தஸ்தாக் கீறியோ சொங்கியா னாவோ
  கபர்தார்-உன் டீலிங்ஸ்தான் மாமு!

  510. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
  தீரா இடும்பை தரும்.

  டுபாக்கூரை நம்பி தொயில்காரன் வுட்டா
  தபால்னு வுயவேண்டி தான்.

  517. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
  ததனை அவன்கண் விடல்.

  எவன்கைல இன்னாவே லைனுபாத்து வுட்டா
  அவன்கரீட்டா அத்தமுடிப் பான்.

  --ரமணி, 14/02/2015

  *****

 11. Likes முரளி liked this post
 12. #215
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  27 Mar 2011
  Location
  madurai
  Age
  58
  Posts
  539
  Post Thanks / Like
  iCash Credits
  47,506
  Downloads
  2
  Uploads
  0
  ஹஹா ரசித்துப் படித்தேன் ஐயா
  குறிப்பாக 510,517

 13. Likes ரமணி liked this post
 14. #216
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  75
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  79,936
  Downloads
  16
  Uploads
  0
  தங்களிடமிருந்து இதுபோன்ற படைப்புகளை நான் எதிர்பார்க்கவில்லை !
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 18 of 23 FirstFirst ... 8 14 15 16 17 18 19 20 21 22 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •