#ரமணி_பிரதோஷம்
பிரதோஷத் துதி: தாண்டவனே ஆண்டருளே!
(எழுசீர் விருத்தம்: கூவிளங்காய் மா காய் மா காய் மா காய்)

ஆலெழுந்த வாரி அச்சமுற்ற தேவர்
. அன்றுன்னை நாட அருள்செய்யச்
சேலெழுந்த கண்ணாள் நஞ்சிறங்கும் கண்டம்
. திகிலெழுந்து பற்றக் கொண்டாயே
காலெழுந்து வீட்டும் கருமேக வெள்ளம்
. காலத்தை நிறுத்தும் நாள்வரையில்
காலெழுந்த நடனம் நிற்காதே ஆடும்
. கண்ணுதலே நல்லோர் காத்தருள்வாய். ... 1

ஆவிழிந்த ஐந்தும் ஆலயத்தில் ஆடி
. அடியார்க்கு நன்மை அருள்வோனே
நாவிழிந்த பாட்டாய் நாலுவகைப் பண்ணின்
. நாதமுனைச் சூழும் காட்சியுடன்
காவிழிந்த மலர்கள் காட்டுமலங் காரம்
. கண்ணிழியச் சுற்றில் வரும்போது
நோவிழிந்த வாழ்வின் நுண்மையைநா டாதே
. நுகர்வோரைத் திருத்தும் அருளாளா. ... 2

[ஆவிழிந்த ஐந்து = பஞ்சகவ்யம்;
நாலுவகைப் பண் = வேத, தேவார, நாதஸ்வர, மேளப் பாட்டு;
இவற்றில் மேளம் விரல்களால் எழுந்தாலும் தாளம் முதலில் மனத்தின்
நாவிலேயே எழுகிறது;
காவிழிந்த = சோலையில் இருந்து இறங்கிய]

தேனறியாக் காட்டு மலரானேன் ஆன்மத்
. தினவறியா வெற்று மனம்கொண்டேன்
வானறியாப் பயிராய் வலுவிழ்ந்தே இன்று
. வாடுகிறேன் ஒன்றும் அறிந்திலனாய்
நானறிந்த உலகில் துன்பமிலா இன்பம்
. நாடுகிறேன் இன்னும் தேடுகிறேன்
தானெரிந்த காட்டில் கூளியுடன் ஆடும்
. தாண்டவனே என்னை ஆண்டருளே. ... 3

[தானெரிந்த = தான் என்னும் உடல் நிமித்த அகந்தை]

--ரமணி, 02/07/2016, கலி.18/03/5117

*****