Page 6 of 23 FirstFirst ... 2 3 4 5 6 7 8 9 10 16 ... LastLast
Results 61 to 72 of 273

Thread: ரமணியின் கவிதைகள்

                  
   
   
  1. #61
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    53,158
    Downloads
    10
    Uploads
    0
    வங்கிக் குறட்பாக்கள்

    வாடிக்கை யாளர்கள் வேடிக்கை வஸ்துவல்ல
    பாடியாடப் பால்தரும் மாடு. ... 21

    சங்கநிதி வேண்டாம் பதுமநிதி தேவையில்லை
    வங்கியின் வைப்பே நிதி. ... 22

    பற்றுக பற்றுள்ளார் பற்றினை அப்பற்றைப்
    பற்றாது விட்டாலோ பாடு. ... 23

    வங்கிக் கடன்தொகை வாராது போனாலோ
    மங்குமே வங்கிப் புகழ். ... 24

    உள்ளத்தில் மென்மை உதவாது தோழனே
    கள்ளநோட் டாயிது காண். ... 25

    அங்கொரு கண்ணுடன் இங்கொரு கண்ணுமே
    வங்கியில் வேண்டுமே காண். ... 26

    அகச்சுற்றுக் கேமரா ஆகாது மாற்று
    புறச்சுற்றுக் காவலே மேல். ... 27

    கணிணிமயம் ஆகியும் தாமத மாகிப்
    பணியெல்லாம் ஊர்வது ஏன்? ... 28

    கிளையில் அலுவலர் ஓர்குடும்பம் ஆயின்
    விளையும் பயன்கள் பல. ... 29

    தலைமையைப் போற்றித் தலைமையும் போற்ற
    நிலைமையில் கேடு வராது. ... 30

    --ரமணி, 18/04/2013

    *****

  2. Likes முரளி, ஜானகி liked this post
  3. #62
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    75
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    79,956
    Downloads
    16
    Uploads
    0
    வங்கிக் குறட்பாக்கள் எல்லாமே அற்புதமாம்
    பொங்கிவரும் கற்பனைக்கு வாழ்த்து.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. Likes ரமணி liked this post
  5. #63
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    53,158
    Downloads
    10
    Uploads
    0
    ’கழுதையும் ஞானமும்’ கவிதை பற்றி வேறோர் குழுமத்தில் ஒரு வலைதள நண்பருடன் உரையாடல்:

    நண்பர் மறுமொழி:
    கேட்டிருந்த கழுதை சிரித்துக் கொண்டது
    அழுக்கைச் சுமக்கவும் வருத்தம் உண்டு
    வெளுப்பைச் சுமக்கவும் வருத்தம் உண்டு
    அளவோ டிருந்தால் வருத்தம் இல்லை
    அளவை மிஞ்சினால் பிடிப்பேன் முரண்டு.

    மனிதா! மனிதா! இன்பமும் துன்பமும்
    அளவுடன் துய்ப்பது இயற்கையின் நியதி
    வெயிலின் கொடுமை நிழலில் தெரியும்
    வெயிலில் தெரியும் நிழலின் அருமையே
    வெயிலும் வேண்டும் நிழலும் வேண்டும்
    இரட்டைக ளின்றி வாழ்க்கையே இல்லை.

    காலையும் மாலையும், அழுக்கும் வெளுப்பும்,
    களித்தலும் நோதலும், இன்பமும் துன்பமும்,
    வருத்தமும் மகிழ்வும் இரட்டை இரட்டைகளே.

    *****

    என் மறுமொழி:
    கழுதையும் ஞானியும் பேசிக்கொண்டது:


    கீழ்நிலை மேனிலை காணும் மனிதனின்
    ஆழ்மன அகந்தையால் விளையும் தீங்கும்
    வாழ்வில் உலகின் இரட்டையும் பேசிய
    கழுதை மீண்டும் வந்தது மேய. 1

    காலை வாரி விட்டாயே கழுதையே!
    வேலைப் பளுவினில் உளறி விட்டாயே!
    ஆழ்மனம் உனக்கேது மானிடன் போல
    வாழ்வே இரட்டை என்பதை அறிய? 2

    உன்வலி உடல்வலி என்றுநீ யுணர்ந்தும்
    உடனே நீயதை மறப்பது தெரிந்தும்
    கனவுகள் விதைத்துக் கானலில் வாழும்
    மனிதன் போலப் பேசிய தேனோ? 3

    அவனிடம் நீங்கள் சொன்னது கேட்டு
    உனக்கோ வலிதான் இல்லையே என்று
    பொதிகள் மேலும் ஏற்றினான் சுவாமி!
    அதனால் தான்நான் அப்படிச் சொன்னேன். 4

    இருட்டிலும் புரட்டிலும் வாழும் மனிதன்
    இரட்டை கடந்த நிலையே ஞானம்
    என்பதை அறிவது மிகவும் கடினம்
    எனக்கது புரிந்தது உங்கள் அருளால். 5

    நன்று கழுதாய் ஒன்றில் உறுதிகொள்!
    என்றும் ஒன்றே நானும் நீயும்!
    தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும்
    நமக்கது உண்டு இறையின் அருளே! 6

    மனமொழி மெய்யெனப் பிரித்துப் பார்த்து
    இனத்தில் இரட்டையில் அளவுகள் கற்று
    அளவுகள் அலுத்துப் போக ஓர்நாள்
    மனிதனும் ஆவான் கழுதையாய் ஞானியாய்! 7

    *****
    நண்பர்:
    கழுதையும் கழுதையும் பேசிக்கொண்டது:


    ஆழ்மனம் உனக்கேது கழுதாய் என்றும்
    உளறிவிட் டனயே கழுதையே என்றும்
    மனுவின் மைந்தன் மனிதன் கேட்டான்.
    ’நும்முன் பிறந்தது நுவ்வையாகும்’ என்ற
    அன்னை வழிவந்த மனிதன் கேட்டான்.

    ஆணும் பெண்ணும் விழிப்பும் உறக்கமும்
    பசியும் நிறைவும் பகலும் இரவும்
    நாமறி யாத இரட்டைக ளாகுமாம்
    நமக்கவை புதிராம் புரியா இருளாம்.

    பாம்பின் கால்தனைப் பாம்பறியும் என்றால்
    கழுதையின் மனத்தைக் கழுதையே அறியும்.
    நம்வலி உடல்வலி மட்டு மேயாம்
    நாமதை மறப்பதை அவரறி வராம்.
    நன்று நன்று நாமதை மன்னிப்போம்.

    இரட்டை கடந்த நிலையென்ப தென்ன
    வாழ்ந்தால் வலியே இறந்தால் தீரும்
    இறந்தபின் என்ன யாரும் அறிந்திலர்.
    பிணியும் நோவும் மறக்கவே முடியும்
    பிணியையும் நோவையும் மறுக்கவா முதியும்?
    இரட்டை கடந்த நிலையே என்பது
    குதிரையின் கழுதையின் கொம்பே யன்றோ?

    இரட்டையில் பிறந்து (மனமும் மெய்ய்ம்)
    இரட்டையால் வளர்ந்து (தாயும் தந்தையும்)
    இரட்டையொடு வாழ்ந்து (இன்பமும் துன்பமும்)
    இரட்டையைச் சேமித்தும் (பாவமும் புண்யமும்),
    இரட்டையைத் தேடாது (இறைவன் இணையடி)
    இரட்டைக் கப்பால் தேடும் இவர்கள்
    அலுத்துப் போனால் அன்றே வருவர்
    இரட்டையைத் தேடி இறைவன் உறைவிடம்.

    மனிதனும் மதமும் இரட்டையும் அரட்டையும்
    மனிதனுக் கிருப்பது வம்பும் களித்தலும்
    நமக்கிருப் பதுவோ நாள்தீர வேலை
    மனிதனின் அழுக்கும் நாற்றமும் சுமந்து
    நடையாய் நடந்து நல்லது செய்யவே.

    குறிப்பு:
    ’நும் முன் பிறந்தது நுவ்வையாகும்’ என்ற வரிகள் சங்கத் தமிழ்ப்பாடல் வரிகள். தலைவி தலைவனிடம் புன்னை மரத்தை தன் தாய் தான் பிறக்குமுன்னரே வித்திட்டு வளர்த்தனள் என்பதால் அது தன் தமக்கை என்று கூறி அதனடியில் தலைவனைக் காண நாணியதாக வரும் கருத்தை உள்ளடக்கியது.

    *****

    நான்:
    மனிதனும் மனிதனும் பேசிக்கொண்டது:


    ஆறறி மனிதர் புரியும் வாதங்கள்
    ஐந்தறி கழுதை மூலம் செய்வதேன்?
    நேருக்கு நேரே புரிவோம் வாதம்
    யாருக்கும் வெற்றி தோல்வி யின்றி. 1

    இரட்டை கடந்த ஞானம் முயல்வோர்
    இறைவன் பாதம் தேடுவ தில்லை
    என்பது தவறு ஏனெனில் ஞானிகள்
    என்றும் அறிவர் இறையருள் பற்றியே. 2

    இரட்டை கடந்த நிலையென்ப தென்ன?
    இறந்தபின் வருவ(து) அல்லவந் நிலையே
    மனிதர் யாவரும் ஒற்றை நிலையை
    எளிதில் சிந்தித் தறிய முடியுமே. 3

    ஒற்றை யென்பது சித்திரத் தின்சுவர்
    இடைவெளி யின்றி இரட்டை இல்லை
    இடைவெளி என்பதே ஒற்றை நிலையாம்
    ஒற்றை அதுவே எளிதில் புரிவதே. 4

    உள்மூச்சு வெளிமூச்சு இடைவெளி ஒற்றை
    ஓரெண்ணம் மறுவெண்ணம் இடைவெளி ஒற்றை
    கால அளவுகள் இடைவெளி ஒற்றை
    கருத்தொரு மித்தால் இடைவெளி காணலாம். 5

    ஒன்றின் சிந்தனை எளிதில் ஆகும்
    ஒன்றின் அறிவும் எளிதில் வந்திடும்
    ஒன்றைப் பயில்வது என்பதே கடினம்.
    ஒன்றைப் பயிலவே இறையருள் வேண்டும். 6

    அன்னை தந்தை இரட்டை என்றால்
    இருவரும் மனிதன் என்பது ஒற்றை
    மனிதன் கழுதை இரட்டை என்றால்
    இருவரும் உயிரே என்பது ஒற்றை. 7

    களிப்பும் நோவும் இரட்டை என்றால்
    களமது நிகழ்வது மனமெனும் ஒற்றை
    மனமும் உடலும் இரட்டை என்றால்
    மனமும் உடலும் பருப்பொருள் ஒற்றை. 8

    உடலும் மனமும் மனிதனில் அதக்கம்
    மனிதன் என்பவன் மனதில் அடக்கம்
    மனமெனும் வஸ்து உயிரினில் அடக்கம்
    உயிர்கள் எல்லாம் இறையில் அடக்கம். 9

    இரவும் பகலும் காலத்தில் அடக்கம்
    காலம் என்பதோ மாயையின் தோற்றம்
    மாயை என்பது இறையில் அடக்கம்
    மூவகை மார்க்கமும் சொல்வது இதுவே. 10

    பருப்பொருள் உலகம் ஒளியின் இயக்கம்
    ஒளியின் தோற்றமே உலகம் எல்லாம்
    ஒளியெனும் ஒன்றே இருநிலைத் தோற்றம்
    பருப்பொருள் நுண்பொருள் ஒளியின் வகையே. 11

    தண்ணீர் உறைந்து பனிக்கட்டி யாகி
    தண்ணீர் பனியென இருநிலை யாகும்
    ஒளியே உறைந்து பருப்பொரு ளாகி
    ஒளியின் போக்கைத் தடுப்பதே இரட்டை. 12

    ஒளியின் போக்கைத் தடுக்கும் பருவொளி
    நிழலெனும் மாயை தந்தது காணீர்!
    ஒளியை வெள்ளை நிழலெனச் சொல்வோம்
    நிழலைக் கறுப்பு ஒளியெனச் சொல்வோம். 3

    இறையை ஐயுறும் அறிவியல் கூட
    இரட்டை கடந்த ஒற்றையே தேடுவது.
    பொருட்கள் சார்ந்த மென்பொருள் உஹ்த்தியில் ... [oops: object-oriented programming software]
    மேல்வகை ஒன்றின் வகைகளே யாவும். 14

    இரட்டை வாழ்க்கை பிறவிகள் நிறைந்தது
    பாவ புண்ணியம் என்னும் இரட்டையில்
    புண்ணியம் சேர்க்கப் பிறவிகள் குறைந்து
    இரட்டை கடந்திடும் காலம் வருமே. 15

    என்றும் உள்ளது ஒன்றே ஒன்றே
    நன்றே அறிந்திட நமக்கது புரியுமே
    இறையருள் வேண்டும் ஒன்றைப் பயிலவே
    இறையருள் கூடிட இறையினை இறைஞ்சுவோம். 16

    (ஒற்றையா இரட்டையா என்னும் சந்தேகம் தீராமல் உரையாடல் இத்துடன் முடிந்தது!)

    *****

    Quote Originally Posted by ரமணி View Post
    23. கழுதையும் ஞானமும்!

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    சிறந்த ஞானமெது சொல்லுங்கள் குருவே!
    அறிந்த ஞானியிடம் மனிதன் கேட்டான்.
    இன்பத்தில் களித்தலும் துன்பத்தில் நோதலும்
    இல்லாத நிலையே ஞானம் என்றார்.

    முனிவரின் சொற்கள் மனிதனுக்(கு) எட்டவில்லை.
    தனியே மேய்ந்தவோர் கழுதையைக் காட்டினார்.
    கவனியிக் கழுதையை காலையும் மாலையும்
    அவனியின் ஆற்றாமை அறிந்து கொள்வாய்.

    கழுதையோ(டு) ஓர்நாள் கழித்த மனிதன்
    வழியொன்றும் காணாமல் வந்தான் மீண்டும்.
    பழுதென்ன பார்வையில்? புரியவில்லை குருவே!
    விழுமிய தாங்கள்தான் விடைகூற வேண்டும்.

    காலையில் அழுக்கில் கனத்த மூட்டைகள்
    சுமந்த கழுதை வருத்தம் கொண்டதா?
    மாலையில் வெளுத்து இலேசான மூட்டைகள்
    சுமந்த கழுதை மகிழ்வு கொண்டதா?

    சமமென் றிருப்பதே ஞானம் மனிதா!
    மமதை நீங்கினால் சமனம் ஆகியே
    தமதெனும் பற்றைத் துறந்து வாழ்வில்
    நமதல்ல எதுவுமெனும் ஞானம் புலப்படும்!

    --ரமணி, 08/02/2013

    [குறிப்பு: இந்தக் கவிதை பற்றி நானும் ஒரு நண்பரும் வேறொரு குழுமத்தில் கவிதையில் உரையாடியதைப் பின்னர் பதிகிறேன்.]

    *****

  6. #64
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    53,158
    Downloads
    10
    Uploads
    0
    27. உருத்திரன் மகிமை
    (அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா)


    தரவு (எட்டடி)
    உருத்திரரே உம்முடைய சினத்திற்கென் தலைதாழும்
    உருத்திரரே உம்முடைய வில்லிற்கென் தலைதாழும்
    கயிலைமலை உறைபவரே காப்பாற்றும் எம்குலத்தை
    கயவர்கள் மீதெறியும் சரங்களைநீர் சாந்தமாக்கும்.
    அனைத்துலகிற் கதிபதியே அமரர்கள் இறையம்சமே
    வினைகளெனும் பிணிதீர்க்கும் வைத்தியரே பக்தர்களின்
    குற்றங்கள் பொறுத்தருளி குணங்களைக்கொண் டாடும்நீர்
    மற்றெல்லா வகைகளிலும் மலமறுத்து முக்திதாரும்.

    தாழிசை
    கருநீலக் கழுத்துடையார் கதிரவனாய் வெளிக்கிளம்பி
    இருள்நீக்கி மருள்நீக்கி இனியவைகள் அருளட்டும்
    சடைதரித்த ஒப்பற்ற சிவனாரின் அருளமுதில்
    அடியார்கள் உளமகிழ்ந்து அருள்வோனைப் போற்றட்டும். ... 1

    வணங்குகிறேன் பகவானை வியனுலக நாயகனை
    குணக்குன்றாம் மகாதேவன் கண்முன்று உடையோனை
    முப்புரங்கள் எரித்தவனை முத்தழல்கள் மறைத்தவனை
    எப்பொழுதும் சிவமாகி எமனையே ஜெயித்தவனை. ... 2

    பச்சிலைகள் கூந்தலாகப் பசுமரங்கள் வடிவமாக
    இச்சககத்தில் பிராணிகளை இரட்சிக்கும் பெருமானே
    உணவுகளின் அதிபதியே உலுத்தர்களை வதைப்பவனே
    வணங்குகிறேன் உமதுருவை வரமளித்தே அருள்புரிவீர். ... 3

    அம்போதரங்கம்
    (நாற்சீரீரடி: பேரெண்: 2)


    காண்பதெல்லாம் உமதுகண்ணாய்க் கண்ணாயிரம் படைத்தவரே
    வேண்டுவதை அளித்தருளும் வித்தகனே வணங்குகிறேன். ... 1

    புடைசூழும் சேனைகளைப் படைத்திருந்தும் முன்னின்று
    அடியார்கள் நலங்காக்கும் விடையோனை வணங்குகிறேன். ... 2

    (நாற்சீரோரடி: அளவெண்: 4)
    சம்சார விருட்சத்தைச் சேதிக்கும் ஆயுதமே ... 1
    அம்புகளால் பகைவர்கள் அவதியுறச் செய்பவரே ... 2
    மங்கலத்தின் உறைவிடமே மரஞ்செடிகள் அதிபதியே ... 3
    எங்களைநீர் இரட்சித்து ஏற்றமுறச் செயவேண்டும். ... 4

    (முச்சீர் ஓரடி: இடையெண்: 8)
    அமைச்சனும் வணிகனும் நீ ... 1
    அழவைத்துக் காப்பவன் நீ ... 2
    கள்வர்கள் தலைவனும் நீ ... 3
    கொள்ளைகள் அடிப்பவன் நீ ... 4
    உறங்குவோன் விழித்திருப்போன் நீ ... 5
    உறைபவன் ஓடுபவன் நீ ... 6
    அவையோரும் அவைத்தலையும் நீ ... 7
    உமைதுர்க்கை உருவமும் நீ. ... 8

    (இருசீர் ஓரடி: சிற்றெண்: 16)
    வலியோன் நீ, மெலியோன் நீ, ... 1-2
    குயவன் நீ, தச்சன் நீ, ... 3-4
    கருமான் நீ, வேடன் நீ, ... 5-6
    சிறியோன் நீ, பெரியோன் நீ, ... 7-8
    மலைகள் நீ, அலைகள் நீ, ... 9-10
    ஒலியும் நீ, எதிரொலியும் நீ, ... 11-12
    நாதன் நீ, தூதன் நீ ... 13-14
    வஸ்துகள் நீ, வாஸ்துவும் நீ, ... 15-16

    தனிச்சொல்
    என்வாங்கு

    சுரிதகம் (நேரிசை ஆசிரியம்)
    எல்லாம் நீயென எழுந்து நின்று
    பல்லா யிரமுயிர் படைத்து அழிக்கும்
    உருத்திர கணங்களின் உள்ளுறை நாயக!
    விருத்திகள் யாவும் வேண்டுவ தளித்து
    இம்மையும் மறுமையும் சிறக்க
    உம்மையே நாடுவோம் அம்மை யப்பரே!

    --ரமணி, 05/06/2013

    *****

  7. #65
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    53,158
    Downloads
    10
    Uploads
    0
    29. செய்திக் கவிதைகள்:
    இந்தியத் தந்தி சேவைக்கு இறுதி நாள் 15 Jul 2013


    [160 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி’ சேவைக்கு மூடு விழா: தினமணி 13 Jun 2013]

    (பலவிகற்ப பஃறொடை வெண்பா)
    கட்டுக் கடகட வென்று கடிதிலே
    விட்டொலித்துச் சென்றுசேர்ந்து வீடுகளில் சேதிசொன்ன
    தந்தியின் சேவைக்(கு) அடுத்தமாத மத்தியில்
    அந்திமக் காலமென இந்திய அஞ்சலகம்
    நூற்றைம் பதுவருடம் ஆற்றிய சேவையின்
    ஊற்றை அடைத்திடச் செய்தது தீர்மானம்.
    கம்பியில்லாத் தந்திச் செயல்பா(டு) உயர்வதில்
    கம்பிசெலும் தந்திகளின் அஞ்சல் அறுவது
    என்றேனும் நேரத்தான் வேண்டுவ(து) என்றாலும்
    அன்போ(டு) அளிப்போம் விடை.

    --ரமணி, 26/06/2013

    தந்தியின் குரல்கேட்க இங்கே சொடுக்கவும்:
    http://www.pond5.com/sound-effects/1/telegram.html

    *****

  8. Likes கீதம் liked this post
  9. #66
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    53,158
    Downloads
    10
    Uploads
    0
    30. பயணக் கவிதைகள்

    பேரூர் பட்டீஸ்வரக் கோவிலில் அரிய காட்சிகள்
    (ஒருவிகற்ப நேரிசை வெண்பா)

    1. அன்னாசி காலடியில் ஆர்த்திருக்கப் பேரூரில்
    சன்னமாகத் தன்துதிக்கை யால்துழாவி - சின்னதான
    வன்னப் பசுஞ்சிகை வெட்டியே உண்டிடும்
    கன்னப் பொறியின் களிறு.


    [ஆர்த்தல்=நிறைதல்; வன்னம்=நிறம்; பசுஞ்சிகை=பசுமை இலைக் கொண்டை; கன்னப்பொறி=கோவில்]

    2. கூரையிலே ஆவுடையார்க் கூத்தனாக நின்றுநம்மைத்
    தேரைபோல் பார்ப்பான் திசையெங்கும் - ஆரகனாய்க்
    காரைகள் நீக்கிக் கனலினை மேடுறுத்தும்
    பேரூர்ப் பரமேச் வரன்.


    [ஆரகன்=அழிப்போன், கள்வன், கபடன்]

    *****

  10. #67
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    53,158
    Downloads
    10
    Uploads
    0
    மாலைக் காட்சிகள்: ஹைக்கூ பாணியில் வெண்பா

    வெண்கதிர் செங்கதிராய் வீழும். மிகநீளும்.
    கண்வழியும். காதொலிக்கும் பண்ணோசை. - விண்ணகரம்.
    தண்ணெனத் தென்காற்று. விண்வெளியில் வண்ணங்கள்.
    மண்ணில் மனிதனின் மாசு.

    மஞ்சுகள் சித்திர வண்ணங்கள். மௌனநிழல்
    சஞ்சரிக்கும். குன்றிழியும் செஞ்சோதி. - துஞ்சிடும்.
    குஞ்சரம் காணும் குழந்தைகள். கோவில்முன்
    குஞ்சுகள் பின்னே குருகு.

    --ரமணி, 09/07/2013

    *****

  11. #68
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    53,158
    Downloads
    10
    Uploads
    0
    உத்திப் பாக்கள்: ஒருவிகற்ப நேரிசை வெண்பா
    ஒரு சொல் திரிபுறாமல் திரும்புதல்


    சொல்லொன்று கேட்டொருவர் சீர்மிக்க வாழ்வடைந்தார்
    சொல்லொன்று கேட்டொருவர் செத்துவீழ்ந்தார் -- சொல்லிய
    சொல்லொன்று கேட்டொருவர் முக்தியும் பெற்றதுண்டு
    சொல்லொன்று சொல்லவேண்டும் அன்பு.

    ஒருநாள் மகிழ்ச்சி ஒருநாள் துயரம்
    ஒருநாள் இழவென ஓடும் - திருநாள்
    ஒருநாள் வெருவு ஒருநாள் துணிபு
    ஒருநாள் எனவுயிர் வாழ்வு.

    ஒருநாள் சிரிப்பு ஒருநாள் சிலிர்ப்பு
    ஒருநாள் சினமுடன் ஓய்வாள் - திருநாள்
    ஒருநாள் வசவு ஒருநாள் நெருக்கம்
    ஒருநாள் எனமனையாள் வாழ்வு.

    *****

    ஒரு சொல் திரிபுடன் திரும்புதல்

    அஞ்சிட வேண்டுவதை அஞ்சும் மனமுடன்
    அஞ்சு புலன்களும் அஞ்சிநின்று - அஞ்செழுத்தை
    அஞ்சாமல் துஞ்சாமல் நெஞ்சி லிருத்தினால்
    அஞ்சுடன் ஆறும் மனம்.

    கண்ணுறும் துன்பங்கள் கண்ணோட்டம் ஆற்றிடக்
    கண்போல் பிறர்நலன் காண்போரை(க்) - கண்ணிமைபோல்
    கண்ணுதல் ஈசனே கண்ணருளிக் காத்திடக்
    கண்கூடாய் நீங்குமேகண் கட்டு.

    கண்ணுதல் ஈசனை நண்ணுதல் நன்மைதரும்
    எண்ணுதல் பூசனை திண்மைதரும் - உண்ணுதல்
    பண்ணுதல் அண்ணுதல் பற்பலவும் கைவந்தால்
    ஒண்ணுதல் தேவிநம் மோடு.

    நம் சென்னை பாஷையில் இன்னொன்று:

    இன்னா விளைத்தார்க்கு இன்னா விளைந்தாலும்
    இன்மையில் செய்திடும் இன்னாவே - தன்மையென்றேன்.
    இன்னாநான் செய்யணும்? இன்னாநீ சொல்றது?
    இன்னாதான் மண்டையோஎன் றான்!

    *****

  12. Likes கீதம் liked this post
  13. #69
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    53,158
    Downloads
    10
    Uploads
    0
    உத்திப் பாக்கள்: நேரிசை வெண்பா
    ஒரு சொல் திரிபுறாமல் திரும்புதல்

    குழந்தை மிழற்றல் இனிமை; இனிமை
    வழக்குத் தமிழ்மொழி வார்த்தை; - அழகான
    கண்கள் இனிமை; இனிமை பழங்காலப்
    பண்கள்; இனிமையிவ் வாழ்வு!

    ஒருசொல் ஒருசொல் ஒருசொல் பெறவே
    ஒருநாள் பலநாள் உவந்தேன் - ஒருநாஅள் ... ... (அல்லது ஒருதினம்)
    காலையின் அஞ்சலில் காற்றென வந்தது
    வேலை யெனவொரு சொல்!

    ஒரு சொல் திரிபுடன் திரும்புதல்

    தண்ணொளி வெண்ணொளி தண்ணில வின்னொளி
    கண்ணொளி சிந்தும் கனவுகள் - திண்ணையில்
    சோலையின் சித்திரம் தீட்டும் நிலவொளி
    மூலையில் மாயும் வயிறு.

    கல்லாமை இன்னாமை சொல்லாமை ஏலாமை
    ஒல்லாமை பேசாமை ஒன்றாமை - அல்லாமை
    பொல்லாமை நோலாமை பேணாமை யென்றெல்லாம்
    பல்லாமை வாழும்நம் நாடு.

    [சொல்லாமை=ஆற்றாமை; ஏலாமை=பொருந்தாமை;
    ஒல்லாமை=இயலாமை/அவாவினமை; அல்லாமை=மேலும்;
    பொல்லாமை=தீது/குற்றம்; நோலாமை=செய்த பாவத்துக்கு வருந்தாமை]

    *****

  14. #70
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    75
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    79,956
    Downloads
    16
    Uploads
    0
    தித்திக்கும் வெண்பாக்கள் கற்கண்டாம் எம்போலும்
    பித்தர்க்கு வாய்த்திட்ட நல்விருந்தாம்-மொத்தத்தில்
    சீர்மரபுப் பாக்களால் மன்றம் அலங்கரிக்க
    யாருள்ளார் உம்மைப்போல் இங்கு?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  15. Likes கீதம், ரமணி liked this post
  16. #71
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    53,158
    Downloads
    10
    Uploads
    0
    வெண்பா இலக்கணம் நன்கறிந்த நீங்களும்
    வண்டமிழ்ப் பாக்கள் புனைகின்றீர் - பண்புடன்
    எத்தகு பாட்டிற்கும் பாட்டில் விடைகூறும்
    வித்தகன் என்றுநீரும் இங்கு!


    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    தித்திக்கும் வெண்பாக்கள் கற்கண்டாம் எம்போலும்
    பித்தர்க்கு வாய்த்திட்ட நல்விருந்தாம்-மொத்தத்தில்
    சீர்மரபுப் பாக்களால் மன்றம் அலங்கரிக்க
    யாருள்ளார் உம்மைப்போல் இங்கு?

  17. Likes கீதம் liked this post
  18. #72
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    53,158
    Downloads
    10
    Uploads
    0
    ஒரு பா ஒரு பஃது (அந்தாதி மாலை)
    அருகிடும் வானுயிர் வாழ்வு


    காப்பு
    செயற்கையின் போக்கினில் செம்மை அழியும்
    இயற்கை உயிர்வகை யேத்தி - இயற்றும்
    ஒருமுதற் பாடல் உரைப்பதை யேற்கக்
    கரிமுகப் பிள்ளைநீ காப்பு.

    அவையடக்கம்
    கற்றறிந்தோர் சொற்களிலே சற்றேனும் கற்றதில்
    பெற்ற மகிழ்ச்சியில் உற்றபா - விற்பன்னர்
    இச்சிறு யாப்பினை ஏற்றிதைச் செப்பனிட
    இச்சிறுவன் வேண்டுவா னின்று.

    நூல்
    புறநகர்ப் பாக்கம் புதுமனை யாக்கம்!
    மறத்தில் இயற்கை மறையும் - விறைத்திடும்
    தானெனும் எண்ணம் தருக்கள் அழிப்பதால்
    ஆனந்த வாழ்வின் அழிவு. ... 1

    அழியுமே வானுயிர் ஆக்கமும் பண்ணும்
    பழிபடர் மானிடர் பாழில் - விழிமுன்னே
    விந்தைகள் காண்பது விண்ணில் அருகியே
    கிந்தும்நம் சிந்தை கிளைத்து. ... 2

    கிளைவளர் வேம்பினில் கீழ்வரும் ஓசை
    துளைத்துச் செவிகளில் தோயும் - திளைக்கும்
    குருவித் திரள்கள் துருவும் புரளும்
    பருமரம் ஏறும் பறந்து. ... 3

    பறந்தும் துரத்தியும் பார்க்கும் குருவி
    குறைந்து வருதல் குழப்பம் - உறத்திடும்
    நுண்கதிர்க் கூண்டு நுவல்வகை நுண்ணலை
    நண்ணும் குருவி நலிவு. ... 4

    நலிந்தெழும் ஊதா நிறத்தில்மீன் கொத்தி
    அலிமரக் கட்டை அமரும் - வலிந்தும்
    உரத்தும் செவிகள் உறுத்திடக் கத்தும்.
    கரண்டும் அணிற்கண் கடுகு! ... 5

    கடுகன்ன மேனியில் காதுறு சீழ்க்கை
    விடுக்கும்தேன் சிட்டு விடாநின் - றொடுங்கியே
    பூவினம் தேடிப் புகுந்துதேன் உண்ணுமே.
    கோவினம் காலிடைக் கொக்கு. ... 6

    கொக்குகள் மாடுகால் கொத்தியே பூச்சிகள்
    சிக்கல் விடுவித்துச் சீராக்கும் - பக்கலில்
    சேற்றை அளைந்து சிறுமீன் விழுங்கிடும்.
    தென்றல் கலைத்தலை தெங்கு. ... 7

    தெங்கு நிலத்திடைத் தேங்கும் மழைநீரில்
    கங்கில் குருகினக் காணாண்கள் - கங்குல்
    குழுமிடும் உன்னும்கால் ஓடி; குரலோ
    குழந்தை மிழற்றும் குரல்! ... 8

    குரல்கள் ஒலிகள் குறைந்திடும் வண்ணம்
    விரல்வழி யோங்கிடும் வீழ்வு - மரங்களும் ... ... (விரல்வழி=digital)
    மண்வாழும் விண்வாழும் மாக்களும் புட்களும்
    கண்ணிமைப் போதில் கழிப்பு. ... 9

    கழிப்பில் அறிவியல் கண்டிடும் மாண்பில்
    அழியும் இயற்கையின் ஆட்சி - விழியில்
    செவிட்டில் அறைந்திடும் செப்படி வித்தை!
    தவிட்டில் நமக்குத் தகவு. ... 10

    --ரமணி, 21/07/2013

    *****
    Last edited by ரமணி; 22-07-2013 at 03:06 PM.

Page 6 of 23 FirstFirst ... 2 3 4 5 6 7 8 9 10 16 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •