Page 13 of 23 FirstFirst ... 3 9 10 11 12 13 14 15 16 17 ... LastLast
Results 145 to 156 of 273

Thread: ரமணியின் கவிதைகள்

                  
   
   
 1. #145
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,728
  Downloads
  10
  Uploads
  0
  ஆன்மீகச் செய்திக் கவிதை 4.
  சித்திரை 30

  இன்று ஶ்ரீநரசிம்ம ஜயந்தி.  நரசிம்ம ஜயந்தி
  (வெளிவிருத்தம்)

  எனக்கொருவன் இரணியனாய் இருக்கின்றான் ஆள்கின்றான் - நரசிம்மா!
  தனக்குநிகர் இல்லையெனத் தன்வயங்கொள் அசுரனவன் - நரசிம்மா!
  வனப்புவிழை மேனியவன் ஐம்புலனாம் ஆனைகளால் - நரசிம்மா!
  தினம்வதைத்துத் தன்கூட்டில் எனைவைக்கும் கொடுங்கோலன் - நரசிம்மா! ... 1

  உன்மகனாய் விரலளவே உயரமுள்ள என்னையவன் - நரசிம்மா!
  தன்னுருவாய் எண்ணமுற்றுச் சன்னதமாய் நஞ்சேற்றி - நரசிம்மா! ... [சன்னதம் = ஆவேசம், கடுஞ்சினம்]
  என்னுள்ளம் நானெனவே எழுமயக்கம் கொளச்செய்வான் - நரசிம்மா!
  இன்னுமவன் ஆயுதமாய் என்வாக்கால் எனைவதைப்பான் - நரசிம்மா! ... 2

  இந்தமன மொழிமெய்யாம் இருஞ்சிறையில் வருந்துகிறேன் - நரசிம்மா! ... [இருஞ்சிறை = நரகம், காவல்]
  இந்தமூன்று தூண்களையும் பிளந்தெனைநீ ஆட்கொள்வாய் - நரசிம்மா!
  அந்தவொலி ஓங்கார ஆளியொலி யுடனுருத்தே - நரசிம்மா! ... [ஆளி = சிங்கம்]
  வந்துநீயென் இருமையெனும் மாயைகீறிக் காத்தருள்வாய் - நரசிம்மா! ... 3

  --ரமணி, 13/05/2014

  *****

 2. #146
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,728
  Downloads
  10
  Uploads
  0
  ஆன்மீகச் செய்திக் கவிதை 5.
  சித்திரை 31

  இன்று சித்திரைப் பௌர்ணமி: சித்தரகுப்தன் வழிபாட்டு நாள்

  கணக்கும் கூற்றும்!
  (வெளிவிருத்தம்)

  சித்திரம் சத்தமாய் எத்தனை வித்துகள் - கூற்றுவனே!
  சித்தமி ழித்துநான் இத்தரை நத்தினேன் - கூற்றுவனே!
  புத்தியின் சுத்திசெய் ஒத்தண மெத்திலை - கூற்றுவனே!
  செத்தையை முத்தென எத்தனை எத்தனம் - கூற்றுவனே! ... 1

  [நத்துதல் = விரும்புதல்; ஒத்தணம் = ஒற்றடம்; எத்தனம் = முயற்சி]

  அத்தனை செத்தையும் அத்தனை சத்தமும் - கூற்றுவனே!
  சித்திர புத்ரனின் சித்திரப் புத்தகம் - கூற்றுவனே!
  செத்ததும் ஒத்திகைச் செத்தலைச் சத்தமாய்க் - கூற்றுவனே!
  இத்தள நித்திய மித்திய எத்தனம் - கூற்றுவனே! ... 2

  [செத்தலை = உழவுக் கணக்கு; சத்தம் = கூலி; மித்தியம் = பொய், மாயை]

  அத்தனை பேர(து) அகத்தின் பிரக்ஞைநீ - சித்ரகுப்த!
  புத்தகம் வைத்துநீ புத்தியை ஆய்ந்திடும் - சித்ரகுப்த!
  பத்தும் வரவும் பதிந்தெமை யேற்றும்நீ - சித்ரகுப்த!
  உத்தமன் குற்றமில் கூற்றாய் வணங்குவோம் - சித்ரகுப்த! ... 3

  --ரமணி, 14/05/2014, கலி.31/01/5115

  *****

 3. #147
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,728
  Downloads
  10
  Uploads
  0
  ஆன்மீகச் செய்திக் கவிதை 6.
  வைகாசி 1

  இன்று காரைக்குடி ஶ்ரீகொப்புடையம்மன் ஹம்ஸ வாகனத்தில் திருவீதி உலா.

  கோயில் விவரம்:
  http://temple.dinamalar.com/New.php?id=568
  http://maduravmpathi.blogspot.in/2009/01/blog-post.html
  http://www.vikatan.com/new/astroloko...ticle&nid=7373

  கொப்புடை யம்மன் காப்பு
  (இன்னிசை வெண்பா)

  காரைக் குடிநகர்க் காரிகையே நீயின்றுத்
  தேரினில் வந்தே திருவருள் செய்வதால்
  ஊரினில் யாவர்க்கும் உன்னெழில் தோற்றத்தை
  வேருடன் காணும் விழி.

  குழந்தைவரம் வேண்டியே கொப்புடைத் தாய்க்குக்
  கழையினால் தூளியிடக் கன்னல் விழியாள்
  குழைந்தருள் செய்யக் குடும்பம் வளரும்
  கழிநலம் செய்யுமவள் காப்பு.

  வீரச் சுவையிலே ஈரமும் தாங்கியே
  கோரச் செயலழிக்கும் கொப்புடை அம்மனைக்
  காரைத் தலமதில் கண்டு நெகிழவே
  சீர்வரும் துன்பமெலாம் தீர்ந்து.

  --ரமணி, 15/05/2014, கலி.01/02/5115

  *****

 4. #148
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,728
  Downloads
  10
  Uploads
  0
  ஆன்மீகச் செய்திக் கவிதை 7.
  வைகாசி 2

  இன்று காஞ்சிபுரம் ஶ்ரீவரதராஜப் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்துடன் புறப்பாடு


  கோயில் விவரம்:
  http://temple.dinamalar.com/New.php?id=633
  http://www.hinduspritualarticles.blo...og-post_9.html

  மோகினித் திருக்கோலம்:
  http://thiruvarangan.blogspot.in/2009/12/1_3074.html

  (இன்னிசை வெண்பா)
  அயன்யாகம் தோன்றி அருள்செய்த மாயோன்
  அயர்ச்சியில் ஆழ்குளத்தில் அத்தி வரதனாய்
  ஏகமாத் தூங்க எழுந்த கனவிலின்று
  மோகினியாய் ஊரலைந்தா னோ? ... 1

  பராங்குச மங்கை பரகால மங்கை
  இராப்பகல் பாரா(து) இறுக்கிய காதலெழும்
  தாகத்தைத் துய்த்திடும் ஆசையில் மாதவனும்
  மோகினியாய் ஊரலைந்தா னோ? ... 2

  முன்கதை ஏதோ முகுந்தனவன் இற்றைநாள்
  முன்னழகும் பின்னழகும் முட்டவே கண்ணெதிரில்
  மோகினியாய் ஊர்வலமாம்! மோகவுளம் பக்தியின்
  தாகத்தில் ஆழும் தழைந்து! ... 3

  --ரமணி, 16/05/2014, கலி.02/02/5115

  *****

 5. #149
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,728
  Downloads
  10
  Uploads
  0
  ஆன்மீகச் செய்திக் கவிதை 8.
  வைகாசி 3

  இன்று சங்கடஹர சதுர்த்தி நாள்.

  சங்கடஹர சதுர்த்தித் துதி:
  இரண்டாம் சுதந்திரமாக அருள்!


  (அளவியல் இன்னிசை வெண்பா)
  பாரதம் பண்டைநெறிப் பண்பினில் ஆழ்ந்ததன்
  வேரது மீண்டும் விளைய கணேசா!
  உலகினில் முன்னோடும் உன்னத நாடாய்
  வலம்வரச் செய்திடு வாய். ... 1

  இரண்டாம்சு தந்திரமாய் எல்லாரும் தேவ!
  இரண்டென நின்றும் இணைந்திடும் அன்பில்
  வருநாளில் பாடுபட்டு வல்லரசாய் இந்தத்
  திருநா(டு) இலங்கவருள் செய். ... 2

  வெறுக்கையர் உள்ள வெறுமை யகல ... [வெறுக்கை = செல்வம்]
  சிறுவர் சிறுமியர் செம்மையில் வாழ
  இளையோர் அறத்தில் இழைய கணேசா!
  வளமுறச் செய்திடு வாய். ... 3

  *ஐங்கரனே நம்மக்கள் ஐம்புலன் கட்டுண்டே
  ஐங்குரவர் சொல்கேட்டே ஐம்பாலோர் நன்மைபேணி
  ஐந்தருவின் வாசமுறும் வாழ்வறம் துலங்கிடவே
  ஐந்திணையும் காத்தருள் வாய். ... 4

  "எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
  எல்லாரும் ஓர்நிறை" யென்றே விநாயக!
  இல்லார் குறைதீர்த் திருப்பார் நிறைசெய்ய
  அல்லலின்றி வாழ வருள். ... 5

  --ரமணி, 17/05/2014, கலி.03/02/5115

  பாடல் 4 பற்றிய குறிப்பு:
  ஐங்கரன் = பிள்ளையார்; ஐங்குரவர் = அரசன், ஆசான், அன்னை, தந்தை, மூத்த சகோதரன்;
  ஐம்பாலோர் = ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் வகைப்படும் உயிர்கள்;
  ஐந்தரு = சந்தானம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம், அரிசந்தனம் ஆகிய தேவலோக மரங்கள்;
  ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்கள்.

  *****

 6. #150
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,728
  Downloads
  10
  Uploads
  0
  ஆன்மீகச் செய்திக் கவிதை 9.
  வைகாசி 4

  கீழைத் திருப்பதி ஶ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதி எதிரில்
  ஶ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.

  அனுமன் திருமஞ்சனம்
  (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

  ஆழியைத் தாண்டி அருந்தொண்டு செய்தவன்
  கீழைத் திருப்பதிக் கேசவன் ஆலயத்தில்
  வீழுநீ ராடிடும் வீரன் அனுமனால்
  ஏழை மனங்குளிரு மே. ... 1

  அரனம்சன் அஞ்சனை மைந்தனவன் யோகி
  உருவெளியன் ராமனின் தூதன் சிறிய
  திருவடி மூலம் திருமால் அருளால்
  இருள்நீங்கி வாழ்தல் எளிது. ... 2

  புத்தி பலமும் புகழும் துணிகரமும்
  சத்திய ஞானம் சரீரநலம் சொல்வன்மை
  அத்தனையும் கைகூடும் அச்சமற்ற வாழ்வெனும்
  அத்தம் அனுமனால் ஆம். ... 3

  [அத்தம் = அருநெறி]

  --ரமணி, 18/05/2014, கலி.04/02/5115

  *****

 7. #151
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,728
  Downloads
  10
  Uploads
  0
  ஆன்மீகச் செய்திக் கவிதை 10.
  வைகாசி 5

  சங்கரன்கோவில் ஶ்ரீகோமதியம்மன் தரிசனம்.

  கோவில் விவரம்: http://temple.dinamalar.com/New.php?id=174

  கோமதியம்மன் தரிசனம்
  (சமனிலைச் சிந்து)

  சங்கனும் பதுமனும் தம்முள் - தாயே
  . சர்ச்சை புரிந்தது நன்றே
  சங்கர நாரணன் என்றே - தாயே
  . சர்ச்சையைத் தீர்த்துவைத் தாயே! ... 1

  சந்திர ஒளிமுகம் கொண்டே - தாயே
  . தவமிருந் தாயொரு காலில்
  இந்திர தேவரும் உன்னைத் -தாயே
  . நிரையுரு தாங்கியே காண! ... 2

  கோமதி பேரினைக் கொண்டாய் - தாயே
  . கோவிலில் மேவிய மர்ந்தாய்
  சேமமுன் நாமமும் தருமே - தாயே
  . சேவடி பணிந்தே வாழ்வோம்! ... 3

  திங்களில் தங்கபா வாடை - தாயே
  . திருவுரு தரிசனம் காண்போம்
  மங்கைநீ புட்பபா வாடை - தாயே
  . மங்கல வெள்ளியில் காண்போம்! ... 4

  நோயுடன் தோஶமும் போகத் - தாயே
  . உன்கழல் போற்றியே வாழ்வோம்
  சேயென எம்மைக் காத்தே - தாயே
  . சீர்பெறும் வகையருள் வாயே! ... 5

  --ரமணி, 19/05/2014, கலி.05/02/5115

  *****

 8. #152
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,728
  Downloads
  10
  Uploads
  0
  ஆன்மீகச் செய்திக் கவிதை 11.
  வைகாசி 6

  ஶ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு.
  சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

  பெருமாள் தரிசனம்
  (நேரிசை வெண்பா)

  பெரிய பெருமாள் பெயர்கொள் அரங்கன்
  கருவறை நீங்கி வருவன் - பெரியாழ்வார்
  வல்லியைக் கொண்டரங்க மன்னார் புறப்பாடு
  வில்லிபுத் தூரினில் இன்று.

  தோளுக் கினியானால் தூக்க உலாவரும்
  தாளைப் பணிந்தால் தகவுறும் - மூளும்
  வினையெலாம் சாத்தூரின் வேங்கடவன் ஆளும்
  கனிவில் மறையும் கரைந்து.

  --ரமணி, 20/05/2014, கலி.06/02/5115

  *****

 9. #153
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,728
  Downloads
  10
  Uploads
  0
  ஆன்மீகச் செய்திக் கவிதை 12.
  வைகாசி 7

  திருப்பதி ஶ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்

  நாரணன் நீராட்டு

  (அறுசீர் விருத்தம்: காய் மா மா ... விளம் மா மா)
  ஆகாய கங்கைத் தீர்த்தம்
  . ஆயிரம் கலசம் கொண்டே
  மாகாயம் மீது வார்க்க
  . மஞ்சனம் ஆடும் மாயன்
  காகோதம் மீது துயிலும் ... ... [காகோதம் = காகோதரம் = பாம்பு]
  . கடல்வணன் கோலம் காண
  மோகத்தைக் கொன்றே வாழ்வில்
  . யோகமே அருள்செய் வானே.

  கோவிந்தன் மூல உருவில்*
  . கோவணம் அணிந்து காலை
  ஆவிந்த னப்பால் கொண்டே
  . ஆடுவான் அதன்பின் மேனிக்
  காவந்த மாய்ப்ப ரிமளக் ... ... [காவந்து = காபந்து = பாதுகாப்பு]
  . காப்பினை யணிந்த பின்னர்
  ஆவிந்தன் தீர்த்த மாடி ... ... [ஆவிந்தன் = ஆவினம் மேய்க்கும் இடையன்]
  . அலங்கர ணம்கொண் டருள்வான்.

  [* http://prabanjaveliyil.blogspot.com/...ost_5843.html]

  கௌமாரி வைண விதேவி*
  . கவிந்ததோர் ஆற்ற லின்-கோ
  வைமாமன் மருகன் உறவின்
  . ஐக்கிய மாக உறைய
  மாமாங்கம் ஆண்பெண் இருவர் .. ... [மாமாங்கம் = மாமாவான மாலின் மேனி]
  . வாமமும் வலமும் காணும்
  தேமாவாம் சீனி வாசன் ... ... [தேமா = தித்திப்பு மாமரம்]
  . திருமலை அருள்வான் பேறே.

  [* http://mahaperiyavaa.wordpress.com/2...மா-த/]

  --ரமணி, 21/05/2014, கலி.07/02/5115

  *****

 10. #154
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,728
  Downloads
  10
  Uploads
  0
  ஆன்மீகச் செய்திக் கவிதை 13.
  வைகாசி 8

  சுவாமிமலை ஶ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

  பத்தனென ஆட்கொள்வாய் சுப்பையா!
  (தரவு கொச்சகக் கலிப்பா)

  அப்பனுக்குப் ஓங்காரப் பாடம்சொன்ன சுப்பையா!
  அப்பொருளின் ஆதார அதிர்வெனக்கே எப்பய்யா?
  ஒப்பில்லாத சுவாமிமலை ஒண்பொருளே சுப்பையா!
  எப்பவுமே நான்செய்யும் எத்தனமேன் தப்பய்யா?

  சத்திமகன் சத்திமூன்று சமையுமந்த வயிரவேல்!
  நத்தகத்தின் எண்ணமதில் நின்றொளிரும் ஞானவேல்! ... [நத்தகம் = நத்தும் அகம் = விழையும் மனம்]
  வித்தகத்தின் தத்துவமாய் வீற்றிருக்கும் வெற்றிவேல்!
  பித்தகத்தன் என்றனுக்கோ எத்தனையோ கருமுள்வேல்!

  அத்தன்சேய் நத்தாயோ மத்தனெனை முருகையா!
  வித்தமெனக் காண்பதெலாம் வீணான சருகையா!
  சித்த-மதில் உன்வேலால் சிதைப்பதுதான் எப்பய்யா?
  பத்தனென ஆட்கொள்வாய் பரிவுடனே சுப்பையா!

  --ரமணி, 22/05/2014, கலி.08/02/5115

  *****

 11. #155
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,728
  Downloads
  10
  Uploads
  0
  ஆன்மீகச் செய்திக் கவிதை 22.
  வைகாசி 18

  பத்ராச்சலம் ஶ்ரீராமபிரான் புறப்பாடு

  கோவில் விவரம்:
  http://ta.wikipedia.org/wiki/பத்திராசலம்_கோவில்

  இராமரின் அருட்காப்பு

  கணபதி துதி
  சதுர்த்தி புனர்பூ சநட்சத் திருநாள்
  சதுரனாம் சீதைக்கேள் சத்திய ராமனின்
  பத்திராச லம்கோலம் பற்றிநான் பாடவே
  அத்தன் மகனே அருள்.

  இராமர் துதி
  (எழுசீர் விருத்தம்: கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
  . விளம் விளம் காய்)


  பத்திரர்க் கருள்செயச் சங்கொலிச் செவியுற
  . பத்தரின் எதிரிலே நாற்கரமாய்
  பத்திரம் தனுசுடன் ஏந்திய இருகரம்
  . அச்சுதன் திகிரிசங் கிருகையிலே
  சத்திய அனையவள் சீதையோர் மடியிலே
  . தம்பியாம் இலக்குவன் இன்னொன்றில்
  நித்திய கதியினைத் தந்தவர் மகிழவே
  . பத்திர மலையினில் மேவினனே.

  [பத்திரம் = அம்பு; திகிரி = சக்கரம்; அனை = அன்னை]

  போகல தமக்கையின் சொப்பனம் உறுத்தவள்
  . புற்றினில் ஐயனைக் கண்டனளே
  ராகவன் அடியவர் பக்தரா மதாசனும்
  . அரசினர் வரிப்பணம் கையாண்டே
  வாகுடன் எழுந்தவோர்க் கோவிலை அமைத்தவர்
  . வரையிலாத் துயருறச் சிறைப்பட்டார்
  ராகவன் இலக்குவன் மன்னனின் முஹர்களாம்
  . ஆறுலட் சம்தொகை மீட்டனரே.

  ராமனின் திருவிளை யாடலை உணர்ந்தமன் ... [மன் = மன்னன்]
  . அத்தனை பணத்தையும் தாள்வைத்தே
  ராமதா சரைவிடு வித்திடப் பொறுத்தவர்
  . நாணயம் இரண்டினைக் கைக்கொளவே
  ராகவன் சபையிலே இன்றுநாம் இரணிய
  . நாணயம் இருப்பது காணுவமே
  ராகவன் கருணையாம் சாகர மெனவர
  . யாதொரு பேதமும் காணாதே!

  தந்தைசொல் மிகுந்தொரு மந்திரம் எதுவெனத்
  . தாயினும் சிறந்திலைக் கோவிலென
  வந்தவர் உடன்பிறந் தோரினும் பெரியவன்
  . அன்னவர் தந்தையாய்ப் பேணுதலும்
  வந்தவோர் மனைவியின் இன்னொரு துணையிலை
  . வந்துதாள் பற்றியர் நலன்காப்பே
  எந்தவோர் தருமமும் இல்லையே இதனினும்
  . என்றசொல் ராமனின் பேர்சொலுமே.

  --ரமணி, 01/06/2014, கலி.18/02/5115

  *****

 12. #156
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  15 Jan 2013
  Posts
  1,078
  Post Thanks / Like
  iCash Credits
  53,728
  Downloads
  10
  Uploads
  0
  ஆன்மீகச் செய்திக் கவிதை 23.
  வைகாசி 19

  திருவாதவூர் ஶ்ரீ திருமறைநாதர் உற்சவாரம்பம்

  கோவில் விவரம்:
  http://temple.dinamalar.com/New.php?id=701

  தீனனுக் கருள்வாய் திருவாத வூர!
  (பதினாறு சீர் விருத்தம்: காய் மா--காலடி)

  அகங்கார வாதம் அகம்பிரம வாதம்
  . அசற்கார்ய வாதம் அனுவேது வாதம்
  . . அனேகாந்த வாதம் அனேகான்ம வாதம்
  . . . அஸ்திநாஸ்தி வாதம் ஆரம்ப வாதம்
  இகம்கார ணமென இதுபோன்ற வாதம்
  . இகல்கொண்டு வாழ்வில் எதிரெதிர் மோதிச்
  . . சிகைபற்றி யாடும் சதிராட்ட வேடம்
  . . . இடமாகும் உள்ளம் எதும்வேண் டிலேனே
  உகந்தேனுன் தாள்தான் திகட்டாத தேனாய்
  . உருத்தேற நானும் சிறுத்தேனென் ஊனில்
  . . உளமொன்று மட்டும் களமென்று பட்டே
  . . . ஒறுத்தேதான் வாழும் விழைந்தேதான் வீழும்
  திகம்பரனாம் நீயே சிதம்பரமாம் வெளியாய்த்
  . திக்கற்ற என்னுள் திருப்பாதம் காட்டித்
  . . திறமெல்லாம் போக்கித் திருஞானம் ஊட்டித்
  . . . தீனனெனக் கருள்வாய் திருவாத வூர!

  குறிப்பு:
  பல்வேறு தர்க்க வாதங்கள்:
  அகங்கார: தான் எனும் உணர்வே பிரம்மம் என்பது;
  அகம்பிரம்ம: நானே பிரம்மம் என்பது;
  அசற்கார்ய: உற்பத்திக்கு முன் இல்லாமலே காரியம் தோன்றும் என்பது;
  அனுவேது: பரமாணுக்களே பிரபஞ்ச காரணம் என்பது;
  அனேகாந்த: ஏழுவகை நியாயம் என்னும் சமணவாதம்;
  அனேகான்ம: ஆன்மாக்கள் பல உண்டு என்பது;
  அஸ்திநாஸ்தி: உண்டு இல்லை என்பது;
  ஆரம்ப: முதற்காரணம் இல்லாமலே காரியம் தோன்றும் என்பது.

  --ரமணி, 02/06/2014, கலி.19/02/5115

  *****

Page 13 of 23 FirstFirst ... 3 9 10 11 12 13 14 15 16 17 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •