View Poll Results: கதைப்போட்டி 06 வாக்கெடுப்பு

Voters
36. You may not vote on this poll
    The results in this poll are hidden.
  • தகுதியுடையவை தழைத்தோங்கும்

    The results are hidden 0%
  • கடவுளும் மனிதனும்

    The results are hidden 0%
  • நான் சொல்வதெல்லாம் உண்மை...

    The results are hidden 0%
  • தீர்ப்பு

    The results are hidden 0%
  • அண்ணி என்றால்...

    The results are hidden 0%
  • சந்தேகம்

    The results are hidden 0%
  • புரிதல்...

    The results are hidden 0%
  • பந்தா !

    The results are hidden 0%
  • வீரபத்திரன் ...

    The results are hidden 0%
  • அரளிப்பூக்கள்

    The results are hidden 0%
  • எதார்த்தம்

    The results are hidden 0%
  • காதல் பண்பாடு

    The results are hidden 0%
  • “பச்சை நிறமே இல்லை.”

    The results are hidden 0%
  • மாற்றாள்

    The results are hidden 0%
  • மாயை

    The results are hidden 0%
  • நானும்,ஜெயனும்,திருச்சியும்.

    The results are hidden 0%
  • அன்பு சம்ராஜியம்

    The results are hidden 0%
  • மாமன் மகள்

    The results are hidden 0%
  • உண்மைகள் தெளிவாகும் போது …

    The results are hidden 0%
  • கடவுள்களின் முகவரி

    The results are hidden 0%
  • செல்போன்

    The results are hidden 0%
  • காதலுக்கு உருவம் உண்டு

    The results are hidden 0%
  • பிராயச்சித்தம்

    The results are hidden 0%
  • தண்ணீர்

    The results are hidden 0%
  • சக்ரவியூகம்

    The results are hidden 0%
  • ஆசான்

    The results are hidden 0%
  • சில நிஜங்கள்

    The results are hidden 0%
  • கடைசி வரை...

    The results are hidden 0%
  • யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா?

    The results are hidden 0%
Multiple Choice Poll.
Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 59

Thread: கதைப் போட்டி 06 - வாக்கெடுப்பு

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    கதைப் போட்டி 06 - வாக்கெடுப்பு

    அன்பார்ந்த தமிழ்மன்ற உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்

    உண்மையிலேயே இது எங்களுக்கு இன்பஅதிர்ச்சி தான். பின்ன போட்டி அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாய் கதைகள் ஏதும் வராத நிலையில் கடைசி இரு நாட்களில் கதைகளாய் குவித்து திக்குமுக்காட செய்தால் ஆனந்த அதிர்ச்சி கொள்ளாமல் என்ன செய்வது?


    போட்டிக்கு மலை போல் வந்து குவிந்த கதைகள் : 32




    'மன்ற உறுப்பினர் மட்டுமே போட்டியில் பங்கு கொள்ளலாம்' என்ற விதிப்படியும் தங்கள் மன்றப்பயனர் பெயரைத் தெரிவிக்காததாலும் மூன்று சிறுகதைகள் நிராகரிக்கப்பட்டு மொத்தம்
    29 சிறுகதைகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    இனி உங்கள் ஆரவாரம் தொடங்கட்டும். இந்தத் திரியில் 29 கதைகளும் பதியப்படும். மன்ற மக்கள் படிப்பதற்காக இருவாரங்கள்.

    நவ. 7 ம் தேதியன்று வாக்குப்பெட்டிகள் திறக்கப்படும். கதைகள் நிறைய இருப்பதால் ஒவ்வொரு உறுப்பினர்க்கும் 4 வாக்குகள். தங்களுக்குப் பிடித்த நான்கு கதைகளுக்கு வாக்களிக்கலாம். ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். நான்கு வாக்குகளுக்கு அதிகமாகவோ குறைவாகவோ வாக்களித்தால் அவை நிராகரிக்கப்படும். எண்ணிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சரி தானே?

    போட்டிக்கான கதைகளைப் பற்றிய விமர்சனங்களை மன்றத்தின் எந்தப்பகுதியிலும் போட்டி முடியும் வரை பதியவேண்டாம். அத்தகைய பதிவுகள் நீக்கப்படும். உறவுகள் வசதிக்காக இத்திரி மூடப்படுகிறது.

    கதைப்போட்டிக்கான வாக்களிப்பு முடியும் கடைசி நாள் :
    30-நவம்பர்-2012

    சிறுகதைகள் கடலில் முத்துக்களெடுக்க தயாராகுங்கள்..!
    Last edited by மதி; 07-11-2012 at 08:53 AM.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    தகுதியுடையவை தழைத்தோங்கும்

    தகுதியுடையவை தழைத்தோங்கும்

    ஆசிரியர் பரிணாம வளர்ச்சியைப் பற்றி வகுப்பில் விளக்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு காலத்தில் வாழ்ந்த விலங்குகள் பற்றியும், அவற்றின் தகவமைப்பு காலத்திற்கேற்ப மாறியதையும் சுட்டிக்காட்டினார். ஒருகாலத்தில் வாழ்ந்த மிருகங்கள் அடுத்த காலகட்டத்திற்கு முன்னேற முடியாமல் அழிந்தது பற்றியும் ,சில வகையான மிருகங்கள் மட்டுமே எல்லா காலத்திற்கும் தொடர்ந்தது என்பதையும் விவரித்துக்கொண்டிருந்தார்.

    எப்படி சில மிருகங்கள் மட்டும் எல்லா காலத்திற்கும் தொடர்ந்தன ? தொடர்கின்றன? ஏன் டைனோசரஸ் போன்ற பெரிய மிருகங்கள் தற்போதும் வாழ முடியாமல் அழிந்தன? இதுபோன்ற கேள்விகள் கதிரவனின் மனதில் ஓடலாயின. அதற்கு ஆசிரியர், எந்தவொரு மிருகம் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்கிறதோ, அதுவே தொடர்ந்து வாழும். டைனோசரஸ் போன்ற விலங்குகள் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் தங்களுடைய பெருத்த உருவம் காரணமாக தப்பிக்கமுடியாததையும்; மரங்கள்,செடிகள் போன்ற தங்களுடைய உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் ஒட்டகங்கள் உயிர்வாழ அவைதம் கழுத்துகள் நீட்டப்பட்டதையும்; குரங்குகள் தங்கள் தகவமைப்பைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டதாலேயே அவைதம் பரிணாமம் மனிதனாக மாறி உலகை ஆட்டுவிப்பதையும் விளக்கினார். ஆகவே தகுதியுடையவை தப்பிப்பிழைக்கும் என்ற பாடத்தை மனதில் கொண்டே வளரலானான் கதிரவன்.

    எப்போதும் படிப்பில் முதலாவதாக வந்தான்.யாரேனும் சந்தேகம் என்று கேட்டால் அவர்களுக்கு சொல்லித்தராமல் புறக்கணிப்பான். விளையாட்டில் மற்றவர்களை எப்படியாவது முந்தி வெற்றிபெற்றுவிடுவான். ஏனென்று கேட்டால், அவர்களுக்கு தகுதியிருந்தால் சொந்தமாக படித்து, சொந்தமாக முயன்று வெற்றிபெறவேண்டும் என்பான். தன்னுடைய தகுதிக்கேட்பவே நட்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்று, தகுதி குறைந்தவர்களை ஒதுக்கி நண்பர் வட்டாரத்தையும் குறைத்துக்கொண்டே வந்தான்.

    படித்து முடித்து , ஒரு நல்ல அலுவலகத்தில் பணியிலமர்ந்தான். அலுவலகம் சிறு சிறு அணிகளாக வகுக்கப்பட்டிருந்தது. அவனுடைய அணியில் அருணும் ஒருவனாக இருந்தான். அவன் சற்று கூச்ச சுபாவமுடையவன். ஒருமுறை அணித்தலைவர் , அணியை திறம்பட செயல்படுத்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த ஆலோசனை அனைவர் முன்னிலையிலும் விவாதிக்கப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்தார். அருண் தனக்கு தோன்றிய யோசனையை கதிரவனிடம் கூறினான். ஏனெனில் அவனுக்கு அனைவர் முன்னிலையிலும் பேசுவதற்கு தயக்கம் இருந்தது. ஆனால், கதிரவன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அருணின் யோசனையை அனைவர் முன்னிலையிலும் கூறி பாராட்டையும் சிறந்த யோசனைக்காக பதவி உயர்வும் பெற்றான். தன்னைக் கேள்வி கேட்ட அருணுக்கு, தகுதியுடையவை மட்டுமே தழைத்தோங்கும் என்று பதிலளித்தான்.
    ஒருமுறை தனது அணியோடு அருணும், கதிரவனும் ஒரு காட்டுக்கு சுற்றுலா செல்ல நேரிட்டது. காட்டின் ரம்மியத்தை வியந்து அனுபவித்துக்கொண்டிருந்தபோது ஒரு புலி அவர்களை நோக்கி பாய்ந்தது. எல்லாரும் ஆளுக்கொரு திசையில் தெறித்து ஓட அருணும், கதிரவனும் ஒருதிசையில் ஓடினர். புலியும் அவர்கள் திசையை நோக்கி ஓட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் இருவரும் பிரிந்து ஓட, புலி கதிரவனை நோக்கி முன்னேறியது. அவனை கடித்துகுதற எத்தனித்த வேளையில், அருண் அங்கிருந்த மரக்கட்டையைக் கொண்டு புலியை அடித்து விரட்டினான்.

    அப்போதுதான், கதிரவன் சிந்திக்கலானான். ஏன் அருண் தன்னுடைய உயிரை பொருட்படுத்தாமல் நம் உயிரைக் காக்க வேண்டும். மிருகங்கள் மட்டுமே , தாம் உயிர்வாழ மற்ற விலங்குகளை வீழ்த்தி , அழித்து வாழும். ஆனால், மனித குலம் தழைத்து விளங்குவதற்கு, அன்பு என்ற ஒரே தகுதிதான் தொன்றுதொட்டு தொடர்ந்துவருகிறது என்பதை அறிந்து மனதில் நிறுத்திக்கொண்டான். இனி மனித குலம் தழைத்தோங்க அன்பு என்ற ஒரே தகுதி போதும் என்பதில் கதிரவனுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் ஐயமிருக்காது.

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    கடவுளும் மனிதனும்

    கடவுளும் மனிதனும்

    தெருவெங்கும் மழை பெய்து சேறும் சகதிமாய் இருந்தது. நேற்று இரவு பெய்த கன மழை இன்றும் தொடர்ந்தது, அதை மழை என்று கூட சொல்லமுடியவில்லை, ஒரு சமயம் தூறலாகவும்.. மறு சமயம் சாரல் மழையாய்... பன்னீர் தூவுவதைப் போல தூறிக்கொண்டு... தெருவின் தரையை மண்ணோடு மழை நீர் கலந்து நசநசப்பை உண்டுபண்ணி அனைவருக்கும் புழுகத்தை உண்டாக்கியதே தவிர.. அந்த மழையால் கிஞ்சித்தும் பயனும் இல்லை.

    தி.நகரில் உள்ள அந்த பரபரப்பான கடைவீதி.... சாலையில் மழைநீர் மண்ணோடு கலந்து சிறு ஒடையாய் செல்ல... மக்கள் தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை உயர்த்திப் பிடித்தும்.... லாவகமாக தங்கள் கால்களை அடியெடுத்து வைத்து ஆடையில் சேறு படாதவாறு தாண்டிக் குதித்தபடி அவரவர் அவசரத்திற்கு தகுந்தவாறு நடை போட்டு சென்று கொண்டு இருக்க... சிறு குழந்தைகளோ தங்கள் கால்களை தண்ணீரில் நனைத்து குதியாட்டம் போட்டபடி அவர்கள் பின்னால் நடக்க.. ஒரு சிலர் குழந்தைகளை தங்கள் கண்களால் உருட்டியும் அவர்களை குரலால் அதட்டியும் மிரட்டியும் ஒழங்காக நடந்து வர கட்டளையிட்டு கொண்டு இருந்தனர்... வேறு சிலரோ குழந்தைகளை தோளிலும் இடுப்பிலும் சுமந்தபடி கைகளில் வாங்கிய பொருட்களின் பைகளை தூக்க முடியாமல் முணுமுணுத்தபடியே சென்று கொண்டிருக்க....

    அந்த மழை நாளிலும் தி.நகரில் கூட்டம் அலைமோதியது... இந்த விலைவாசி ஏற்றத்திலும் எப்படித்தான் மக்கள் பெருமளவில் வந்து பொருட்களை வாங்கிச் செல்கிறார்களோ... பார்த்துக்கொண்டு இருந்த முருகனின் மனமோ எதிலும் லயிக்காமல் தன் ஆட்டோவில் அமர்ந்தபடி தெருவில் நடப்பதைக் கண்களால் பார்த்து... மனதால் அடுத்த சவாரியின் வருக்கைக்காக காத்துக் கொணடிருந்தான்.
    அவனுக்கு வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தது... உழைத்து உழைத்து உடல் தளர்ந்து கண்களில் கருமையும் கன்னத்தில் சுருக்கமுமாக அவன் வயதை அனைவருக்கும் பறைசாற்றியது. சிறு வயதில் படிப்பு ஏறாததால் ஏதோதோ வேலை செய்து... கடைசியில் சொந்தமாக ஆட்டோ வாங்கி கடந்து ஏழெட்டு ஆண்டுகளாக ஓட்டிக் கொண்டுவருகிறான்.

    குடும்பம் என்று சொல்வதற்கு மனைவியும் ஒரு மகளும் இருந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன் தான் மகளுக்கு தன் வசதிக்கு ஏற்ற ஒரு கார் மெக்கானிக்கை திருமணம் செய்து வைத்தான். இதுநாள்வரைக்கும் வாழ்க்கை நிமமதியாயாக் கழிய... தற்பொழுது மகள் தலை பிரசவத்திற்காக வந்திருப்பதும்... பிரசவத்திற்கான நாளும் அடுத்த இரண்டு தினங்களுக்குள் இருப்பதும்... அவளுக்கு நல்லபடியாக பிரவசம் நடக்க வேண்டும் என அவன் மனம் விரும்பதும்... ஒரு தந்தையாய் அவனை கவலை கொளளச் செய்தது..
    ‘ஆட்டோ... திருவான்மியூர் வருமா....’

    குரல் கேட்டு நினைவு திரும்பியவன்... அங்கு ஒரு கனமான பெண் நிற்க.... அந்தப் பெண்ணின் அருகில் மேலும் இருவர் நின்று கொண்டு இருந்தனர்.

    ‘வரும்மா.... ஏறிக்கோங்க... எததனை பேரு....’

    அவளுடன் மற்றோரு இளம்பெண்... அடுத்து ஒரு வாலிப வயதை அடைந்த பையன்.. அனேகமாய் அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணின் பிள்ளைகளாய் இருக்க வேண்டும்... அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு இரண்டு கைகளில் நகைக்கடைப் பையையும்.. துணிக்கடைப் பையுமாக இருக்க.... அந்தப் பெண்ணோ தன் கையில் அந்த மழையிலும் ஐஸ்கிரீம்மை சுவைத்துக் கொண்டு இருந்தாள்.
    ‘மூணு பேரு... எவ்வளவு ஆகும்...’

    அவர்களை ஏற இறங்கப் பார்த்தான்... பூசிய உடம்பும்... கழுத்தில் மின்னிய நகைகளையும் அணிந்திருந்த உயர்ந்த ரக ஆடைகளை அளவுகோளாக வைத்து அவர்களின் வசதியை கண்களால் ஆராய்ந்தவன்...

    ‘முன்னூறு ரூபா ஆவும்மா...’

    ‘என்னது... முன்னூறு ரூபாவா... ஆட்டோவில போறத்துக்கு கால் டாக்ஸில போயிடலாம் போல இருக்கே... அநியாமாய் இருக்கே.. நீ கேக்கறது...’

    ‘என்னம்மா பண்றது... பெட்ரோல் வெல ஏறிடுச்சு... நாங்க என்ன பண்ணமுடியும்... வாங்கறது பாதி பணம் பெட்ரோலுக்கே சரியாவுது...’
    ‘இருநூறுற்று அமபது தரேன்... அதுவே அதிகம்... வரமுடியும்மா...’

    ‘என்னம்மா... இப்படி கத்திரிக்காய் வாங்கற மாதிரி அம்பது ரூபாய அப்படியே கொறச்சா... என்ன பண்றது... ஒரு இருபத்தஞ்சு சேர்த்துக் கொடுங்க... ‘

    மனதில் முனகியவாரே அந்தப் பெண்மணியும் மற்ற இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள... ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான், பல சந்து பொந்துகளில் நுழைந்து வெங்கட் நாராயண சாலையை அடைந்தான்... அப்படியே தேவர் சிலை வழியே நுழைந்து... கோட்டூபுரம் வழியாய்... அடையார் செல்வதாய் மனதில் நினைத்து சிக்னலுக்காக காத்து இருக்க...

    ‘ஏய்யா... போண்ணோட மாமியார் வீட்ல சொன்னது ஞபகமிருக்கா...’

    முருகன் அப்பொழுதான் தூங்கி எழுந்தான்.... தன் முகத்தை கழுவ வாசலுக்கு வர.. அந்த அதிகாலை வேளையிலே அவன் மனைவி மல்லிகா அந்தப் பேச்சை ஆரம்பிக்க...

    ‘ம்ம்ம்... இருக்கு’ ஒற்றை வார்த்தையை பதிலாய் சொன்னான்

    ‘அதுக்கு என்ன முடிவு எடுக்கப் போற’

    ‘துட்டு பொறட்டனும்.... யாரைப் போய் கேக்கறதுன்னு தெரியல... அவ கல்யாணக் கடனே இன்னும் இருக்கு.... இதுல... பிரசவ செலவு எவ்வளவு ஆகுமுன்னு வேற தெரியல... அதுக்குள்ளே பொறக்கப் போற கொழந்தைக்கு அரை சவரன்ல செயின் போடனும்னா சொன்னா நான் என்ன தான் பண்றது... அதான் யோசிக்கறேன்’

    ‘இப்படி யொசிச்சுக்கிட்டே இருந்தா.. தானா வந்திடுமா.. எதையாவது அடமான்ம் கிடமானம் வச்சாவது சீர் செய்யனும்... அதுதானே நமக்கு மரியாதை’

    ‘என்னத்த வைக்கறது... சொத்துன்னு ஒன்னு இருந்தா தானே அடமானம் வைக்க...’

    அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது... கடைசியாக அவள் கழுத்தில் இருந்த அரை சவரன் தாலியும் மகள் திருமணத்திற்கு அடமானம் வைத்து மீட்க முடியாமல் போய்விட்டது.

    அவள் கழுத்தில் வெறும் மஞ்சள் துண்டைத்தான் கட்டிக் கொண்டு இருக்கிறாள்.

    ‘எதையாவது செஞ்சிதான் சீர் பண்ணனும்... ஒத்த புள்ள.. அதுவும் பொண்ணா இருக்கு.. அது கூட செய்யலனா.. அவ நல்லா வாழனும் இல்லையா..’

    ‘கேக்க நல்லதான் இருக்கு.. தெனமும் அலைந்சிட்டு தானே இருக்கேன்.. வர்ற வருமானம் கைக்கும் வாய்க்குமே சரியா இருக்கு... எல்லா எடத்திலேயும் கடன வாங்கியாச்சு.. பாக்கலாம் கடவுள் நல்ல வழிய தராமவா போகப் போறாரு..’

    முருகனுக்கு கெட்ட பழக்கம் என்று எதுவும் இல்லை.. எப்போவாவது குடிப்பதோடு சரி.. அதையும் டாக்டரின் அறிவுறையால் கடந்த சில நாட்களாக விட்டு விட்டான்.

    இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பேச... பேச்சு இழுத்துக் கோண்டே சென்றதே தவிர... ஒரு முடிவும் கிட்டியபாடுதான் இல்லை.
    பேசிக்கொண்டு இருப்பதில் எந்தப் பிரயோஜனும் இல்லை.. நினைத்தவன்... சவாரிக்கு சென்றாவது நாலு காசு சம்பாதிக்கலாம் என்று வீட்டை விட்டு அப்பொழுதே கிளம்பியவன் தான்...

    காலையிலிருந்து தனக்கு தெரிந்தவரிடம் எல்லாம் பணத்தைக் கேட்க... பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை...ஒவ்வொருவரும் அவரவர் பஞ்சப்பாட்டை பாட... விதியை னொந்தபடி.. ஆட்டோவில் அமர்ந்திருந்த போதுதான் இந்த சவாரி கிடைத்தது...
    ‘அம்மா நாம பார்த்தோமே அந்த மூணு அடுக்க வச்ச செயின் ரொம்ப நல்லா இருந்துச்சி.. அத வாங்கி இருக்கலாம்... நீதான் அவசரப்பட்டு இத வாங்கிட்டே’ ஆட்டோவில் இருந்த மகள் சொல்ல.

    ‘அது எதுக்கடி இப்ப.. பொண்ணு பாக்கத்தானே வராங்க.. நிச்சியதார்த்ததுக்கு அந்த மாதிரி வாங்கிட்டாப் போகுது.. உனக்கு இல்லாம யாருக்கு வாங்கித் தரப் போரேன்’

    ‘அக்காவுக்கே கேட்டது எல்லாம் வாங்கித்தர... எனக்கு அக்கா கல்யாணத்துக்கு பத்து செட் ட்ரெஸ் வேணும்மா...’
    ‘சரிடா செல்லம்... வாங்கித் தரேன்...’

    அவர்கள் பேச்சு முருகனின் காதில் விழத்தான் செய்தது... ஒருபக்கம் பணம் குவிந்து கிடப்பதும்... மறுபக்கம் அதே பணத்துக்கு மனிதர்கள் ஆளாய் பறப்பதும்.. ஆண்டவனின் லீலைகளில் ஒன்றா... அல்லது விதியின் விளயாட்டா.. தன் கவனத்தை ரோட்டின் மீது வைத்து ஆட்டோவை ஓட்ட..

    ஆட்டோ அடையாறை நெருங்கியது... மழை வேகம் பிடிக்க... அது மேலும் வலுத்து பெரு மழையாய் வெளுத்து வாங்கியது... ஒருவழியாக திருவான்மியூரில் அவர்கள் அபார்ட்மென்ட்டின் வாயிலில் இறக்கியவன்... சவாரிக்கான பணத்தைப் பெற்று...
    திரும்பவும் எதாவது சவாரி கிடைக்காத என்று ரொட்டோரம் மெதுவாக வண்டியை செலுத்திய போதுதான் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது..

    பக்கத்தில் அவனுக்கு தெரிந்த சேட்டிடம் தன் ஆட்டோவை அடமானம் வைத்து... பணத்தை வாங்கலாமென்றும்... அந்தப் பணத்தை தன் மகளின் பிரவச செலவுக்கும் அரை சவரன் தங்கச் செயினுக்கும் வைத்து கொள்ளலாமென்றும்... எற்கனவே பலமுறை அந்த சேட்டிடம் அடமானம் வைத்து, அவரிடமே வாடகைக்கு ஆட்டோவை ஒட்டியிருக்கிறான்.. யோசித்தபடியே ஆட்டோவை சேட்டு கடையை நோக்கித் திருப்ப...

    அவன் பாக்கெட்டில் இருந்து செல்போன் அலறியது...

    ‘அப்படியா... இதோ வீட்டுக்கு வறேன்...’

    தன் மகளுக்கு பிரசவ வலி வந்துவிட்டதாக மனைவி கூற.. ஆட்டோவை தன் வீட்டிற்க்குத் திருப்பினான்.

    மகளையும் மனைவியையும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்... மகளோ வலியால் துடிக்க...பெற்றவர்களின் மனம் கலங்கியது.

    அவளை பரிசோதித்த டாக்டர்....

    ‘குழந்த தலை மாறி இருக்கு... தொப்புள் கொடி வேற சுத்திக்கிட்டு இருக்கு... ஆபரேஷன் தான் செய்யனும்.. என்ன சொல்றீங்க..’

    ஆபரெஷன் என்றதும்... மல்லிகா அழத் தொடங்கிவிட்டாள்...

    ‘வேற வழியே இல்லையா...டாகடர் ‘

    அப்பாவியாக முருகன் கேட்க...

    ‘ரெண்டு உசிரையும் காப்பாத்தனும்னா.. ஆபரெஷன் செய்யறத தவிர வேற வழி இல்ல..’

    முருகனும் அவன் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கோள்ள..

    ‘சரி டாக்டர்... சீக்கிரம் அதற்கான ஏற்பாடு பண்ணுங்க’

    ‘ஆபரேஷன் செய்யறதுக்கு இன்னும் 14 பேரு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.... அவங்களுக்கு முடிஞ்சப்புறம் தான் உங்க முறை வரும்...’

    அந்த அரசு டாக்டர் அலட்சியமாய் சொலலியபடி அடுத்த பேஷன்ட்டை பார்க்க சென்று விட...

    ‘நான் அப்பவே சொன்னேன் கேட்டியா... தனியார் ஹாஸ்பிடல் போகலாம்ன்னு கொழந்த வேற வலியால துடிச்சுகிட்டு இருக்கா...இப்ப போய் காச பாத்திட்டு இருக்கியே..

    ‘கொழந்த நல்லபடியா பொறந்தா மாரியாத்த கோவிலுக்கு பொங்க வைச்சு... படையல் வச்சு.. மஞ்ச சேலைய சாத்தறேன் தாயே.’ தன் புடவைத் தலைப்பால் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி கன்னத்தில் போட்டுக் கொண்டாள் அவள்.

    மனைவி சொல்வதுதான் அவனுக்கும் சரியென்று பட்டது... அவசர அவசரமாக இருவரையும் ஆட்டோவில் ஏற்றி பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

    அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்.. ‘மொதல்ல அட்வான்ஸ் பணம் கட்டுங்க.. அப்புறம் தான் பெட்டில் சேர்கக முடியும்’ என்று கூற...
    மனைவியையும் மகளையும் ஹாஸ்பிடல் வரான்டாவில் விட்டு... பணத்திற்காக.... அந்த சேட்டிடம் செல்ல வெளியே வந்தான்...
    மழை நின்று.. வானம் தெளிவானது கண்டு... ஆட்டோவின் இருபுறமும் உள்ள மறைப்பை மேலே தூக்கி கட்ட நினைத்து அதைக் தூக்கி கட்டும்போது தான் அதை கவனித்தான்.. பின் சீட்டின் அடியில் ஏதோ பளபளப்பாக மின்ன... குனிந்து எடுத்தவன்... அது தங்கச் செயினாய் இருக்க..

    கிட்ட தட்ட முன்று சவரன் இருக்கும்... யார் விட்டு சென்றது என்று பலவாறு யோசித்தவன்... கடைசியாக ஆட்டோவில் சென்றவர்களை எல்லாம் நினைவு படுத்திப் பார்த்தான்... தி.நகரில் ஏறிய அந்த குடும்பமாக இருக்குமோ... அவர்களை தான் சிறிது நேரத்திற்கு முன் வீட்டில் இறக்கி விட்டேன்... எதற்கும் அங்கே தானே செல்கிறோம்... ஒரு எட்டு சென்று கேட்டு விடலாம்.. அப்படி அவர்களது இல்லை என்றால் பின்னர் போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடலாம்...

    அவனுக்கு இருக்கும் நெருக்கடிக்கு அந்த நகை போதுமானதுதான் என்றாலும்.... அவன் அடுத்தவர் பொருள் மேல் ஆசைப்படுவனும் அல்ல... முதலில் அவர்களிடம் கொடுத்து விட்டு பின்னர் சேட்டிடம் செல்லலாம் என்று ஆட்டோவை அந்த அபார்மென்ட் நோக்கி ஓட்டினான்...

    அபார்ட்மென்ட்டை நெருங்கிய உடன் தான் கவனித்தான்... வீட்டின் வாசலில் ஒரு போலிஸ் வண்டி நிற்பதை... அதற்குள்ளாகவா போலிஸில் புகார் செய்து விட்டார்கள்... அல்லது அந்த அபார்ட்மென்டில் வேறு எதாவது வீட்டில் பிரச்சனையோ... மனதில் பலவாறு நினைத்தபடியே...

    வாசலில் ஆட்டோவை நிறுத்தி.... அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்த... கிராப் வெட்டிய...ஒரு வாட்ட சாட்டமான ஆள்... தடி மீசையுடன் கதவை திறந்தார்.

    ‘சார்... நான் ஆட்டோ டிரைவர்... இந்த வீட்ல இருக்கிறவங்க என்னோட ஆட்டோவில தான் தி.நகர் இருந்து சவாரி வந்தாங்க... அந்த அம்மாவை கொஞ்சம் கூப்பிட முடியுமா’

    ‘எதுக்கு’ அவர் குரலில் இருந்த ஏற்றம் அவனை கிலி அடையச் செய்தது... அதற்குள்ளாகவே... ‘யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க’ உள்ளேயிருந்து அந்த அம்மாவே வர...

    ‘வாங்கம்மா... இப்பத்தான் பார்த்தேன்... ஆட்டோவ துடைக்கும் போது... இந்த தங்கச் செயின. இது உங்களோடதா... பார்த்துச் சொல்லுங்க..’
    ‘பளார்’ என்ற அறை அவன் கன்னத்தில் விழ... அவன் காது கன்னம் எல்லாம் பொறி கலங்கியது... கன்னத்தில் கைவைத்தபடி வலி தாங்காமல் அப்படியே அமர்ந்து விட்டான்.

    ‘என்னடா... எத்தினி பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க.. ஆட்டோவில வர்ரவங்க நகையை அபேஸ் பண்ணறது... கொடுக்கிற சாக்கில... வீட்டுக்கு வந்து... நல்ல பேரு வாங்கி... கொடுக்கிற எதையாவது வாங்கிட்டு போறது.... அப்புறம் வீட்டையும் நோட்டம் விட்டு... கும்பலா வந்து.. கொள்ளை அடிச்சிட்டு போறது... ஒரு போலிஸ்காரன் வீட்டிலே உன் கைவரிசையை காட்றியா.... என்ன துணிச்சல்..’
    மீண்டும் அவனை அடிக்க கையை ஓங்க..

    ‘சார்... அப்படியெல்லாம் இல்ல சார்... நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க... சார்...சார்..‘

    அவன் சொல்லச் சொல்ல... அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து.. போலிஸ் வண்டியில் ஏற்றி... ஸ்டார்ட் செய்து போலிஸ் ஸ்டேஷனை நோக்கி விரைந்தார்...

    வண்டி செல்ல.. அவனுக்கோ வாங்கிய அடி உடம்பெல்லாம் வலிக்கச் செய்தது... சற்று தூரம் வண்டி சென்று இருக்கும்.... முருகனின் செல் போன் ஒலிக்க... பாக்கெட்டில் இருந்து காதில் வைக்க கூட முடியாமல் கை நடுங்கியது... மல்லிகா தான்...

    ‘பொண்ணுக்கு வலி வந்து... இப்பத்தான் பிரசவம் ஆச்சு... சுகப் பிரவசம்தான்..... வாய்யா சீக்கிரம் கொழந்தைய பார்க்க... அந்த மாரியாத்தாவே பொண்ணா பொறந்திருக்கா.. நான் கும்பிடற அந்த அம்மன் என்னை கைவிடல..’

    எங்கோ அசரீரியாய் மனைவி குரல் ஒலிக்க... அப்படியே... உட்கார்ந்த சீட்டினிலே மயங்கிச் சரிந்தான் முருகன்.

    (முற்றும்)

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    நான் சொல்வதெல்லாம் உண்மை...

    நான் சொல்வதெல்லாம் உண்மை...


    அன்று புதன்கிழமை. காலை 8.50 மணி. புதுச்சேரி.....

    வழக்கம் போல அலுவலகம் வந்தடைந்து, என் மேசையில் பையை வைத்துவிட்டு, வருகை பதிவேட்டில் குமரன் என்ற பெயருக்கு நேரே கையெழுத்திட்டேன். பிறகு எப்பொழுதும் போல அலுவலக நண்பர்களைப் பார்க்க கணினியறைக்கு விரைந்தேன். கணினி அறைக்கு வெளியில் செருப்பை கழற்றிவிடுவது வழக்கம். அறையின் கதவிலிருந்த கண்ணாடியினூடே நண்பர்களை கவனித்துக்கொண்டே செருப்பை வெளியில் விட்டுவிட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளேச் சென்றேன்.

    “வணக்கம் சார்“ என்று கூறிவிட்டு முருகன் சார் பக்கத்தில் அமர்ந்தேன். என்னைவிட வயதில் மூத்தவர் என்பதால் “சார்“ என்று கூப்பிட்டுதான் பழக்கம். அவரும் “வா குமரா“ என்றார்.

    “என்ன சார் இன்னைக்கு என்ன விசேஷம்“

    “ஒன்னுமில்லே குமரா“ என கூறியவர் சட்டென ஏதோ ஞாபகம் வந்ததைப்போல “குமரா நம் மனறத்தில் சிறுகதைப்போட்டி அறிவிச்சிருக்காங்க“ என்றார்.

    “என்ன தலைப்பு சார்“

    “தலைப்பெல்லாம் ஏதும் இல்ல, நம்மோட விருப்பம்தான்“

    “சரி, சிறுகதைன்னா எத்தன பக்கம் இருக்கனும் சார். ஒரு பக்கம் இருந்தா போதுமா ? “

    “ஒரு பக்கம் இருந்தா அது குறுங்கதைப்பா“

    “அப்புறம் வேற எப்படி சார்“

    “கதையை படிக்கறப்ப என்னடா இது இவ்வளவு வளவளன்னு இருக்குதுன்னு யாரும் நினைக்காதமாரி இருக்கனும் குமரா அவ்வளவுதான்“

    “சூப்பர் சார், சரியான விளக்கம். போட்டிக்கான கடைசி தேதி எப்ப சார்“

    “இந்த மாசம் 20ந்தேதிப்பா“

    அவ்வளவு தான், எப்படியாவது இந்த போட்டியில் பங்கெடுக்க விரும்பினேன். என் எண்ணமெல்லாம் எதைப்பற்றி கதை எழுதுவது என்பதில் தான்.

    நான் ஒரு எழுத்தாளன் இல்லை என்பது சிறுகதையின் அளவைப்பற்றி கேட்ட போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் மன்றம் அறிவித்த சிறுகதைப் போட்டியில் பங்குபெற ஆவல் அதிகமாகியிருந்தது. அதற்காக எந்த தலைப்பில், எதை மையமாக வைத்து கதை எழுதுவது என்பதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.

    குடும்ப கதை எழுதுவதா இல்லை சமுதாயத்தின் நலன் பற்றிய கதை எழுதுவதா, நகைச்சுவையை மையமாகவைத்து கதை எழுதுவதா இல்லை துப்பறியும் கதை எழுதுவதா என்ற சிந்தனைதான் மனதில்.

    சரி எதைப்பற்றியாவது எழுதுவதற்கு கதைக்கரு வேண்டுமே. எதை கருவாக எடுக்கலாம் என்று யோசிக்கலானேன். எப்பவுமே நமக்கு தேவையான நேரத்தில் குறிப்பிட்ட நபரின் பெயர் மறந்துவிடுமே அதுபோல எனக்கு எதுவுமே ஞாபத்திற்கு வரவில்லை.

    “சரிங்க சார் வரேன்“னு சொல்லிவிட்டு அங்கிருந்து என் மேசைக்கு வந்தேன். மறுநாள் அலுவல் சம்பந்தமாக ஒரு கலந்தாய்வில் பங்கெடுக்க சென்னை செல்லவேண்டியிருந்ததால் அந்த வேலையில் மூழ்கிவிட்டேன்.

    மறுநாள் சென்னை சென்று அங்கு கலந்தாய்வை முடித்துவிட்டு ஊர்திரும்ப பேருந்திற்காக காத்திருந்தேன். சிறிது நேரத்தில் சிதம்பரம் செல்லும் பேருந்து வந்தது. அப்பேருந்து புதுச்சேரி வழியாகதான் செல்லும் என்பதால் அதில் ஏறி அமரும் போது மணி இரவு 7.30. பயணச்சீட்டு வாங்கிய சிறிது நேரத்தில் அசதியில் உறங்கிவிட்டேன்.

    “ஏம்பா பஸ்சு 10 நிமிஷம் இங்க நிக்கும், டீ டிபன் சாப்பிடறவங்க சாப்டுக்கோங்க“ என்ற நடத்துனரின் சத்தம் கேட்டு எழுந்தேன். தூக்கம் கலைக்கப்பட்ட அசதியில் கீழிறங்க மனமில்லாமல் இருக்கையிலேயே இருந்தேன்.

    அப்போது தான் அந்த முதியவள் என் கவனத்தை ஈர்த்தாள். அவள் ஒரு சிறுவன் மற்றும் 40 வயதுடைய ஒருவனுடன் எனக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தது அப்போதுதான் என் நினைவிற்கு வந்தது.

    அந்த முதியளுக்கு அறுபது அறுபத்தைந்து வயதிருக்கும். சற்றே ஒடிசலான தேகம். கொஞ்சம் நைந்திருந்த புடவையை உடுத்திருந்தாள். மொட்டையடித்து ஒரு அங்குலம் அளவிற்கு வளர்ந்திருந்த முடி. முடி அனைத்தும் பாராபட்சமில்லாமல் வெள்ளை நிறத்திற்கு மாறியிருந்தது. தோலில் பழுத்த சுருக்கங்கள். காலில் செருப்பில்லை. கண்களில் கோபம், ஆதங்கம், இயலாமை இவை அனைத்தும் கொப்பளித்தக் கொண்டிருந்தது. ஏதோ புலம்பிக்கொண்டே பேருந்தில் ஏறினாள். அவளுடைய தோற்றம் என்னை ஈர்த்ததால் அவளுடைய புலம்பலை கவனிக்கத்தொடங்கினேன்.

    “இப்ப பரோட்டா சாப்பிடறியா, தோசை சாப்பிடறியான்னு கேக்குறான். ரொம்பத்தான் அக்கற......... வூட்டுல இருக்குறப்பெல்லாம் ஏதாயாவது சொல்லிக்கினே இருக்குறது. நாலு பேரு பாக்குறப்ப மட்டும் அத சாப்பிடறியா, இத சாப்படறியான்னு ரொம்ப பாசக்காரன்மாரி கேக்குறான்“

    இப்படி பேசிக்கொண்டே எனக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் பக்கத்தில் அவளுடன் வந்தச் சிறுவன் இருக்கையில் தூங்கிக்கொணடிருந்தான். அவளுது சத்தமில்லா புலம்பல் அருகில் இருந்த எனக்கு தெளிவாக கேட்டது. அந்த முதியவள் அதோடு நிறுத்தவில்லை. மீண்டும் ஆரம்பித்தாள். அருகில் இருந்த சிறுவனைப் பார்த்து.....

    “டேய் நீ வேற. பகலெல்லாம் டிவிய பாத்துகுனு இருந்துட்டு இப்பதான் தூங்குற. ஒழுங்கா படுத்து தூங்குன்னு மதியானமே சொன்னனே கேட்டியா. உன் மாமன் சும்மாவே ஏதாவது சொல்லிக்கினே இருப்பான். அவன்கிட்ட பேச்சு வாங்காம இருன்னு சொன்னா கேக்குறியா“. சிறுவனைப்பார்த்து அவளிடமிருந்து வந்த வார்த்தைகள் இயலாமையால் வந்ததே தவிர கோபத்தில் வரவில்லை என்று நன்கு புரிந்தது.

    “யாருயாருக்கு இன்னான்னா செய்றான்னு பாத்துகினுதான இருக்கேன். ஆனா பெத்தவளுக்கு செய்யகுள்ளதான் கணக்கு பாக்க தோனுது“

    அவள் பேச்சிலிருந்து அவளுடன் வந்திருந்த 40 வயதுடையவன் அவள் பெற்றபிள்ளை என்று புரிந்தது. மீண்டும் அவள் ஆரம்பித்தாள்.

    “நாமாட்டும் ஊர்ல நிம்மதியா இருந்துகுனிருந்தேன். ரொம்ப அக்கரையோட இவன் என்னய மெட்ராசுக்கு கூப்பிடும் போதே எனக்குத் தெரியும். அங்கேர்ந்து இங்க வந்தா நிம்மதியாவா இருக்க முடியுது. எதுகெடுத்தாலும் எடுத்தெறிஞ்சி பேசிக்குனு. அம்மான்னு மரியாதயே இல்லாம. இவன்கிட்ட நான் என்ன காசு பணமா கேட்டேன். தங்கச்சி மவன் வந்துகிறானே, ஒரு சட்ட துணி எடுத்து கொடுப்போம்னு தோனல. அவன் மாமியாவூட்டு செனத்துக்கு செய்யறது எனக்கு தெரியாமலா இருக்குது. நெனைக்க நெனைக்க அழயும் ஆத்திரமாவும் வருது. இருக்கட்டும் ஊருக்கு போய் பேசிக்கறன். பஸ்சிலயே கேட்டா நல்லாயிருக்காது. விட்டா ஓ..ன்னு ஒப்பாரி வைச்சிருவேன்“ என கூறும்போதே அவள் குரல் கம்மத்தொடங்கியது.

    இந்த பேச்சிலிருந்து அவள் தன் ஊரில் இருந்து மகன் வீட்டுக்கு தன் மகள் வயிற்று பேரனுடன் சென்று ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. முதியவள் சலைக்காமல் மீண்டும் ஆரம்பித்தாள்.

    “வீட்டுல ஒரு வேலக்காரிமாரி என்னய வெச்சுக்குனு இருந்துட்டு, இங்க வந்து பரோட்டா வேணுமான்னு, தோச வேணுமான்னு கேக்கறான். பாவி, சின்ன புள்ள இவன்கிட்ட அவன் கோபத்த காட்றான். “ இப்படி சொல்லிக் கொண்டே படுத்திருந்த சிறவனைப் பார்த்து “ ஏன்யா என் மடியில படுத்துக்கய்யா“ என்று கரிசனத்துடன் மடியில் கிடத்திக்கொண்டாள். இப்போது அவள் கண்கள் குளமாகி இருந்ததை கவனிக்க முடிந்தது.

    ஒன்று மட்டும் ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பேச்சிலும் அவள் மருமகளைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட அவள் பேசவில்லை. ஒரு வேளை மகனிற்கு இல்லாத அக்கரையை மருமகளிடம் ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என்று தோன்றியது. இப்படி எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் நடத்துனரின் குரல் முதியவளின் புலம்பலை அடங்கச் செய்தது.

    “ஏம்பா அவங்க அவங்க பக்கத்துல ஒக்காந்திருந்தவங்க இருக்கறாங்களான்னு பாத்துகோங்க“. இந்த குரல் ஒளித்தக்கொணடிருக்கும் வேளையில் முதியவளின் அருகில் வந்தமர்ந்தான் அவள் மகன். அவளை பார்த்தமாத்திரத்தில் “ஏன் இப்ப அழுவுற. ஒன்கிட்ட இதே கதையா போச்சு“ என்றவாறே ஓரக்கண்ணால் என்னை கவனித்தான். அதற்கு அவள் “வேணான்டா, நான் ஏதாவது பேசிற போறேன். பஸ்சாயிருக்கேன்னு பாக்குறன்டா“ என்று உடைந்த குரலில் கூறினாள். அவள் குரல் பிசிரடித்தது.

    பேருந்து வேகமெடுக்க ஆரம்பித்தது. அதன் இரைச்சலில் அவர்களின் வாதம் கரைந்துபோயிற்று.

    முதியவளின் ஆதங்கத்தை எண்ணிக்கொண்டே வந்த எனக்கு சட்டென ஒரு யோசனை “நாம் ஏன் இந்த முதிவளின் புலம்பலையே கருவாகக் கொண்டு சிறுகதைப்போட்டிக்கான கதையை எழுதக்கூடாது“.

    மீண்டும் போட்டியின் சிந்தனையில் மூழ்கினேன். ஆனால் எந்த கதையும் தோன்றவில்லை. எப்படி கதை எழுதலாம் என்று யோசித்து யோசித்து சோர்வடைந்து உறங்கியேவிட்டேன். பேருந்து புதுச்சேரியை அடைந்தது. போட்டியை யோசித்தவாறே நான் வீட்டை அடைந்தேன்.

    மறுநாள் மீண்டும் கதையைப்பற்றிய யோசனைதான். இந்த களத்திற்கேற்ற கதையை எப்படி எழுதலாம் என்று.

    “உண்மையைத்தாங்க சொல்றேன் எப்படி எப்படியோ யோசிச்சிட்டேன், முதியவளின் புலம்பலை எப்படி கதையா எழுதறதுன்னு எனக்கு தோனவேல்ல. என்னப்பத்தி நெனச்சா எனக்கே வெக்கமாத்தான் இருக்கு. நல்ல கரு, களம் கிடைத்தும் என்னால ஒரு கதைக்கூட யோசிக்கவும் முடியல எழுதவும் முடியல. இந்த அழகுல எனக்கு சிறுகதை போட்டியில கலந்துக்க ஆச வேற“.

    சிறுகதைப்போட்டியின் இறுதி நாளும் வந்தவிட்டது. இன்னும் எனக்குள் கதை வந்தபாடில்லை.

    “ஐயா, யாருக்காவது அந்த முதியவளின் புலம்பலை ஒரு கதையா எழுத யோசனை இருந்தால் தயவுசெய்து சொல்லுங்க...............“

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    தீர்ப்பு

    தீர்ப்பு


    சங்கர் & பத்மா விவாகரத்து வழக்கிற்கு அன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதால், இரு வீட்டாரின் உற்வினரும் நீதிமன்ற வளாகத்தில் அதிகளவில் கூடிப் பதற்றத்துடன் காத்திருந்தனர்.

    அவர்களது பத்ற்றம் தீர்ப்பை எதிர்பார்த்து அல்ல. விவாகரத்து கண்டிப்பாக கிடைத்துவிடும் என இருசாராருக்குமே வக்கீல்கள் உறுதியளித்திருந்தனர். அவர்களது கவலை, தீர்ப்பின்படி குழந்தை கண்ணன் யாரிடம் ஒப்படைக்கப்படுவான் என்பதிலேயேயிருந்தது.

    கண்ணன் மீது உயிரை வைத்திருந்த பெற்றோர் இருவருமே மகன் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என வாதிட்டனர்.

    “எனக்கு ரொம்பப் பயமாயிருக்கும்மா. இவன் சின்ன வயசிலேர்ந்தே எதுக்கெடுத்தாலும் அப்பா, அப்பான்னு அவருக்கிட்ட போயித்தான் செல்லங் கொஞ்சுவான். நான் அப்பப்ப கண்டிக்கிறதினால எங்கிட்ட பயம் அதிகம்.

    இவன் எதுக்கேட்டாலும் இல்லேன்னு சொல்லாம, அந்தாளு வாங்கிக் கொடுத்துடுவாரு. நான் அப்பாக்கிட்டத்தான் இருப்பேன்னு நீதிபதிகிட்ட இவன் சொல்லிட்டா என்னம்மா பண்றது? குழந்தையோட விருப்பத்தையும் கேட்டுத்தான் தீர்ப்பு சொல்வாஙகன்னு சில பேர் பயமுறுத்தறாங்களே!,” என்றாள் பத்மா, கவலை தோய்ந்த முகத்துடன்.

    “எத்தனை தடவை எடுத்துச் சொன்னாலும் ஒனக்கு ஏன் நம்பிக்கை வரமாட்டேங்குது? அதெப்படி அம்மா இருக்கும் போது அப்பாக்கிட்ட அனுப்புவாங்க? நம்ம நாட்டுல பொண்ணுங்களுக்கு ஆதரவாத் தான் சட்டம் இருக்குன்னு நம்ம வக்கீல் உறுதியாச் சொல்றாரில்லே? அப்புறம் எதுக்கு வீணாக் கவலைப்படறே?”

    “இல்லம்மா. வர வர இவன் போக்கே சரியில்ல. கொஞ்ச நாளா எங்கிட்ட மொகம் கொடுத்தே பேசறதில்லே. அவன் அப்பன் மாதிரி சரியான நெஞ்சழுத்தம். மனசில என்ன நினைக்கிறான்னு வாயைத் தொறந்து எதுவும் சொல்ல மாட்டாங்கிறான். அவனோட மெளனம் என்னை ரொம்ப பயமுறுத்துது. நான் தான் இவன் மேல உயிரா இருக்கேனே தவிர, இவனுக்கு எம்மேல கொஞ்சம் கூட பாசம் இல்லேம்மா”.

    ”தோ பாரு. தேவையில்லாததையெல்லாம் நெனைச்சு மனசைக் குழப்பிக்காதே. இன்னிக்கு மத்தியானம் கூட அவனைத் தனியா அழைச்சுட்டுப் போயி புத்திமதியெல்லாம் சொல்லியிருக்கேன்.

    ஒஙகப்பா ஆசையாக் கூப்பிடறாரேன்னு நம்பிப் போயிடாதேடா. அவரு ரொம்பப் பொல்லாதவரு. ஒங்கம்மாவை நம்ப வைச்சுக் கழுத்தறுத்தவரு. கொஞ்ச நாள்லேயே இன்னொருத்தியைக் கட்டிக்கிட்டு வந்துட்டாருன்னா, அதுக்கப்புறம் ஒன்னைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாரு.

    சித்திக்காரி ஒன்னை ரொம்பக் கொடுமைப்படுத்துவா, அம்மா மாதிரி வேற யாரும் ஒன்னை நல்லாப் பார்த்துக்க மாட்டாஙக.. தாயற்றுப் போனா சீரற்றுப் போகும்னு சும்மாவா சொன்னாங்க? அதனால நீதிபதியோ, இல்ல ஒங்கப்பாவோ கேட்டாங்கன்னா, நான் அம்மாக்கிட்டத் தான் இருப்பேன்னு அடிச்சுச் சொல்லிடு,”ன்னு அவங்கிட்ட பக்குவமா எடுத்துச் சொன்னேன்.

    அவன் எதுக்கும் மறுப்பே சொல்லலை. ”சரி, பாட்டி, சரி பாட்டி,”ன்னு எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுத் தலையாட்டிக்கிட்டான்.

    இந்தக் காலத்துப் ப்சங்க ரொம்ப சம்ர்த்துங்க. யார்கிட்ட இருந்தா தனக்கு நல்லதுன்னு அதுங்களுக்கு நல்லாவே தெரியும். அதிலேயும் சின்ன வயசிலேர்ந்தே இவன் ரொம்ப சூட்டிகை. அம்மா என்ன தான் திட்டினாலும், கண்டிச்சாலும் குழந்தைக்கு மொதல்ல அம்மா தான், அப்புறம் தான் அப்பா,” என்று பத்மாவைத் தேற்றினாள் அவள் அம்மா.

    பெற்றோருக்கிடையில் பிரச்சினை துவங்கிய பிறகு, கண்ணனின் சுபாவம் வெகுவாக மாறிவிட்டிருந்தது. யாரிடமும் சரியாகப் பேசுவதில்லை. அடிக்கடி மோட்டுவளையை வெறித்த வண்ணம் மெளனத்தில் ஆழ்ந்திருந்தான். படிப்பில் முதல் மாணவனாக இருந்தவன், தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களையே பெறத் துவங்கினான்..

    எந்த நேரமும் எதையோ பறிகொடுத்தது போன்ற தோற்றத்துடன் இருந்த அவ்னிடமிருந்து, கலகலப்பு முற்றிலுமாக விடைபெற்றுப் போயிருந்தது. அவனது இந்த மாற்றத்துக்கான காரணத்தைப் பற்றி வகுப்பு ஆசிரியை, அவனிடம் வினவிய போது எதுவும் கூற மறுத்துவிட்டான்.

    அவனது நலனில் அக்கறை கொண்ட ஆசிரியை, அவன் நண்பர்கள் மூலமாக அவனது பெற்றோர் பிரிந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டு, அவர்களை ஒரு நாள் பள்ளிக்கழைத்துப் பேசினாள்.

    ”தோ பாருங்க. ரெண்டு பேருமே பையன் மீது உயிராயிருந்து பாசத்தைப் பொழியிறீங்க. என்ன பிரயோசனம்? குழந்தை நல்லாயிருக்கணும்னு உண்மையிலேயே நீங்க ஆசைப் பட்டீங்கன்னா, ஒங்கப் பிரச்சினையைப் பேசித் தீர்த்துட்டு மறுபடியும் சேர்ந்து வாழணும்.

    ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து வாழறது தான் வாழ்க்கை. யாரு மொதல்ல விட்டுக் கொடுக்கிறதுன்னு ரெண்டு பேர்க்கிட்டயேயுமே ஈகோ இருக்கு. புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோ என்ன வேண்டியிருக்கு?

    ஒங்களோட இந்த முடிவால, அந்தப் பிஞ்சு மனசில பெரிய காயம் ஏற்பட்டிருக்கு. எதிர்காலத்தைப் பத்தி ஒரு பய உணர்வு தோணியிருக்கு. பாட்டு, டான்ஸ், பட்டிமன்றம்னு பள்ளிக்கூடத்தையே கலக்கிட்டிருந்த ஒங்க புள்ளை, இப்ப இருக்கிற இடமே தெரியாம அமைதியாயிட்டான். படிப்பிலேயும் கவனம் கொறைஞ்சுக்கிட்டு வருது.

    இந்த மாதிரி சின்ன வயசில குழந்தை மனசு பாதிக்கப்பட்டுத் தவறான வழியில போக ஆரம்பிச்சிட்டா, அதுக்கப்புறம் நீங்க தலை கீழா நின்னாலும் திருத்த முடியாமப் போயிடும்.. பொறக்கும் போது எந்தப்புள்ளையுமே தீவிரவாதியா பொறக்கிறதில்லே. வளர்ற சூழ்நிலை சரியா அமையாம, சின்ன வயசுல பெத்தவங்கக் கிட்ட சரியான அன்பு கிடைக்காம ஏங்குற புள்ளைங்க தான், பின்னாடி வன்முறையில இறங்கித் தீவிரவாதியா மாறுறாங்க.

    மகனோட வளமான எதிர்காலத்துக்காக தய்வு செஞ்சு ஒங்க முடிவை மறு பரிசீலனை பண்ணணும்.. பழசெல்லாம் மறந்துட்டு இன்னியேலேர்ந்து புது வாழ்க்கையைத் தொடங்குஙக. இல்லேன்னா ஒங்க மகனோட நெலைமையை நினைச்சுப் பின்னாடி ரொம்ப வருத்தப்பட வேண்டியிருக்கும். நான் சொல்றதைச் சொல்லிட்டேன். அதுக்கப்புறம் ஒங்க இஷ்டம்”

    ”இல்லீங்க டீச்சர். இதே மாதிரி நெறைய கேட்டாச்சு. ‘இட்டீஸ் டூ லேட்’. அந்தக் கட்டத்தையெல்லாம் தாண்டி நாங்க வந்தாச்சு. இவருக்குப் பொண்டாட்டி முக்கியமில்லே. அம்மா இருந்தாப் போதும். இவருக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு. அவங்கம்மா பேச்சைக் கேட்டுட்டு, ஒருநாள் என்னைக் கை நீட்டி அடிச்சிட்டாரு. பொம்பிளை மேல கை நீட்டறவனெல்லாம் ஒரு ஆம்பிளையா டீச்சர்? நீங்களே சொல்லுங்க. இனிமே இவரோட சேர்ந்து வாழ முடியுங்கிற பேச்சுக்கே இடமில்லே. டீச்சர்,” என்றாள் பத்மா.


    ”இவ என்ன பண்ணினாள்னு கேளுங்க டீச்சர். கல்யாணம் ஆனவுடனே ஆம்பிளைங்க, அவங்களைப் பெத்தவங்களை அம்போன்னு நடுத்தெருவில விட்டுட்டு பொண்டாட்டி பின்னாடி ஓடி வந்துடணும். ஆனா பொண்டாட்டியோட அப்பா அம்மாவை மட்டும் தலையில தூக்கி வைச்சுக் கொண்டாடணும். மனுஷ ஜென்மமா இருந்தா குடும்பம் நடத்தலாம். ஒரு பேயோடு குடும்பம் நடத்த முடியுமா டீச்சர்? இனிமே சுட்டுப் போட்டாலும் எங்களுக்குள்ள ஒத்து வராது. .

    என் பையன் மேல நீங்க இவ்ளோ அக்கறை எடுத்துக்கிறதை நினைச்சா ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ரொம்ப நன்றிங்க டீச்சர்.. அம்மா இல்லேன்னா என்ன, நான் அவனைத் தாய்க்குத் தாயா, தந்தைக்குத் தந்தையா இருந்து கவனிச்சுக்குவேன்,” என்றான் சங்கர்.

    ”அவனைப் பத்துமாசம் சுமந்து பெத்தவ நான் உயிரோடு இருக்கும் போது இவரு எதுக்குக் கவனிக்கணும்?. அவருக்கிட்ட கண்ணனை யாரு அனுப்புறதாச் சொன்னா?..நானே அம்மாவும் அப்பாவுமா இருந்து, நல்லபடியாக அவனை வளர்த்து ஆளாக்குவேன். அவன் எங்கிட்ட தான் இருப்பான்.”

    ”வாயை மூடுடி. பெத்துட்டா மட்டும் போறுமா? நீ வளர்த்த லட்சணம் தான் தெரியுமே! எம் புள்ளையை எங்கிட்டேயிருந்து பிரிச்சுடலாம்னு மட்டும் கனவு காணாதே. தீர்ப்பு யார் பக்கம் வருதுன்னு பொறுத்திருந்து பாரு. கண்ணன் கண்டிப்பா எங்கிட்ட தான் வருவான்” .

    இருவரின் சண்டையை விலக்குவதற்குள் போதும் போது மென்றாகிவிட்டது ஆசிரியைக்கு. வீட்டில் இவர்களின் சண்டைக்கு நடுவில வளர்ந்த, கண்ணனின் நிலையை நினைத்துப் பரிதாபப்பட்டாள் அவள்.

    நீதிமன்ற வளாகத்தில் பத்மா தாயிடம் புலம்பிக் கொண்டிருந்த அதே சமயத்தில், தன் தாயிடம் உள்ளக் குமுறலைக் கொட்டிக் கொண்டிருந்தான் கணேசன்..

    ”என்ன தான் திறமையான வக்கீலைத் தேடிப் பிடிச்சு நாம அமர்த்தியிருந்தாலும், சட்டம் பொம்பிளைகளுக்குத் தான் அனுசரணையா இருக்கும்மா. பையன் மேஜராகிற வரைக்கும் அம்மாக்கிட்ட தான் அனுப்புவாங்கன்னு எல்லாருமே சொல்றாங்க.. எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு.

    புள்ளையை அவ கூட அனுப்பிட்டு, மேஜராகிற வரைக்கும் வாராவாரம் ஒரு நாள் மட்டும் நம்ம வீட்டுக்கு வர்ற மாதிரி தீர்ப்பு சொல்லிடுவாங்களோன்னு கவலையாயிருக்கு. இப்பத் தான் அவனுக்கு பன்னிரண்டு நடக்குது. அவனா விருப்பப்ப்பட்டு எங்கிட்ட வரணும்னா கூட, இன்னும் ஆறு வருஷம் காத்திருக்கணும். அவ என்னைப் பத்தி என்ன சொன்னாளோ தெரியலை, இப்பவே அவன் எங்கிட்ட கொஞ்ச்ம வித்தியாசமாத் தான் நடந்துக்கிறான் இன்னும் ஆறு வருஷத்துல, இவ என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவன் மனசைச் சுத்தமா மாத்திடுவாம்மா”.

    ”அப்டியெல்லாம் நடக்காதுப்பா. நீ கவலைப்படாதே. எப்பவுமே அவனுக்கு நீன்னா தான் ரொம்ப இஷ்டம். ஒங்கிட்ட வரத்தான் பிரியப்படுவான். கொழந்தைக்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுட்டுத் தான், நீதிபதி முடிவு சொல்லுவார். எவ்ளோ திமிரா யாரையும் சட்டை பண்ணாம, கால் மேல கால் போட்டுக்கிட்டு அங்க ஒட்கார்ந்திருக்கா பாரு அவ அம்மாவும் பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டு நம்மளைப் பார்த்து, ஏதோ காதுல ஓதிக்கிட்டுருக்கா.. இன்னியோட அவளுங்க திமிரு அடங்கணும். கொழந்தையை அவக்கிட்டேயிருந்து பிரிச்சாத்தான் அவக் கொட்டம் அடங்கும். நானும் வேண்டாத சாமியெல்லாத்தையும் வேண்டியிருக்கேன். நீ தைரியமா இரு,” என்று அவனைத் தேற்றினாள் அவன் அன்னை.

    நீதிபதி வந்து இருக்கையில் அமர்ந்த போது, அங்கு அமைதி குடிகொண்டது.

    ”நீ ஏதாவது சொல்ல விரும்புறியா? நீ வேணுமின்னு ஒங்கப்பா அம்மா ரெண்டு பேருமே ஆசைப்படறாங்க. ஒனக்கு யார் கூடப் போக விருப்பம்? இங்கச் சொல்லப் பயமாயிருந்தா, நாம தனியா அறையில போய்ப் பேசலாம்,” என்றார் நீதிபதி கண்ணனைப் பார்த்து.

    ”வேணாம் சார். எனக்கொன்னும் பயமில்லே நான் இங்கியே பேசறேன்,”

    என்று கணேசன் தைரியமாகத் துவங்கியதைக் கண்ட
    பத்மாவின் இதயம், ’என்ன சொல்லப் போகிறானோ?’ என்ற பயத்தில் திக் திக் என்று அடித்துக் கொண்டது. ’

    ’கடவுளே! அப்பான்னு சொல்லணும்; அம்மான்னு சொல்லிடக்கூடாது ,’ ஆண்டவனிடம் அவசர உதவி வேண்டி நின்றான் கணேசன்.

    ”பரவாயில்லியே! தைரியமான பையனா இருக்குறியே! சரி.. சொல்லு. ஒனக்கு யார் கூட போக விருப்பம்?”.

    ”இவ்ளோ வயசானதுக்கப்புறம் கூட, என்னைப் பெத்தவங்களுக்கு அவங்களோட அப்பாம்மா வேணும். ஆனா இந்தச் சின்ன வயசில எனக்கு அப்பா அம்மா வேணுமேன்னு, ரெண்டு பேரும் கொஞ்சங் கூட கவலைப்படலே.

    அப்பாவைப் பிரிஞ்சு அம்மாக்கிட்டேயோ இல்ல, அம்மாவைப் பிரிஞ்சு அப்பாக்கிட்டேயோ என்னால இருக்க முடியாது. இங்கக் கொஞ்ச நாள், அங்கக் கொஞ்ச நாள்னு தயவு செஞ்சு என்னை அனுப்பிடாதீங்க. அம்மாக்கிட்ட இருக்கிறப்போ, எப்பப் பார்த்தாலும் என் முன்னாடி அப்பாவைக் கரிச்சுக் கொட்டுவாங்க.. அப்பாக்கிட்ட போனா, பொழுதன்னிக்கும் அம்மாவைத் திட்டித் தீர்ப்பாரு.. அதனால யார் கூடவும் நான் போக விரும்பலே.

    தயவு செஞ்சு என்னை எங்கியாவது ஒரு அனாதை ஆசிரமத்துக்கு அனுப்பிடுங்க. அப்பாம்மா யாருன்னு தெரியாம வளர்ற பசங்களோட நானும் ஒருத்தனா இருக்க விரும்புறேன். அங்கப் போனா தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்,” என்றான் கண்ணன்.

    அவன் குரலிலிருந்த உறுதியும், கண்கள் உமிழ்ந்த வெறுப்பும்,
    ஆணித்தரமாக அவன் பேசிய விதமும்,. தீர்ப்பை ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருந்த நீதிபதி உட்பட, அங்குக் கூடியிருந்த அனைவரையும் திடுக்கிட வைத்தது.

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    அண்ணி என்றால்...

    அண்ணி என்றால்...

    அம்மா வரலட்சுமி போன வாரம் இறந்துவிட்டாள். இறப்பு என்பது தொடர்பில்லாதவர்களுக்கு ஒரு சம்பவம். உற்றவருக்கோ உயிர்வேதனை. இந்த ஐம்பத்தெட்டு வருடவாழ்க்கையில் அம்மாவின் சிரமங்களையும் வேதனைகளையும் நான் நன்கு அறிவேன்.

    எனக்கு ஐந்துவயதாகும்போது என் அப்பா தவறியதும் அப்போது பத்துவயது அண்ணன் ரகுவையும் என்னையும் ( ராம் ) எப்படி வளர்ப்பது என்று அம்மா குமுறி அழுததும், என் அப்பாவின் சாவுக்கு வந்தவர்கள் எங்கே இன்னும் ஒருநாள் இருந்தால் எங்கே குடும்பப்பொறுப்பை சிறிதாவது ஏற்கவேண்டி வருமோ என்று பயந்து அன்றைக்கே பல்வேறு காரணங்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டதும் அம்மா கதைகதையாகச் சொல்லி எங்களிடம் அழுதிருக்கிறாள்.

    அப்பா இறந்தபோது அவர் விட்டுப்போனது இரண்டு தறிக்குழிகளும் இரண்டு படைமரங்களும் ( பட்டுச்சேலைத்தறியில் நெய்து முடித்துக்கொண்டே வரும் சேலையை சுருட்டிக்கொண்டே போகும் நீண்ட நால்பட்டை மரப்பலகை ) ஒரு ராட்டினமும் ஐந்து திருவட்டங்களும்தான். அவர் இருந்த வரையிலும் தறித்தொழிலில் முன்னேற்றம் என்பதைக் காணாமலேயே போய்விட்டார். காலமுச்சூடும் கூலிக்கு மாரடித்தே வாழ்க்கையை முடித்தவர். இப்போது ஏன் என் தந்தையை நினைக்கிறேன்..? ஒரு திறமையான கணவனாயும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகவும் குடும்பப்பொறுப்பு மிக்க தலைவராகவும் இருந்திராத அவரை இப்போது நினைத்தாலும் கோபம் வரத்தான் செய்கிறது.

    ஒருவாரம் ஆன நிலையில் இன்று காலை பட்டுசேலை காண்ட்ராக்டர் வந்து துக்கம் விசாரிக்கும் சாக்கில் அண்ணனிடம் இரண்டு தறிகளிலும் இருக்கும் முடிவுபெறாத சேலைகளின் அவசியத்தை நினைவுபடுத்திவிட்டுப் போய்விட்டார். வசதி உள்ளவர்களுக்குத்தானே துக்கம் எல்லாம் வருடக்கணக்கில் நீளும்..? அன்றாடம் சாப்பாட்டுப் பிரச்சினைகளில் காலம் தள்ளும் எங்களைப்போன்ற ஏழைகளுக்குத் துக்கம் ஏது..?

    அம்மா இருந்தவரை அம்மா ஒரு தறியையும் அண்ணன் ஒரு தறியையும் நெய்துவந்தார்கள். அண்ணன் எட்டாவது கூட முடிக்கமுடியாத நிலையில் தனியாக எங்களை வளர்க்கக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அம்மாவுக்கு உதவியாக இன்னொரு தறிக்குழியில் தள்ளப்பட்டுவிட்டார்.

    தறிக்குழியில் ஒருமுறை விழுந்தவர்கள் மீண்டதில்லை என்பது எங்களைப்போன்ற நெசவாளர்களின் சாபம். கைகள் கண்கள் கால்கள் என எல்லாமே ஒற்றுமையாய் ஒருங்கிணைந்த நிலையில் இருந்தால் தான் பட்டுச்சேலை நெய்வது என்பது சாத்தியமாகும். அதிலும் பாதக்கோல்களை ( ஓடும் நூல் பாவினை மாற்றிப்பின்னலிட கால்களால் மிதிக்கும் வலது இடது மிதிகள். மரத்தால் ஆன பாதரட்சைப் போல இருக்கும். ) மாற்றி மாற்றி மிதித்து இரண்டு கைகளையும் இயந்திரம்போல் வலதும் இடதுமாக இயங்கவைத்து நூல்கண்டு பொருந்திய தறிநாடாக்களை ( மூங்கில் துண்டில் செய்யப்பட்டு கூர்மையான தந்தம் அல்லது துருப்பிடிக்காத இரும்பு மூக்கு வைக்கப்பட்ட கோல்கள் ) வலதும் இடதுமாக லாவகமாகப் பிடித்து அந்த வேகத்துக்கேற்ப சரியான நேரத்தில் ஜரிகை பார்டர்களை உருவாக்கும் ஜுங்கு எனப்படும் நூலியந்திரங்களையும் இயக்கி ஒரு நாளைக்கு பத்து முதல் பன்னிரண்டு மணிவரை தறி நெய்தால் ஐந்து நாட்களில் ஆயிரம் ரூபாய் பார்க்கலாம். தறி போடும் ஒருவரைத்தவிர இன்னொருவர் பட்டு நூல்களை சரிபார்த்து பட்டையத்தில் இழைத்து பின் ராட்டினத்தில் கண்டுகளைப் பொருத்தி நூல்கண்டுகளாக மாற்றி அமைக்க இன்னொரு உதவியாளர் தேவைப்படும்.

    எப்படி எல்லாம் என் தாய் தனியாகக் கஷ்டப்பட்டு எங்கள் இருவரையும் வளர்த்திருப்பாள் என்பதை எனக்கு விவரம் வந்தபோது அறிந்தபோது அந்தத் தாய்க்கு ஒரு கோயிலைக் கட்டிக் கும்பிடலாம் எனத்தோன்றும். தனியாளாய்ச் சிரமப்பட்ட என் தாய்க்கு 14 வயதில் என் அண்ணன் தோள்கொடுக்க முன்வந்தபிறகு வீட்டில் இரண்டு தறிகளாயிற்று. வருமானம் இரண்டு மடங்கானாலும் விலைவாசியும் செலவுகளும் நான்கு மடங்கானதில் இரண்டு வேளைச் சோறும் ஒருவேளை நீராகாரமும் தவறாமல் கிடைப்பதே பெரிய வரமாகத்தான் பட்டது.

    அண்ணன் ரகுவோ நான் தான் படிக்கமுடியவில்லை ராமாவது படித்து முன்னுக்குவரட்டும். நம் பரம்பரைச்சாபம் நீங்கி ஒரு நல்ல உத்யோகத்தில் வந்து உருப்படட்டும் என்று முடிவெடுத்தவராய் என்னைப் படிக்கவைத்தார். ஒரு தந்தையின் கண்டிப்பினையும் ஒரு அண்ணவின் விட்டுக்கொடுத்தலையும் ஒன்றாகக் கொண்ட என் அண்ணன் ரகு ஓர் அதிசயப்பிறவிதான். அவனது தியாகத்தால் இதோ நான் வீட்டில் சிரமப்பட்டாலும் படிப்பில் சூட்டிகையாய் இருந்ததால் எஞ்சினியர் கல்லூரியில் பி இ இரண்டாம் ஆண்டு படிக்கமுடிந்தது. ரகுவோ தனக்கென எதையும் செலவு செய்துகொள்ளமாட்டான். கிடைக்கும் வழிகளில் எல்லாம் காசு பார்க்க நினைக்கும் கடும் உழைப்பாளி. தறி நேரம் போக அச்சு பிணைத்தல் போன்ற வேலைகளையும் இரவு நேரத்தில் செய்து என் கல்லூரிச் செலவைச் சரிக்கட்டிக்கொண்டு இருந்தான். அம்மாவின் தறி சம்பாத்தியமும் அண்ணனின் சாமர்த்தியமும் சேர்ந்து என் படிப்புக்கும் எங்கள் மூவரின் வயிற்றுக்கும் ஓரளவு சரிக்கட்டி வந்தது.

    அம்மாவின் சாமர்த்தியத்தைப்பற்றிக்கூறிக்கொண்டே போகலாம் என்றாலும் வயிற்றில் உயிர்போகும் வலியாகத் தொடங்கி அரசுமருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்பப்பைப் புற்றுநோய் எனக்கண்டறியப்பட்டு அரசு மருத்துவர்களின் பொறுப்பற்ற அறுவைச்சிகிச்சையால் அதிக ரத்தம் வெளியேறி இதோ போனவாரம் இறப்பதற்கும் முன்னால் ஆறுமாதத்திற்கு முன்பே அண்ணன் ரகுவுக்கு ஒரு திருமணத்தையும் செய்துவைத்துவிட்டதை பெரும் சாதனையாகச் சொல்லலாம். அதிக வசதி இல்லை என்றாலும் நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த அண்ணி ஜானகி சொக்கத்தங்கம்தான். என் அம்மாவின் என் அண்ணனின் குறிப்பறிந்து நடப்பதிலும் தறிவேலைகளுக்கு மேல்வேலைகள் செய்து கொடுப்பதிலும் சுவையாகச் சமைப்பதிலும் அண்ணிக்கு நிகர் அண்ணிதான். நீ கொடுத்துவைச்சவ விசாலாட்சி உனக்கு தங்கம் போல மருமகள் வந்து இருக்கா என்று அக்கம்பக்கத்துப் பெண்களின் பொறாமைப்பேச்சுகளுக்கெல்லாம் ஒரு சிறுபுன்னகை மட்டும் தந்துவிட்டு மருமகளைப் பெருமையாகப் பார்ப்பாள் அம்மா.

    எனது பிரிப்பரேட்டரி லீவில் ஒருவாரம் அம்மாவின் துக்கத்தில் கழிந்துவிட்டது. இனி எஞ்சி இருக்கும் ஒருவாரத்தில் இந்த ஆண்டுத்தேர்வுகளுக்குத் தயார்செய்யவேண்டும். தேர்வுக்கட்டணம் இன்னும் செலுத்திய பாடில்லை. தேர்வு தொடங்குமுன் கட்டாவிட்டால் இடையில் என்னை தேர்வெழுதாது நிறுத்திவைக்கும் ஆபத்தும் உண்டு என்ற நினைவு வந்ததும் இதை எப்படி அண்ணனிடம் சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்தேன். அவர் இப்போது தான் சற்றுத் தேறி தறியைத்தட்டித் துடைத்து மீண்டும் தறியை இயக்கும் ஆயத்தங்களில் மூழ்கி இருக்கிறார். அம்மாவின் தறியோ கடந்த ஒருமாதமாக அப்படியே கிடக்கின்றது. ஏற்கனவே கடன்கள் கொஞ்சம் ஏறிக் கிடக்கின்றது. என்னதான் அரசாங்க மருத்துவனையில் இலவச அறுவைச்சிகிச்சை என்று பெயர் இருந்தாலும் நிறைய மருந்துகளை எங்களை விட்டே வாங்கிவரச்சொல்லவே செலவுகள் எக்கச்சக்கமாகின. எங்கள் தறிக்காண்ட்ராக்டர் அவரால் கொடுக்க முடிந்த அளவுக்கு அட்வான்ஸ் ஆகவும் பத்தாயிரம் ரூபாயைத் துயர்துடைப்பு உதவியாகவும் கொடுத்தவை எல்லாம் கரைந்துபோயிருந்தன. அம்மாவின் ஈனச்சடங்குகளுக்கு சமூக ஃபண்டில் இருந்து கொடுத்து உதவி இருந்தார்கள். அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் அடைக்கவேண்டும். இந்த நிலையில் தேர்வுக்கட்டணம் பற்றி அண்ணனிடம் எப்படிப்பேசுவது..?

    என் தலையை யாரோ தடவியது போலிந்தது. தலையை உயர்த்தினேன், என் அண்ணிதான். ராமு நீ கலங்காதேப்பா.. அம்மாவுக்கு நல்ல சாவுதான் வந்துது. நோய்ப்பட்டு சிரிப்பாய்ச் சிரிக்க பாயிலயும் தரையிலயும் அசிங்கமாக்கிச் சாவும் சாவு இல்லாமல் இன்றும் இருப்பது போலவே நினைவுடன் பொசுக்குன்னு போனது நல்லது தான். தேத்திக்கோ ராமு. படிக்கவேண்டியதைப் படி என்றார்கள் அண்ணி. எனக்கு அழுகை அடக்கமுடியாமல் வந்துவிட்டது, யாராவது தேற்றும் போது உடைபட்டு விசும்பும் குழந்தைபோல அழுதேன். அழாதே ராமு. உங்க அண்ணன் எவ்வளவு தைரியமா அம்மா இல்லாத வாழ்க்கையை ஏத்துக்கிட்டாருன்னு பாரு. நாங்க ரெண்டுபேரும் உனக்கு இருக்கோம்ப்பா.. என்ற அண்ணியின் ஆதரவுச்சொல் என்னை ஆசுவாசப்படுத்தியது.

    அப்போதுதான் ரங்கராஜன் மாமா வந்தார். தூரத்து மாமா உறவு. அண்ணனிடம் துக்கம் விசாரித்தவருக்கு காபி போடுக்கொடுக்க அடுக்களைக்குப் போனார்கள் அண்ணி.

    ‘’ என்னடா ரகு..? ஏன் சோகமா இருக்கே.. இதான் நமக்கு ப்ராப்தம்னு நினைச்சுக்கோப்பா. ஆகவேண்டியதைப் பாரு என்றவர் ரகு அண்ணாவைப்பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று நானோ அண்ணனோ எதிர்பார்க்கவில்லைன்னுதான் சொல்லனும்.

    ‘’ இனி என்னடா செய்யப்போறே..? ஒத்தைக்குழியில உலைவைக்க முடியாது. அமமா இருந்ததால் ஏதோ பொழப்பு ஒடிச்சு. பேசாம இன்னொரு குழியில் ராமுவை உக்காறவை. நாலு காசு தேத்தாத்தான் நாளைக்கு உனக்கு புள்ள பொறப்பு வந்தா சமாளிக்கமுடியும் ‘’ – இப்படி ஓர் அணுகுண்டைப் போடுவார் என நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை.

    ’’ இல்லீங்க மாமா.. ராமுவோட ரெண்டாவது வருசப்படிப்பு நடக்குது. இன்னும் ரெண்டு வருஷம் பல்லைக்கடிச்சு சமாளிச்சா அவன் ஒரு நல்ல வேலைக்குப் போய் அவன் வரையிலும் நல்லா இருக்கமுடியும். அதனால அவனை தறுக்குழியில் தள்ளுவதாக இல்லை. ‘’ அண்ணனின் குரல் திட்டவட்டமாக் ஒலித்தது.

    ’’ டேய் உலகம் புரியாமப் பேசாதே. உங்கம்மாவும் சம்பாதிச்சதால ரெண்டு வேளைக்காவது சாப்பிட முடிஞ்சுது. இனி எப்படி உன் தம்பியின் படிப்பையும் சமாளிச்சு குடும்பத்தை ஓட்டுவே..? ‘’

    ‘’ நான் இன்னும் எக்ஸ்ட்ரா வேலை செய்து எப்படியும் ராமுவைப் படிக்கவைச்சுடுவேன். ‘’ ஆக்ரோஷமாக அண்ணன் சொன்னபோது என் அண்ணன் வாயுரம் வளர்ந்து நிமிர்ந்து நின்றபோலிருந்தது.

    ‘’ இல்லைன்னா பேசாம ஜானகியை இன்னொரு தறி நெய்யச்சொன்னா என்ன..? ‘’ என்றார் மாமா. இது என்ன இவர் நம்மைக் குழப்பாம விட மாட்டாரோ என்று தோன்றியது. சட்டென்று அடிபட்டது போல நிமிர்ந்தார் அண்ணா. ‘’ நீங்க யோசிச்சுதான் சொல்றீங்களா மாமா..? ஜானகி நம்ம வூட்டுக்கு வந்த மஹாலட்சுமி. ஆறுமாதம் கூட ஆகலை. நம்ம ஜனங்கள்ல வீட்டுக்கு வந்த மருமகளை தறியில் தள்ளிய முதல் பாவியாக என்னை பாவம் செய்யச் சொல்றீங்களா..? ‘’ சினத்துடன் கேட்டார் அண்ணா.

    இதற்குமேலும் நான் பதில் சொல்லாம இருந்தா மாமாவை அண்ணா அடிச்சாலும் அடிச்சுடுவார் போல இருந்ததால் நான் இடையில் நுழைந்தேன்.

    ‘’ அண்ணா.. அம்மா தறிக்குழியில் நானே உட்கார்றேன். ஆத்திரப்படாதீங்க..நிலைமை தெரிஞ்சு நாம தான் சமாளிக்கனும். படிப்பு என்ன பெரிசு அண்ணா..? படிச்சவன்லாம் இன்னும் வேலை கிடைக்காம சுத்திக்கிட்டு திரியிறான். கவலையை விடுங்கண்ணா.. ‘’ என்ற போது என்னை அறியாமலேயே துக்கம் தொண்டையை அடைத்தது. அம்மா.. அம்மா.. ஏன்ம்மா எங்களைவிட்டுப்போனே..?

    ‘’ பாருடா .. அதான் எதார்த்தம் தெரிஞ்ச புள்ள.. நீ தான் குதிக்கிறே கொதிக்கிற எண்ணையில விழுந்த தவளை மாதிரி. பிரச்சினை தீர்ந்துடுச்சு.. ‘’ என்று ஒருவித வெற்றிப்புன்னகை செய்தார் மாமா.

    மாமாவுக்கு நான்கு மகன்கள் நாலுமே படிக்காமல் தறியில குந்தினதால் காசு புரளுது. தன் பிள்ளைங்க படிக்காம போனதைவிட நான் மேற்கொண்டு படிப்பது அவருக்கு உறுத்திக் கொண்டிருந்திருக்கும் போல. இப்போது குரலில் சந்தோஷம் தென்பட்டது.

    ‘’ எனக்கு கோபம் வரதுக்கு முன்ன போயிடுங்க மாமா. வயது மூத்தவர்னு தான் இத்தனை நேரம் பொறுத்துக்கிட்டிருந்தேன். என் தம்பி படிக்கனுமா தறிபோடனுமான்னு நான் தான் முடிவு செய்யனும்.. போங்க பொழப்பைப்பார்த்துக்கிட்டு..’’ அண்ணன் கத்தினார்.

    ’’ இருங்க சித்தப்பா.. காபி குடிச்சுட்டு போங்க ‘’ என்று சொல்லியபடி அண்ணி அவருக்கும் என் அண்ணனுக்கும் எனக்கும் காபி கப்களை நீட்டினாள். காபிகளை நாங்கள் எடுத்துக்கொண்டதும் நடுவாசலின் மேல் சாய்ந்துகொண்ட அண்ணி மாமாவிடம் கனைத்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தார்கள்

    ‘’ சித்தப்பா.. நீங்க பேசினதை நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். இந்த வீட்டுக்கு ஒரு மஹாலட்சுமியா என்னைக் கொண்டுவந்து வைத்து என்னை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்ட அம்மா போனபின் இந்தக் குடும்பத்துப் பொறுப்பு என்கிட்ட வந்துடுச்சுன்னு உங்களுக்குப் புரியாததா..? அம்மாவின் ஆசையும் ஏன் எங்க ஊட்டுக்காரருக்கும் இருந்த ஒரே ஆசை ராமுவைப் படிக்கவைத்து உத்யோகம் அனுப்பறது தான். குடும்பத்துல ஒருத்தியான எனக்குமட்டும் அந்த அக்கறை இருககாதா..? மருமகள்னா தறியில் இருக்கக்கூடாதுன்னு ஏதாச்சும் சட்டமா போட்டு இருக்காங்க..? நாளையில இருந்து அம்மா தறியில் நான் உக்காறப்போறேன். ராமு அவன் படிப்பை முடிக்கட்டும். ‘’

    தீர்மானமாகச் சொல்லிய அண்ணியின் வார்த்தைகளை வெட்டிபேச வாயெடுத்த அண்ணனின் முயற்சியை ஒரு பார்வையால் தடுத்த அண்ணி என்னிடம், ‘’ ராமு நாளைக்கு காலேஜ் போயி எக்சாம் ஃபீசைக் கட்டிடு. நான் பணம் தரேன்..’’ என்றார்கள்.

    மாமாவின் கண்களில் ஈயாடவில்லை.
    என் வாய் அடைத்துக்கொண்டது. அம்மாவின் பேச்சுப் போலவே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு ரகமான பேச்சு. அம்மா எங்கேயும் போகவில்லை.

    என் அண்ணியில் என் அம்மாவைப் பார்த்தேன். கண்கள் கலங்கியது. ஆனாலும் மனது நிறைந்தது.

    முற்றும்

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    சந்தேகம்

    சந்தேகம்


    சைதாபேட்டை அனன்யா மகளிர் கல்லூரி நூலக வளாகத்தை விட்டு நான் வெளியே வரும்போது சரியாக மாலை 6.00 மணி. கடந்த எட்டு வருடங்களாக இங்குதான் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன், லைப்ரரியனாக.

    வெளியே வரும்போது யாரோ “லக்ஷ்மி” என்று கூப்பிட்டது போல் இருந்தது. திரும்பினேன். என்னை இல்லை. வேறு யாரையோ?

    இன்று பார்த்து லேட். அப்பா காத்துக் கொண்டிருப்பார் பணத்திற்காக. ATM ல் பணம் எடுக்க வேண்டும். நகை ஆர்டர் கொடுத்திருந்தேன், தங்கையின் வளை காப்புக்காக. அதை வேறு வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும். இல்லைன்னா, அம்மா திட்ட ஆரம்பித்து விடுவாள்.

    நேரம் பார்த்து, யாழினி, எனது உதவியாளினி, 5.00 மணிக்கு வேலை கொடுத்து விட்டாள். ஏதோ அவசரமாம். முடிக்க இவ்வளவு நேரம். அடிக்க வேண்டும் அவளை. இனிமேல்தான் ஆட்டோ பிடித்து, நகை வாங்கிக் கொண்டு, ATMல் பணம் எடுத்துக்கொண்டு, சென்ட்ரல் ஸ்டேஷன் போய், எலெக்ட்ரிக் ட்ரெயின் பிடித்து திருவள்ளூர் செல்ல வேண்டும். வீடு அங்குதான்.

    இரவில் நகை, பணத்துடன் திருவள்ளூர் வரை செல்ல கொஞ்சம் பயம்தான். என்ன செய்வது? வேக வேகமாக, தி நகர் போய் நகையை வாங்கிக் கொண்டு, ரயில் நிலையம் அருகே பணம் எடுத்துக் கொண்டு, மாம்பலம் ஸ்டேஷனில் ரயில் ஏறினேன் யாரோ என்னை பின் தொடர்வது போன்ற உணர்வு. திரும்பினேன். சுமார் 45 வயது மதிக்கதக்க ஆள், கட்டையான உருவம், பத்து நாள் தாடி, என்னையே குறு குறு வென்று பார்ப்பது போல் இருந்தது. ஒருவேளை ஜெவேல்லேரியிலிருந்து தொடர்கிறானோ? ATM ல் பணம் எடுக்கும் போது பார்த்திருப்பானோ?

    கைப்பையை கெட்டியாக பிடித்துக்கொண்டே மின்சார வண்டியில் முதல வகுப்பில் ஏறினேன். அவனும் என்னைத்தொடர்ந்து ஏறினான். கம்பார்ட்மெண்ட்டில் சுமாரான கூட்டம். அவனைப்பார்க்காத மாதிரி ஒரு ஓரமாக நின்று கொண்டேன்.

    பார்க் ஸ்டேஷன்ல வண்டி நின்றவுடன் இறங்கி சென்ட்ரல் ஸ்டேஷன் நோக்கி விறு விறுவென நடந்தேன். எதேச்சையாய் திரும்பினால், தாடிக்காரன்.. என்னைப் பார்க்காதது போல் பின்னாடியே வந்துகொண்டிருந்தான். என் படபடப்பு அதிகமாயிற்று. மணியோ 7.30. இரவு. கையில் நகை, ரூபாய்40,000 ரொக்கம். திருவள்ளூர் ஒரு கோடி போகவேண்டும். “இந்த அப்பா ஏன் திருவள்ளூரில் வீடு கட்டினாரோ?” திட்டிக்கொண்டே நடந்தேன். திருட்டுத்தனமாக பின்னால் திரும்பிப் பார்த்தேன். தாடிக்காரனைக்காணோம். அப்பாடா!. அனாவசியமாக பயந்து விட்டேனோ? வீட்டில் சொன்னால், அப்பா, அம்மா, அக்கா மட்டுமல்ல, அக்கா பையன் நிகிலும் சிரிப்பான். “சரியான சந்தேகபேர்வழி, பயந்தாங்கொள்ளி” என்று.

    வீடு சேர 10 மணியாகிவிடும். அப்பா டென்ஷன் ஆகி விடுவார். மொபைலில் கூப்பிட்டு “ லேட்டாகும்பா! பயப்பட வேண்டாம்!” என்றேன். அப்பா கொஞ்சம் கவலைப்படற ஜாதி. “பத்திரம்! வேணுமென்றால் நான் ஸ்டேஷன் வரட்டுமா லஷ்மி” என்றார். அப்பாவுக்கு என்னை விட நகை, பணம் பேரில் கவலை. “வேண்டாம் வேண்டாம், ஸ்டேஷன் லேதான் என் ஸ்கூட்டி இருக்கே” நிராகரித்தேன்.

    திருவள்ளூர் செல்லும் மின் வண்டி புறப்படத் தயாராக இருந்தது. பார்த்துக் கொண்டே நடந்தேன். லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் கொஞ்சம் கூட்டம். சிக்னல் விழுந்து விட்டது. பக்கத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் ஏறினேன். யாரோ என்னை இடித்துக்கொண்டே ஏறினார்கள்.

    “இடியட்”. திட்டிக்கொண்டே திரும்பினேன். திக்கென்றது. அதே தாடிக்காரன். மாம்பலத்திலுருந்து என்னைத் தொடர்ந்து இங்கும் ஏறி விட்டான். நெற்றியில் பூத்த வியர்வையை துடைத்துக்கொண்டு, நெஞ்சு படபடக்க உள்ளே உட்கார்ந்தேன். எதிர் இருக்கையில் இருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி மெலிதாக முறுவலித்தாள். சக பிரயாணி. நானும் பதில் புன்னகை பூத்தேன்.

    தாடிக்காரன் இரு வரிசை தள்ளி என்னைப் பார்த்தபடி உட்கார்ந்தான். கொஞ்சம் உதறல்தான் நகையையும், பணத்தையும் பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க வேண்டுமே!. கடவுளே! என்னைக் காப்பாற்று.- வேண்டிக்கொண்டேன். எங்கே பார்த்தாலும் கொள்ளை, நகை பறிப்பு பற்றி தினசரியில் படிப்பதால், எனக்கு பயத்தில் கொஞ்சம் ஜுரமே வந்தது போலிருந்தது.

    வண்டி திருவள்ளுரை நெருங்க நெருங்க முதல் வகுப்பு காலியாகிவிட்டது. நானும் தாடிக்காரனும் மட்டும்தான். கத்தி, கித்தி எடுத்து மிரட்டுவானோ? குத்தி விடுவானோ? ஏன்தான் முதல் வகுப்பில் ஏறினேனோ? அவன் மெதுவாக எழுந்து என்னை நோக்கி நடப்பது போலிருந்தது.

    பயத்தில் என்ன செய்கிறேனேன்றே தெரியவில்லை. அவசர அவசரமாக, கைப்பையை எடுத்துகொண்டு திருவள்ளூரில் வண்டி நிற்கும்முன் பிளாட்பாரத்தில் குதித்தேன். வலது கால் கொஞ்சம் மடங்கியது. நல்ல வேளை. சமாளித்துக் கொண்டேன். “ பார்த்து, பார்த்து” சத்தம் கேட்டது லேடீஸ் கம்பார்ட்மெண்ட் அருகில்..

    திரும்பினேன். முதல் வகுப்பில் தாடிக்காரன் நான் உட்கார்ந்திருந்த இருக்கை பக்கத்திலிருந்து கூவி அழைத்தான்.

    ”சார், சார், கொஞ்சம் நில்லுங்க! அவசரத்தில் உங்க பர்ஸ் கீழே விழுந்ததை பாக்காம போறீங்களே?”

    வெட்கமாக இருந்தது எனக்கு. பயத்தில் பர்ஸ் எனது பாண்ட்பாக்கேட்டிலிருந்து விழுந்ததைக்கூட கவனிக்கவில்லை. நின்று பர்சை வாங்கிக் கொண்டேன். “ரொம்ப தேங்க்ஸ்” – நான்

    “சார்! உங்களை எனது கசின் யாழினியுடன் பார்த்திருக்கிறேன். அனன்யா மகளிர் கல்லூரிலே தானே வேலை பார்க்கிறீர்கள்? நானும் திருவள்ளுர்தான். கொஞ்ச நாளாச்சு இங்கே வந்து”- தாடிக்காரன்.

    “அடக் கடவுளே! என்ன ஒரு சந்தேகம் எனக்கு” – எனக்குள் திட்டிக்கொண்டே, தாடிக்காரருக்கு மறுபடி ஒரு தேங்க்ஸ் போட்டுவிட்டு, டூ வீலர் ஸ்டாண்ட் நோக்கி நடந்தேன், லஷ்மி நரசிம்மன் ஆகிய நான்.
    ****

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    புரிதல்...

    புரிதல்...

    அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த கார்த்திக்கு "டாடி..." என ஓடி வரும் பிள்ளைகளின் சத்தமின்றி வீடு அமைதியாய் இருந்தது ஆச்சிர்யமளித்தது

    "தேவி... கொஞ்சம் காபி குடேன்" என்றபடி சோர்வாய் சோபாவில் அமர்ந்தான்

    சற்று நேரம் பதில் வராமல் போக "தேவி... என்ன பண்ற? கொழந்தைங்க எங்க சத்தமே காணோம்?" என்றபடி சமையல் அறைக்குள் சென்றான்

    அங்கு சமையல் அறையின் ஒருபுறம் போடப்பட்டிருந்த உணவு மேஜையில் அமர்ந்து குழந்தைகள் இருவரும் பள்ளி புத்தகத்தில் ஒரு பார்வையும் எதிரில் அமர்ந்திருந்த அன்னையின் மேல் ஒரு பார்வையுமாய் அமைதியாய் எழுதி கொண்டிருந்தனர்

    ஏதோ பிரச்சனை செய்து பெற்றவளிடம் இருவரும் திட்டு வாங்கி இருக்கிறார்கள் என புரிந்தவனாய், சூழ்நிலையை சரியாக்கும் எண்ணத்தில் "ஹாய் செல்லம்ஸ்" என்றான் பிள்ளைகளை பார்த்து

    தேவி அவனை முறைக்க "உன்னையும் சேத்து தான்" என்றான் பிள்ளைகள் அறியாமல் மையலாய் சிரித்து

    தேவி உணர்ச்சி மாறாத முகத்துடன் பார்க்க "கொஞ்சம் காபி குடேன் ப்ளீஸ்" என்றான்

    அவள் பதில் பேசாமல் எழுந்து அடுப்பின் அருகே செல்ல "என்னாச்சு?" என செய்கையால் பிள்ளைகளிடம் வினவினான்
    பெரியவள் நிவேதா பதில் சொல்ல வர, அதற்குள் தேவி "நிவி, மாத்ஸ் ஹோம் வொர்க் முடி சீக்கரம், நாளைக்கி ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணனும் ஞாபகமிருக்கில்ல" என அதட்டினாள்

    நிவேதா பாவமான முகத்துடன் எழுதுவதை தொடர, சின்னவள் ஸ்வேதா "மம்மி நான் பினிஷ் பண்ணிட்டேன். ப்ளே கிரௌண்டுக்கு போட்டுமா?" என எதிர்பார்ப்புடன் கேட்டாள்

    "மிட் டெர்ம்ல நீ வாங்கிட்டு வந்திருக்கற மார்க் லட்சணத்துக்கு இனி ஒரு மாசத்துக்கு நோ ப்ளே கிரௌண்ட்... ஒழுங்கா உக்காந்து படி, இல்லேனா அடி பின்னிடுவேன்" என பெற்றவள் கோபமாய் கத்த, கண்ணில் நீருடன் தந்தையை பார்த்தனர் இருவரும்

    "என்ன தேவி இது, பாவம்மா பசங்க. தினமும் கொஞ்ச நேரமாச்சும் விளையாடினாத்தான் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்" என்றான்

    "ஆமா, உங்க புள்ளைங்க பாவம், நீங்க பாவம், வழில போற வர்றவங்க எல்லாரும் பாவம். இந்த உலகத்துலயே பாவம் இல்லாத ஜென்மம்னா அது நான் மட்டும் தான். உங்க எல்லாருக்கும் ரிலாக்ஸ் பண்ணிக்கணும். நான் மட்டும் எப்பவும் மாடு மாதிரி வேலை செஞ்சுட்டே இருக்கணும். எல்லார் வாய்லயும் விழணும்னு என் தலைல எழுதி இருக்கு. நான் பொறந்த நேரம் அப்படி" என கத்தலாய் தொடங்கிய பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்ருதி குறைந்து விசும்பலில் முடிய, இது வேறு ஏதோ பிரச்சனை என புரிந்தவனாய் பிள்ளைகள் முன் பேச வேண்டாம் என்பது போல் மௌனமானான் கார்த்திக்

    பெற்றவள் கண்ணில் நீரை கண்டதும் பிள்ளைகள் இருவரின் முகம் வாடியது. அது காண சகியாமல் "சீக்கரம் ஹோம் வொர்க் முடிச்சா ப்ளே கிரௌண்ட் போலாம்" என கார்த்திக் சொல்ல

    "ஹய்யா" என குதித்த பிள்ளைகள், அடுத்த கணம் அன்னையின் சம்மதம் கேட்பது போல் பாவமாய் தேவியை பார்த்தன

    அவர்களோடு கார்த்தியும் கெஞ்சலாய் பார்க்க, "என்னமோ செய்ங்க" என தேவி எழுந்து தங்கள் அறைக்குள் செல்ல, அதையே சம்மதமாய் ஏற்று கொண்டவர்கள் போல் இருவரும் எழுதி முடித்து விளையாட சென்றனர்

    பிள்ளைகள் செல்லும் வரை அமைதியாய் இருந்த கார்த்திக், பின் தேவியை தேடி அறைக்குள் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே முழங்காலில் முகம் புதைத்து படுக்கையில் அமர்ந்திருந்தவளை ஆதரவாய் தோள் தொட்டான்

    அதற்கே காத்திருந்தவள் போல் அவன் மடி சாய்ந்து விசும்பினாள். சின்ன பிரச்னையை கூட தாங்கிகொள்ள முடியாத மென்மையான மனம் கொண்டவள் தன் மனைவி என்பதை உணர்ந்தவன் என்பதால், தானே சமாதானமாகட்டும் என நினைத்தவனாய் மௌனமாய் அவள் தலைகோதி அமர்ந்திருந்தான்

    "என்னம்மா... ஆபீஸ்ல எதுனா பிரச்சனையா?" என மெல்ல பேச்சை ஆரம்பிக்க, இல்லை என்பது போல் தலை அசைத்தாள்

    "என் மேல எதுனா கோபமா?" எனவும், அவசரமாய் இல்லை என்றாள்

    "வேற என்ன?"

    "இன்னைக்கி அம்மா ஆபீசுக்கு போன் பண்ணி இருந்தாங்க. அக்கா வீடு கட்ட போறாளாம். ஒரு பையன வெச்சுட்டு இருக்கற அவளே வீட்டு கட்றா, நீ ரெண்டு பொண்ணுகள வெச்சுட்டு இன்னும் பொறுப்பில்லாம இருக்கியேனு...எனக்கு ரெம்ப கஷ்டமா இருந்ததுங்க. ஆபீஸ்லயும் வேலை ஜாஸ்தி, வீட்டுக்கு வந்தா இதுக ரெண்டும் மிட் டெர்ம்ல மார்க் கம்மினு எல்லாமும் சேந்து டென்ஷன் பண்ணிடுச்சு. எங்கம்மாவுக்கு எங்கக்கா தான் எப்பவும் ஒசத்தி" என பெருமூச்சுடன் நிறுத்தினாள்

    "உங்கம்மா சொன்னதுல தப்பொன்னும் இல்லடா. நாம நல்லா இருக்கணும்ங்கற எண்ணத்துல தான் சொன்னாங்க. அந்தந்த ஸ்டேஜ்ல பெத்தவங்களுக்கு பிள்ளைங்க மேல இருக்கற எதிர்பார்ப்புகள் தானே"
    "அதில்லைங்க..." என்றவளை கை அமர்த்தியவன்

    "நமக்கு எப்ப வீடு கட்டனும்னு இருக்கோ அப்ப தான் நடக்கும். நீ டென்ஷன் ஆகி கத்தினா இன்னைக்கே நடக்குமா? நீ டென்ஷன் ஆனா அது என்னையும் கொழந்தைங்களையும் பாதிக்கும்னு உனக்கு தெரியும் தானேடா" என கார்த்திக் வருத்ததுடன் கூற

    அது அவளையும் வருத்த "தப்பு தான்...சாரி. இனிமே இப்படி இருக்க மாட்டேன். ரியலி சாரி" என மன்னிப்பு கோரும் குரலில் தேவி கேட்க,
    ஒன்றும் பேசாமல் சிறு புன்னகையுடன் அவளை அணைத்து கொண்டான் கார்த்திக்

    சற்று நேரம் அப்படியே இருந்தவள் "பேசாம சின்ன குழந்தையாவே இருந்துருக்கலாம், எந்த கவலையும் இல்லாம நிம்மதியான ஸ்டேஜ் இல்லையாப்பா" என ஏக்கத்துடன் தேவி கூற

    "அப்படி எல்லாம் இல்ல தேவி. நேத்து நல்லா இருந்ததுனு நினைக்கறது தான் மனுஷ இயல்பு, ஏன்னா அந்த நேத்தை நாம வெற்றிகரமா கடந்துட்டோம்ங்கற நிம்மதி தான் காரணம்"

    "எனக்கு ஒண்ணும் புரியல" என முகம் சுளித்தாள்

    "இந்த குட்டி மண்டைல ஏறுற விதமா சொல்றேன் இரு. தேவிம்மா... அந்தந்த வயசுக்கு அந்தந்த டென்ஷன் கண்டிப்பா இருக்கும். ஆனா அந்த பருவம் தாண்டினதும் அதுலயே இருந்துருக்கலாம்னு தோணும். ரெண்டு வயசுல வீட்ல அடைச்சு வெக்கும் போது, எப்படா ஸ்கூலுக்கு போவோம்னு இருக்கும். அதே ஸ்கூலுக்கு போகணும்னு கட்டாயம் வரும் போது, ச்சே வீட்லயே இருக்கலாம் முன்னி மாதிரினு தோணும். அப்புறம் இந்த ஸ்கூல் டென்ஷன் இல்லாம சீக்கரம் காலேஜ் போயிரணும்னு தோணும். காலேஜ் போனதும், ஸ்கூல் லைப் தான் ஜாலினு தோணும்"

    தேவி "ம்..." எனவும்

    "நான் என்ன கதையா சொல்றேன்" என செல்லமாய் அடித்தவன்

    "காலேஜ் படிக்கும் போது அப்பா கேக்கற பாக்கெட் மணி தரலைன்னு சொன்னா, சீக்கரம் வேலைக்கு போய் சம்பாதிக்கணும்னு தோணும். அதே வேலைக்கு போனப்புறம் காலேஜ் லைப் மாதிரி வராது அங்கலாய்ப்பு வரும். அதோட முடிஞ்சதா, அப்பறம் கல்யணம் ஆகலைனு டென்ஷன், அப்புறம் குழந்தை இல்லையே இன்னும்னு டென்ஷன். பிள்ளைக்கு ஸ்கூல் அட்மிசன் டென்ஷன், அவங்க எதிர்காலம் பத்திய டென்ஷன், வீடு சொத்து சேக்கணும்னு டென்ஷன்...அப்புறம்..."

    "போதும் போதும்... எனக்கு தலையே சுத்துது. இப்ப எனக்கு டென்ஷன் இன்னும் ஜாஸ்தி ஆய்டுச்சு" என சிணுங்கினாள்

    "தேவி... இதை டென்சனா எடுத்துகிட்டா வீணா ஒடம்பும் மனசும் தான் கெட்டு போகும். அதுக்கு பதிலா பொறுப்புகளா எடுத்துகிட்டா, அது உந்துசக்தியா இருந்து நம்மள சாதிக்க வைக்கும், அப்படி இருக்கறவன் சாதிக்கறான், டென்ஷன் ஆகறவன் தோத்து போறான், அதான் வித்தியாசம். நம்ம வாழ்க்கையோட வெற்றி தோல்விய தீர்மானிக்கறது நாமளே தான், புரிஞ்சதா?"

    "நல்லாவே புரிஞ்சது. என் புருஷன் அதிபுத்திசாலினு கூட புரிஞ்சது" என்றாள் கேலியும் பெருமிதமும் கலந்த குரலில்

    "என்ன புத்திசாலியா இருந்து என்ன பண்றது. என் புள்ளைங்களோட அம்மா விசயத்துல ஏமாந்துட்டனே" என பாவமாய் அவன் கூற

    ஒரு கணம் விழித்தவள், புரிந்ததும் முறைக்க "ஆனா இப்படி ஒரு பார்வை பாத்தே கிளீன் போல்ட் பண்ணிடறியே தேவி" என காதலாய் பார்க்க, "அங்க மட்டும் என்னவாம்" என முணுமுணுத்தவளை, புன்னகையுடன் தன் அணைப்பில் இணைத்து கொண்டான் கார்த்திக்

    (முற்றும்)

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    பந்தா !

    பந்தா !

    புதிதாக முளைத்த காலனியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள். இன்னும் நிறைய இடங்கள் நடுநடுவே காலி மனைகளாகவே நின்று கொண்டிருக்க ... அவசர நேரத்தில் கூட யாரையும் உதவிக்கு அழைக்க முடியாத நெருக்கடி என்பது தெளிவாக புலப்பட்டது. நடக்கும் பாதை மேடு பள்ளமாக சீரில்லாமல் இருந்தது. பாதையின் இருபக்கமும் சிறு சிறு இடைவெளியில் வேப்ப மரங்கள் அடர்த்தியாய் நின்று தலை அசைத்துக் கொண்டிருந்தன.

    சுனந்தா, வனஜா இருவருக்கும் மனதுக்குள் படபடப்பாக இருந்தது. பஸ்ஸில் இருந்து இறங்கி இருபது நிமிட நடைப்பயணம் மேற்கொண்டால் தான் அந்த காலனியில் இருக்கும் அவர்கள் உறவினர் வீட்டிற்கு போய் சேர முடியும். உட்புறம் பாதை இன்னும் சீரமைக்கப்படாததால் பேருந்து மெயின் ரோட்டிலியே நின்றுவிடும். இதற்கு முன் எத்தனையோ முறை தனியாக அந்த பாதையில் வந்திருக்கிறார்கள் . அப்போதெல்லாம் தெருவில் மின்சார விளக்குகள் பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்த நேரம். இந்த இரண்டு மூன்று மாதங்களாக எப்போது மின்வெட்டு என்று தெரியாமல் ஒளியும், இருளும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதால் வீடு போய் சேருவதற்குள் பாதை இருட்டாகிவிடுமோ என்று பயமாக இருந்தது. இருவருக்கும் கழுத்தில் ஆறு பவுன் சங்கிலி கனமாக தொங்கிக் கொண்டு இருந்தது. இது போன்ற இருட்டு நேரங்களில் வழிப்பறி, கொள்ளை இன்னும் என்னன்னவோ நடக்கிறதே?

    எவ்வளவு வேகமாக நடக்க முடியுமோ அவ்வளவு எட்டி நடை போட்டார்கள். கட்டியிருந்த புடவை வேறு காலைத் தடுக்கியது. மழைத் தூறல் சாரலாய் ஆரம்பிக்க வானம் எப்போதும் விட முன்னதாகவே கருமை வண்ணம் பூசிவிட்டது. அவசரமாக குடையை விரித்தாள் சுனந்தா. மழைத்துளிக்காகவே காத்திருந்தது போல மின்சாரம் துண்டிக்கப்பட கையில் இருந்த செல் டார்ச்சின் சன்னமான வெளிச்சம் தவிர வேறு எந்த வெளிச்சமும் இல்லை. எப்போதாவது ஒரு முறை தாண்டி செல்லும் ஒரு சில பைக்குகளையும், சைக்கிள்களையும் தவிர வேறு நடமாட்டம் இல்லை. பின்னால் காலடி ஓசை கேட்க இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். ஒருவரும் இல்லை. எல்லாம் பிரமையா?

    சீக்கிரம் நட வனஜா.. யாரோ பின்னால பாலோ பண்ற மாதிரி இருக்கு.... சுனந்தா அவசரப்படுத்த .....
    மீண்டும் பின்னால் சரசரவென்று காலடி ஓசை கேட்டது. என்னவென்று சுதாரிப்பதற்குள் இரண்டு முரட்டு தடியன்கள் அவர்கள் வாயை இறுக்கி மூடிவிட கத்துவதற்கு கூட வழியில்லாமல் போனது. சுனந்தாவும், வனஜாவும் அவர்கள் பிடியில் இருந்து விடுபட திமிறிக் கொண்டு இருந்தார்கள்.

    சீக்கிரம் செயினப் பறிடா... எவனாவது வந்து தொலைக்க போறான்... ஒருவன் அவசரக் குரல் கொடுக்க ...
    மூன்றாவதாக ஒரு ஆள் அந்த பெண்களின் கழுத்தில் கை வைத்த நேரம் அங்கிருந்த வேப்ப மரங்களின் மீதிருந்து தப தபவென்று பலர் குதிக்கும் காலடி ஓசை கேட்க... மூன்று வழிப்பறித் திருடர்கள் மீதும் முரட்டு அடிகள் சரமாரியாக விழுந்தன.... கிடைத்த இடைவெளியில் சுனந்தாவும், வனஜாவும் தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

    விரைந்து வந்த காவல் துறை வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சத்தில் மப்டியில் இருந்த போலீஸ் அந்த வழிப்பறி திருடர்களை அடித்துத் துவைத்து இருந்தது தெரிந்தது. ஒரு மாதமாக அந்த ஏரியாவில் அடிக்கடி வழிப்பறி, செயின் திருட்டு நடப்பதாக வரிசையாக காவல் நிலையத்தில் புகார் மனு. இன்று திட்டம் போட்டு தான் சுனந்தா, வனஜா என்ற இரு லேடி கான்ஸ்டபிள்களை அந்த பாதையில் நடக்கவிட்டு திருடர்களை வளைத்துப் பிடித்தனர்.

    அங்கே போலீஸ் ஸ்டேஷனில் கிடுக்கிப் பிடி விசாரணை நடந்து கொண்டிருந்தது. மூன்று கொள்ளையர்களும் இளவயதினர் தான். பார்வைக்கு கல்லூரி மாணவர்களைப் போல இருந்தார்கள்.

    இன்னும் எத்தன இடத்துல உங்க கைவரிசைய காட்டி இருக்கீங்க.? கொள்ளை அடிச்சத என்னடா பண்ணுனீங்க...போலீசாரின் ஒவ்வொரு கேள்வியோடும் அடி இடியாய் இறங்க...

    சார்... எங்கள விட்டுடுங்க சார்... எல்லாமே திருப்பிக் குடுத்துடறோம். நாங்க ### காலேஜ் ல படிக்கறோம் சார். எங்க கூட படிக்கற பிரெண்ட்ஸ் எல்லாம் பயங்கர பந்தாவா இருப்பாங்க சார்... நாங்களும் ஆளுக்கு ஒரு பைக் வாங்கிட்டு ஸ்டைலா ஊற சுத்தணும்னு ஆசைப்பட்டோம். வீட்ல வாங்கி தர முடியாதுன்னு சொன்னாங்க. தப்பான வழில இறங்கிட்டோம் சார். விட்டுடுங்க சார்.. கேஸ் எல்லாம் போடாதீங்க சார்... எங்க எதிர்காலமே வீணா போயிடும்... காலில் விழாத குறையாக மூவரும் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

    உங்கள பெத்தவங்க நீங்க நல்லா படிச்சு முன்னுக்கு வரணும்னு காலேஜ்க்கு அனுப்பிச்சா பொறுக்கித்தனம் பண்ணிக்கிட்டு திரியறீங்க. பைக் எடுத்துட்டு ஊரைச் சுத்திட்டு பொம்பள புள்ளைங்களுக்கு ஷோ காட்டணும். அதுக்கு திருட வேற சொல்லுது. இதுக்காகவே உங்கள இன்னும் நாலு செக்ஷன் ல போட்டு உள்ள தள்ளணும் டா. வாழ்க்கைல படிச்சோ , உழைச்சோ முன்னுக்கு வரணும்னு நினைக்கறவன் தாண்டா எதிர்காலம் பத்தி பேசணும். நீங்க எல்லாம் ஏண்டா எதிர்காலத்த பத்தி பேசிகிட்டு . உங்கள மாதிரி ஆளுங்கள மன்னிச்சு வெளிய விட்டா மத்தவங்க வாழ்க்கையும் சேர்ந்து இருண்ட காலமா மாறிடும். ராமதுரை... மூணு பேர் மேலையும் எப் .ஐ .ஆர் போடுங்க... சொல்லிவிட்டு மிடுக்காய் சென்று ஜீப்பில் அமர்ந்தான் இருபத்து ஐந்து வயதே ஆன இன்ஸ்பெக்டர் அஸ்வின்.

    இளைஞர்கள் போகும் பாதையை பொறுத்ததே அவர்கள் வாழ்க்கை. அஸ்வின் போலவும் ஆகலாம்... அந்த திருடர்களைப் போலவும் மாறலாம்... வாழ்வதும் , வீழ்வதும் அவரவர் {நம்பிக்} கையில்..!!

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    வீரபத்திரன் ...

    வீரபத்திரன் ...


    அப்போதுதான் பேரலை நுரை கக்கி விட்டுப் பின்னோக்கியது.

    குளிர் கண்டவனுக்கு வைத்தியம் பார்த்துவிட்டு மூலிகைப் பெட்டியும் கையுமாய் ஈர மண்ணில் நடந்து வந்தவர், சற்று தடுமாறியவராய், "எதோ பார்வையில் பட்டதே அதைக் கவனித்தும் நின்று நிதானித்துப் பாராமல் கடந்து வந்து விட்டேனே" என நினைத்துத் திரும்பிப் பார்த்தார் கூர்ந்து நோக்கினார் பரியாரி பெரிய தம்பி.

    புதிய இரண்டு மூன்று தடங்களைத் தவிர பழைய அவரின் காலடித் தடங்கள் அலையில் கரை பட்டுப் போயிருந்தன.

    புதைந்திருந்த ஒரு கருங் கல் தலை நீட்டிக் கொண்டிருந்தது, சூரிய கதிர் பட்டு வெளிச்சத்தில் வெண் தரையில் மினுங்கியது, அது ஒரு சிறந்த வகைக் கல்லாய் அவருக்கு புலப்பட்டது , அது இந்த இடத்துக்கு ஒரு அந்நிய பொருளாய் தெரிந்தது. கல்லும் பாறையும் கனிமமும் உலோகங்களும் அவர் மருந்துக்கு மூலப்பொருட்கள். அவைகளே அவர் தேடு பொருட்கள்.

    அவசரமாய் மண்ணை விலக்கி எடுத்தவர் அதை ஆவலோடு நுணுக்கமாய் ஆராய்ந்தார்.

    எதோ உணர்ந்தவர் போல் கண்ணை அகலவிரித்து ஆச்சரியத்தோடு, முழம் அளவுள்ள அந்தக்கருங்கல் துண்டை பிரட்டிப் பிரட்டிப் பார்த்தார் சின்னத்தம்பி பரியாரி பரவசப் பட்டார் மெய் சிலிர்த்தார்,

    .......கொடுக்கை இழுத்துக் கட்டிக் கொண்டு ஓடினார் துள்ளினார்........கடல் பொங்கி அடித்து அலை வீசி சங்கு ஊதியது..........

    வெள்ளிப் பூண் உருத்திராக்க மாலை மணிகள் கழுத்தில் குலுங்கித் தூங்கித் தொங்கி அங்கும் இங்குமாய் ஆட .............கடற்கரை மண்ணில் கால் புதைய கண்டெடுத்த கருங்கல் பாறைத் துண்டோடு ஓடினார்.

    பாதிப் பனை முண்டு கொடுக்கும் வளை தாங்கிய பிரமிட்டு வடிவான தென்னோலை குத்தி நிக்கும் கோட்டை போன்ற அந்த ஓலை வீட்டின் திமிரான பெருந் திண்ணையில் வந்தமர்ந்தவர், கஷாயங்கள் , முலிகை வேர்களை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைத்து விட்டு மிகப் பக்குவமாய் வெள்ளைத் துணியில் அதை பக்தியோடு கிடத்திவிட்டு ..

    அவசர அவசரமாய் வாகடங்களைப் பிரட்டிப் பிரட்டிக் கண்களால் வரி வரியாய் எதையோ தேடினார்.

    கருங் கல் பாறைத் துண்டையும் படித்ததையும் ஒப்பு நோக்கினார், சிந்தித்தார் தெளிந்தார்.

    "தக்கனின் அகந்தை அழித்த வீர பத்திர சுவாமி.......சிவனே சைவப் பெரும் பொருளே எம் குலம் தளைக்க வந்தவரே...

    வாசலில் ஒற்றைத் திருக்கை வந்து நிற்பதும் பேரன், மகன் இறங்குவதும் தெரிகின்றது.

    பேரன் பின்னால் வர கடகத்தில் பெரும் சுமையோடு மகன் பின்னே வருகிறார்கள்.

    "பேரா வா இதை ஒருக்கா பார்"

    பேரனின் கூர்மையான பார்வையில் நம்பிக்கை கொண்டவர் உற்சாகத்தோடு கூப்பிட்டார், அவன் பொருட் படுத்தவில்லை..

    வெள்ளையர்கள் அறிமுகப் படுத்திய ஒரு நாட்காட்டியைப் பேரன் ஒரு கையில் வைத்திருந்தான் அதில் வர்ணத்தில் தேவ மாதா படம் போடப் பட்டிருந்தது பளிச்சிட்டது, மறு கையில் இரும்புப் பெட்டி,வந்ததும் வராததுமாய் பெட்டியைத் திறந்தவன் வேகமாய் கிளறிக் கொண்டிருந்தான். அதில் புத்தகங்களை சில உடுப்புக்களைத் திணித்து வைத்திருந்தான்."என்ன பேரா தேடுறாய்? ஒருக்கா வந்திட்டுப் போ, இந்தா இதைப் பாரப்பா."

    மகன் வந்தவுடன் கிணற்றடிக்குப் போய்விட்டான்.

    "பட்டணத்துக்குப் படிக்கப் போனவுடன இந்த பேரனை மறந்திட்டியே - வந்தவுடன ஒரு வார்த்தை கூடப் பேசாமல்.."

    "இந்தாங்கோப்பா இதை வாசியுங்கோ" ஒரு கடுதாசித் துண்டை எடுத்து நீட்டினான்.

    பனை ஓலை ஏட்டில் எழுதிப் படித்துப் பழக்கப் பட்டவர் அவர், "எவ்வளவு அழுத்தமாய் செய்திருக்கிறாங்கள்-எவ்வளவு தெளிவாய் எழுத்துக்கள்" உள்ளுக்குள் வெள்ளையரின் காகிதத்தை அதன் நேர்த்தியான நெகிழ்வான தன்மைகளை மனதிற்குள் ரசித்தபடிபிரித்தார்.

    ------------- வாசித்துக் கொண்டு போனவர் திடுக்கிட்டார்.....

    "அப்புட்ட கடுதாசியைக் குடுத்திட்டியே" கிணற்றடியிலுருந்து திரும்பிய மகன், ஈரம் துடைத்தபடி

    "அப்பு வாசிக்கிறார்"

    தாழ்வாரத்திணுடாய் குனிந்து பார்த்தான். கடுதாசியைக் கையில் வைத்தபடி கஷாயங்கள் மூலிகைகளுக்கு நடுவே கண்ணில் நீர் வடிய இறுக்கமான முகத்தோடு...

    "ஐயா அதைப் பற்றிப் பெரிசா யோசியாதையுங்கோ..."

    "எங்கே இருந்து நாடு பிடிக்க வந்தவன் அந்த வெள்ளைக் காரண அவன் எங்களுக்குக் கல்வி தாறான், இடையில எங்கட ஊரான் இப்படி ...பொடியைப் பட்டணத்துக்கு அனுப்பி பெரிய படிப்புப் படிப்பிக்க வேணும் என்ட என் கனவில இவங்கள்....."

    "அப்பு இவையல் ஒண்டும் செயேலாது, .அவங்கள் வெள்ளைக்கார அதிபர் சொல்லைக் கேக்க வேணும் அல்லாட்டி பள்ளிக் கூடத்தை விட்டுப் போகவேணும்.."

    "மோனை என்னடா சொல்றாய்"

    "மாணவனுக்காண்டி அந்த பண்டிதனைப் பள்ளியைவிட்டு நீக்கிவினமோ ?"

    "கடிதத்தை நல்ல வாசியுங்கோ, தாங்கோ வாசித்துக் காட்டுறன்"

    கடிதம் கை மாறியது..

    சின்னப்புவின் பெற்றாருக்கு எழுதுவது,

    உங்கள் மகனின் கல்விக்காய் எங்கள் கல்லூரியைத் தெரிவு செய்தது எங்களுக்கு மகிழ்ச்சியே, ஆனாலும் இங்கே எமது நிர்வாகத்தில் இது பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் சமுகத்தின் - தமிழரின் இந்துக் கோட்ப்பாட்டின்படி உயர் சாதியார் படிக்கும் இந்தக் கல்லூரியில் தீண்டத் தகாதவரைச் சேர்க்கக் கூடாது என ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பிரபல பண்டிதர் உங்கள் மகனைச் சேர்த்தால் கல்லூரியிலுருந்து விலகப் போவதாய் கூறுகிறார். அவரின் தமிழ் புலமையும் மத அறிவும் எங்கள் மாணவர்க்குத் தேவை.

    ஆயினும் எங்கள் நிர்வாகம் எல்லோருக்கும் கல்வி வழங்க வேண்டும் அது அடிப்படை உரிமை என்பதில் உறுதியாய் இருக்கிறது.

    இதுவே எங்கள் கிறிஸ்தவ கொள்கை. எனவே என்னதான் நடந்தாலும் உறுதியாய் இருக்கவும்.

    உங்கள் மகனுக்கு ஏற்பட்ட இந்த அசௌகரியத்திற்காய் மனம்வருந்துகின்றோம்.

    இப்படிக்கு

    கல்லூரி நிர்வாகம்.

    "அந்த பெரும்பான்மைச் சமுகத்தோட எதிர்த்துக் கொண்டு எப்படி படிக்க விடுறது, சதிகாரர்கள். படிக்காட்டியும் பறவாய் இல்லை பொடியன் உயிரோடிருந்தால் போதும்."

    "ஒண்டும நடக்காது, நீங்கள் தைரியமாய் இருங்கோ"

    "வெள்ளைக் காரங்கள் ஆட்சியில கொஞ்சம் மனசாட்சியாவது இருக்கு, அவங்கள் எங்கட மகனுக்கு பாதுகாப்பு கொடுப்பான்கள்"

    "என்னன்டாலும் செய்யுங்கோ எனக்கு அவனை அங்க படிக்க இதுக்குப் புறமும் அனுப்ப மனசு கேக்கேல்ல ..."

    எண்டவர் தான் கொண்டு வந்த கடற் கரைக் கல்லின் ஞாபகம் வந்தவராய் அதைக் காட்ட,

    "தம்பி இஞ்ச வாங்கோ, இதைப் பாருங்கோ" கருங்கல் பாறையைக் காட்டியவர் ..

    பேரன் கையில் தேவ மாத கலண்டரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்..,

    "அதை அந்தக் கலண்டரை அங்கால வை தம்பி பேரா..இந்தச் சிலையைப் பார் இதில உனக்கு என்ன தெரியுது?"

    "இந்தக் கல்லை எங்க எடுத்தனிங்கள்?"

    "நான் முதலித் தம்பி அய்யாவுக்கு குளிர் கசாயம் கொடுத்திட்டு வரேக்க அந்தக் கடற்கரையோரமாய் கண்டெடுத்தனான்"

    " என்ன இது..இதில என்ன இருக்கு ? இது ஒரு கல்லு , இதை வைச்சுக் கொண்டு நல்ல வித்தை காட்டுறியல், அப்பு கர வலைக்கு வாற சிங்களவர் இதைப் போட்டிருக்க வேணும்."

    "இல்லைத் தம்பி ஒருக்காப் பார்- இது ஒரு தெய்வச் சிலை, இதில உனக்கு என்ன தெரியுது வடிவாப் பார்?"

    மகனும் பேரனும் கூர்ந்து பார்த்தனர்..........

    விறகுகள் குழை மூலிகை சேகரித்துக் கொண்டு பெண்டுகள் வீடு சேர்ந்தனர்....ஆடொன்று அவர்களை அடையாளம் கண்டு கனைத்தது .........

    "அப்பு அம்மா ஆச்சி அக்கா வருகினம் அவையிட்டைக் கேளுங்கோ." தகப்பனும் மகனும் பரியாரியின் அழுங்குப் பிடியிலுருந்து தப்பித்துக் கொண்டனர்.

    "சிவக் கொழுந்து இஞ்ச ஒருக்கா வந்திட்டுப் போ...பிள்ளையளையும் வரச் சொல்."

    "பொறுங்கோ வாறன்"

    பரியாரி திண்ணைக்கு எல்லோரும் வந்து..அவர் காட்டிய கருங்கல்லுத் துண்டைத் துளாவித் துளாவிப் பார்த்தனர்..........

    "என்னப்பா எனக்கு ஒன்டுமாய்த் தெரியேல்ல"

    தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் பேரன் சின்னப்பு " நல்லா மாட்டிட்டினம்" கெக்கட்டம் விட்டுச் சிரித்தான்

    அதைத் தகப்பன் கணபதி உள்ளுர ரசித்தபடி, சிரிக்க வேண்டாமென்று சைகை காட்டினார்.

    கடைசிப் பெண் செல்லம் மட்டும்

    "ஐயா இது வைரவர் மாதிரி இருக்கு"

    இதைக் கேட்ட பெண்டுகள் தொடங்கி சின்னவன் பேரன் சின்னப்பு வரை ஒரு தினுசா அவளைப் பார்த்தனர்.

    "வைரவரோ?" சிவக்கொழுந்துப் பாட்டி கொஞ்சம் பக்தியோடும் பயத்தோடும் கருங்கல்லுத் துன்டிலுருந்து எட்டி விலகிக் கொண்டார்.

    "நீ கிட்ட வந்திட்டாய், வாகடமெல்லாம் பார்த்தனான் - இது வீரபத்திரரடி " அவர் உறுதியாய்ச் சொன்னார்.

    "வீரபத்திரரோ" சிவக்கொழுந்துப் பாட்டி மேலும் வாயைப் பிழந்து கொண்டு அந்தக் கருங்கல்லுத் துண்டை கண்வெட்டாமல் பார்த்தார்.

    "இது வீரபத்திரரடி" அவர் உச்சரித்த விதம் ஒரு அதிர்வை அங்கே உண்டாகியிருப்பதை எல்லோர் முகத்திலும் ஒரு விறைப்பு, சந்தேகங்களும்,பயமும் சிவக் கொழுந்துவிக்கு, இந்த மனிசன் வீட்டுக்க என்னத்தைக் கொண்டு வந்து கூத்தடிக்கிறார்

    தூரத்தே கடல் அலை தள்ளி கூவிக்கொண்டிருப்பது கேட்கக் கூடியதாய் இருந்தது.

    பேரன் சின்னப்புக்கு மட்டும் அப்பு வித்தை காட்டுவது போல் தெரிந்தது. அவன் தான் கொண்டு வந்த தேவ மாதா படம் போட்ட கலண்டரைக் கொண்டு வந்து. அப்புவுக்கு ஏட்டிக்குப் போட்டியாய்.

    "இஞ்சை பாருங்கோ ஆச்சி எங்கட பள்ளிக் கூடத்தில தந்ததை........"

    பளபளப்பான கடதாசி மட்டையில் தேவ மாதா அந்த ஆங்கில நாட்காட்டியில் எல்லோரும் வியந்து பார்த்தனர்.

    "உது வெள்ளைக் காரன் சீமையிலுருந்து கொண்டு வந்தது, இதைக் கொடுத்து எல்லாரையும் மயக்கி தங்கட மதத்தில சேர்க்கிற தந்திரம்"

    "ஓமப்பா அவையள் எல்லா இடமும் வேதக் கோயில் கட்டிகினம் - மருதடிச் சந்திக்கிட்ட சுண்ணக் கல்லும் பெரிய மரத் தீராந்தியலும் கொட்டி இருக்காம் - அவள் பூமணி விறகு பொறுக்கப் போகேக்க சொன்னவள். அங்கால பள்ளிக் கூடமும் நடத்திகினமாம். எல்லாப் பிள்ளைகளும் போகிறவையாம்."

    "கல்வியைக் கொடுக்கட்டும் எல்லாருக்கும்- அது நல்லது, அப்பத்தான் எல்லாரும் முன்னேறலாம். அனால எங்கட கடவுளைக் கேக்க வேண்டாம்.."

    "அப்பு உங்கட கடவுள் எண்டு சொல்றியல் அந்த முருகன் கோயிலுக்க ஏன் எங்கள உள்ளுக்க விடுகினமில்லை"

    "பேரா அதுக்காண்டித்தாண்டா எங்கட படியேறி வந்திருக்கிறார் இந்த வீரபத்திரர்"

    இயல்பாகவே உணர்ச்சி வசப்படும் பெரியதம்பிப் பரியாரி, இப்ப உரு வந்தவர் போல்.

    "குடிலப் போடு - சாமியைக் குடி வை அங்க

    கூட்டி வா எங்கட குலத்த

    மடையைப் போடு

    பறையை அடி

    பண்டத்தை தூக்கு

    எல்லாரும் வரட்டும்

    எவரும் தொடட்டும்

    எங்கட சாமி

    எங்கட தீட்டப் போக்கும் ....


    பட்டால் தீட்டுப் பட எங்கட சாமி

    சின்னச் சாமி இல்லை

    வீரபத்திர சுவாமி பெரிய சாமி ...


    அக்கினியில் தீட்டேது

    ஒளிக்குள் பண்டங்களைக் கலப்பது யார் ?

    எங்கட சாமி பெரியவர்

    துன்பம் போக்கும் துணையே சாமி..

    தூர நில் எண்டு

    சொல்லும் சாமி தீட்டுள்ள சாமி....


    அது வேண்டாம்

    அந்த நோயுள்ள

    அந்த சாமிகள் வேண்டாம் ,


    வீர பத்திரன் தக்கனை வெட்டி

    தான் பெரியவன் என்ற அகந்தை தலையை வெட்டி...


    அகோரமாய் எழுந்தார் எங்கடசாமி,

    தீண்டாது அகந்தை

    நான் பெரியவன்

    நீ சின்னவன்

    சொல்லுற தலையைத் தறிக்க

    அகோரமாய் எழுந்தார் எங்கடசாமி,


    கும்பிடும் குலத்தை

    பெரிய குலமாய் மாத்தும் சாமி ,


    எங்கள் சிவனின் சனத்தை தொடுகிற சாமி


    வீரபத்திரன்..வீரபத்திரன்..."



    பெரிய தம்பிப் பரியாரி இப்ப பூசாரி கூட. நாவலுக்கு அடியில் ஒரு குடில், அதற்குள் குடியேறிய சாமிக்கு முன்னால் மூலஸ்தானம் வரை முட்டிக் கொண்டு நின்றது அந்த ஊர்.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    அரளிப்பூக்கள்

    அரளிப்பூக்கள்

    பனி விழும் மார்கழி மாதம். சூரியன் கண் விழித்தபோது எங்கே போய் ஒளிந்தனவோ தெரியவில்லை பனித்துளிகளின் சுவடுகள் இல்லாமலிருந்தது.

    காற்றின் சலசலப்பு தென்னை மர கீற்றுகளில் பளிச்சிட்டது. திறந்திருந்த ஜன்னலுகுள் காற்று வந்து போனதில் ஜன்னல் கதவுகள் வருவதும் போவதுமாக இருந்தன. காற்றின் வரத்து அதிகமாகிப்போனதில் ஜன்னலுக்கருகே அன்றைய நாளிதழை ருசித்துக்கொண்டிருந்த தங்கலட்சுமிக்கு இடையூறாக இருந்தது.

    நாளிதழோடு மொட்டை மாடிக்குச்சென்று ஒரு கையில் தேநீர் அருந்தியபடியே நாளிதழை திருப்பினாள். தங்கலெட்சுகிக்கு வயது நாற்பத்தி ஐந்து கடந்திருந்தபோதிலும் புதன்கிழமை தினங்களில் தவறாமல் நாளிதழ் வாங்கி வந்து மணமகள் தேவை பகுதியை வரி விடாமல் படித்து முடித்தாள்.

    எல்லா வரன்களுக்கும் இருபது வயதிலிருந்து முப்பது வயது வரையிலான மணப்பெண்களே தேவை என்றும் அதிலும் இன்ன சாதிக்குட்பட்ட பெண் வேண்டும் என படித்தபோது தன்னைத்தானே நொந்து கொண்டாள் தங்கலட்சுமி.

    தன்னோடு படித்த தோழிகளுக்கெல்லாம் திருமணமாகி குழந்தைகள் பிளஸ் டூவிலும் பத்தாம் வகுப்பிலும் படிப்பதைக்கேட்கும் போதெல்லாம் கண்களின் ஓரம் கண்ணீர் கசியும்.

    சொந்தபந்தங்களின் திருமண வீடுகள், ஹிரகப்பிரவேசம், இளவு வீடுகள் எல்லாம் தவிர்த்திருந்தாள் தங்கலட்சுமி, இவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்ற அவர்களது இளக்காரமான பார்வை தன்மீது படிந்து அதனால் கூனி குறுகி விடக்கூடாது என்ற நல்லெண்ணம் தான் அதற்கு காரணமாக இருந்தது

    தனது மூத்தவள் சொர்ணலட்சுமியைப்போல யாரையாவது காதலித்து இரவோடிரவாக ஓடிப்போய் தாலி கட்டி குடும்பம் நடத்தியிருக்கலாம். அப்பொழுதெல்லாம் படிப்பு மிது காதலும் தனது அண்ணன்கள் மீது பயமும் படிந்திருந்தது.
    நாகர்கோவில் இந்து கல்லூரியில் படித்த நாட்களில் காதல் கடிதம் தந்த அரவிந்தன் எப்போதாவது நினைவுக்கு வருவான். ஒரு நாள் வகுப்பு முடிந்து வெளியேறியபோது காதல் கடிதம் ஒன்றை நீட்டினான் அரவிந்தன்.

    அந்த கடிதத்தை வாங்கி தானும் அவனை காதலிப்பதாகச் பதில் கடிதம் தந்திருக்க வேண்டும், அப்படி தந்திருந்தால் ஒருவேளை அவனோடு ஓடிப்போயாவது திருமணம் செய்திருக்கலாம். அப்பொழுது பாழாப்போன அண்ணன்களை கண்டு பயந்து காதலுக்கு மறுப்பு சொல்லி அவனை ஏமாற்றியிருந்தாள் தங்கலட்சுமி.

    சமீபத்தில் மார்த்தாண்டம் பாபு ஸ்டோரில் பேனா வாங்கிவிட்டு திரும்பியபோது அரவிந்தனும் அவனது மனைவி குழந்தைகளும் நோட்டு புத்தகங்கள் வாங்க கடையில் நுழைவதைக் கண்டாள் தங்கலட்சுமி.

    அரவிந்தன் ஓடி வந்து நல்லாயிருக்கிறியா என்று கேட்டதோடு தனது மனைவி குழந்தைகளை அறிமுகப்படுத்தி அவனது மகன் பிளஸ் ஒன் படிப்பதாகவும் மகள் ஏழாவது படிப்பதாகவும் சொன்னபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டவளாக அவளால் நடிக்கத்தான் முடிந்தது.
    அவர்களை விட்டு பிரிந்து பஸ்நிலையம் வருவது வரை அவளால் கண்ணீரை தடுக்க முடியவில்லை. அரவிந்தனை ஏன் சந்திக்கும் சந்தர்ப்பம் தந்தாய் என்று இறைவனை சபித்தாள் தங்கலட்சுமி.

    தன்னைப்போலவே திருமணமாகாமல் வீட்டில் அடைபட்டு கிடக்கும் தனது தங்கை பாக்யலட்சுமியும் கதியும் இது தான். அவளும் நாற்பத்தி இரண்டு வயதை கடந்து நிக்கிறாள். இந்த உலகத்தில் எல்லோருக்கும் திருமணம் நடக்கும்போது எங்க ரெண்டு பேருக்கும் ஏன் திருமணம் நடக்கவில்லை? என்ற கேள்விகள் எழும்போதெல்லாம் தனது அண்ணன்கள் மீது ஆத்திரம் வந்து மெல்ல மெல்ல பின்பு அடங்கிப்போய்விடும்.

    ஏழைப்பெண்கள் என்றால் நமக்கு சொத்து சுகம் இல்லையே என்று ஏங்கி தவிப்பார்கள் ஆனால் தங்கலட்சுமியின் நிலையோ வேறு. ``ஆண்டவா எங்களுக்கு ஏன் இத்தனை சொத்தை தந்தாய்’’ இது தான் அவளது புலம்பலாக இருந்தது.

    தங்கலட்சுமியின் அப்பா உயிரோடு இருந்த வரை அவளுக்கு பள்ளிக்கூடம் போவது ஒன்று தான் அவளது கடமையாக இருந்தது. ஐம்பத்தி இரண்டு வயதில் அவர் இறந்தபோது மூன்று பெண்களையும் மூன்று பசங்களையும் வைத்து காப்பாற்ற அவர் விட்டுச்சென்ற ஆறு ஏக்கர் நிலம் ஒன்றுதான் மீதமிருந்தது.

    எதிர்காலத்தில் சிறுமிகளாக இருக்கும் இவர்களை அண்ணன்கள் பார்ப்பார்களோ மாட்டார்களோ என்ற பயத்தில் தங்கலட்சுமியின் மாமன்கள் வந்து சொத்தை அளந்து ஆளுக்கொரு ஏக்கர் வீதமாய் பிரித்து பத்திரம் எழுதினார்கள்.

    மூத்தவன் லாசர் குடும்பச்சுமையை ஏற்றெடுத்தாலும் அவனுக்கு சொத்தின் மீதே அதிக கவனமிருந்தது. மூன்று ஆண்களுக்கும் தலா இரண்டு ஏக்கர் சேரவேண்டிய தனது தந்தையின் சொத்து தனது சகோதரிகளுக்கும் பங்கு போட்டதில் ஆளுக்கு ஒரு ஏக்கர் வந்ததை நினைக்க நினைக்க சகோதரிகள் மீது வெறுப்பு வந்து சேர்ந்தது லாசருக்கு.

    இவர்களை திருமணம் செய்து வைத்தால் வரும் மாப்பிள்ளைகள் அவர்களது பங்குகளான ஒரு ஏக்கர் நிலத்தை கேட்பார்கள், அல்லது அவர்கள் விருப்பத்திற்கு விற்கவும் செய்வார்கள். இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க நகை நட்டு என்று நிறைய ரொக்கங்கள் செலவழிக்க வேண்டும், அதற்கு கடினமாக உழைக்கவேண்டும் அல்லது சொத்தை விற்று பணம் புரட்ட வேண்டும்.

    எக்காரணத்தைக்கொண்டும் சொத்து நம்மை விட்டுப்போகக்கூடாது அதுபோல தங்கைகளுக்கு எழுதிய மூன்று ஏக்கர் நிலமும் அவர்கள் எடுத்துச் செல்லக்கூடாது அதற்கு ஒரே வழி யாருக்கும் திருமணப்பேச்சே எடுக்கக்கூடாது, சாகும்வரை நாம் போடும் சாப்பாட்டை தின்று விட்டு நம் காலடியில் கிடக்க வேண்டும். என்ற லாசரின் எண்ணம் தான் இன்று வரை பலித்திருந்தது.

    எல்லோருக்கும் திருமணத்தடை என்று ஏதோதோ காரணமிருக்க தங்கலட்சுமிக்கும் அவளது தங்கை பாக்யலட்சுமிக்கும் தனது தந்தையின் சொத்து ஒரு தடையாக இருந்தது.

    இதில் மூத்தவள் சொர்ணலட்சுமி எப்படியோ தப்பித்துக்கொண்டாள். முறைமாமன் டேவிட்டுக்கு அவள் மீது பிரியம் வர, இருவரும் காதலிக்கத்தொடங்கினார்கள்.

    புதுக்கடையிலிருந்து வரும் 10 சி பஸ்சில் முன்பக்க இருக்கையில் முதல் ஆளாக அமர்ந்திருப்பாள் சொர்ணலட்சுமி. பஸ் அங்கிருந்து கிளம்பி மூன்று கிலோமீட்டர் தாண்டி வரும் சடையன்குழி நிறுத்தத்தில் அதே பஸ்சில் ஏற டேவிட் காத்திருப்பான்.
    தூரத்தில் பஸ் வரும்பொழுதே மெல்லிய புன்னகை அவளிடமிருந்து புறப்பட்டுவிடும். அது அவனை சென்றடைவதற்க்குள் பஸ் நின்றுவிடும். பதிலுக்கு அவளும் புன்னகையை தழுவ விட்டபடியே பஸ்சினுள் ஏறுவான்.

    அனேகமாக அவன் உட்காருவதற்கு இருக்கைகள் காலியாக இருக்காது. அவன் நின்றுகொண்டே அவளை பார்த்தபடியே பயணம் செய்வான். நொடிக்கொரு தடவை அவள் திரும்பி பார்த்து புன்னகை செய்வாள்.

    சில சமயங்களில் அவனுக்கு பின்னால் நிற்கும் வயசு பையன்கள் அவள் வீசும் பார்வை தனக்கானதா என்று குழம்பிப்போவார்கள். பஸ் கருங்கல் பேருந்து நிலையத்தில் நின்றதும் எல்லோரும் இறங்கிவிட சொர்ணலட்சுமியும் டேவிட்டும் பேருந்து நிலைய இருக்கைகளில் அமர்ந்து கொண்டு பார்வைகளால் பேசிக்கொண்டிருப்பார்கள்.

    சொந்த மாமன் மகன் என்றாலும் அவன் குடும்பத்திற்கும் தங்கலட்சுமியின் குடும்பத்திற்கும் தீராத பகை இருந்ததால் இவர்களது காதல் மறுக்கப்படும் என்று தெரிந்தே மறைத்து மறைத்து வைத்தனர். இருந்தும் இவர்களது காதல் விஷயம் லாசருக்கும் அவன் தம்பிகளுக்கும் எப்படியோ தெரிந்தது.

    தனது தங்கை செத்து ஒளியட்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு அறைக்குள் வைத்து இரும்பு கம்பியால் அடி அடியென்று அடித்து துவம்சம் செய்தான் லாசர். அவள் அலறல் சத்தம் வெளியே கேட்டு விடக்கூடாதென்று வாயில் துணி வைத்து அடைத்திருந்தான்.
    ரத்தம் கசிந்த தனது கால் தொடைகளில் கம்பிகளின் சுவடுகள் திட்டு திட்டாய் வீக்கமேறி மயங்கி சரிந்தாள். அவள் இறந்திருப்பாள் என நினைத்து தனது தம்பிகளை அழைத்துக்கொண்டு சென்னித்தோட்டம் செங்கல் சூளையில் செங்கலோடு செங்கலாக சுட்டு பொசுக்க சூளையின் நிலவரம் கேட்கப்போனார்கள் லாசரும் அவன் தம்பிகளும்..

    சொர்ணலட்சுமிக்கு நினைவு திரும்பி தாழிட்ட கதவை பலங்கொண்டமட்டும் தட்டினாள். அவள் உயிர் பிழைத்ததே பெரும் புண்ணியம் என்று கருதி அவளது தாயார் கதவை திறந்துவிட்டாள். இனி ஒரு நொடி தாமதித்தால்கூட தன்னை தனது அண்ணன்கள் கொன்று விடுவார்கள் என்று நினைத்தபடியே நட்ட நடு நிசியில் கன்னங்கரு இருட்டில் தன்னந்தனியாக ஆற்றை கடந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருந்த தனது மாமன் மகன் டேவிட்டின் வீட்டில் சென்று அவன் மார்பில் புதைந்தாள்.

    டேவிட் பதறிப்போய் பக்கத்திலிருந்த வயித்தியரை தட்டி எழுப்பி காயம் பட்ட இடங்களிம் எண்ணெய் தடவி அதிகாலையில் கேரளாவிற்கு அழைத்துக்கொண்டு சென்றதில் அவர்களும் அவர்கள் காதலும் தப்பித்தது.

    தங்கலட்சுமியும், பாக்யலட்சுமியும் அவரவர் படிப்பு முடிந்து வீட்டில் சும்மா நின்றபோது யார் தலையிலாவது அவர்களை கட்டி வைக்க அவளது தாய் மரகதம் முயற்சி செய்யும் போதெல்லாம் எந்த முயற்சியும் எடுக்காமலேயே லாசரும் அவனது சகோதரர்களும் இருப்பது கண்டு மனம் வெம்மினாள்.

    தனது அண்ணன்கள் தன்னையும் தங்கை பாக்யலட்சுமியையும் யாருக்கும் கட்டி வைக்க மாட்டார்கள் என்ற உண்மை தங்கலட்சுமிக்கு புரிந்த போது சொத்துக்களை வேண்டுமானால் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்னையும் என் தங்கையையும் யாருக்காவது கட்டி வையுங்களேன் என்று கேட்டுவிடலாம் போல் தோன்றியது.

    அப்படி கேட்டால் அது நாகரீகமாக இருக்குமா? எந்த பெண் தனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டிருக்கிறாள், வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருந்தால் அவர்களுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டியது பெற்றவர்களின் கடமை, தனக்கு அப்பா இல்லாததால் அதை சகோதரர்களாவது நிறைவேற்ற வேண்டும்.

    இங்கே எல்லாம் தலைகீழாக அல்லவா நடக்கிறது. மனம் சஞ்சலப்படவே படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை தேடலாம் என்று வேலை தேடிக்கொண்டிருந்தாள் தங்கலட்சுமி. காலங்கள் நகர நகர அவளுக்கும் அவள் தங்கைக்கும் வயது கட்டுப்படாமல் ஏறிக்கொண்டே போனது.

    முப்பது வயது நெருங்கியபோது தங்கலட்சுமிக்கு திருமணத்தின் மீதிருந்த நம்பிக்கைகள் காற்றில் அறுந்து போன பட்டம் போல அறுந்து போயிருந்தது. தூத்துக்குடியில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் டீச்சர் வேலை கிடைத்தது தங்கலட்சுமிக்கு. இனி இது தான் உலகம் என்று பள்ளிக்கூட ஹாஸ்டலில் தங்கிக்கொண்டாள்.

    தங்கலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியபோது நிம்மதி பெருமூச்சு விட்டான் லாசர். இனி அடுத்தவள் பாக்யலட்சுமியும் வேலை தேடி எங்காவது போய் தொலைந்தால் சொத்து நம்மை விட்டு போகாது என்ற திடமாக எண்ணியிருந்தான். ஆனால் பாக்யலட்சுமி அதிகம் படிக்காமல் போனதில் தன் அக்காவைப்போல அவளால் வேலை தேட முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தாள்.
    காலம் கடந்திருந்த நிலையில் தனது பெண்களுக்கு காலா காலத்தில் திருமணம் ஆக வில்லையே என்ற கவலையில் மூத்தவன் லாசரை கண்டபடி திட்டிதீர்த்தாள் பாக்யம்.

    ``ஏய் கிழவி என் வீட்டு சோத்த தின்னுட்டு என்னயே ஏசுதியா, நீ இனிமே இங்க இருக்கப்பிடாது, ஓடு!,, தனது தாயாரை வெளியே தள்ளி கதவை தாழிட்டுக்கொண்டான் லாசர்.

    பெத்த புள்ள கடைசி காலத்துல கஞ்சி ஊத்துவான் என்று நம்பியவளுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. தனது மகள் தங்கலட்சுமியுடன் சென்று தன் கண்ணீர் கதைகளைச் சொன்னபோது தங்கலட்சுமியால் அழ முடியவில்லை காரணம் அழுவதற்கு அப்போது அவளிடம் கண்ணீர் இல்லை, எல்லா கண்ணீரையும் எப்பொழுதோ அவள் இழந்திருந்தாள்.

    நிராயுதபாணியாக நிற்கும் தனது தாய்க்கு இனி யார் ஆறுதல் சொல்வது அம்மாவை தன்னோடு வைத்துக்கொண்டால் என்ன என்ற கேள்வி எழுந்து அடங்கியது. அவள் வேலை பார்க்கும் பள்ளிக்கூடம் பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அம்மாவை தன்னுடன் வைத்துக்கொண்டாள்.

    ஐந்து வருடங்கள் ஓடியபோது அவளது அம்மாவிற்கு வயது எண்பது தாண்டியிருந்தது படுத்த படுக்கையாகக் கிடக்கும் தனது தாயாரை ஒருநாள் கூட தனது சகோதரர்கள் யாரும் வந்து பார்க்காமல் போனது பெரும் பாரமாகவே இருந்தது தங்கலட்சுமிக்கு.
    அம்மா இனியும் தாங்கமாட்டாள் இன்றோ நாளையோ என்று இழுத்துக்கொண்டு கிடக்கிறாள் ஒருவேளை அம்மாவின் உயிர் போய் சேர்ந்துவிட்டால் அடக்கம் செய்யவாவது அண்ணன்கள் ஆறடி நிலம் தருவார்களா என்ற கவலை அவளோடு பதுங்கியிருந்தது.
    அம்மா பாக்யசாலிதான், அவர்களை வயதான காலத்தில் கவனிக்க நான் இருக்கிறேன், ஒருவேளை எனக்கும் வயதாகி இதுபோல் படுக்கையில் கிடந்தால் என்னை பார்த்துக்கொள்ள எனக்கென்று யார் இருக்கிறார்கள் , நினைத்த மாத்திரத்திலேயே அழுகை வந்து முட்டியது தங்கலட்சுகிக்கு.

    அம்மாவின் நிலமையை பார்த்து அன்று பள்ளிக்கு விடுப்பு சொல்லிவிடலாம் போலிருந்தது தங்கலெட்சுமிக்கு. இன்று ஒருநாள் மட்டும் அம்மாவோடு இருந்து அம்மாவை நன்கு கவனித்துக்கொள்ளவேண்டும். படுக்கை விரிப்புகளை துவைத்து இஸ்திரி போட்டு தந்தாள். அவள் அம்மா விரும்பிய கட்டங் காப்பி நாலைந்து முறை போட்டு தந்தாள்.

    மாலை நான்கு மணிக்கு அவளது தாயாரின் வயிறு வீங்க ஆரம்பித்தது. அதிகமாக கட்டங் காப்பி குடித்ததால் அப்படியிருக்கும் என்று நினைத்தாள். இரவு மணி பத்தாகியும் அவளது அம்மாவின் வயிறு இறங்கியபாடில்லை. தங்கலட்சுமி மனதார பயந்தாள். அவள் அம்மாவிடமிருந்து நீண்ட பெருமூச்சு ஒன்று எழுந்து அடங்கியது. அதன் பிறகு அவள் அம்மா உடம்பிலிருந்து எந்த அசைவும் இல்லாமலிருந்தது.

    தங்கலட்சுமி ஒரு முறைக்கு பல முறை உடலை அசைத்து அம்மா அம்மா என்று அழைத்தாள். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அம்மா இறந்தாள் என்று உறுதி செய்யவே அவளுக்கு பயமாய் இருந்தது.

    தனக்கு ஆதரவாக இருந்த அம்மாவும் தன்னை விட்டு போய்விட்டாள் என்பதை நினைக்க நினைக்க யாருமற்றதொரு காட்டில் அனாதையாக விடப்பட்ட ஆட்டுகுட்டியைப்போல அலறி அழுதாள். அவள் அழுகைச்சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் எழும்பி வந்து விபரமறிந்து அவளோடு துக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டார்கள்.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது அண்ணன் லாசரை கைபேசியில் தொடர்பு கொண்டு அம்மா இறந்த விபரத்தை சொன்னாள் தங்கலட்சுமி. இத்தனை நாள் அம்மாவைப்பற்றிய தேடல் இல்லாமலிருக்கும் அவர்கள் அம்மா இறந்த பிறகாவது அம்மா மீது இரக்கம் வந்து அம்மாவின் உடலை வாங்கிச்சென்று ஊரில் நல்லபடியாக அடக்கம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் பதிலுக்கு காத்திருந்தாள்.
    ``அவ கொழுப்பெடுத்து தானெ உனக்ககிட்ட வந்து சேர்ந்தா, அவள அங்கேயே புதைக்க வழியப்பாரு இல்லாட்டி ஒரு ஆம்புலன்ஸ் வேன் பிடிச்சு உடம்ப ஊருக்கு கொண்டு வா,!’’ சொல்லிவிட்டு கைபேசியை துண்டித்தான் லாசர்.

    ஊரிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் வேன் பிடித்து வரட்டுமா என்று கேட்டிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும், இது நான் இங்கிருந்து வேன் பிடித்துக்கொண்டு போக வேண்டுமா? இந்த நட்டநடு ராத்திரியில் எனக்கு யாரைத் தெரியும்.

    அம்மாவை தனியாக பிணமாகப் படுக்க வைத்துவிட்டு நான் ஆம்புலன்ஸ் தேடி அலைவதா. ஒரு இளவு வீடு என்பதால் ,மட்டுமே அந்த ராத்திரியிலும் அக்கம் பக்கத்திலுள்ள நாலைந்து பேர் வந்து கூடியிருந்தார்கள் இல்லையென்றால் வந்திருக்க மாட்டார்கள்.
    தங்கலெட்சுமிக்கு திரும்ப அவள் அண்ணனிடமிருந்து ஃபோன் வருமென்று எதிர்பார்த்து காத்திருந்தாள். விடியும் வரை எந்த அழைப்பும் வரவில்லை. அம்மாவின் உடலை ஊருக்கு கொண்டு போனால் கூட யார் சொத்தில் புதைப்பது என்ற பிரச்சனை வரும் பேசாமல் அண்ணன் சொன்னதைப்போல இங்கேயே மயானத்தில் புதைத்து விட்டால் என்ன என்று தோன்றியது.

    பக்கத்திலிருந்த கவுன்சிலரிடம் விஷயத்தைச் சொல்ல அவர் அதற்கு ஏற்பாடும் செய்தார். மறுநாள் மாலை நான்கு மணிக்கு தூத்துக்குடி பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பாவம் பாக்யம் அம்மா தனது மகளிடம் வந்து அடைக்கலம் ஆனதில் சொந்த பந்தங்கள் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டிருந்தாள்.

    அம்மாவின் நிலை தனக்கும் வந்து விடக்கூடாது என்று தான் இந்த வயதிலும் அவள் யாரையாவது கட்டிக்கொள்ளலாமா என்று வரன்களை தேடிக்கொண்டிருக்கிறாள்.

    வரன் இரண்டாம் தாரமாக இருந்தாலும் பரவாயில்லை என் அண்ணன்களை எதிர்க்க திராணி இருக்க வேண்டும் அப்படி செய்தால் தன் பேரில் இருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தை இப்பொழுது விற்றால் ஐம்பது லட்சம் தேறும் அதில் வரும் பணத்தை வைத்து எங்காவது ஒரு வீடு வாங்கி சந்தோஷமாக வாழலாம்

    தன்னைப்போல தனது அண்ணன் வீட்டில் திருமணமாகாமல் கிடக்கும் பாக்யலட்சுமிக்கும் இதுபோல் ஒரு வரன் அமைந்து அவளுக்கும் திருமணமானால் அர்ச்சனைக்கு உதவும் பூக்களைப்போல எங்கள் வாழ்வும் மலரும் இல்லையென்றால் அர்ச்சனைக்கு உதவாத அரளிப்பூக்களாக கிடந்து சாக வேண்டியதுதான்

    தங்கலட்சுமிக்கு இன்னும் நம்பிக்கை அறுந்து போய்விடவில்லை. தினத்தந்தி நாளிதழில் அவளுக்கென்றே நிறைய வரன்கள் கேட்டு பிரிண்ட் ஆகி இருந்தது. தன்னை கரம் பிடிக்க ஒரு முதிர்ந்த ராஜகுமாரன் வருவான் என்ற தேடல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    எதார்த்தம்

    எதார்த்தம்

    கூட்டம் நிறைந்த சென்னை கமலா தியேட்ட்ரில் இருந்து வெளியே வந்தேன் வாழ்வில் ஓர் நல்ல படம் பார்த்த நிறைவு வண்டியை பார்க் செய்திருந்த இடம் நோக்கி சென்றேன் கொஞ்சம் வழி விடுங்க ! வண்டி எடுக்க வேண்டும் ! என்ற குரல் கேட்டு திரும்பினேன் என் அருகில் அவன். பார்த்தவுடன் நினைவில் நின்றான் கணேக்ஷ்அய்யர் என் கல்லூரி தோழன் திருமணமானவன்..

    கல்லூரி முடிந்து சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு தொடர்பில் கணேக்ஷா எப்படி இருக்கே? திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தான்..

    டேய் ! நீயா நான் உன்னை இங்கே எதிபார்க்கவில்லை..நான் நல்லா இருக்கேன் ..நீ எப்படி இருக்கே?..பட படவென்று பேசிகொண்டே அவள் அருகில் வண்டியினை கொண்டு வந்தான் ..

    வழக்கமான கூச்ச சுபாவம் என்னில் உதிக்க என் அவளை கண்டதும் தயங்கினேன்.அவள் கையில் குழந்தை..என்னை பற்றி அவளிடம் கூறினான்.

    இவன் என் நண்பன் ஜெய்சிவா உனக்கு தெரியுமே இவன் நம் பிரிவில் என்னருகில் இருப்பானே அவன் தான் ..அவள் ஹலோ என்றாள்.நானும் புன்னகைத்தேன்..எங்கள் பேச்சு கல்லூரி வாழ்வினை அலசியது அவள் அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள்.
    இறுதியில் அவனிடம் இது உன் குழந்தையா?

    ஆமாம்..

    சாரிடா என்னால உன் கல்யாணத்துக்கு வரமுடியல..

    பரவாயில்லடா..

    குழந்தை அழகாய் இருக்குது ..பேர் என்ன?

    அஸ்வந்தினி..

    நல்ல பேர் சரிடா நான் கிளம்புறேன்..உன் நம்பர கொடு நைட் கால் பண்ணுறேன்..

    சரி குறிச்சிக்க..நம்பரை கொடுத்தான்..

    சரி வற்றேண்டா.. வற்றேம்மா என்று அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்..மனது கனத்திருந்த்து..

    மாலை 6 மணி பணி நிமித்தம் ஒருவரை காண பெரம்ப்பூர் செல்ல வேண்டியிருந்த்து செல்லும் வழியில் அழைப்பு வந்தது அவன் தான் அழைத்திருந்தான்..பிறகு அழைக்கலாம் என மனம் நினைத்தது...அவரை பார்த்துவிட்டு என் பணி நிமித்தம் செய்ய வேண்டிய வேலைகளை கூறி விட்டு வீடு வந்து சேர்ந்தேன்..பிறகு டி வி யில் பிடித்தமான மெலடி பாட்டொன்று பாடியது .அதை கேட்டு கொண்டே இரவு சாப்பாட்டினை முடித்தேன் ..தூங்க நினைக்கையில் மறுபடியும் அழைப்பு வந்த்து ..

    என்னை பற்றி விசாரித்தான்..நீ என்ன பண்ணுற? கல்யாணம் ஆயிட்டுச்சா ?

    உனக்கு தான் தெரியுமே என் அப்பா பனங்காட்டில் பயனி இறக்குவாருங்கிறது. இப்ப இருக்கிற நிலையில வேறு என்ன பண்ணுறது வேறு வழியில்ல அதான் இருந்த சொத்த வித்து சொந்தமாக ரியல் எஸ்ஸேட் தொழில் பண்ணுறேன்..அவள் நினைவு மறக்கல கொஞ்சம் நாள் போகட்டும் என்றேன் ..

    அப்போது அண்ணா சாப்பிட வா ! என்ற குரல் கேட்ட்து கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்றான்..

    அவனிடம் கேட்டேன் உனக்கு ஏதுடா தங்கச்சி?

    என் கூட பிறந்த தங்கச்சி இல்லடா ! என் சித்தி மக இன்னைக்கு காலையில கூட பார்த்தியே அவதான் ..

    மனதில் காணாத வாணவேடிக்கை கண்ட குழந்தையாக குதியாட்டம் போட்ட்து..அதை அடக்கி வைத்தேன் ..பின் அவனிடம்
    வகுப்பில் ஒரு முறை கூட சினேகமாய் பார்த்த்தும் பேசியதும் கூட கிடையாதே..

    நான் பிறப்பதற்கு முன்பே என் சித்தி சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்ததால் என் வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் தொடர்பில்லாமல் இருந்த்து. இப்போ என் கல்யாணத்தோட தான் இந்த பிரச்சனையும் தீர்ந்தது அதோடுதான் இப்படி ஒரு தங்கை இருப்பதேதெரியும் இத்தனை நாள் நம்முடன் படித்திருந்தும் எனக்கு தெரியவில்லை..

    அப்படியா?

    அது எதுக்கு மக்கா ..விடு ..அப்புறம் காலேஜ் முடிஞ்ச பிறகு அவளை பார்த்தியா? அப்படி பார்த்தா சொல்லு நானும் உனக்காக பேசுறேன் இன்னிக்கு வரை அவ யாருன்னும் எங்கிட்ட சொல்லல..

    சொல்லவா வேண்டாமா என்று ஒரு சிந்தனை..இறுதியில்

    அவள் வேறு யாருமில்லை உன் தங்கைதான் என்றேன் ..அவ உன் தங்கச்சின்னு தெரியாமலே இத்தனை நாள் என் கூச்ச சுபாவத்தினால் அவளிடம் கூறாமல் அவளை ஒரு தலையாய் விரும்பினேன்..நீ தாண்டா எனக்கு உதவி செய்யனும்..

    பதிலின்றி மௌனமாகி அணைந்தது அலைபேசி ...

    சிறிது நேரம் கழித்து எஸ் எம் எஸ் வந்தது..பார்த்தேன் அவன் அனுப்பி இருந்தான்..சத்தமில்லாத வெற்றிட மனநிலையில் உணர்வுகளின் பதைப்பில் அவசரமாக படித்தேன்..

    சாரிடா...

    எதார்த்த உண்மை முகத்தில் அறைய கலங்கிய கண்களுடன் வானை நோக்க வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டின..

  13. Likes kishore1490 liked this post
Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •