Results 1 to 5 of 5

Thread: ஒரு கைதியின் பயணம்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    ஒரு கைதியின் பயணம்

    Albeert Camus - அல்பேர் கமுய் -1913 / 1960 - இலக்கியத்துக்கான நோபெல் பரிசைப் பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் ( 1957 ).

    பிரான்சின் காலனியாய் இருந்த அல்ஜீரியாவில் பிறந்து வளர்ந்தவர். பத்து ஆண்டுக்குமேல் நீடித்த போராட்டத்தின் விளைவாய் அந்நாடு விடுதலை அடைந்தது.

    அவர் 1957 இல் இயற்றிய ஒரு சிறுகதை "விருந்தாளி" என்ற தலைப்புடையது; இதை நான் பிரஞ்சிலிருந்து மொழிபெயர்த்தேன். முழுப் பெயர்ப்பும் 2012 ஆகஸ்ட் மாத "மஞ்சரி" இதழில், "ஒரு கைதியின் பயணம்" என்னும் தலைப்பில் வெளிவந்தது. சுருக்கமான பெயர்ப்பை மன்றத்தில் பதிகிறேன்.

    கதை அல்ஜீரியாவில் நிகழ்கிறது.


    இருவரும் தம்மை நோக்கி ஏறி வருவதை ஆசிரியர் பார்த்துக்கொண்டிருந்தார்: குதிரை மீது ஒருவர், கால்நடையாய் மற்றவர். குன்றின் ஓர் ஓரத்தில் கட்டியிருந்த பள்ளிக்கூடத்துக்கு இட்டுச் செல்லும் பாதையை அவர்கள் இன்னம் அடையவில்லை. உயரமான மற்றும் வறண்ட அந்தப் பரந்த பீடபூமியில் இருந்த கற்களின் இடையே, பனித்தரையில், அவர்கள் சிரமத்துடன் மெதுவாய் முன்னேறினார்கள்.

    பகல் இரண்டு மணி. காலை இப்போதுதான் தொடங்குகிறது என்று சொல்லலாம்போல் இருந்தது. ஒரே குளிர்! கம்பளிச் சட்டையை எடுக்கப் பள்ளிக்குள் நுழைந்தார். காலியாயும் சில்லெனவும் இருந்த வகுப்பறையைக் கடந்தார். கரும்பலகையில் வெவ்வேறு நிறச் சுண்ணக் கட்டிகளால் வரைந்த பிரான்சின் ஆறுகள் நான்கும் கழிமுகம் நோக்கி மூன்று நாளாய் ஓடிக்கொண்டிருந்தன. எட்டு மாத வறட்சிக்குப் பின்பு, இடையில் பெய்யவேண்டிய மழை பொய்த்து, அக்டோபர் பாதியில் பனி கடுமையாய்ப் பொழிந்தது. பீடபூமியில் சிதறிக் கிடந்த சிற்றூர்களின் இருபது மாணவர்களும் நின்றுவிட்டார்கள்.

    வகுப்பறைக்குப் பக்கத்திலிருந்த தமது ஒற்றையறை வசிப்பிடத்தை மட்டும் சூடேற்றிவிட்டு தருய் வெளியே வந்தார். இருவரும் பாதி ஏறிவிட்டனர். தாம் நெடுங்காலமாய் அறிந்திருந்த முதிய பட்டாளத்தார் பல்துய்க்சிதான் குதிரை ஊர்கிறார் என அடையாளங் கண்டார். பல்துய்க்சி, தமக்குப் பின்னால், கைகள் கட்டப்பட்டுத் தலை குனிந்து நடந்த ஓர் அராபியரைப் பிணித்த கயிற்றைக் கையில் பற்றியிருந்தார்.

    கூப்பிடு தொலைவில் வந்ததும் அவர் கத்தினார்: "ஒரு மணிநேரம் எல் அமரிலிருந்து மூன்று கிலோமீட்டர் நடந்துவர!"

    அவர்கள் வந்ததும், தருய், "சலாம், உங்களைச் சூடுபடுத்திக்கொள்ள உள்ளே வாருங்கள்" என்றார்.

    பல்துய்க்சி சோபாவிலும் அராபியர் கணப்பின் அருகே தரையிலும் உட்கார்ந்தனர்.

    "புதினா டீ போட்டுத் தருவேன்" என்று ஆசிரியர் சொல்ல, பல்துய்க்சி, "நன்றி. என்ன மாதிரியான வேலை! சீக்கிரமே ஓய்வு பெற முடியும் என நினைக்கிறேன்" என்றார்.

    அராபியர்க்கும் டீ கிளாசை நீட்டிய தருய், அவரது கைக்கட்டைப் பார்த்து, "அவிழ்த்துவிடலாம் என நினைக்கிறேன்" என்றதற்குப் பல்துய்க்சி, "நிச்சயமாக; பயணத்துக்குத்தான் அது" என்று பதில் சொன்னார்.

    - சரி; இப்படி எங்கே போகிறீர்கள் நீங்கள்?

    - இங்கே, மகனே.

    - விந்தையான மாணவர்கள்! இங்கு இரவைக் கழிப்பீர்களா?

    - இல்லை; நான் திரும்பிப் போகிறேன். நீ இந்த ஆளைத் தைங்கித்தில் ஒப்படைப்பாய்: அங்கே இவனுக்காகக் காத்திருப்பார்கள்.

    - என்ன கதையிது? என்னைக் கிண்டல் பண்ணுகிறாயா?

    - இல்லை, மகனே, கட்டளை.

    - கட்டளையா? நான் என்ன...

    தருய் தயங்கினார்; முதியவரின் மனத்தைச் சங்கடப்படுத்த அவர் விரும்பவில்லை. "இருக்கட்டும், இது என் வேலை அல்ல" என்று முடித்தார்.

    - என்னது? இதற்கென்ன அர்த்தம்? போரில் எல்லா வேலையும் செய்யவேண்டும். கட்டளை போட்டிருக்கிறார்கள்; அது உன்னையும் கட்டுப்படுத்தும். எதுவோ நடப்பதாகத் தெரிகிறது. புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறார்கள்; ஒரு வகையில் பார்த்தால் நாம் அணிவகுப்பில் இருக்கிறோம்.

    தருயின் எதிர்ப்பு முகபாவம் நீடித்தது.

    பல்துய்க்சி கூறினார்: "கேள் மகனே, நான் உன்னை நேசிக்கிறேன். நீ புரிந்துகொள்ளவேண்டும். எல் அமரில் பெரிய பிரதேசமொன்றில் ரோந்துப்பணி ஆற்ற நாங்கள் ஒரு டஜன் பேர் இருக்கிறோம். நான் போகவேண்டும். இந்த வரிக்குதிரையை உன்னிடம் ஒப்படைத்துவிட்டுத் தாமதம் இல்லாமல் வந்துவிடும்படி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இவனை அங்கே வைத்திருக்க முடியவில்லை. கிராமம் கிளர்ச்சி செய்தது, இவனை மீட்க விரும்பினார்கள். நாளை பகலில் இவனைத் தைங்கித்துக்கு நீ அழைத்துப் போகவேண்டும். உன்னைப் போன்ற பலசாலிக்கு ஒரு இருபது கிலோமீட்டர் பயம் தராது. அப்புறம், எல்லாம் முடிந்துவிடும். உன் மாணவர்களையும் இன்ப வாழ்க்கையையும் நீ மறுபடி பெறுவாய்.

    - இவன் என்னதான் செய்தான்?

    பட்டாளத்தார் வாய் திறக்கும் முன்பே, "பிரஞ்சு பேசுகிறானா?" எனவும் தருய் வினவினார்.

    - ஊகூம், ஒரு வார்தைகூட இல்லை. ஒரு மாதமாய்த் தேடினோம்; மறைத்து வைத்திருந்தார்கள். மச்சானைக் கொன்றுவிட்டான்.

    - நமக்கு எதிரியா?

    - நான் அப்படி நினைக்கவில்லை; ஆனால் உறுதியாக ஒருபோதும் சொல்லமுடியாது.

    - ஏன் கொன்றான்?

    - குடும்பத் தகராறு என்று நினைக்கிறேன்.

    தருய் மீண்டும் டீ தந்தார்.

    - நன்றி, அன்பனே. இப்போது நான் போகிறேன்.

    பட்டாளத்தார் எழுந்து அராபியரை நோக்கிச் சென்றார், பையிலிருந்து ஒரு கயிற்றை இழுத்தபடி.

    - என்ன செய்கிறாய்?

    வெறுப்புடன் கேட்டார் ஆசிரியர்; வியப்புற்ற பல்துய்க்சி கயிற்றைக் காட்டினார்.

    - தேவையில்லை.

    பட்டாளத்தர் தயங்கினார்:

    - உன் விருப்பம். ஆயுதம் வைத்திருக்கிறாய் அல்லவா?

    - வேட்டைத் துப்பாக்கி இருக்கிறது.

    - எங்கே?

    - பெட்டியில்.

    - கட்டிலருகே வைத்திருக்க வேண்டும்.

    - ஏன்? நான் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    - கிறுக்கனாய் இருக்கிறாய், மகனே. அவர்கள் கிளர்ந்தெழுந்தால் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது. நம் எல்லாருக்கும் ஒரே கதி.

    - நான் என்னைக் காத்துக்கொள்வேன். அவர்கள் வருவதைத் தெரிந்துகொள்ள எனக்கு நேரம் இருக்கும்.

    - உனக்கு நேரம் இருக்குமா? நல்லது; அதுதான் நான் சொன்னது; நீ எப்போதும் கொஞ்சம் கிறுக்காய்த்தான் இருந்திருக்கிறாய். அதற்காகவே எனக்கு உன்மேல் அதிக அன்பு; என் மகன் இப்படியிருந்தான்.

    தம் ரிவால்வரை மேசைமீது வைத்து, "இதை எடுத்துக்கொள்; இங்கிருந்து எல் அமர் போக இரண்டு ஆயுதம் எனக்குத் தேவையில்லை" என்றார்.

    - கேள், பல்துய்க்சி, இதெல்லாம் எனக்கு வெறுப்பூட்டுகிறது. இவனை ஒப்படைக்கமாட்டேன்.

    - மடத்தனம். எனக்குக்கூடத்தான் பிடிக்கவில்லை ஒரு மனிதனைக் கயிற்றால் கட்டுவது. எத்தனையோ ஆண்டுகள் அப்படிச் செய்தும் பழகிப்போகவில்லை; சொல்லப்போனால், ஆமாம், வெட்கமாக இருக்கிறது; ஆனால் அவர்களை அவர்கள் போக்கில் விடமுடியாது.

    - ஒப்படைக்க மாட்டேன்.

    - இது உத்தரவு, மகனே, மீண்டும் சொல்கிறேன். நீ இப்போது தாளில் கையெழுத்து போடப்போகிறாய்.

    தருய் கையொப்பம் இட்ட தாளைப் பட்டாளத்தார் கவனமுடன் மடித்துக் கைப்பையில் வைத்துக்கொண்டு கதவை நோக்கி நடந்தார். "போய் வருகிறேன், மகனே" என்றார். அவருக்குப் பின்னால் கதவு மூடிற்று.
    Last edited by பாரதி; 27-10-2012 at 11:18 AM. Reason: நிறுத்தற்குறிகளை ஒழுங்கமைக்க.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    முன்கதை எதுவும் தெரியாததால் சட்டென்று விளங்கிக்கொள்ள எளிதாக இல்லை. எனினும் இந்தப் பகுதியின் விவரமான வர்ணனைகள் மூலம் காட்சியமைப்பையும் கதைமாந்தர்களின் உரையாடல் மூலம் அவர்களது குணநலன்களையும் புரிந்துகொள்ள இயல்கிறது. ஒரு கைதியின் பயணம் என்பது தலைப்பு என்றாலும் இங்கே கைதி பற்றி அவன் ஒரு அராபியன் என்பதைத் தவிர வாசகருக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை.

    அவன் உண்மையில் கொலைகாரனா? ஏன் செய்தான்? என்பதெல்லாம் தருய்க்கும் தெரியவரவில்லை. அந்த முதிய பட்டாளத்தார் தனக்கு விருப்பமில்லாமல் இந்த வேலையைச் செய்வதாக புலம்புகிறார். அவரைப்போலவே அந்த ஆசிரியரும் தனக்கு விருப்பமில்லாத செயலைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார். சுற்றியுள்ள சிற்றூர்களிலிருந்து வரவிருக்கும் இருபது மாணவர்களுக்காக குன்றின் மேல் அமைந்துள்ள பள்ளிக்கூடம் வியப்பூட்டுகிறது.

    கரும்பலகையில் வெவ்வேறு நிறச் சுண்ணக் கட்டிகளால் வரைந்த பிரான்சின் ஆறுகள் நான்கும் கழிமுகம் நோக்கி மூன்று நாளாய் ஓடிக்கொண்டிருந்தன.

    இந்த வரிகள் மூலம் மூன்றுநாட்களாய் மாணவர்கள் வரவில்லை என்பதை சுட்டியமை அழகு.

    இனி என்ன நடக்கும்? அந்த கைதியை ஆசிரியர் ஒப்படைப்பாரா? அல்லது தப்பவிடுவாரா? அல்லது அவன் தானே தப்பிவிடுவானா? ஆசிரியரைத் தாக்குவானா? என்று பல கேள்விகளை உள்ளுக்குள் அசைபோடவைக்கும் கதை. வாய்ப்பு அமையும்போது முழுக்கதையையும் படிக்கத்தூண்டுகிறது.

    பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தமைக்கும் அது மஞ்சரி இதழில் வெளிவந்தமைக்கும் பாராட்டு.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நன்றி ஐயா. அரிய கதைகளை உங்கள் மூலமாக நாங்கள் சற்றேனும் அறிந்து கொள்ள முடிகிறது. அக்கால நடவடிக்கைகள் குறித்து ஒரு சிறிய குறிப்பாக இக்கதை விளங்குகிறது. உங்கள் அரும்பணிக்கு மிக்க நன்றி.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    விரிவான அலசலுக்கு மிகுந்த நன்றி . எழுகின்ற ஐயங்கள் பலவற்றுக்குக் கதையின் பிற்பாதியில் விடை கிடைக்கும் .

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    நன்றி ஐயா. அரிய கதைகளை உங்கள் மூலமாக நாங்கள் சற்றேனும் அறிந்து கொள்ள முடிகிறது. அக்கால நடவடிக்கைகள் குறித்து ஒரு சிறிய குறிப்பாக இக்கதை விளங்குகிறது. உங்கள் அரும்பணிக்கு மிக்க நன்றி.
    பாராட்டுக்கு மிக்க நன்றி .

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •