Results 1 to 12 of 12

Thread: பூதம் கொடுத்த புதையல்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    பூதம் கொடுத்த புதையல்

    அதுஒரு அழகிய அற்புதக் காடு
    ஆறும் மலையும் இருக்கும் காடு
    உதய சூரியன் ஒளியின் வெள்ளம்
    உள்ளே நுழையா அடர்ந்த காடு
    துள்ளிப் பாயும் அருவிகள் மலையில்
    தும்பைப் பூவெனக் கொட்டும் ஒருபால்
    புள்ளும் மாவும் அருகே சுனையில்
    புதுநீர் அருந்தும் காட்சிகள் ஒருபால்
    மலையை ஒத்த யானைகள் கூட்டம்
    மத்தகம் முட்டி போரிடும் ஒருபால்
    கலைமான் கூட்டம் காதலி தம்மோடு
    அலையெனப் பாய்ந்து ஓடும் ஒருபால்
    கோடை இடியின் தாளம் கேட்டு
    ஆடும் மயில்கள் கூட்டம் ஒருபால்
    கடுவன் குரங்கு மந்தி தம்மோடு
    காதல் செய்யும் காட்சிகள் ஒருபால்

    இயற்கை அன்னையின் அத்தனை அழகும்
    கொட்டிக் கிடக்கும் காட்டின் நடுவில்
    ஆயிரம் ஆண்டுகள் வளர்ந்து செழித்த
    ஆல மரம்தன் விழுதுகள் பரப்பி
    கோல எழிலொடு தண்ணிழல் கொடுத்து
    வழியிடை வருவோர் போவோர்க் கெல்லாம்
    கழிபெரும் துணையாய் விளங்கும் காலை

    கருநிறங் கொண்ட பூதம் ஒன்று
    காட்டில் எங்கும் அலைந்து திரிந்து
    ஆல மரத்தின் அருகே வந்தது.
    நெடிய மரத்தின் உச்சியில் தங்கிய
    கொடிய பூதம் கர்வம் கொண்டு
    மரத்தின் அடியில் தங்கிய மனிதரை
    மிரட்டி அவரை புசித்து வந்தது.

    ஒருசமயம்

    மாலை நேரம் மயங்கும் வேளையில்
    வேலை முடிந்து மக்கள் எல்லாம்
    வீடகம் விரைந்து ஏகும் நேரம்
    ஆடகப் பொன்னால் செய்த காசுகள்
    நிரம்பிய மூட்டையைத் தலையில் சுமந்து
    திருடன் ஒருவன் அங்கு வந்தான்.
    கொள்ளை அடித்த காசு மூட்டையை
    அள்ளையில் வைத்துக் கையால் அணைத்து
    தூங்கும் வேளையில் திருடன் முன்னே
    ஓங்கிய சினத்துடன் பூதம் தோன்றி
    " அற்பப் பதரே ! மானிட உயிரே !"
    என்றே விளித்து அவனை நோக்கி
    " இனிமேல் இங்கே தூங்குதல் வேண்டாம்
    தனியாய் இருக்கும் பூதம் எனக்கு
    இனிதாய் அமைந்தது இம்மர வீடு
    எனக்கே சொந்தம்; எனக்கே சொந்தம்
    ஆலம் உண்ட சிவனும் கூட
    ஆல மரத்தின் நிழலில் தூங்க
    அனுமதி இல்லை என்றே அறிவாய்!

    என்றே பூதம் மிரட்டிய வேளையில்
    வெகுண்ட திருடன் பூதம் நோக்கி
    "பொல்லாப் பூதமே! நாவை அடக்கு!
    எல்லா உயிர்க்கும் இம்மரம் சொந்தம்
    விழுதுகள் கொண்ட இப்பெரு மரத்தை
    எழுதி உனக்குக் கொடுத்தது யார்?
    உன்னைப் படைத்த ஆண்டவன் கூட
    என்னைத் தடுக்க இயலா தென்றான்.

    உடனே
    கரிய பூதம் திருடன் முன்னே
    சிறிய குடத்தைக் கண்முன் காட்டி
    " இச்சிறு குடத்தில் உன்னிடம் உள்ள
    காசுகள் அனைத்தும் போட்டு நிரப்பு.
    குடத்தை நிரப்பும் செயலைச் செய்தால்
    இடத்தை விட்டு அகல்வேன் உறுதி
    மாறாக
    காசுகள் குடத்தை நிரப்பத் தவறின்
    ஏசுவேன் உன்னை; எடுப்பேன் உயிரை

    என்றே பூதம் கூறிய வேளையில்
    திருடிய பணத்தை ஒவ்வொன் றாகத்
    திருடன் குடத்தில் போடப் போட
    நிரம்பா திருக்கும் தன்மை கண்டு
    மந்திரக் குடமோ?மாயக் குடமோ?
    தந்திரக் குடமோ? எந்திரக் குடமோ?
    மதியை மருட்டும் இச்சிறு குடத்தில்
    விதியை மாற்றும் ஆற்றல் உளதோ?
    இவ்வா றெல்லாம் எண்ணிய திருடன்
    கவ்விய பயத்தில் பூதம் நோக்க

    உடனே பூதம்,

    தீய வழியில் வந்த பொருளால்
    மாய இக்குடம் நிரம்பா தறிவாய்!
    என்றே கூறிய அப்பெரும் பூதம்
    பைய திருடனின் பக்கலில் சென்று
    நையப் புடைத்து அவனை உண்டது.


    காட்டின் அருகே கிராமம் ஒன்றில்
    ஜனகன் என்றொரு விறகு வெட்டி
    தினமும் கிடைக்கும் ஊதியம் கொண்டு
    மனையும், சுற்றமும் மகிழ உண்டு
    இனிதே வாழ்வை நடத்தி வந்தான்.

    ஒருநாள் ஜனகன் காட்டில் வெட்டிய
    விறகுக் கட்டைத் தலையில் சுமந்து
    பெருநடை யாக நடந்து வருகையில்
    வழிநடைக் களைப்பும் வலியும் சேர்ந்து
    விழியிடைத் தூக்கம் விரைவாய்க் கொணர
    ஓய்வு கொள்ள ஆல்மர நிழலில்
    சாய்ந்தே படுத்து தூங்கும் வேளையில்
    கலகல வென்னும் சிரிப்பொலி கேட்டு
    அலறிப் புடைத்து எழுந்தனன்; ஆங்கே
    தலையில் கொம்பும் கோரைப் பல்லும்
    குலையை நடுக்கும் தோற்றம் கொண்ட
    கருநிற பூதம் ஜனகனை நோக்கி
    காதுகள் அதிரக் கட்டுரை செய்தது.

    " அற்பப் பதரே ! மானிட உயிரே !
    வற்றல் உடம்பால் வாடிக் கிடக்கும்
    கற்றறி வில்லா ஏழை மனிதா !
    எற்றுக் கெந்தன் நிழலில் தூங்கினை ?"
    என்றே பூதம் மிரட்டிக் கேட்க,

    " ஐயா! நானொரு விறகு வெட்டி
    கையால் வெட்டும் விறகினை நாளும்
    விற்று வருகின்ற காசினைக் கொண்டு
    சுற்றமும் நானும் உண்டு வருகிறோம்
    குற்றம் ஏதும் செய்திட வில்லை
    வெட்டிய வேலையின் களைப்புத் தீர
    கிட்டிய நிழலில் உறங்கும் தகைமையில்
    ஆல்மர நிழலில் அயர்ந்து தூங்கினன்
    அறியாச் சிறுவன் செய்த பிழையை
    பெரியோய் நீவிர் பொறுக்க வேண்டும். "
    என்றே சொல்ல

    அவ்வுரை கேட்ட கொடிய பூதம்
    செவ்விய அவனது திருமுகம் நோக்கி
    " என்னிடம் உள்ள இச்சிறு குடத்தில்
    உன்னிடம் உள்ள பணத்தைப் போட்டு
    நிரப்பி என்முன் காட்ட வேண்டும்
    இரக்கம் சற்றும் காட்ட மாட்டேன்.
    இட்ட காசுகள் நிரப்பா விட்டால்
    கெட்டது உன்குடி; கெட்டது உன்னுயிர்"

    என்றலும் ஜனகன் தன்னிட மிருந்த
    ஒற்றைக் காசைக் குடத்தில் போட்டனன்.
    என்னே அதிசயம்! என்னே அதிசயம்!
    பொன்னாய் மாறிய அக்குடம் நிரம்பி
    மின்னும் தங்கக் காசுகள் வழிந்தன!
    வியத்தகுக் காட்சியைக் கண்ட பூதம்
    நயத்தகு மொழிகளால் ஜனகனை நோக்கி
    " கண்டோம் ! அரிய காட்சியைக் கண்டோம்!
    கொண்டோம் மனதில் மகிழ்வு கொண்டோம்
    என்றும் இதுபோல் நிரம்பா இக்குடம்
    உன்னால் நிரம்பிய அதிசயம் கண்டோம்
    சொந்த உழைப்பால் உடலை வருத்தி
    வந்த பணத்தை இட்டால் மட்டுமே
    இக்குடம் நிரம்பும் அத்தகு வேளையில்
    வக்கிரம் கொண்ட என்னுரு நீங்கி
    மனித வடிவம் பெறுவேன் என்ற
    புனித வரத்தை இறைவன் அருளினன் ".

    என்று சொல்லிய ஒருசில நொடியில்
    குன்றை ஒத்த அப்பெரும் பூதம்
    மறைந்து அங்கே மானிட வடிவில்
    நிறைந்த அழகொடு ஒருவன் தோன்றி
    " ஜனகா! இக்குடம் உனக்கே சொந்தம்
    மனதால் உன்னை வாழ்த்து கின்றேன்
    சொந்த உழைப்பில் வாழும் உன்னை
    வந்தனை செய்து வழிபடு கின்றேன்
    என்றே சொல்லி நீங்கினன் ஆங்கே.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    இன்பக்கவியில் ஒரு கதை ஒன்று வாசித்தேன், உண்மை உழைப்பு தரும் ஏற்றத்தை அறிந்து மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள் ஜெகதீசன்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அழகு தமிழ் நடையில் ஒரு அழகான கதை வரிகள் கூறும் கருத்துகள் அருமை..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஆ. தைனிஸ். ஜெய் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அருமையான கவியும் கருத்தும். கவிதையின் வரிகள் ஒவ்வொன்றிலும் தவழ்கிறது தமிழின் இனிமை. பாராட்டுகள் ஐயா.

    சொந்த உழைப்பைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவனை பூதமும் வணங்கும் என்னும் கருத்து மனம் கவர்வதாயுள்ளது.

    புதிய புதிய சொல்லாட்சியுடன் வெவ்வேறு கருக்களில் கவிதைகள் படைக்கும் தங்களுடைய திறனுக்குத் தலைவணங்குகிறேன்.

    ஆடகப் பொன் - பொருள் விளக்க வேண்டுகிறேன் ஐயா.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    புதையலுடன் போனசாகக் கிடைத்த கவிதைக்குப் பாராட்டுக்கள் !

    பிண்ணணி இசையுடன் விரைவில் பண்பலையில் ஒலிபரப்பாகும் நாளை எதிர்பார்க்கிறேன் !

  7. Likes மதி liked this post
  8. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அழகுத் தமிழில் அர்த்தம் பொதிந்த கதை கவிதையாய். முதல் பத்தியில் உள்ள வர்ணனையைக் கண்டதும் "குற்றாலக்குறவஞ்சியில்" வரும் வர்ணனைகள் பற்றி என் ஆசிரியர் பாடம் நடத்தியது கண்முன் வந்தது. அவ்வளவு அழகு வர்ணனை.

  9. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    அருமையான கவியும் கருத்தும். கவிதையின் வரிகள் ஒவ்வொன்றிலும் தவழ்கிறது தமிழின் இனிமை. பாராட்டுகள் ஐயா.

    சொந்த உழைப்பைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவனை பூதமும் வணங்கும் என்னும் கருத்து மனம் கவர்வதாயுள்ளது.

    புதிய புதிய சொல்லாட்சியுடன் வெவ்வேறு கருக்களில் கவிதைகள் படைக்கும் தங்களுடைய திறனுக்குத் தலைவணங்குகிறேன்.

    ஆடகப் பொன் - பொருள் விளக்க வேண்டுகிறேன் ஐயா.
    சாம்புநாதம், கிளிச்சிறை என்று சொல்லப்படும் பொன்னின் நான்கு வகைகளுள் ஆடகமும் ஒன்று.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஒரு மிகச்சிறப்பான இலக்கியத்தர்முடைய சிறுவர் கதையை இக்கவிதையில் காண்கிறேன்.
    இயல்பாக உறுத்தலின்றி கதைபடித்த உணர்வு ஏற்படுகிறது.

    வாழ்த்துக்கள் ஐயா.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    சாம்புநாதம், கிளிச்சிறை என்று சொல்லப்படும் பொன்னின் நான்கு வகைகளுள் ஆடகமும் ஒன்று.
    தங்கள் விளக்கத்துக்கு நன்றி ஐயா.

  12. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    அழகுக் கவிக் கதை...!!!

    பாராட்டுக்கள் ஐயா...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  13. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    நேர்த்தியான கவிதை நடையில் நல்லதொரு சிறுகதை. மிகவும் நன்றாக இருந்தது.
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •